“ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்…” என்று பாடிக்கொண்டு, குதிரை பூட்டிய சாரியட்டை ஒரு கையால் செலுத்தியபடி, மறு கையால் பூமிகாவின் இடையைப்பற்றி, அவளை சஞ்சய் ரசித்திருக்க, அவளோ நாணத்தில் கன்னம் சிவந்திருக்க, இவர்களின் காதலைக் கண்டு தனது பற்கள் தெரிய குதிரை (தட் சேம் பானி பூரிகாரன் குதிரை!!) சிரித்துக்கொண்டே மேகங்களின் மத்தியில் தாவித்தாவிச் சென்றுகொண்டிருந்தது. அவள் நாணத்தில் நெளிந்து அவனது பிடியிலிருந்து விலகிக்கொள்ள முயற்சிக்க, அவன் அவளை விடாது தன்னோடு சேர்த்துக்கொள்ள முயற்சிக்க, அவள் அவனது பிடிக்குள் சிக்காது போக்கு காட்ட, குதிரை ஒரு மேகத்திலிருந்து மற்றொன்றிற்கு தாவ, தடுமாறி விழச் சென்றவளை அவன் பாய்ந்து பிடிக்க, டங்கென மண்டையில் இடித்துக்கொண்டான். தலையைத் தேய்த்துக்கொண்டு அவன் கண்விழித்துப் பார்க்க, கட்டிலின் அருகே இருந்த இரண்டு அடி உயர சைட் டேபிளில் இடிபட்டு தலைக்குப்புற தரையில் கிடந்தான்.
“குட் மார்னிங், மாம்ஸ்!” என்றபடி அங்கு வந்த பூமிகா, அவன் கீழே கிடப்பதைக் கண்டு பதறிக்கொண்டு அவன் அருகே சென்றாள்.
“மாம்ஸ் என்ன ஆச்சு? விழுந்துட்டீங்களா?”
‘ஐயோ இவ வேற வந்துட்டாளே… அந்த பாழாபோன குதிரை திரும்பவும் கனவுல வந்து என் மானத்த வாங்கிடுச்சு… சரி சமாளிப்போம்’ என்று சிந்தித்துக்கொண்டே எழுந்தவன்,
“விழறதா? நானா? புஷ்-அப்ஸ் எடுத்துட்டு இருந்தேன்…”
தான் கூறியதை அவள் நம்பினாளா இல்லையா என்று சந்தேகமாய் அவளை அவன் நோக்க, அவளோ விழி விரிந்து அதிசயமாய் அவனை பார்த்திருந்தாள்.
“என்ன சந்தேகமா இருக்கா?”
“அதெல்லாம் இல்லை மாம்ஸ்… சூப்பர் மாம்ஸ் நீங்க… ஹீரோனா உடம்பை ஃபிட்டா வச்சுக்கணும்… எவ்வளவு கஷ்டம்?!! ஹீரோனா ஹீரோ தான்!!”
அவள் வாழ்த்து மடல் வாசிக்க, அந்தக் குளிர்ச்சியில் மண்டையில் முந்திக்கொண்டு எழுந்த அடிபட்ட புடைப்பு மட்டுப்பட்டது.
“அப்புறம் வேற என்ன எக்சர்சைஸ் பண்ணுவீங்க? ஜிம் போவீங்களா? சிக்ஸ் பேக் வச்சிருக்கீங்களா?”
‘இவ ஒருத்தி… ஒரு பொய் சொல்லப்போக ஓராயிரம் பொய் சொல்ல வைக்கறா’ என்று அவளை உள்ளுக்குள் கடிந்துகொண்டவன், “வச்சிருந்தேன்… கொஞ்ச நாளா வேலை டென்ஷன், கல்யாண பிசி… அதான் ஒர்க் அவுட் பண்ண டைமே இல்லை…” என்று மீண்டும் அவள் நம்பும்படியாக சமாளித்தான்.
“மா…”
“நான் குளிச்சுட்டு வந்துடறேன்” என்று அவள் கூற வந்ததை கூறவிடாமல் குறுக்கிட்டவன், மறுநொடியே ஒரு துவாலையை கையிலெடுத்துக்கொண்டு குளியளறைக்குள் பதுங்கினான்.
