அறையில் மூலையில் அழுதழுது கரைந்துகொண்டிருந்த பூமிகாவின் அருகே சென்று அமர்ந்தாள், சீதாலட்சுமி.
“அழாத மா, உங்களுக்குள்ள ஏதோ சின்ன வருத்தம் இருக்குனு புரியுது, அதுக்காக அழுது உடம்ப கெடுத்துக்கலாமா? ரெண்டு பேரும் சாப்பிட வாங்கப்பா…”
அத்தையைக் கண்டதும் மீண்டும் அழுதவள்,
“அத்தை அவர் மேல எந்தத் தப்பும் இல்லை… நான் தான் பொசெசிவ்னஸ்ல அவரை காயப்படுத்திட்டேன்…” என்று வருந்தினாள்.
“கணவன் மனைவிக்குள்ள யார் தப்பு சரினு ஆராய்ச்சி பண்ணக்கூடாது. சண்டை பெரிசாகாம ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுத்து, மனசு அமைதியான பிறகு, ஒருத்தர் மனசுல உள்ளத இன்னொருத்தர் கிட்ட வெளிப்படையா பேசி ஒரு தீர்வு கண்டு பிடிக்கணும். அவனுக்கு கூடப்பிறந்தவங்கனு யாரும் இல்லை, குறிப்பா அக்கா, தங்கச்சி இல்லை. பிரெண்ட்ஸ்னு அவனுக்கு பெருசா யாரும் இல்லை. அவனுக்கு ஒரு பொண்ணோட மனச புரிஞ்சுக்கறது கொஞ்சம் கஷ்டமா கூட இருக்கலாம். நீ பொறுமையா போ பூமிகா. அவனுக்கு நிச்சயம் உன் பாசம் புரியும். நீ அழற மாதிரி நடந்துக்க மாட்டான்…”
“சரிங்க அத்தை… நான் இனி பொறுமையா இருக்க கத்துக்கறேன்…”
“சரிடா மா” என்ற சீதாலட்சுமி, அவளது முகத்தினை துடைத்துவிட்டு, “மணி ரெண்டாகப்போகுது… ரெண்டு பேரும் போய் சாப்பிடுங்க… அவன் விருட்டுனு எங்கயோ போனான்… ஆனா பைக் இங்கதான் இருக்கு…” என்க, “நான் அவர்கிட்ட பேசி சமாதானப்படுத்தி, சாப்பாடு எடுத்து வைக்கறேன்…” என்று முகம் மலர்ந்து கூறினாள்.
சஞ்சய்யின் கைபேசிக்கு அழைத்தவள், தான் பேசியவற்றிற்கு முதலில் மன்னிப்பு கோர வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள்.
“ஹலோ…”
“ஹலோ மாம்ஸ்… நான் பூமிகா பேசறேன்…”
‘பேசறதெல்லாம் ஊறுகா… பேரு மட்டும் பூமிகா…’ என்று அவளை எண்ணி கடுப்பானவன்,
“நீ தான் பேசறன்னு தெரியுது, இப்போ எதுக்கு இந்த விளம்பரம்?” என்றான், எரிச்சலாக.
“அதுக்கில்ல… எப்பவும் ஏதாவது காலர் டியூன் வச்சிருப்பீங்க, இப்போ ஒரு பாட்டு கூட வரல, அதான்…”
“காலர் டியூனையே நான் தூக்கிட்டேன்… அப்புறம் அதுக்கும் ஏதாவது அர்த்தம் கண்டுபிடிச்சு என்னை நீ கொலையா கொல்லவா?”
