Monday, 6 January 2020

கா(த)லர் டியூன் - 12




“சஞ்சய், இன்னைக்கு மீட்டிங் ஒரு மணி நேரம் கழிச்சு வச்சுக்கலாம். இன்வைட்டீஸ் எல்லாருக்கும் சொல்லிடுங்க. உங்க ப்ரெசெண்டேஷன் தயாரா?”
சஞ்சய்க்கு, தேவரகொண்டா ஒரு வித இம்சை என்றால், ‘இதைக் கொண்டா, அதைக் கொண்டா’ என்று வேலை மேல் வேலை வாங்கும் மேலாளர், மற்றொரு இம்சை. அவர் கூறியதனைத்தும் முடித்துவிட்டு சற்று இளைப்பாறியவனின் நினைவில் மீண்டும் தேவரகொண்டா வந்து நின்றான். கூகிளில் தேடி அந்த நடிகனின் புகைப்படத்தை எடுத்தவன், ‘என்னை மாதிரி பசங்க நிம்மதிய கெடுக்க எங்கிருந்துடா வரீங்க?’ என்று வசை பாடிக்கொண்டே நடிகனின் நெற்றியில் பெரியதொரு பொட்டு வரைந்தான். ‘கொண்டாவுக்கு ஒரு கொண்டை பார்ஸல்’ என்றபடி, ஒரு கொண்டை வரைந்து காதோரம் சிறிய ரோஜாப்பூவையும் வரைந்தான். ‘கூந்தல் கருப்பு… ஆஹா… குங்குமம் சிவப்பு… ஓஹோ… உனக்கு ஆப்பு… ஊஹூ… நான்தான் டாப்பு… ஏஹே…’ என்று பாடிக்கொண்டே தேவரகொண்டா தாடியில் நீளமானதொரு பின்னலிட்டு பூச்சூடினான்.
“மீட்டிங்கு டைம் ஆயிடுச்சு… ம்ஹும்…” என்றபடியே ஆர்வமாய் வரைந்துகொண்டிருந்த சஞ்சய்யின் தோளைத் தட்டினார் மேலாளர். அவரைக் கண்டு திடுக்கிட்டவன், தான் வரைந்துகொண்டிருந்ததை அவர் பார்த்துவிட்டதில் வெட்கித் தலை குனிந்து நின்றான்.
“இதுல ஃபீல் பண்ண ஒண்ணுமில்ல. நான் மூக்குத்தி, தோடெல்லாம் வரைஞ்சிருக்கேன்… பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி… இவனுக்கு இல்லை, மாதவனுக்கு…” என்றுவிட்டு அவர் முன்னேசெல்ல, அவசர அவசரமாக தனது மடிக்கணினியை எடுத்துக்கொண்டு, தன் மனதில் யோசித்து வைத்திருந்த சில ஆக்கப்பூர்வ குறிப்புகளை நினைவுகூர்ந்துகொண்டே பின்னே சென்றான். 


ஒவ்வொரு நாளும் விஜய் தேவரகொண்டா கனவில் துரத்த, அந்தக் கோபத்தையெல்லாம் உடற்பயிற்சி செய்து மட்டுப்படுத்தினான். சில நாட்கள் கைகளை தூக்க முடியா அளவிற்கு வீங்கி வலித்தாலும், பூமிகா கலந்துகொடுக்கும் புரோடீன் மில்க் ஷேக்கிற்காகவும், அவள் ஆசையுடன் ஆர்ம்ஸ்களை தொட்டுப்பார்க்க வேண்டும் என்பதற்காகவும், அவளை தொந்தரவு செய்யும் ரோமியோக்களுக்கு பயம் காட்டவேண்டும் என்பதற்காகவும் விடாது பயிற்சி செய்தான்.


