"ராம், எழுந்துக்கோடா, மணி எட்டாகுது. இன்னும் என்ன தூக்கம்?"
அம்மா ஜெயந்தி, பதின்மூன்றாவது முறையாக, தனது பத்து வயது மகனை எழுப்பிட முயற்சித்தும், எழாமல், ஆனந்த சயனத்தில் இருந்தான், ராம்.
"ஜெயந்தி, ஏதோ லீவுல தான் குழந்தை தூங்கறான். நாளைக்கு ஊருக்கு போனதும் காலைல அடிச்சு பிடிச்சு ஸ்கூலுக்கு கிளம்பிப்போகனும். விடேன், பாட்டி வீட்ல அவன் இஷ்டம் போல இருக்கட்டும்."
மகளை தடுத்தாள், ராமின் பாட்டி, லட்சுமி.
"கோவிலுக்கு அழைச்சுட்டு போகலாம்னு நினைச்சேன்…"
"நீ போய்ட்டு வா… வந்ததும் நான் மிஷினுக்கு போய் முறுக்கு மாவு அரச்சுட்டு வரணும்… ராம் செல்லத்துக்கு முறுக்குனா உசுரு… சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு இப்படி பிள்ளையையும் கூட்டிட்டு வருவனு முன்னாடியே தெரிஞ்சிருந்தா எல்லா பலகாரமும் முன்கூட்டியே செஞ்சு வச்சிருப்பேன்..."
"அவனுக்கு எதுதான் பிடிக்காது?! பழம், காய்கறி தவிர எல்லாமே பிடிக்கும்…" என்று நொந்துகொண்டவள், தாயின் அருகே சென்று,
"அம்மா, அவனுக்கு ஒபீஸிட்டி… டாக்டர் சொன்னாங்கன்னு சொன்னேன்ல? அவன் டயட்ல இருக்கணும்… இந்தப் பலகாரமெல்லாம் வேண்டாம்மா…"
"அடிபோடி, ஒபீஸிட்டியாம்… புள்ள கண்ணுக்கு நிறைவா, லட்சணமா இருக்கான். இந்த வயசுல சாப்பிடாம அப்புறம் எப்போ சாப்பிடுவான்?! நீ சும்மா இரு… எல்லாம் ஓடியாடி விளையாடுற வயசு, கல்லச் சாப்பிட்டாலும் கரைஞ்சிடும்… முதல்ல கோவிலுக்கு போய்ட்டு வா, இந்நேரம் அபிஷேகம் முடிஞ்சிருக்கும்" என்று மகளை கிளப்பிவிட்டாள்.
மகனைப் பற்றிய சிந்தனையிலேயே கோவிலுக்குச் சென்றவளை, வழியில் பள்ளிக்கூட மணியோசை நிலைக்குத் திருப்பியது. தான் இளவயதில் பயின்ற பள்ளி, இன்றும் அதே கம்பீரத்துடன் உயர்ந்து நின்றது. மைதானத்தில் பிள்ளைகள் வரிசையாய் வந்து அணிவகுத்து நின்றதைக் காண, அவளும் இதே போல சிறு வயதில் தோழிகளோடு கதைபேசியபடியே காலை வழிபாட்டுக் கூட்டத்திற்கு வந்து நின்றது நினைவிற்கு வந்தது. தன்னையறியாமல் கோவில் செல்வதை மறந்து, அங்கே நடப்பதை பூட்டப்பட்ட இரும்புக் கதவின் வெளியே நின்றுகொண்டு, கம்பிகள் வழியே பார்த்திருந்தாள்.
வெள்ளை பாண்ட், வெள்ளை சட்டையில் நின்றிருந்த தலைமை ஆசிரியரைத் தவிர பெரும்பாலான ஆசிரியர்கள் மாறியிருந்தனர். ‘தியாகு சார் மட்டும் மாறவே இல்லை. இருபது வருஷத்துக்கு முன்னாடி பார்த்த மாதிரியே இருக்கார்…' என்று அதிசயித்துக்கொண்டாள்.
