திருமணத்திற்காக எடுத்த விடுப்பு முடிந்து பூமிகா கல்லூரிக்கும், சஞ்சய் அலுவலகத்திற்கும் தயாராகிக்கொண்டிருந்தனர். தனது அலமாரியிலிருந்து ஒவ்வொரு சட்டையாக எடுத்து உடுத்திப்பார்த்து இறுதியில் தனக்கு கனக்கச்சிதமாய் பொருந்திய சட்டையை அணிந்துகொண்டு அலுவலகத்திற்குத் தயாரானான், சஞ்சய்.
“சஞ்சய், பூமிகாவ பத்திரமா காலேஜுல விட்டுட்டு போ.”
ராமநாதன் கூற, அவனும் ‘சரி’ என்றான்.
“எதுக்கு மாமா அவரை தொந்தரவு பண்ணிக்கிட்டு? நானே பஸ்ஸோ, ஆட்டோவோ பிடிச்சு போயிடறேன்…”
குறுக்கிட்டாள், பூமிகா.
“அதெல்லாம் ஒரு கஷ்டமும் இல்லை, கூட ஒரு மூணு நாலு கிலோமீட்டர் ஓட்டணும். அவ்வளவுதான். சாயங்காலம் தான் நினைச்ச நேரத்துல என்னால கிளம்ப முடியாது. அப்போ மட்டும் நீயே பத்திரமா வந்துடு” என்று சஞ்சு கூற, “சரிங்க மாம்ஸ்” என்றாள், பலமாய் தலையாட்டியபடி.
“ஒரு நிமிஷம் இதோ வந்துடறேன்…” என்றுவிட்டு சென்றவள், நேரே பப்புளூவிடம் சென்று, “பப்புளூ டார்லிங், நான் சீக்கிரம் காலேஜுக்கு போயிட்டு வந்துடறேன்” என்றவள், பறக்கும் முத்தம் ஒன்றை கொடுத்துவிட்டு, “லவ் யூ பப்புளூ, பை!” என்றுவிட்டு, அத்தை, மாமாவிடம் கூறிவிட்டு, தனது புத்தகங்களை சரி பார்த்துக்கொண்டிருக்க, சஞ்சையோ கொலைவெறியோடு பப்புளூவை நோக்கிக்கொண்டிருந்தான்.
‘டேய் பப்புளூ மவனே, ஒருநாள் இல்ல ஒருநாள் உன்னை பஜ்ஜி மாவுல முக்கியெடுத்து வருத்து திங்காம விடமாட்டேன்டா’ என்று தனக்குள் வஞ்சனையின்றி வக்கிரத்துடன் சூளுரைத்துக்கொண்டான்.
“மாம்ஸ், என்ன பப்புளூவையே பார்த்துட்டு இருக்கீங்க? அவனை பிரிய கஷ்டமா இருக்கா? எனக்கும் தான்…” என்றாள், மேலும் அவனது வயிற்றெரிச்சலைக் கிளறியபடி. எதையும் வெளியே காட்டிக்கொள்ளாமல் அமைதி காத்தவன், அவளை கல்லூரிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றான்.
அவர்கள் கல்லூரிக்குள் நுழைய, வகுப்பிற்கான மணியும் அடிக்க, அறக்கப்பறக்க தனது புத்தங்கங்களை ஏந்தியபடி வண்டியை விட்டு இறங்கியவள்,
“லேட் ஆயிடுச்சு மாம்ஸ், பெல்லு வேற அடிச்ச்சுட்டாங்க… நான் கிளம்பறேன், பை!” என்றவள், டாட்டா காட்டிவிட்டு, நொடியில் புள்ளிமானென எட்டு வைத்து எங்கோ மறைந்துபோனாள்.
