பூமிகா தனது கைப்பேசியில் இருந்த சஞ்சய்யின் புகைப்படத்தை ஒவ்வொன்றாக பார்த்தபடி அமர்ந்திருந்தாள். திருமணத்தின் முந்தைய தினம் அவன் குதிரை மீது பவனி வந்தது, மாப்பிள்ளை கோலத்தில் மறுநாள் மணவறையில் அமர்ந்திருந்தது, எதிர்பாரா திருப்பமாக இவளுடனான ஏற்பட்ட ஆயுட்கால பந்தம், கல்லூரி வாசலில், தோழிகளோடு, பப்புளூவுடன் என்று அவன் அறிந்தும் அறியாமலும் இவள் எடுத்த புகைப்படங்கள் அத்தனையும் பார்த்து ரசித்திருந்தாள். ‘மாம்ஸ், எப்படி உங்கள வழிக்கு கொண்டுவரதுனே தெரியல… நேத்து ரெஸ்டாரண்ட் போய்ட்டு வந்ததும் எனக்கு ஒன்னும் தலைவலியெல்லாம் இல்லை. நீங்க பழசை நியாபகப்படுத்தற மாதிரி பேசினது தான் எனக்கு ரொம்ப மனவருத்தம் ஆயிடுச்சு. எவ்வளவு அழுதேன் தெரியுமா?! ஆனா, நீங்க எனக்காக சுக்கு காப்பி எடுத்துட்டு வந்ததும், மனசு குளிர்ந்துபோச்சு. உங்களுக்கு என்னையும் பிடிக்கும்னு தெரியும். ஆனா, எனக்குத் தேவையெல்லாம் உங்களுக்கு என்னை மட்டும் தான் பிடிக்கணும். அதுக்கு நான் என்ன செய்யணும்? அவனவன் ஈசியா கரெக்ட் பண்ணி, கல்யாணத்துக்கு குட்டிக்கரணம் போடுவான்… இங்க நான் ஈசியா கல்யாணம் பண்ணிட்டு, கரெக்ட் பண்ண படாதபாடு படறேன்…’ என்று மனதில் உள்ளவற்றை அவனது புகைப்படத்திடம் கொட்டிக்கொண்டு இருந்தாள். இரவு மணி பத்தாக, சஞ்சய் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பினான்.
“பூமிகா, நீ இன்னும் தூங்கலயா?” என்றபடி அவன் உள்ளே நுழைய,
“இல்ல மாம்ஸ் உங்களுக்காகத்தான் காத்துட்டு இருந்தேன்” என்றாள் அன்பொழுகும் பார்வையால்.
“நேத்து தலைவலில கஷ்டப்பட்டல? இன்னைக்கு நேரத்துக்கு சாப்பிட்டு தூங்க வேண்டாமா?”
“நான் தூங்கிட்டா அத்தை உங்களுக்காக முழிச்சிட்டு இருக்கணும். பாவம் தானே அவங்க? அதான் நான் முழிச்சிட்டு இருக்கேன்னு சொல்லி அவங்கள தூங்க சொல்லிட்டேன்...”
“அதுக்கில்ல நீ காலேஜ் போகணும், படிக்கணும்…”
“அதெல்லாம் கரெக்ட்டா செஞ்சுடுவேன் மாம்ஸ்… நீங்க சாப்பிடவாங்க…”
“ரெண்டே நிமிஷத்துல வந்துடறேன்…” என்றவன் நொடியில் உடை மாற்றிக்கொண்டு உணவு மேஜையில் ஆஜரானான்.
“சப்பாத்தியும், குருமாவும் மாம்ஸ்… உங்களுக்கு ரொம்பப்பிடிக்கும்னு அத்தை சொன்னாங்க…”
“ஆமா பூமிகா…”
“அத்தைக்கு தெரியாம நான் தனியா ரெண்டு உங்களுக்காக போட்டு வச்சேன்…” என்றவள், ஹாட்பேக்கிலிருந்த சப்பாத்திகளின் அடியில் இருந்து இரண்டினை எடுத்து அவனது தட்டில் வைத்தாள். இதய வடிவிலான சப்பாத்தியைக் கண்டவன் புன்னகை பூத்தபடி அமர்ந்திருக்க, அவளோ அவனையே பார்த்திருந்தாள்.