பிள்ளைகள் ஒன்று போல துதி பாட, அவளது இதழ்களும் வார்த்தை பிசகாமல் முணுமுணுத்தன. பாடல் முடிந்ததும் மாணவர்கள் முன்னே வந்து நின்ற தலைமை ஆசிரியர், 'ஒன்று, இரண்டு, மூன்று…' என்று எண்ணிக்கொண்டே சூரிய நமஸ்கார யோகாசன முறையினை வரிசையாக செய்து வர, மாணவர்களும் அவரைப் பின்பற்றி அதையே செய்தனர்.
'சார், இன்னும் சூரிய நமஸ்காரத்த விடல…' என்று தன்னுள்ளே சிரித்துக்கொண்டவள், மீண்டும் சிறுவயதில் இந்த ஆசனங்களை தோழிகளோடு சேர்ந்து பழகியதை அவள் நினைவு கூர்ந்தாள். 'ஹ்ம்ம்… எல்லாம் ஸ்கூலோட முடிஞ்சு போச்சு… ஒரு தடவ இந்த ஆசனங்களை செஞ்சு பார்க்கணும்' என்று எண்ணியபடியே அவ்விடம் விட்டு நகர்ந்து, கோவிலை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
கோவிலில் ஒவ்வொரு சந்நிதானமாக வணங்கியவள், இறுதியாய் கல் மண்டபத்தில் சென்றமர்ந்தாள்.
"ஜெயந்தி, எப்படி இருக்க?" என்று வினவிக்கொண்டே அவளருகே வந்து அமர்ந்தாள், அவளது உறவுக்கார பெண்ணொருத்தி.
"நல்லா இருக்கேன் அக்கா, நீங்க எப்படி இருக்கீங்க?"
"நல்லா இருக்கேன்… ஆமா, என்ன தீவிர யோசனையில இருந்த?!! நான் வந்ததைக் கூட கவனிக்கலை…"
"எல்லாம் பையன நினைச்சு தான் அக்கா…"
"என்ன ஆச்சு?" என்று அவள் பதற,
"பயப்படற மாதிரி ஒன்னும் இல்லகா, பொதுவான கவலை தான். படிக்கறான்… நல்ல மார்க் வாங்குறான்… ஆனாலும், அவன் கிட்ட எந்தவொரு சுறுசுறுப்பும் இல்லை. வயசுக்கு மீறின எடையோட இருக்கான்னு டாக்டரும் சொல்லிட்டாரு… லேப்டாப் விட்டா ஃபோன், ஃபோன் விட்டா டி.வி.னு, வீடே கதினு கிடக்கறான். அதான் யோசனையா இருந்தேன்…" என்று அவளது கவலைகளை அடுக்கினாள்.
"எனக்கும் அதே கவலை தான், ஜெயந்தி. இந்த வயசுலையே என் பிள்ளைங்க ரெண்டும் கண்ணாடி மாட்டிட்டு இருக்கு. என் மாமியார் கூட இன்னும் கண்ணாடி போடல…"
"பிள்ளைங்க ரெண்டு பேரும் எங்க படிக்கறாங்க?"
"டவுனுக்கு போறாங்க… எனக்கு நம்ம தியாகு சார் ஸ்கூல்ல தான் சேர்க்கணும்னு ஆசை. ஆனா நம்ம பேச்சை யாரு கேட்கறா…"
"வர்ற வழியில, ஸ்கூல்ல தியாகு சார பார்த்தேன்…"
"பார்த்தியா!! இன்னும் அப்படியே இருக்காருல!!"
"ஆமாம்… வயசே ஏறல…"
"சும்மாவா பின்ன, எந்தத் தப்பான பழக்கமும் இல்லை, சுறுசுறுப்பும் குறையலை, எல்லாத்துக்கும் மேல இத்தனை வருஷமா யோகா பண்றார்…"
"உண்மை தான் அக்கா, நான் பார்க்கும்போது யோகாசனம் தான் சொல்லிக்கொடுத்துட்டு இருந்தார்."