அவளிடமிருந்து தப்பித்து பெருமூச்சு விட்டவன், “இந்த ஹீரோ இமேஜை காப்பாத்தறதுக்குள்ள உயிர் போய் உயிர் வருது” என்று முணுமுணுத்தபடி மேல் சட்டையைக் கழட்ட, லேசாக மேடேறியிருந்த அவனது செல்லத் தொப்பை வெளிப்பட்டது. “சிக்ஸ் பேக் இருக்குனு நினைச்சுக்கிட்டு இருக்கறவ கண்ணுல இந்த ஃபேமிலி பேக் மட்டும் பட்டுடவே கூடாது விநாயகா!!” என்று அவசரமாய் விநாயகரிடம் வேண்டுதல் வைத்துவிட்டு, குளித்து முடித்தான்.
குளித்து முடித்து வந்தவன் மேஜையில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருக்க, அருகே அமைதியாய் நின்றிருந்தாள், பூமிகா. அவளது மௌனத்தை உடைக்கும் பொருட்டு,
“நீ சாப்பிடலையா?” என்றான்.
“இல்லை…”
அவள் யோசனையாய் நின்றிருக்க,
“என்ன ஆச்சு?” என்றான், அவள் மனதை படிக்க முடியாத ஆற்றாமையில்.
“கேட்டேன்… பார்த்துக்கறேன்…”
அவள் கூறியது ஒன்று புரியாமல் முழித்தவன்,
“என்னமா கேட்ட? என்ன பார்க்கப்போற?” என்று அவளிடமே சரணாகதி அடைந்தான், விடை அறிந்துகொள்ள.
“உங்க காலர் டியூன் கேட்டேன். ரெண்டுல ஒன்னு பார்த்துக்கறேன்.”
நெற்றி சுருங்கி தனது காலர் டியூன் என்னவென்று யோசித்தவனுக்கு,
“‘முந்தி முந்தி விநாயகனே’ பாட்டு” என்று அவளே பதில் கூறினாள்.
“ஆங்… ஆமாமா… அந்தப் பாட்டுல என்ன பிரச்சனை? சாமி பாட்டு தானே?!”
“சாமி பட்டா இருந்தாலும், அதுல கனகாவுக்கும் ராமராஜனுக்கும் போட்டி நடக்கும். நமக்குள்ள நடக்கறத போட்டியா நீங்க பார்க்கறீங்கன்னு சொல்லாம சொல்றீங்க. ஆனா, அதை நான் என்னோட வாழ்க்கையா பார்க்கறேன். இருங்க சூடா இட்டிலி எடுத்துட்டு வரேன்…” என்றுவிட்டு அவள் அடுக்களைக்குள் செல்ல, அவள் அறியா வண்ணம் இவன் தலையில் அடித்துக்கொண்டான்.
‘நானே பொழுதுபோகாம காலர் டியூன் மாத்திக்கிட்டு உட்கார்ந்திருக்கேன்… இதுல இவ வேற…’ என்று அவன் அலுத்துக்கொள்ள, அடுக்களை விட்டு வெளியே வந்தவள், சுடச்சுட இட்டிலிகளை அவனது தட்டினில் கவிழ்த்தாள்.
“ஒன்னு கவனிச்சீங்களா மாம்ஸ்?”
“என்னது?”
“என்னதான் கனகாவுக்கும் ராமராஜனுக்கும் போட்டியாவே இருந்தாலும், கடைசில வில்லன் ராமராஜன் மேல கத்தியெறியும்போது கனகா குறுக்கவந்து ராமராஜனைக் காப்பாத்திடுவா. அதுதான் மாம்ஸ் காதல்… சுயநலமில்லாத உன்னதமான காதல்… நானும் அப்படித்தான்னு சீக்கிரமே நீங்க உணருவீங்க… நான் உணர வைப்பேன்…” என்றுவிட்டு மீண்டும் அடுக்களைக்குள் புகுந்துகொண்டாள்.
உண்டுமுடித்து, சிரித்துக்கொண்டே தனது அறையுள் சென்று கட்டிலின் மேல் சரிந்தவன், ‘செல்லம் நீ கத்தி குத்தெல்லாம் வாங்க வேண்டாம், கட்டிபுடுச்சு மாம்ஸ்’கு ஒரு உம்மா கொடேன்… அது போதும்’ என்று தனக்குள்ளே முணுமுணுத்துக்கொண்டவன், அருகிலிருந்த தலையணையை எடுத்து, அவளாக எண்ணி, நெஞ்சோடு இறுகக் கட்டிக்கொண்டான்.