‘அந்த பப்புளூவ கொஞ்சும்போது இவளுக்கு நேரம் ஆகல. என்கிட்ட ரெண்டு நிமிஷம் நின்னு பேசும்போது மட்டும் நேரமாயிடும். அவனுக்கு மட்டும் ‘டார்லிங்’, ‘பறக்கும் முத்தம்’, ‘லவ் யூ’. கட்டுன புருஷனுக்கு கடமைக்கு ஒரு ‘பை’... குறைஞ்சது ‘பை ஹீரோ மாம்ஸ்’னு சொல்லியிருந்தா கூட மன்னிச்சு விட்டிருப்பேன். ஆனா, அந்த ‘ஹீரோ’ கூட சொல்லல… ஹ்ம்ம்… ஆனா, என் பூமி செல்லத்து மேல எந்தத் தப்பும் இல்ல… எல்லாம் இந்த பப்புளூ பண்ற வேலை… இருக்கட்டும், அந்த மீனா இல்லை இந்த மேனா’னு(man) ரெண்டுல ஒன்னு பார்க்கறேன்...’ என்று வழி நெடுகிலும் பப்புளூவை அர்ச்சித்துக்கொண்டே அலுவலகம் சென்றடைந்தான், சஞ்சய்.
சஞ்சய்யைக் கண்டதும் உடன் பணிபுரிபவர்கள் வாழ்த்து மழை பொழிய, அனைவருக்கும் நன்றி கூறிவிட்டு, தனது மேலாளர் அறைக்குச் சென்றான்.
“வெல்கம் புது மாப்பிள்ளை!”
“தேங்க் யூ, சார்…” என்றான் பணிவாக.
“குவார்ட்டர்லி சேல்ஸ் ரிப்போர்ட் வந்திருக்கு. நீங்க வந்ததும் மீட்டிங் வைக்கணும்னு இருந்தேன். 10.30 க்கு மீட்டிங்.”
“ஓகே சார்…” என்றவன், விடைபெற்று எழ,
“இந்த ஷர்ட் ரொம்ப நல்லா இருக்கு… ஐ மீன் உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கு!!” என்று மேலாளர் பாராட்ட, பிரகாசமான முகத்தில் புன்சிரிப்புடன் நன்றி கூறிவிட்டு தனது இருக்கைக்குச் சென்றான். மேலாளர் கடமையே கண்ணாக இருக்க, அவனும் பப்புளூவை மறந்துவிட்டு தனது அலுவல்களில் கருத்தை செலுத்தினான்.
முகம் கழுவி, துடைத்து, சிகையை சரி செய்து, சட்டையையும் சரி பார்த்துக்கொண்டான், சஞ்சய். மாலை சற்று முன்னதாகே அலுவலகத்திலிருந்து கிளம்பியவன் நேரே அவளது கல்லூரிக்குச் சென்றான். ‘போற வர பொண்ணுங்க கூட நம்மள திரும்பிப் பார்க்குதுங்க… ஆபிஸ்ல கூட சட்டை நல்லா இருக்குனு ஒரே புகழ் மழை… ஆனா இவ மட்டும் எந்த நினைப்புல இருக்கா’னே தெரியல…’ என்று தனக்குள் புலம்பியபடி, மரநிழலில், இரு சக்கர வாகனத்தின் மீது லேசாக சாய்ந்தபடி, முழு நீள சட்டையை முக்கால் பங்கிற்கு முடித்துவிட்டு, தலைக்கவசத்தை கழற்றிவிட்டு, அவளுக்காக மிடுக்கான தோரணையில் நின்றிருந்தான். பத்து நிமிட காத்திருப்புக்கு பின் வந்தவள், அவனைக் கண்ட ஆச்சர்யத்தில் விழி விரித்து அவன் முன் வந்து நின்றாள். சில மணி நேரம் மட்டுமே அவளைக் காணாதிருந்தவனுக்கு, பல யுகங்கள் கடந்ததாய் தோன்றியது.
“வாட் எ சர்ப்ரைஸ்? எப்போ மாம்ஸ் வந்தீங்க?”