அன்று மாலை சற்று முன்னதாகவே கிளம்பியவன், நேரே கல்லூரி வாசலுக்கு சென்று நின்றான். அவனைக் கண்டு ஓடோடி வந்த பூமிகா, “இன்னைக்கு என்ன கார் மாம்ஸ்?” என்றபடியே ஆர்வமாக நோக்கினாள். முன் இருக்கை கதவினைத் திறந்து அவள் அமர்ந்ததும், ஓட்டுநர் இருக்கையில் வந்து அமர்ந்தவன், “எந்த காரா இருந்தா என்ன? எதுவும் நம்ம கார் இல்லை. எல்லாம் ஆபிஸ் கார்…” என்றான்.
“இருந்தாலும், இந்த வண்டி சூப்பரா இருக்கு மாம்ஸ்…”
“இன்னைக்கு ஒரு பெரிய க்ளையண்ட்ட பார்க்க போயிருந்தேன். அதான் ஆபிஸ்லேர்ந்து இந்த கார எடுத்துட்டு போனேன்… சாதாரண க்ளையண்ட்ன்னா சாதாரன கார்… இதெல்லாம் ஒரு டாக்டிஸ்…” 
“ம்ம்… ஆனா, நீக்க கோடீஸ்வரன்னும், விதவிதமா கார் வச்சிருக்கீங்கன்னும் காலேஜுல பேசிக்கறாங்கனு என் ப்ரெண்ட் சொன்னா…”
“எனக்கு அடுத்த ப்ரோமோஷன் வந்தாத்தான் கார் பத்தி நான் யோசிக்க முடியும் பூமிகா…”
“ப்ச்… யாருக்கு மாம்ஸ் வேணும் கார்? எனக்கு உங்கக்கூட இருக்கணும்… அதுமட்டும் தான் வேணும்… வேற எந்த ஆசையும் இல்லை…” 
அவளது குரல் குழைய, இவனது மனம் இளக, அழகிய புன்னகைகள் பரிமாறப்பட்டன. 
“ஏன் மாம்ஸ், புன்னகையிலேயே ஆள கவுக்கறீங்க. அப்புறம் எதுக்கு ‘பிள்ளையார்பட்டி ஹீரோ நீ தான்பா கணேசா, நீ கருணை வச்சா நானும் ஹீரோ பா’ பாட்ட காலர் ட்யூனா வச்சிருக்கீங்க? நீங்க தான் ஏற்கனவே ஹீரோ ஆச்சே?!”
‘இந்தக் கேள்விக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை…’ என்று எண்ணிக்கொண்டவன், “இன்னைக்கு சதுர்த்தி’ல… அதான்…” என்றான் தயக்கமின்றி.
“சும்மா கிண்டல் பண்ணாதீங்க மாம்ஸ்… ஹீரோன்னு ஒத்துக்குவே மாட்டேங்கறீங்க… இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு தன்னடக்கம் கூடாது…”
‘நானா ஒத்துக்கல? ஹீரோன்னு சொல்லிட்டு என்னை காமெடியன் ஆக்கறதே நீதானடி…’ 
பதில் கூறாமல் பெருமூச்சு சொரிந்தபடி, வண்டியை செலுத்தினான்.               
தன்னை மறந்து அவன் கார் ஓட்டும் அழகினை ரசித்துக்கொண்டு வந்தவள், வண்டி நின்ற பின்புதான் நிலைக்குத் திரும்பினாள். 
“என்ன மாம்ஸ், வீட்டுக்கு போகாம இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க?”
கண் முன்னே உயர்ந்து நின்ற ஜவுளிக்கடையையும், அவனையும் கேள்வியாய் நோக்கினாள். 
“வர ஞாயிற்றுக்கிழமை ஆபிஸ்ல ஒரு கெட்-டு-கெதர். எல்லாரும் கண்டிப்பா மனைவிய அழைச்சுட்டு வரணும்னு சொல்லியிருக்காங்க. நல்லா பெர்ஃபாமன்ஸ் பண்ணவங்களுக்கு அவார்ட் கொடுப்பாங்க. இன்னைக்கு தான் நான் சீக்கிரம் வேலை முடிஞ்சு வந்துட்டேன்ல, அதான் உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன். நீ உனக்கு பிடிச்ச மாதிரி புது ட்ரெஸ் ஒன்னு வாங்கிக்கோ…”
அவள் முகம் வாடிப்போக, “என்ன ஆச்சு?” என்றான் கவலையாக.
“கல்யாணமாகி, நீங்க எனக்கு முதல் கிப்ட் வாங்கித்தர கூட்டிட்டு வந்திருக்கீங்கன்னு நினைச்சேன்… உங்க ஆஃபிஸ் மீட்டிங்காக கூட்டிட்டு வந்திருப்பீங்கனு நினைச்சுக்கூட பார்க்கல…”
‘ஐயையோ, இந்தப் பாயிண்ட்ட மறந்துட்டேனே… சரி, சமாளிப்போம்...’
“நான் உனக்கு வாங்கித்தர முதல் பரிசு உன் ஆயுசுக்கும் மறக்க முடியாதபடி இருக்கும். அது நான் பார்த்துப் பார்த்து வாங்கினதா இருக்கும். இங்க வாங்கப்போறது கிப்ட் கணக்குலயே வராது…”
அவன் தீர்க்கமாக முகத்தினை வைத்துக்கொள்ள, அவன் சமாளிக்கிறான் என்பதைக்கூட அறியாத பேதை, எப்பொழுதும் போல் தலை சாய்த்து விழி விரித்து, “நிஜமாவா மாம்ஸ்?” என்றாள். ‘அடியே செல்லமே, நீ இப்படி கேட்கற அழகுக்கு என் உயிரையே கொடுப்பேன்டி…’ என்று உள்ளுக்குள் கூறிக்கொண்டு, “ஆமா… வா போகலாம்” என்று அவளிடம் கூறிவிட்டு உடன் அழைத்துச்சென்றான்.    

