“நான் மனசறிஞ்சு யாருக்கும் எந்தக் கேடும் செய்ததில்லை. எந்த வம்பு தும்புக்கும் போனதில்லை. ஆபிஸ் விட்டா வீடு. அம்மா, அப்பா சொல்றதே வாக்கு’னு வாழ்ந்துட்டு இருக்கேன். எனக்கு ஏத்த மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைச்சேன். அது வாய்க்கா வரப்புல சுத்திக்கிட்டு இருக்கற தேன்மொழி, கனிமொழியா இருந்தாலும் பரவால்ல’னு நினைச்சேன். நான் நினைச்சதை விட ரொம்ப அழகான பொண்ணு கிடைச்சும், சந்தோஷப்பட முடியல… என் வாழ்க்கை டைவெர்ஷன் எடுத்தும் முட்டு சந்துல போய் முட்டிகிட்டு நிக்குதே… ஹ்ம்ம்… நடக்கறதையெல்லாம் நம்பவும் முடியல… நம்பாம இருக்கவும் முடியல…”
அவன் புலம்பிக்கொண்டிருக்க, அவன் எதிரே இருந்தவர் அமைதியாய் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தார்.
“ஏன்பா விநாயகா, உன்னை சுத்தி சுத்தி வந்ததுக்கு இப்படி என்னை சுத்தல்ல விட்டுட்டியே… இது நியாயமா?”
அவன் ஆயிரம் கேள்விகள் கேட்டும் விநாயகர் அமைதியாகவே இருந்தார். சிறு வயதில் வெற்றி விநாயகர் படம் பார்த்த நாள் முதல், உண்மையான பக்தி இருந்தால் நிச்சயம் கடவுள் கண் முன்னே தோன்றுவார் என்று தீவிரமாய் நம்பும் 90ஸ் கிட் அல்லவா அவன்?!! அவனும் அவரது பதிலை வேண்டி நின்றான்.
மனமுருகி வேண்டி நின்றவனின் கவனத்தை ஈர்த்தது அவனது கைப்பேசி அழைப்பு.
“ஹலோ மாம்ஸ், எங்க போயிட்டீங்க? உங்கள காணோம்னு இங்க தேடிக்கிட்டு இருக்கோம். அம்மா, அப்பா வந்திருக்காங்க. பப்புளூ உங்கள பார்க்க வெயிட் பண்ணிட்டு இருக்கான். சீக்கிரம் வாங்க.”
சடசடவென கனமழையாய் அடித்து ஓய்ந்தவள், அவன் பதில் கூறிடும் முன்னே அழைப்பினைத் துண்டித்தாள்.
“உன்னை நம்புனதுக்கு… யோவ் போயா…” என்று பிள்ளையாரிடம் கோபித்துக்கொண்டு தனது வீட்டிற்குத் திரும்பினான்.
“என்ன சம்பந்தியம்மா இப்படி கண்ணு கலங்கிக்கிட்டு இருக்கீங்க? பப்புளூவையும், பூமிகாவையும் நான் கண்ணுக்கு கண்ணா பார்த்துக்கறேன்… நீங்க கவலைப்படாதீங்க… உங்களுக்கு எப்பப்போ பப்புளூவை பார்க்கணும்னு தோணுதோ நீங்க தாராளமா இங்க வந்து பார்க்கலாம். இது உங்க வீடு மாதிரி…”
சீதாலட்சுமி, பூமிகாவின் அன்னையிடம் பேசிக்கொண்டிருப்பது வாயிலில் நின்றிருந்த சஞ்சய்யின் துல்லியமாக காதில் விழுந்தது. உள்ளே செல்ல தயங்கிக்கொண்டு நின்றிருந்தவன், தாய் கூறியதைக் கேட்டு அதிசயித்துப் போனான்.
‘அந்தக் காலத்து மனுஷி அம்மா. அவங்களே பரந்த மனசோட இப்படி பேசும்போது, நாம மட்டும் ஏன் இப்படி மனசு குறுகியிருக்கோம்?! எதுவா இருந்தாலும் பெருந்தன்மையோட நடந்துக்கணும்…’ என்று தனக்குத்தானே அறிவுரைத்து, தெளிந்த மனதோடு வீட்டினுள் சென்றான்.
மாமனார், மாமியாரை வரவேற்றவன் அவர்களின் அருகே பணிவன்போடு அமர்ந்துகொண்டான். எதிரே அடுக்கி வைக்கப்பட்டிருந்த சீர் வரிசைகளைக் கண்டவன், “எதுக்கு மாமா இதெல்லாம்?” என்று அவன் வாய் சொன்னாலும், ‘அய்ய்ய்… புது 60 இஞ்சு டி.வி.’ என்று சீர்வரிசைகளில் பிரதானமாக வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சிப்பெட்டியைக் கண்டதும் அவன் மனம் குதூகலத்தில் கொக்கரித்தது.