“இப்போ தான்…”
“அதுக்குள்ள ஆபிஸ் முடிஞ்சுடுச்சா?”
“இல்ல… இன்னைக்கு ஒரு நான் பெர்மிஷன் போட்டு வந்தேன்…”
அவளைக் காணவேண்டும் என்ற ஆவலில் மேலாளர் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு தப்பித்து வந்ததை நாசூக்காக கூறினான்.
“ஸ்வீட் மாம்ஸ்…” என்று தலைசாய்த்துக் கூறியவள், தனது பைக்குள் துழாவி ஒரு டைரி மில்க் சாக்லெட்டினை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
“என்னோட ஸ்வீட் மாம்ஸ்க்கு இந்த ஸ்வீட்…” என்று அவனிடம் கொடுத்தவள், “நீங்க இந்த ஷர்ட்’ல செம்மையா இருக்கீங்க மாம்ஸ். காலைலயே சொல்லணும்னு நினைச்சேன், ஆனா அதுக்குள்ள காலேஜுக்கு லேட் ஆயிடுச்சுனு ஓடிட்டேன்…” என்று அவள் சிரிக்க, அவனுக்கு மட்டும் தலை மீது பனிமழை பொழிந்தது.
அவள் கொடுத்த சாக்லெட்டினை நோக்கியவனுக்கு, அதை மெல்ல பிரித்து இவன் அவளுக்கு ஊட்ட, அவள் இவனுக்கு ஊட்ட என்று கற்பனை குதிரை தறிகெட்டு ஓடியது. ‘ஹ்ம்ம்… இந்த மாதிரி சம்பவெல்லாம் எப்பத்தான் நடக்குமோ?’ என்று ஏக்கத்தோடு அவளைக் கண்டான்.
“என்ன யோசனை?... சரி, இங்கக் கொடுங்க…” என்று சாக்லெட்டினைப் பறித்தவள், அதை மெல்லத் திறந்தாள்.
‘ஆகா… என் மனசுல நினைச்சத என் தங்கம் கப்புனு புரிஞ்சுக்கிட்டாளே…’ என்று குதூகலமானான்.
சாக்லெட்டினை பிரித்தவள், அவன் எதிர்பாரா வண்ணம் பாதியைக் கடித்துவிட்டு, “ஏன் மாம்ஸ் சாக்லெட் பிடிக்காதுன்னா சொல்ல வேண்டியதுதானே?! அதுக்கு எதுக்கு இப்படி முழிச்சுட்டு இருக்கீங்க?” என்றுவிட்டு மீதியையும் முழுங்க எத்தனிக்க, அதற்குள்ளாக அவளது கையிலிருந்து வெடுக்கென அதனை பிடுங்கியவன், “நான் பிடிக்காதுன்னு உன்கிட்ட சொன்னேனா? வீட்ல போய் சாப்பிடலாம்னு நினைச்சேன்…” என்றவன், அவளை முறைத்துக்கொண்டே மீதத்தை உண்டு முடித்தான். ‘வாயப்பாரு வங்காள விரிகுடா மாதிரி… படுபாவி பாதிக்கு மேல தின்னுட்டாளே…’ என்று வெளியே சொல்ல ஆசைப்பட்டு, அதற்கு போதுமான தைரியம் இல்லாததால் எப்பொழுதும் போல் தனக்குள்ளே முனகிவிட்டு அவளை அழைத்துக்கொண்டு வீடு திரும்பினான்.