‘என் தங்கத்துக்கு என் மேல இவ்வளவு லவ்வா? சாப்பத்தில கூட தன்னோட காதல சொல்றாளே!! என் காதல உணர வைக்கறேன்னு சொன்னாலும் சொன்னா… நான் கிறுக்கா சுத்தறேன்…’ என்று மனதிற்குள் குதூகலம் ஆனான்.
“சாப்பிடுங்க மாம்ஸ்… என்ன யோசனை?”
“அது… உன் லவ்வ சொல்லியிருக்க, எப்படி இந்த இதயத்தை பிய்ச்சு சாப்பிடறது? நீயே…”
“நானேவா?? ஊட்டலாம் முடியாது மாம்ஸ்...” என்றவளின் கன்னம் சிவந்து போக,
“ஆகா, ‘நீயே சொல்லு’னு சொல்ல வந்தேன்… நீ ஒரு ஸ்டெப் கூடவே யோசிக்கற?” என்றான், பழம் நழுவி பாலில் விழும் சந்தர்ப்பத்தில் பாலை தட்டிவிட்டபடி.
வெட்கித் தலை குனிந்தவள், தனது அபத்தத்தை எண்ணி தலையில் தட்டிக்கொண்டு அடுக்களைக்குள் ஓடிச்சென்றாள். உண்டு முடித்த பின்னே அவன் உணர்ந்தான், அமைதி காத்திருந்தால் அலாதி காதல் கிட்டியிருக்குமென்று!!
கட்டிலில் ஒரு புறம் அவன் படுத்துக்கொள்ள, மறுபுறம் இவள் படுத்துக்கொள்ள இருவரும் தத்தம் கனவுலகில் சஞ்சரித்தனர். அவள் உணவு பரிமாறிய பின், இதய வடிவிலான சப்பாத்தியின் ஓரங்களை விரலால் வருடி, புன்னகை குறையாமல் இதய வடிவம் அவன் வரைந்ததை எண்ணியெண்ணி அவள் சிலாகித்துப்போனாள். அவளது கன்னப் பதுப்பை அவன் வருடியது போல் நினைந்து, சிலிர்த்துக்கொண்டாள். அவனோ, அசதியில் உறங்கிப்போயிருந்தாலும், கனவில் அவளோடு கைக்கோர்த்து, இதய வடிவ மேகங்களை ரசித்து, இதய வடிவ மரங்களின் மத்தியில் கண்ணாமூச்சி ஆடி, இதய வடிவ மலர்களை ஒருவர் மீது ஒருவர் தூவி, இறுதியாய் இதய வடிவ சப்பாத்தியை ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டனர்.
இரண்டு மூன்று நாட்களாக அவன் தாமதமாய் வீடு திரும்ப, அவள் உணவு பரிமாற, அவன் நேசத்தோடு நெளிய என்று பப்புளூவைக் கூட மறந்துவிட்ட அத்தகைய கிளுகிளுப்பு சம்பவங்களை எதிர் நோக்கி இன்றும் பேராவலுடன் வீடு திரும்பினான், சஞ்சய். அவன் வந்ததைக் கூட உணரா வண்ணம் அவளோ கைப்பேசியில் மூழ்கியிருந்தாள். அவனது குரல் கேட்டு கவனம் திருப்பியவள், அவன் வீடு திரும்பியதை அப்போதே உணர்ந்தாள்.
“என்ன பூமிகா ரொம்ப சுவாரஸ்யமா பார்த்துட்டு இருந்த?”
பெரும் ஆவலுடன் வினவினான்.