“சாரி ஹீரோ… தெரியாம பேசிட்டேன்…”
“நீயே வச்சுக்கோ உன் சாரிய…”
“ஏதோ கடுப்புல திட்டிட்டேன் மாம்ஸ்… பின்ன நீங்க பண்ணது மட்டும் சரியா? அந்த தீபிகா மேல கோவப்படாம சிரிச்சு சிரிச்சு பேசறீங்க, ஹெல்ப் பண்றேன்னு சொல்றீங்க? நீங்க அன்னிக்கு அவமானப்பட்டத நினைச்சு இப்பக்கூட எனக்கு வேதனையா இருக்கு தெரியுமா?!”
அவளது விசும்பலைக் கேட்டு கோவம் மறந்தவன்,
“அப்படியெல்லாம் பேசாத பூமிகா. ஆயிரம் தான் இருந்தாலும் அவங்க உன் அக்கா. கொஞ்ச நாள் கழிச்சு நடந்ததெல்லாம் மறந்துடும். நடந்ததை நினைச்சு நீ மனசுல வெறுப்பை வளர்த்துக்கலாமா? பொண்ணுங்கதான் குடும்பத்தோட முகம். இந்தக் குடும்பத்தோட முகம் நீ. ஆம்பளைங்க யோசிக்காம எடுத்தோம் கவுத்தோம்னு பேசுவோம், பொண்ணுங்க தான் பக்குவமா சொந்த பந்தத்த அனுசரிச்சு போகணும். எப்பவுமே என்னை வச்சு உனக்கு பெருமையில்லை. உன்னை வச்சுதான் எனக்கு பெருமை. அதை மறந்துடாத…”
“சாரி மாம்ஸ்… பெண் புத்தி பின் புத்தியில்ல… அதான் யோசிக்காம பேசிட்டேன்…”
“அதுக்கு அது அர்த்தம் இல்ல… பெண்கள் மட்டும் தான் ஒரு செயலை செய்யும் முன்னாடி அதை செய்வதால பிற்காலத்துல என்ன பாதிப்பு வரும்னு யோசிச்சு செய்வாங்களாம். அதுக்கு பேர் தான் பெண் புத்தி, பின் புத்தி…”
“நீங்க உண்மையாவே சூப்பர் மாம்ஸ்… நான் உங்கக்கிட்டேர்ந்து நிறைய கத்துக்கணும்…”
‘எங்க… விட்டாத்தானே சொல்லிக்கொடுக்க…’ என்று அலுத்துக்கொண்டவன்,
“சரி, அதெல்லாம் நினைச்சு ஃபீல் பண்ணாத…”
“ம்ம்… ஆமா, நீங்க கோவிச்சுக்கிட்டு எங்க போயிட்டீங்க?”
“கோவிச்சுக்கிட்டு கொச்சினுக்கா போவாங்க… மொட்டை மாடில தான் இருக்கேன்…”
“சாப்பிட வாங்க… ப்ளீஸ் மாம்ஸ்…”
“ம்ம் வரேன்” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தவன், ‘நல்லவேளை, வாட்ஸப்ல வர்றதெல்லாம் ஒன்னு விடாம படிச்சதால தத்துவமா உளறி ஒருவழியா சமாளிச்சுட்டோம்…’ என்று நிம்மதிக்கொண்டு கீழே சென்றான்.
அவனைக் கண்டு வாஞ்சையோடு சிரித்தபடி அவள் பரிமாற, ‘ஆயிரம் தான் இருந்தாலும் நீ கொஞ்சம் விறைப்பா இரு சஞ்சு… எப்படியெல்லாம் கழுவிக்கழுவி ஊத்தினா… கொஞ்ச நேரம் சுத்தல்ல விடுவோம்…’ என்று தனக்குத்தானே கூறிக்கொண்டவன், அமைதியாய் உண்டிருந்தான்.
“மாம்ஸ்… கடகடகடனு சாப்பிட்டு முடிச்சுடாதீங்க… அப்பளம் வறுக்க எண்ணெய் காயுது…”
“அதான் வறுத்தெடுக்க இந்த வீட்ல நான் ஒருத்தன் இருக்கேனே… அப்புறம் அப்பளம் எதுக்கு?”