“டேய் சஞ்சு…”
மெல்ல குரல் கொடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்த சீதாலட்சுமி, “நல்லவேளை அப்பா உலகத்த மறந்து நியூஸ் பார்த்துட்டு இருக்காங்க. நீ உன் மனசுல என்னடா நினைச்சுட்டு இருக்க?”
“நியூஸ் சேனல் தானமா பார்க்கறாங்க, ஃபேஷன் சேனலா பார்க்கறாங்க நான் தப்பா நினைக்க?”
“அடேய், அதில்லடா… பூமிகா என்னமோ என் காதல உணர வைக்கறேன்னு உன்கிட்ட சொல்லிட்டு இருந்தாளே… நான் போற போக்குல காதுல வாங்கிட்டேன், தப்பா நினைச்சுக்காத…”
“அம்மா… அதெல்லாம் ஒன்னும் நினைச்சுக்கல…”
“டேய், அவ நல்ல பொண்ணு டா…”
“யாரு இல்லனு சொன்னா?”
“நேத்து அவளோட அம்மாவும், அப்பாவும் நீ சாந்தி முகூர்த்தம் வைக்க வேண்டாம்னு சொல்லிட்டியேன்னு ரொம்ப வருத்தப்பட்டாங்க டா.”
“அம்மா, அவ படிக்கற பொண்ணு மா…”
“தெரியுது டா, இருந்தாலும் சாஸ்திரம் சம்பிரதாயம்னு செய்ய வேண்டியதை செஞ்சாகனும் இல்ல?”
“அதுக்கு ஒன்னும் அவசரம் இல்ல…”
“டேய், உன் மனசுல என்னதான் நினைக்கறன்னு சொல்லு டா… சாந்தி முகூர்த்தம் வேண்டாம்ங்கற, இன்னைக்கு பூமிகா கண்கலங்கி உன்கிட்ட பேசிட்டு போறா… ரொம்ப கவலையா இருக்கு டா...”
பரிதவித்து நின்றிருந்த தாயின் மீது பரிதாபம் கொண்டவன்,
“அம்மா, இங்க உட்காருங்க முதல்ல….” என்று கட்டிலின் மீது அமரச் செய்தவன், கார்ட்லெஸ் தொலைப்பேசியை எடுத்து தனது இலக்கத்திற்கு அழைத்து அவளிடம் கொடுத்தான்.
மகனைக் கண்டு அவள் முறைக்க,
“நீங்க கேட்ட கேள்விக்கு இதுதான் பதில்…” என்றான்.
தொலைப்பேசி அழைப்பினைத் துண்டித்தவள்,
“நீதான் பெரிய லூசுனு நினைச்சேன். ஆனா, நீயெல்லாம் ஒரு ஆளுன்னு தேடி வந்து கழுத்த நீட்டினாளே அவ தான்டா பெரிய லூசு.”
“அம்மா…”
“பின்ன என்னடா? நான் எவ்வளவு முக்கியமான விஷயம் பேசிகிட்டு இருக்கேன், நீ என்னடானா ரேடியோ கேட்க சொல்ற…”
“ரேடியோவா? லேண்ட் லைன்ல எப்படிம்மா ரேடியோ வரும்? செல் போன்ல தான் வரும். நீங்க கேட்டது என்னோட காலர் டியூன்.”
“இப்ப என்னதான்டா சொல்ல வர?”
“சிங்கப்பெண்ணே… சிங்கப்பெண்ணே… ஆணினமே உன்னை வணங்குமே…”
“டேய் முடியலடா… உங்க அப்பாவுக்குத் தெரியக்கூடாதுனு நினைச்சேன். என்னால இதுக்கு மேல தாக்கு பிடிக்க முடியாது. உங்க அப்பாகிட்ட எல்லாத்தையும் சொல்லிடறேன். நீ அவருக்கே பதில் சொல்லிக்கோ…” என்றுவிட்டு அவள் எழ,
“அம்மா… அம்மா… உட்காருங்க…” என்று அவளை தடுத்து நிறுத்தி அமரச் செய்தவன், அவளுக்கு விளங்கும்படி எடுத்துக்கூறத் தொடங்கினான்.