“அதுவா எனக்கு ரொம்ப பிடிச்ச ஹீரோவோட வீடியோ…”
தன்னைத்தான் கூறுகிறாள் என்று புரிந்தும் புரியாதது போல் நின்றிருந்தவன், “எங்க காட்டு…” என்றான், ஆர்வமாக.
அவள் ஒரு சினிமா பாட்டு காட்ட, ‘அப்போ அந்த ஹீரோ நான் இல்லையா?’ என்று நொடியில் மனம் துவண்டான்.
“உங்களுக்கு பிடிக்குமா மாம்ஸ்? எனக்கு மட்டுமில்ல என் பிரெண்ட்ஸ் எல்லாருக்குமே விஜய் தேவரகொண்டானா உயிரு” என்று முகத்தில் பரவசம் பொங்க அவள் கூற, அவன் முகமோ ஃப்யூஸ் போன பல்ப் என பொலிவிழந்தது. அன்று இரவு ஏனோதானோவென்று உண்டு முடித்தவன், மிகவும் பிரயத்தனப்பட்டு உறங்கிப்போனான்.
மலர் சூழ்ந்த மரத்தடியில் அவள் மடியில் அவன் படுத்திருக்க, அங்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய விஜய் தேவரகொண்டா தனது சிக்ஸ் பேக்குகள் தெரியும்படி சட்டை பொத்தான்களை கழற்றிவிட்டு வில்லத்தன சிரிப்போடு அவர்களின் எதிரே சென்று நின்றான். வீரு கொண்டு எழுந்த சஞ்சய்யை வாயிலும், வயிற்றிலும் முஷ்டியால் குத்திவிட்டு, பூமிகாவை அவன் அள்ளிக்கொண்டு ஹெலிகாப்டரில் பறந்து மறைந்தான். ஹெலிகாப்டர் சென்ற திசையில் ஓடோடிச் சென்ற சஞ்சய், ஒரு கட்டத்திற்கு மேல் மயங்கி விழ, கீழே கிடந்த கல்லில் நெற்றிப்பொட்டில் அடிபட, வெடுக்கென கண்விழித்து உறக்கத்திலிருந்து எழுந்தான். ‘ஐயோ கடவுளே, திரும்பவும் கனவா? கொஞ்ச நாளா இந்தக் கனவுத் தொல்லை இல்லாம வாழ்க்கை சந்தோசமா போகுதேன்னு நினைச்சேன்… வச்சா பாரு எனக்கு ஆப்பு…’ என்று அலுத்து, சலித்து மீண்டும் உறங்கிப்போனான்.
மறுநாள் காலை கையில் காப்பியோடு சஞ்சய்யை தேடிய பூமிகா, அவன் மொட்டை மாடியில் இருக்கக்கூடும் என்று எண்ணி மேலே சென்றாள். அவள் எண்ணியது போல் அவன் அங்கு இருந்தது மட்டுமின்றி அவளுக்கு ஆச்சர்யம் அளிக்கும் வகையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான்.
“மாம்ஸ், என்ன இது?”
திடீரென தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டதனால் சோர்ந்திருந்தவன், அவளைக் கண்டதும் சுறுசுறுப்பாக டம்பெல்ஸ் பயிற்சியைத் தொடங்கினான்.
“ஒன்னுமில்ல பூமிகா, பழையபடி திரும்பவும் எக்சர்சைஸ் பண்ண தொடங்கிட்டேன்…”
“வாவ்! சூப்பர் மாம்ஸ்… இந்தக் காப்பிய குடிச்சுட்டு தெம்பா பண்ணுங்க…” என்றவள், “சாரி மாம்ஸ்… எக்ஸர்சைஸ் பண்றவங்க ப்ரோடீன் தான குடிப்பாங்க?! எனக்குத் தெரியாம போச்சு… இருங்க நான் வெறும் பால் கொண்டுவரேன்…” என்றுவிட்டு நொடியில் இறங்கி கீழே சென்றாள்.