அவன் சிரமப்பட்டு முகத்தை கடுமையாய் வைத்துக்கொண்டு வினவ, அவளோ பதறிக்கொண்டு, திருமாங்கல்யத்தை எடுத்து கண்ணில் ஒற்றி, “என்ன வார்த்தை சொல்லிட்டீங்க மாம்ஸ்… நீங்க என் குலசாமி” என்றுவிட்டு ஒன்றும் அறியாதவள் போல் நின்றுகொண்டாள்.
‘ஆத்தாடி… ஒரு நிமிஷம் நெஞ்சு நின்னுபோச்சு… காலைல டைவர்ஸ் கொடுங்கறா. இப்போ தாலிய தொட்டுக் கும்பிடறா… இதுல ‘குலசாமி’னு டைட்டில் வேற… ரைட்டு… வாய திறக்காம சாப்டுட்டு ஓடிறணும்…’ என்று இறுதியாய் நல்லதொரு உறுதி கொண்டான்.
மாலை அவளை அழைத்துக்கொண்டு வெளியே செல்லவேண்டும் என்று முடிவுடன் அவன் காத்திருக்க, அவளோ மறுநாள் பரீட்சை என்று சொல்லி புத்தகத்தில் தன்னை மூழ்கிக்கொண்டாள். ‘ச்ச… இன்னைக்கு முகூர்த்த நாள் இல்ல போல… அதான் நினைச்சது நடக்கல …’ என்று அயர்ந்துகொண்டவன் அப்படியே உறங்கியும் போனான்.
‘ஒரு நாள் சிரித்தேன்… மறு நாள் வெறுத்தேன்… உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே… மன்னிப்பாயா… மன்னிப்பாயா…’ என்று பாடிக்கொண்டு சஞ்சுவின் முன் வந்து நின்ற பூமிகா, கழுத்தில் இருந்த திருமாங்கல்யத்தை எடுத்து கண்ணில் ஒற்றிக்கொண்டு, கண்களில் வடியும் நீரினைக் கூட துடைக்காமல் அவன் மார் மீது சாய்ந்துகொள்ள, அவளது முகநாடி பற்றி முகத்தினை உயர்த்தியவன், கண்ணீரைத் துடைத்துவிட்டு, நெற்றியில் முத்தமிட்டான். அவள் உருகி, குழைந்து அவனது காலில் விழ எத்தனிக்க, அவளது கைகளைப் பற்றிக்கொண்டு “வேண்டாம்… ப்ளீஸ் வேண்டாம்” என்றான், பரிவாக.
“என்னடா வேண்டாம்? சீக்கிரம் எழுந்திரு டா…” என்ற சீதாலட்சுமியின் குரல் கேட்டு கண்விழித்தவன், தான் பற்றியிருப்பது தனது தாயின் கைகள் என்றுணர்ந்து, பிடியை விலக்கிக்கொண்டான்.
“எழுப்ப வந்தா கைய பிடிச்சு தடுக்கறியா… வீட்ல என்ன நடக்குதுன்னு தெரியாம அப்படி என்னடா தூக்கம் உனக்கு? எழுந்து வாடா…”
“வரேன்…” என்றுவிட்டு சோம்பல் முறித்து எழுந்து, சுருக்காய் குளித்து முடித்து, அவன் வெளியே வர, அவனுக்காக காத்திருப்பது போல் குளியலறை வாயிலில் காத்திருந்த பூமிகா, அவன் வந்ததும் அவனை நெருங்கிச் சென்று நெஞ்சின் மீது சாய்ந்துகொண்டாள்.
‘ஆஹா… அதிகாலைல கண்ட கனவு பலிக்கும்னு சொல்லுவாங்க… அது சரிதான் போல…’ என்று குதூகலம் ஆனவன், மலரென அவளை அணைக்க, அப்பொழுதே அவள் அழுதுகொண்டிருப்பதை உணர்ந்தான்.