வீடு திரும்பியதும் தனது புத்தகங்களோடு பூமிகா ஐக்கியமாகிவிட, சஞ்சையோ நினைவு தெரிந்த நாள் முதல் வாழும் வீட்டினை முதன்முறை சுற்றிப்பார்ப்பதுபோல் சுற்றிச்சுற்றி வந்தான். ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை அறைக்குள் சென்று வந்தான். அவளோ இடியே விழுந்தாலும் அசைவேனா என்று இவன் வந்ததையும் கவனிக்கவில்லை , தன்னை அவன் கவனிப்பதையும் கவனிக்கவில்லை. அவளை தொந்தரவு செய்ய மனம் வராமல் பிடிக்காத மெகா சீரியலையும், விரும்பாத செய்திகளையும் மனம் ஒப்பாமல் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.
“பூமிகா… சாப்டுட்டு படி” என்றவன், தட்டில் இரண்டு தோசைகள் வைத்து அவள் முன்னே ஏந்தி நின்றான்.
“மாம்ஸ்… என்னது இது? எதுக்கு நீங்க இதெல்லாம் பண்றீங்க?”
“நான் இல்லை… அம்மா தான் தோசை செஞ்சாங்க…”
“அதில்ல மாம்ஸ், ரூமுக்கு எடுத்துட்டு வந்து கைல கொடுக்கற அளவுக்கு நான் ஒன்னும் பிசி இல்லை. குரல் கொடுத்திருந்தா நானே வந்திருப்பேன்” என்றபடியே கட்டிலை விட்டு எழுந்தவள், தட்டினை வாங்கிக்கொண்டு அடுக்களைக்கு விரைந்தாள்.
“சாரி அத்தை, கல்யாணத்துக்கு லீவு போட்டதுல எக்கச்சக்க நோட்ஸ் பெண்டிங். அதான் எழுதிட்டு இருந்தேன். நீங்களும், மாமாவும் சாப்பிடுங்க. நான் தோசை செய்யறேன்…”
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் பூமிகா. இன்னும் மூணு நாலு மாசத்துக்கு படிப்பு முடியும் வரை நீ கிச்சனுக்கு வர கூடாது. இந்த சமையலெல்லாம் நானே பார்த்துக்கறேன்.”
“இல்லை அத்தை…”
“அம்மா தோசை ஊதிக்கொடுத்தா சாப்பிடாம இப்படித்தான் தயங்கி நிப்பியா?”
“இல்லை, அடுப்பு பக்கத்துலயே மேடை மேல உட்கார்ந்துகிட்டு, கதை பேசிக்கிட்டே அரை டஜன் முழுங்குவேன்…” என்றபடியே எம்பிக்குதித்து மேடை மீது அமர்ந்தபடி உணவு உண்ணத் தொடங்கினாள். நீண்ட நாள் நண்பர்களைப் போல அம்மாவும், மனைவியும் கதை பேசிக்கொண்டிருப்பதைக் கண்ட சஞ்சய்க்கு பூமிகாவை எண்ணி பெருமிதமாக இருந்தது.
உண்டு முடித்தவள் மீண்டும் அறைக்குள் புகுந்துகொள்ள, பப்புளூவை முறைத்தபடி, அதை நறநறவென மென்று விழுங்குவதாக எண்ணிக்கொண்டு அம்மா பரிமாறிய தோசைகளை விழுங்கினான்.