“அம்மா, பூமிகா நல்ல பொண்ணு மட்டுமில்ல ரொம்ப புத்திசாலியும் கூட. அன்னைக்கு மாப்பிள்ளை அழைப்புல இவ சொல் பேச்சு கேட்டு, கூட இருந்த பொண்ணுங்கல்லாம் நில்லுன்னா நிக்குதுங்க, உட்காருனா உட்காருதுங்க. அதுல அவளுடைய ஆளுமை இருந்தது. மறுநாள் கல்யாணம் நின்னுபோன காரணம் தெரிஞ்சதும் எல்லார் முன்னாடியும் உண்மையை எடுத்துச் சொன்னதுல நேர்மை இருந்தது. இவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லும்போது அதுல ஒரு துணிச்சல், தைரியம், தெளிவு இருந்தது. எல்லாரோட பழகுறதுல பணிவு இருக்கு. இப்படிப்பட்ட குணங்கள் இருக்கறவ வீட்டுக்குள்ள சமையல், குழந்தை, குடும்பம்னு முடங்கிப் போகாம, வெளிய போய் நிறைய சாதனை படைக்கணும்னு நினைக்கறேன். அதுக்கு நான் உறுதுணையா நிக்கணும்னு நினைக்கறேன். நேத்து அவ அப்பா பேசும்போது, ‘என் பொண்ணு ரொம்ப நல்லா படிப்பா, மேல சி.ஏ. படிக்கணும்னு ஆசைப்படறா, நீங்க அனுமதி கொடுத்தா நானே படிக்க வைக்கறேன்’னு சொன்னாரு. அதுக்கு நான் என்ன சொன்னேன் தெரியுமா? ‘அவ மிஸ்.பூமிகா இல்லை, மிஸஸ்.பூமிகா சஞ்சய்! அவ லட்சியம் தான் என் லட்சியம். அவ படிக்க நினைக்கறத நான் நிறைவேத்தறேன்’னு சொன்னேன். கொடுத்த வாக்க தலையே போனாலும் நான் காப்பாத்தியாகணும். இந்தக் காதல் கத்திரிக்காய்க்கெல்லாம் இன்னும் காலம் இருக்கு. முதல்ல அவளோட கனவு மெய்ப்படவேண்டும்!!”
அவன் மூச்சுவிடாமல் கூறி முடித்ததைக் கேட்டு அதிசயமாய் நோக்கினாள், சீதாலட்சுமி.
“நீயாடா இப்படியெல்லாம் பேசற? ஆனா, நீ சொல்றதும் சரி தான். எப்படியோ ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு சந்தோஷமா இருந்தீங்கனா அதுவே போதும்…”
மகனின் தலையைக் கோதிவிட்டு அவள் எழ, அறையின் வாயிலில் பூமிகா நின்றிருந்தாள்.
“இப்பத்தான் அத்தை வந்தேன்…”
“பரவால்லமா…” என்ற சீதாலட்சுமி, முகம் மலர்ந்து மருமகளின் நெற்றியில் ஆசீர்வாத முத்தமிட்டுச் சென்றாள்.
சீதாலட்சுமி சென்றதும் சஞ்சய்யின் எதிரே வந்து நின்றாள் பூமிகா.
‘அம்மாவ என்னென்னமோ பேசி, குழப்பி சமாளிச்சுட்டோம், இப்ப இவளை என்ன பண்றது?’ என்று தீவிரமாய் சிந்தித்திருந்தான்.
அவனைக் கண்டு அன்பொழுக சிரித்தவள்,
“மாம்ஸ்… கேட்டேன்… புரிஞ்சுக்கிட்டேன்…”
‘திரும்பவும் முதல்லேர்ந்தா?!’ அவன் அரண்டுபோனான்.
“என்னது பூமிகா?”
“எப்பொழுதும் போல ஓப்பனிங் வில்லத்தனம், ஃபினிஷிங் ஹீரோயிசம்… இந்த சிங்க மகனுக்கு ஏத்த சிங்கப்பெண் நான் தான் மை டியர் ஹீரோ மாம்ஸ்” என்று தலைசாய்த்து விழி விரிய கூறியவள், அவன் அசந்த நொடியில் அவனது கன்னத்தைக் கிள்ளிவிட்டு அறையைவிட்டு ஓடிச்சென்றாள்.
தனது கன்னத்தை விரல்களால் மெல்ல வருடிப்பார்த்தவனுக்கு இனம்புரியா மகிழ்ச்சி பொங்கி, மூச்சு முட்டியது. கண்ணாடி முன் சென்று நின்றவன்,
“டேய் ஹீரோ, வாழ்றடா நீ!” என்று தன்னைத்தானே வாழ்த்திக்கொண்டான்.
ஓ! இது தான் ‘வாழறதா’? நீ நடத்து சஞ்சு...
No comments:
Post a Comment