“பூமிகா என்ன ஆச்சு?” என்று அவளது முகத்தை உயர்த்தி, கண்களை துடைத்துவிட, அவளோ மேலும் அழத்தொடங்கினாள்.
“என்ன பூமிகா என்ன ஆச்சு மா?”
அவளது வேதனை அவனையும் தொற்றிக்கொள்ள, காரணம் புரியாமல் தவித்திருந்தான்.
“நம்ம பப்புளூ…” என்றவள் மேலும் அழ, ஒருவாறு புரிந்துகொண்டவன் அறையை விட்டு வெளியே சென்று பார்க்க, பப்புளூ தனது தொட்டியில் இறந்திருந்தது.
அருகில் நின்றிருந்த ராமநாதன், “எப்பவும் காலைல பூமிகா தான் அதுக்கு ஃபிஷ் ஃபுட் போடுவா. இன்னைக்கு காலைல எப்பவும் போல ஃபுட் போட வந்திருக்கா, அப்போ பார்த்தா பப்புளூ இறந்து மிதந்துட்டு இருந்திருக்கு…” என்றவர், “நீ போய் பூமிகாவ சமாதானப்படுத்து. இன்னைக்கு வேற இன்டெர்னல்ஸ் பரீட்சை இருக்குனு சொன்னா…” என்றுவிட்டு செல்ல, மடிந்து கிடந்த பப்புளூவைக் கண்டு அவன் கண்களும் ஈரம் கொண்டன.
“பூமிகா, இங்க வா…”
அழுதுகொண்டு கட்டிலில் சுருங்கி படுத்துக்கிடந்தாள், பூமிகா.
“இல்லை மாம்ஸ்… என்னால தாங்க முடியல… ரொம்ப ஆசையாசையா வச்சிருந்தேன்…”
“தெரியும் பூமிகா, ஒரு நிமிஷம் இங்க வா” என்று வம்படியாக அவளை அழைத்துச்சென்றான். வாயிலில் புதியதாய் முளைத்திருந்த ஓர் அகல ரோஜா தொட்டியில், ரிப்பன் கட்டப்பட்டு, செடியில் இரண்டு பலூன் கட்டப்பட்டு, ‘அம்முலு’ என்றொரு பெயர் பதாகையும் நட்டு வைக்கப்பட்டிருந்தது.
“பப்புளூவுக்காக வருத்தப்படாத பூமிகா. உனக்காக அம்முலு வந்திருக்கா. தினமும் உனக்காக ஒரு பூ தருவா. நீ பறிச்சு தலைல வச்சுக்கோ… இவ உன்னை விட்டு எங்கயும் போகமாட்டா… உன் கூடவே இருப்பா...” என்றவன், அன்றலர்ந்த பூவைக்கிள்ளி அவளது கையில் கொடுக்க, ‘நன்றி சொல்ல உனக்கு, வார்த்தை இல்லை எனக்கு…’ என்பது போல் அவனை அன்பொழுகக் கண்டிருந்தாள்.
இறந்த பாப்புளூவை எடுத்து வந்தவன், ரோஜா தொட்டியில் ஒரு மூலையில் புதைத்துவிட்டு, ஒரு ரோஜாவைக்கிள்ளி அதன் மீது வைத்தான்.
அவளது கலங்கிய கண்களைத் துடைத்துவிட்டவன், “இன்னைக்கு பரீட்சை நல்லா எழுதணும். சீக்கிரம் கிளம்பி வா” என்க, “சரிங்க ஹீரோ மாம்ஸ்” என்றவள், கல்லூரி செல்ல ஆயத்தமானாள்.
சஞ்சுவுக்கும் பூமிகா மேல எக்கச்சக்க லவ்ஸ்… நீங்க நம்பலனாலும் அதான் நெசம்!!
No comments:
Post a Comment