சஞ்சய் கூறிய ஞாயிறும் வந்தது. தயாராகி வரவேற்பறையில் செய்தித்தாள் படித்தபடி, பூமிகா தயாராகி வருவதற்கு காத்திருந்தான்.
“பெண்களை ஏமாற்றி பதினைந்து திருமணம் செய்த வாலிபன் கைது - இதான் ஹெட்லைன்ஸா? வெரி குட்… அவனவனுக்கு ஒரு கல்யாணம் பண்றதுக்குள்ளயே நாக்கு தள்ளுது… இத்தனை கல்யாணம் பண்ணியிருக்கானே… மச்சக்காரன்…” 
“ஹீரோ மாம்ஸ், இந்த மாதிரி நியூஸ் கேட்டு பொங்கி ஏழாம, மச்சக்காரன்னு பாரட்டறீங்க? ஹீரோ நீங்களே இப்படி பேசலாமா?”
‘இவ எப்ப இங்க வந்தா? மனுசன ஒரு நியூஸ் படிக்க விடறாளா… காதலிக்கறேங்கற பேர்ல என்னை கொத்து பரோட்டா போடறாளே….’
“பதில் சொல்லுங்க மாம்ஸ்…”
“நீ கிளம்பிட்டியா?”
“நான் கிளம்பறது இருக்கட்டும். முதல்ல நீங்க பேசினதுக்கு பதில் சொல்லுங்க… இத்தனை பொண்ணுங்க வாழ்க்கையை கெடுத்தவன் மச்சக்காரனா?”
“அயோ நான் அந்தத் திருட்டுப்பயல சொல்லல. அவனை புடிச்ச சப்-இன்ஸ்பெக்டர சொன்னேன். ஹெட்லைன்ஸ்ல வர அளவுக்கு சூப்பரா கேஸ் முடிச்சிருக்காரு, உடனே அவருக்கு ப்ரோமோஷன் இன்க்ரீமெண்ட் எல்லாம் வந்துடும். அவர் மட்டுமில்ல, அவர் குடும்பமே சந்தோஷமா இருக்கும். அதான் மச்சக்கார போலீஸ்னு சொல்ல வந்தேன்…”
தலை சாய்த்து, விழி விரித்து சிரித்தவள், “அந்தப் போலீஸ் மட்டுமில்ல நீங்களும் தான் மாம்ஸ்…” என்றவள் அவன் கன்னத்தை நறுக்கென்று கிள்ளிவிட்டு ஓடிச்சென்றாள். ‘ஆ!’ என்று வலி தாங்காமல் அலறியவன், கன்னத்தை தேய்த்துக்கொண்டு, வாயிலுக்குச் சென்று வண்டியைக் கிளப்பினான்.
அத்தை, மாமாவிடம் கூறிவிட்டு வந்தவள் அவனை வாஞ்சையோடு காண, அவனோ கைகளைக் கொண்டு இரு கன்னங்களையும் மூடிக்கொண்டான். சிரித்துக்கொண்டே வண்டியின் பின் சீட்டில் அமர்ந்தவள், அவனது இடுப்பில் கிச்சுக்கிச்சு மூட்ட, உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் நெளிந்தவன், “ப்ளீஸ் பூமிகா, வண்டி பேலன்ஸ் போயிடும்…” என்று பரிதாபமாய் கோரியபடி, வண்டியை செலுத்தினான்.                  


புகழ்பெற்ற நட்சத்திர ஹோட்டலில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, அலுவலகத்தின் மற்ற கிளைகளில் பணிபுரிபவரும் வருகை தந்திருந்தனர். அந்த அரங்கத்தின் விளக்கொளியில் பூமிகா ஜொலிஜொலிக்க, சஞ்சய்யின் விழிகளோ அவளை விட்டு அகலுவேணா என்று அடம்பிடித்தன. அன்று கடையில் வாங்கிய கருநீல வர்ண சுடிதாரில், வெள்ளை கற்கள் பாதிக்கப்பட்ட அணிகலன்கள் மினுமினுக்க, பெண்ணவளின் வதனமும் பளபளக்க, அவனது மனமோ , “பூமிகா ஐ லவ் யூ!” என்று ஜபம் செய்தது. 