“நீங்க கேட்கலானாலும் நான் செய்ய வேண்டியது செய்யணும் மாப்பிள்ளை. நீங்க நேத்து சொன்ன மாதிரி குமாஸ்தா வேலைல இருக்கறவங்க கூட பெருசா எதிர்பார்க்கறாங்க…”
“அய்யோ மாமா, நேத்து சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன். எங்க ஆபிஸ்ல அப்படி யாருக்கும் கல்யாணம் ஆகல…”
“இருந்தாலும் வெளியுலகத்துல நடக்காததையா நீங்க சொல்லிடீங்க…”
“பார்த்தீங்களா அப்பா, நான் சொன்னேன்ல அவர் இந்த சீர் வரிசையை எதிர் பார்க்கற ஆள் இல்லனு… தயவு செஞ்சு எடுத்துட்டு போங்க…”
இடைமறித்தாள் பூமிகா.
‘இவ ஒருத்தி அப்பப்ப உணர்ச்சிவசப்பட்டு எனக்கு ஆப்படிக்கறா…’ என்று எண்ணியபடி அவளை முறைத்திருக்க, அவளோ அவளது தந்தையை முறைத்துக்கொண்டிருந்தாள்.
“இங்க பாரு பூமிகா, இதெல்லாம் மாப்பிள்ளைக்கு பிடிக்கலைனாலும் எங்க சந்தோஷத்துக்காக வாங்கிக்கத்தான் வேணும். அவரா கேட்டு நாங்க கொடுக்கல. நாங்களா விருப்பப்பட்டு தாய்வீட்டு சீரா கொடுக்கறோம். நீ கொஞ்சம் சும்மா இரு…” என்று அவளது அன்னை கூற, “என்னமோ பண்ணுங்க…” என்ற பூமிகா, சஞ்சய்யை நோக்கி, “நீங்க எதுவும் மனசுல வச்சுக்காதீங்க… அவங்க திருப்திக்காக வாங்கிக்கோங்க ப்ளீஸ்…” என்றுவிட்டு அவள் உள்ளே சென்றுவிட, ‘அப்பாடா… டி.வி. தப்பிச்சுது…’ என்று நிம்மதி பெருமூச்சு கொண்டான்.
பூமிகாவின் பெற்றோர் விடைபெற்றுச் சென்றபின், அவள் சீர்வரிசைகளை ஒவ்வொன்றாய் சீதாலட்சுமியின் உதவியுடன் எடுத்துவைக்க, கண்டும் காணாததுபோல் ஓரக்கண்ணால் மாமனார் கொடுத்தவற்றை பார்த்திருந்தான். ‘என்னதான் இருந்தாலும் மாமனார் வீட்டு சீதனம்னாலே சந்தோஷமாத்தான் இருக்கு… ஒரு கெத்து ஃபீல்!!’ என்று உள்ளுக்குள் சந்தோஷப்பட்டுக்கொண்டிருந்தவனுக்கு பப்புளூவின் நினைவு எழ, தனது மனையாளைத் தேடி அடுக்கலைக்குச் சென்றான்.
“எனக்கு பப்புளூவ ரொம்பப் பிடிச்சிருக்கு பூமிகா…” என்று கூறிக்கொண்டிருந்த தாயின் எதிரே சென்று நின்றான்.
“என்னடா?”
“எங்க?”
“என்னது எங்க? சாப்பாடா?”
“ப்ச்… அதில்லை…” என்றவன் கேள்வியாய் பூமிகாவை நோக்க, குழப்பமாய் அவனை பார்த்தவளுக்கு ஏதோ நினைவிற்கு வர, “ஓ! பப்புளூவா? டைனிங் ரூம்ல இருக்கான்…” என்றவள் முன்னே செல்ல, ‘அதைத்தாண்டி தானே வந்தேன்??!!’ என்று யோசித்தபடி அவனும் சென்றான்.
“இதோ பப்புளூ…” என்று அவள் ஒரு கண்ணாடி பானையைக் காட்ட, உள்ளே ஒரு தங்கமீன் இடமும் வலமும் நீந்திக்கொண்டிருந்தது. அதைக் கண்டு வாயடைத்துப்போனவன், தான் ஏதேதோ கற்பனை செய்து நொந்து நூடுல்ஸ் ஆனதை எண்ணி, சுயபச்சாதாபம் கொண்டான்.
“எப்படி மாம்ஸ் என் பப்புளூ?” என்று அவள் வினவ, அழவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல் மண்டையை மட்டும் ஆட்டிவிட்டு தனது அறைக்குச் சென்றான்.
குளியலறையில் குளிர்ந்த நீரெடுத்து முகத்தில் பலமுறை தெளித்து தெளிந்தவன், ‘பப்புளூவாம் பப்புளூ… மீனுக்கெல்லாம் பேர் வச்சு மனுசன கலங்கடிக்கறா’ என்று புலம்பினாலும் பெரும் நிம்மதி மீண்டவனாய் வெளியே வர, பூமிகாவோ அவனது அலமாரியில் அவனது துணிகளை ஒரு பாதியில் ஒதுக்கிவிட்டு மறுபாதியில் தன்னுடையவற்றை அடுக்கிக்கொண்டிருந்தாள்.