பூமிகாவும், சஞ்சய்யும் தாமரைக்குளம் அருகே அமர்ந்துகொண்டு கண்கள் மோதி மௌனமாய் காதல் பேசிக்கொண்டிருக்க, குளத்திலிருந்து எம்பிக்குதித்த தங்க மீன் ஒன்று பறந்து வந்து பூமிகாவின் வலது தோள் மீது அமர்ந்தது. “பூமி டார்லிங் நான் தான் உன் பப்புளூ” என்று கூறிய அந்த மீன், அவளது கன்னத்தில் அழுந்த முத்தம் ஒன்று கொடுத்துவிட்டு சஞ்சயை நோக்கிச் சிரித்தது. மீன் சிரிப்பதைக் கண்டு பூமிகாவும் சிரிக்க, சஞ்சய் மட்டும் கோபத்தின் உச்சியில் இருந்தான். கைகளை நீட்டி அந்த மீனை அவன் பிடிக்க முயல, நொடியில் அது தாவி அவளது உச்சியில் சென்றமர்ந்தது. மீண்டும் அவன் பிடிக்க முயல, மீண்டும் அது இடது தோளிற்கு தாவி, அவளது மறு கன்னத்தில் மற்றுமொரு முத்தம் தந்தது. அவன் விடாது அதனை பிடிக்க முயல, அது தாவிச்சென்று அவளது மடியில் அமர்ந்தது. இம்முறை அவன் மண்டியிட்டு மிகக்கவனமாய் அதனைப் பிடித்திட எத்தனிக்க, துள்ளிய மீன் காற்றில் பறக்க, இவனது கைகளும் அதனைத் தொடர, மீன் குளத்தினுள் விழ, தடுமாறிய சஞ்சய்யும் பொத்தென நீரினுள் விழுந்தான். மூச்சுத்திணறி தாமரைத் தண்டுகளை விலக்கிக்கொண்டு அவன் மேலே எழ, காலில் சிக்குண்ட கொடிகள் அவனை உள்ளே இழுக்க, இரு கைகளையும் உயர்த்தி நீரின் வெளியே வந்தவன் மூச்சிரைத்தபடி கண் விழித்துப் பார்க்க, கைகள் நீட்டிய வண்ணம் கட்டிலின் மேல் கிடந்தான். சில நொடிகள் ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன், ‘நல்ல வேலை கனவா போச்சு… இதே நிஜத்துல நடந்திருந்தா என்ன ஆயிருக்கும்?! நமக்கு வேற நீச்சல் தெரியாது…’ என்றபடியே பூமிகாவை நோக்க, அவளோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
அடுக்களைக்கு சென்று நீர் பருகிவிட்டு திரும்பியவனின் கண்ணில் பப்புளூ பட, “ஏன்டா டேய், கட்டின புருஷன் என் முன்னாடியே அவளை ‘டார்லிங்’னு கூப்பிடுவ, முத்தம் கொடுப்ப… என்ன தில்லு உனக்கு? அவ என் பேபி… இன்னொரு தடவ நீ அவகிட்ட ராங்கா நடந்துக்கிட்ட, அப்புறம் நான் உன்கிட்ட டெர்ரரா நடந்துக்க வேண்டியிருக்கும். பி கேர்ஃபுல்!!” என்று பப்புளூவை மிரட்டிவிட்டு தனது அறைக்குத் திரும்பினான்.
மணி நள்ளிரவு 12.30 என்க, தூக்கம் களைந்த அசதியில் கிடந்தவன் மங்கிய ஒளியில் அவளை நோக்க, அவளோ ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள். மெல்ல எழுந்து இதழ் குவித்து அவளது கன்னத்தில் முத்தமிடச் சென்றவன், வேண்டாமென்று எண்ணி மீண்டும் படுத்துக்கொண்டான். ‘என்னுடைய முதல் முத்தம் ரொம்பவே ஸ்பெஷல்… அதை நீ தூங்கும்போது கொடுக்கமாட்டேன்… நான் கிஸ் பண்ணும்போது உன்னோட ரியாக்ஷன் என்னனு நான் பார்க்கணும்… வெட்கப்படுவியா? நகம் கடிப்பியா? கால் கட்ட விரல்ல கோலம்போடுவியா?... இல்லையில்லை, தலை சாய்ச்சு, விழி விரிச்சு அழகா, இதமா சிரிப்ப…’ தனது வாழ்வில் வரவிருக்கும் இன்பங்களைக் கற்பனை செய்தபடி உறங்கிப்போனான்.
சஞ்சய், உனக்கு இப்படி ஒரு வில்லனா?! பூமிகா மட்டுமில்ல, உன் விதி கூட உன்னை நல்லா வச்சு செய்யுது!!
No comments:
Post a Comment