தனது நண்பர்களிடம் அவளை அவன் அறிமுகம் செய்து வைக்க, அவளோ பணிவன்புடன் அனைவரிடமும் உரையாடினாள். 
“டேய் மச்சான், எப்படி இருக்க?” என்றான் பணிமாற்றம் பெற்று வேறு கிளையில் பணிபுரியும் சஞ்சய்யின் நண்பன் ஒருவன். 
“சூப்பரா இருக்கேன் டா… மீட் மை வைஃப் பூமிகா” என்றான் சஞ்சய்.
பூமிகாவிடம் “ஹலோ” என்றவன், “கல்யாணம் ஆனாலும் ஆச்சு, என்னப்பா மாச்சோ(Macho ) மாதிரி ஆயிட்ட?” என்றான், நண்பன்.
“சும்மா கொஞ்சம் உடம்ப ஃபிட்டா வச்சுக்கலாம்னு…” சஞ்சய் சமாளிக்க, பூமிகாவோ ஆசையாசையாய் அவனையே கண்டிருந்தாள்.
“என்ன பாரு… வெயிட் போட்டு முட்டி வலி வந்தது தான் மிச்சம்…” என்றவன் அலுவலகத்தைப் பற்றி பேசத் தொடங்கினான். அவர்கள் இருவரும் ஆர்வமாக பேசிக்கொண்டிருந்தாலும், அவளது ஆர்வம் அனைத்தும் ஃபிட்டாக இருக்கும் அவளது அத்தான் மீதே இருந்தது.


விழா தொடங்க, சஞ்சய்யின் மேலாளர் வரவேற்புரை வழங்கினார். 
“அனைவருக்கும் வணக்கம்! இது ஒவ்வொரு ஆண்டும் நமது கம்பெனியில் நடைபெறும் குடும்ப விழா. தவிர்க்க முடியாத காரணத்தினால் நமது எம்.டி. கலந்து கொள்ளமுடியவில்லை என்றாலும், தனது வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்ளும்படி என்னிடம் கேட்டுக்கொண்டுள்ளார். எப்பொழுதும் போல் இம்முறையும் சிறந்த பெர்ஃபாமன்ஸ்ஸிற்கான பரிசுகள் வழங்கப்பட உள்ளன. அதனோடு சிறந்த இன்னோவேஷனுக்கான விருது ஒன்றையும் இவ்வாண்டு அறிமுகப்படுத்தியுள்ளோம். நமது சிறப்பு விருந்தினர் பரிசுகளை வழங்குவார்…”
பரிசு வென்றவர்களின் பெயர்கள் வாசிக்கப்பட, ஒவ்வொருவராக மேடையேறி பரிசினை பெற்றுக்கொண்டனர்.
“உங்க பேர எப்போ கூப்பிடுவாங்க மாமஸ்?” 
ஆர்வமாய் வினவினாள், பூமிகா.
‘ஹீரோன்னா அவார்ட் வாங்கியே ஆகணுமா?! அந்த லிஸ்ட்ல பேரு இருந்தாத்தானே கூப்பிடுவாங்க’ என்று சலித்துக்கொண்டவன்,
“அது… தெரில…” என்று மழுப்பினான்.
பரிசுகள் அனைத்தும் வழங்கப்பட்டுவிட, இவனது பேர் வராமல் போக, மனைவியின் முன்னே சற்று நெளிந்து கொண்டு தவித்திருந்தான்.
“பரவால்ல மாம்ஸ்! அடுத்த வருஷம் வாங்கிக்கலாம்… ஹீரோ ஹீரோ தான்!”
அவள் கூறியதைக் கேட்டதும் ஆறுதல் அடைந்தான், சஞ்சய்.


“இந்த ஆண்டிற்கான இன்னோவேடிவ் விருது மிஸ்டர் சஞ்சய் அவர்களுக்கு. அவர் கொடுத்த ஆக்கப்பூர்வமான நடைமுறை மாற்றம் அதாவது process changes, சேல்ஸ் விகிதத்தில் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே அவருக்கு இந்த விருது”
மேலாளர் அறிவிக்க, நம்பமுடியாமல் அவன் எழுந்து நிற்க, உரக்கக்  கை தட்டியவள் உணர்ச்சிவசப்பட்டு சீட்டியடிக்க, அரங்கமே அவர்களை திரும்பிப்பார்த்தது.
“பூமிகா என்ன இது?” அவன் காதுகடிக்க,
“சாரி மாம்ஸ், காலேஜு பழக்க தோஷத்துல…” என்றவள், அமைதியாக அமர்ந்தாள். 
அவன் நடந்து சென்று, மேடையேறி, விருது பெற்று கீழே வந்து அமரும் வரை நொடி தவறாது தனது கைப்பேசியில் ஒளிப்பதிவு செய்துகொண்டாள். 
“மாம்ஸ்… மாஸ் காட்டிட்டீங்க… சிங்கம் சிங்கிளாத்தான் அவார்ட் வாங்குமா?” என்றபடியே அவன் கையிலிருந்த விருதினை வாங்கிக்கொண்டு, அதில் பொறிக்கப்பட்டிருந்த அவனது பெயரை பலமுறை வருடிப்பார்த்துக்கொண்டாள். 