அவளருகே சென்றவன்,
“சாரி பூமிகா…” என்றான்.
“எதுக்கு?”
“அது… இந்த பப்புளூ… பெருசா ஏதோனு நினைச்சு நேத்து கோவப்பட்டுட்டேன்…”
“பெருசானா? நாய்க்குட்டி, பூனைக்குட்டின்னு நினைச்சீங்களா?”
‘இல்லை’ என்று மண்டையை ஆட்டியவன்,
“பு…”
“புலிக்குட்டினு நினைச்சீங்களா?”
“புள்ளக்குட்டினு…”
“வாட்?”
அத்தனை நேரமும் முகம் மலர பேசிக்கொண்டிருந்தவள், அவன் கூறியதைக் கேட்டதும் ‘ஓ!’ என்று அழத்தொடங்கினாள்.
“அய்யோ என்னை மன்னிச்சுடு பூமிகா… தெரியாம அப்படி நினைச்சுட்டேன்… நேத்து இந்த பப்புளூவ பத்தி பக்கம்பக்கமா வசனம் பேசினியே, அது ஒரு மீனு’னு சொன்னியா?”
“ஆமா, சொல்லலதான். அதுக்காக என்னை இவ்வளவு கேவலமா நினைப்பீங்களா?”
“இல்ல பூமிகா… நேத்து ஏகப்பட்ட டென்ஷன், எனக்கு மூளையே சரியா வேலை செய்யல…”
“அதுக்காக இப்படியா? இன்னைக்கு காலைல உங்களுக்கு போன் பண்ணும்போதே சந்தேகப்பட்டேன். ஆனா, கண்டுக்காம விட்டுட்டேன். என் தப்பு தான்… என்னை மாதிரி ஒரு முட்டாள் இந்த உலகத்துலேயே இருக்கமாட்டா…”
“ஹே… நான் என்ன பண்ணேன்? எதுக்கு சந்தேகப்பட்ட?”
“பின்ன வேற என்ன பண்ணுவாங்களாம்? முந்தாநாள் ராத்திரி நான் போன் பண்ணும்போது உங்க காலர் டியூனா ‘மாங்கல்யம் தந்துனானேனா…’ பாட்டு வச்சிருந்தீங்க. நேத்து மதியம், ‘வாழ்வே மாயம்’ பாட்டு வச்சிருந்தீங்க. இன்னைக்கு காலைல, ‘சோதனை மேல் சோதனை’னு பாட்டு வருது… இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?”
“அது சும்மா என் மூடுக்கு ஏத்த மாதிரி காலர் டியூன் மாத்துவேன்… இதெல்லாம் ஒரு விஷயமா? இங்க பாரு, நான் செஞ்சது தப்புதான். என்னை மன்னிச்சுடு! ஆனா என்னோட உள் மனசு சொல்லுச்சு, ‘அவ பச்சைக்குழந்தை மாதிரி இருக்கா, நிச்சயம் அவ மாசில்லா தங்கம்’னு. அது சரி தான். மனசுல கள்ளம் கபடம் இல்லாத, சூது வாது தெரியாத பொண்ணுங்க தான் சின்ன விஷயத்துக்கு கூட கண்ணு கலங்குவாங்களாம். நீயும் அப்படித்தான் இருக்க… நீ வெள்ளந்தியா இரு... பரவால்ல... அதுக்காக அழாத… இன்னொருத்தரோட சிரிப்புக்கு நான் காரணமா இல்லனாலும் பரவாயில்லை, ஆனா கண்ணீருக்கு நான் எப்பவும் காரணமா இருக்கக்கூடாதுனு நினைக்கறவன்...”
அவன் பாவமாய் மன்றாட, அவளது மனம் இளகியது.
“ஓகே ஹீரோ…” என்று தலைசாய்த்து விழி விரிய அவள் சிரிக்க, அவன் சிலாகித்துப்போனான்.
“உங்க கப்போர்ட்ல பாதியிடம் நான் எடுத்துக்கிட்டேன். இப்போ இந்த மேஜைல என்னோட புத்தகங்கள வச்சுக்கறேன்…”
அவள் கேட்டு இவன் முடியாதென்றா சொல்லப்போகிறான். ‘சரி’ என்று அவன் தலையசைக்க, தனது பையிலிருந்து புத்தகங்களை எடுத்து மேஜையின் மூலையில் அடுக்கினாள். அருகில் திரும்பியிருந்த ஒரு போட்டோ ஃப்ரேமை கையிலெடுத்தவள், அதைக்கண்டு திடுக்கிட்டு நின்றாள்.
மிஸ்டர் சஞ்சு, இப்போ உங்க காலர் டியூன் என்னது? சங்கா?!!
No comments:
Post a Comment