‘அடிப்பாவி, நாக்கு தள்ளி கிடக்கறேன், ஒரு வாய் காப்பித்தண்ணி குடிக்கலாம்னு பார்த்தா, எடுத்துட்டு ஓடிட்டாளே…’ என்று மீண்டும் சோர்ந்து அமர்ந்தவன், அவள் வரும் சத்தம் கேட்டு, நீர்த்தொட்டி குழாயிலிருந்து நீர் பிடித்து தன் மேல்சட்டையின் மீதும், முகத்தின் மீதும் தெளித்துக்கொண்டு, டம்பல்ஸ் வைத்து மீண்டும் பாவலா காட்டத் தொடங்கினான்.
“மாம்ஸ், அஞ்சு நிமிஷம் கீழ போயிட்டு வரதுக்குள்ள இப்படி வியர்வைல நனைஞ்சு போயிருக்கீங்களே?! முதல்ல இந்தப் பால குடிங்க…” என்றவள் பாலினை நீட்ட,
“வியர்வைக்கு பயந்தா உடம்ப ஃபிட்டா வச்சுக்க முடியுமா?” என்றவன் தோளினையும், நெஞ்சினையும் விறைப்பாய் வைத்துக்கொண்டு, அவள் கொடுத்ததை குடித்துவிட்டு மீண்டும் பயிற்சியைத் தொடங்கினான். பெருமிதம் பொங்க அவனைக் கண்டிருந்தவள், அவனை தொந்தரவு செய்ய மனமின்றி கீழே சென்றுவிட்டாள். அவள் சென்றபின் மூச்சிரைக்க மீண்டும் அமர்ந்துகொண்டான், டம்பெல்ஸ்சுகளை முறைத்தபடி.
கல்லூரியில் அவளை விட்டுவிட்டு கிளம்புகையில், “மாம்ஸ், உங்க ஆர்ம்ஸ தொட்டுப்பார்க்கட்டுமா?” என்றாள் ஆசையாக.
‘இதென்னடா புது சோதனை…’ என்று டென்ஷன் ஆனவன், தயக்கத்தோடு, “வேண்டாம் பூமிகா, இது காலேஜு. யாராவது பார்த்தா நல்லா இருக்காது…” என்றான்.
“எல்லாரும் பார்க்கணும்னு தான் மாம்ஸ் கேட்டேன்…”
“என்ன?”
“என்னை பிடிச்சிருக்குனு சொல்லி இந்த காலேஜு ரோமியோக்கள் பண்ற தொல்லை தாங்க முடியல… கல்யாணம் ஆனது தெரிஞ்சும் ஃப்ளர்ட் பண்றாங்க. அதான் உங்க ஆர்ம்ஸ பார்த்தா பயந்து தெறிச்சு ஓடிடுவாங்கல்ல?”
அவள் கூறியதைக் கேட்டு ஒரு நொடி அவனுக்கு உயிரே நின்றுபோனது. மெல்ல தன்னை சுதாரித்துக்கொண்டவன், “இங்க பாரு பூமிகா, எல்லா இடத்துலயும் பசங்க அப்படித்தான் இருப்பாங்க. நீ நெருப்பா இருந்தா யாரும் உன்னை தொந்தரவு பண்ணமாட்டாங்க…” என்றான். தலை சாய்த்து அவனைக் கண்டு அழகாய் சிரித்தவள், “ஹீரோ ஹீரோதான். நான் இனி மத்தவங்களுக்கு எரிக்கும் தீ, உங்களுக்கு மட்டும் இனிக்கும் தீ!!” என்றவள் வாஞ்சையோடு சிரித்துவிட்டு தனது வகுப்பிற்குச் சென்றாள். அவனும் தனது காலர் டியூனை ‘நெருப்பு டா நெருங்கு டா’ என்று மாற்றிவிட்டு அலுவலகத்திற்கு விரைந்தான்.
அடிடா இவன… புடிடா இவன… உதடா இவன… சஞ்சு, இதுதான் உனக்கு செட்டாகும்!!
No comments:
Post a Comment