மேலாளர் ஏதேதோ உரையாற்றிக்கொண்டிருக்க, விருதினை சஞ்சய் கையில் திணித்துவிட்டு வேகவேகமாய் மேடை அருகே சென்றவள், “சார், நான் என் ஹஸ்பண்ட் பத்தி சில உண்மைகள் சொல்லணும். பேசலாமா?” என்றாள். மேலாளரும், அவளைத் தொடர்ந்து சென்ற சஞ்சய்யும் திடுக்கிட்டனர். தாமதிக்காது மேடை ஏறியவள், குரலை சரி செய்துகொண்டு பேசத் தொடங்கினாள். சஞ்சய்யின் ரத்தம் கொதிக்கத்தொடங்கியது. “பூமிகா.. பூமிகா.. என்று அவன் அழைப்பதை அசட்டை செய்துவிட்டு தான் கூற எண்ணியதை கூறினாள்.
“எல்லாருக்கும் வணக்கம்! நான் மிஸஸ் பூமிகா சஞ்சய். என்னோட ஹஸ்பண்ட் பத்தி சில உண்மைகள் சொல்லணும். சிறப்பா வேலை செய்யறவங்களுக்கு விருது கொடுத்து கவுரவிக்கற மாதிரி, தனி வாழ்க்கையில சிறந்த குணம் இருக்கறவங்களையும் பாராட்டியாகணும்னு நினைக்கறேன். என்னோட அக்காவோட விருப்பத்துக்கு எதிரா இவரோட  நடக்கவிருந்த திருமணத்தை இவர் தடுத்து நிறுத்தினதும் இல்லாம, அவ விரும்பிய பையனுக்கே கல்யாணம் பண்ணி வைக்க காரணமாகவும் இருந்திருக்கிறார். ஊரே இவரை தவறா பேசியும் இவர் அசரல. ஒரு பெண்ணோட வாழ்க்கை ரொம்ப முக்கியம்னு தன்னை பத்தி பொருட்படுத்தாத தியாகி இவர். இந்த மாதிரி ஆண்களெல்லாம் கோடில ஒன்னு. அதனால தான் நானே இவரை வலுக்கட்டாயமா கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இப்பக்கூட என்னோட கனவுகளைத் தன்னோட லட்சியமா நினைச்சு வாழ்ந்துட்டு இருக்காரு. இவர் ஹீரோக்கெல்லாம் ஹீரோ… சூப்பர் ஹீரோ!! நான் இன்னும் இவரைப்பத்தி பேசுவேன், ஆனா எனக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம். யாரும் தப்பா எடுத்தக்க வேணாம். வாய்ப்பு கொடுத்ததுக்கு நன்றி சார்!” என்றவள், மைக்கை விட்டு தள்ளி நின்றுகொண்டாள்.


சஞ்சய்யை மீண்டும் மேடையேற்றிய மேலாளர், அனைவரையும் கரகோஷமிடச் சொல்ல, அவனோ கூச்சத்தில் தயங்கி நின்றுகொண்டிருந்தான். “சார், நீங்க பைவ் தொளசண்ட் இன்க்ரீமெண்ட் சொல்லலையா?” - மேலாளரின் காது கடித்தாள், பூமிகா. 
“இன்க்ரீமெண்ட் எம்.டி. தான்மா போடுவாரு. நான் வெறும் மேனேஜர் தான்…” என்று அவர் பதிலுக்கு காது கடித்தார்.
“வாட் எ வேஸ்ட்” என்று அவள் உள்ளுக்குள் எண்ணிக்கொண்டு, வெளியே சிரித்து வைக்க, தன்னை அனைவரின் முன் பெருமை படுத்திய மனைவியை ஆசையும், காதலுமாய் ரசித்திருந்தான், சஞ்சய்.


அய்யா சஞ்சு, நீ இதயம் முரளிக்கே டஃப் கொடுப்ப போல?!!

No comments:

Post a Comment