"அவர் எவ்வளவு ஆர்வமா சொல்லிக்கொடுப்பார்!! ஆனா படிக்கிற காலத்துல எதையும் ஒழுங்கா கத்துக்கல… இப்போ என் பசங்க படிக்கிற ஸ்கூல்ல, யோகா சொல்லித்தறோம்னு சொல்லி மாசம் 500 ரூபாய் வாங்கிடறாங்க. அது போதாதுன்னு நீச்சல் கத்துக்க 500 ரூபாய், ஸ்கேட்டிங், அது இதுன்னு… கடுப்பா வருது…"
"நல்லது தானே அக்கா…"
"கத்துக்கறத பழகினாதானே நல்லது? வாரத்துல ரெண்டு நாள் தான் யோகா க்ளாஸ். மீதி நாளெல்லாம் பழகினா தானே பலன் கிடைக்கும். க்ளாசெல்லாம் பெருமைக்கும், கடமைக்கும் தான் போகுதுங்க. ஒரு பலனும் இல்லை… நாம படிக்கும்போது தியாகு சார் தவறாம தினமும் சூரிய நமஸ்காரம் செய்ய வைப்பார். சரியா செய்யாதவங்களை தனியா கூப்பிட்டு சொல்லிக்கொடுப்பார். ஆனா, என் பசங்க போற க்ளாஸ்ல ஏதோ சிலபஸ் மாதிரி, லெவல் ஒன்னு, லெவல் ரெண்டுனு… என்னமோ ஒன்னும் திருப்தியா இல்லை… சரி நான் கிளம்பறேன், நேரமாயிடுச்சு" என்று உறவுக்கார பெண் கிளம்பிச் செல்ல, மீண்டும் யோசனையில் மூழ்கினாள், ஜெயந்தி.
‘எல்லாம் ஓடியாடி விளையாடுற வயசு, கல்லச் சாப்பிட்டாலும் கரைஞ்சிடும்’
‘கத்துக்கறத பழகினாதானே நல்லது?’
‘தியாகு சார் தவறாம தினமும் சூரிய நமஸ்காரம் செய்ய வைப்பார்’
புத்தியில் பதிந்து போன சில வாக்கியங்கள், மீண்டும் மீண்டும் ரீங்கரித்தன.
ஒரு முடிவோடு வீட்டிற்குத் திரும்பியவள், வழியில் பள்ளி மைதானத்தில் யாருடனோ பேசிக்கொண்டு நின்றிருந்த தியாகு சாரைக் கண்டு நடையைத் தளர்த்தினாள்.
‘தியாகு சார் தவறாம தினமும் சூரிய நமஸ்காரம் செய்ய வைப்பார்’
“ராம்… ராம்…”
மகனை அழைத்தபடி உள்ளே நுழைந்தவள், தொலைக்காட்சியில் மூழ்கியிருந்த மகனிடம் சென்றாள்.
“வா ராம், நாம விளையாடலாம்” என்றபடியே தொலைக்காட்சியை அணைத்தாள்.
“அம்மா, ப்ளீஸ் மா…” என்று அவன் அழ,
“ராம், அம்மா உனக்கு ஒன்னு சொல்லித்தருவேனாம்… அதை நீ அப்படியே செய்வியாம்…” என்றாள் ஆர்வமாய்.
“இவ்வளவு தானா?”
“என்ன அப்படி சொல்லிட்ட… எழுந்து வந்து செய் பார்க்கலாம்!!”
“இதோ வரேன்” என்றபடியே ஆவலாய் எழுந்துவந்தான்.
அவள் சூரிய நமஸ்கார முறையை படிப்படியாக செய்து காண்பிக்க, அவனும் தாய்யைப் போல் முயற்சித்தான். குனிந்து, விரல் நுனியால் பாதத்தை மட்டும் தொட முடியாமல் போனவனுக்கு முகம் சிறுத்தது.
“கவலைப்படாத ராம், எனக்கும் இப்படி தான் முதல்ல கஷ்டமா இருந்தது. பழகப்பழக தானா வந்துடும்…” என்று மகனை ஊக்கப்படுத்தினாள். அவன் ஆர்வமாய் செய்வதைக் கண்டு அதிசயித்துப்போனவள், ‘இத்தனை நாளா இதை செய்யாம விட்டுட்டோமே…’ என்று தன்னைத்தானே நொந்துகொண்டாள்.
‘தியாகு சார் எனக்கு தினமும் தவறாம சொல்லிக்கொடுத்தது போல, நானும் தவறாம உனக்கு சொல்லித்தரேன்… உன்கூடவே சேர்ந்து நானும் செய்யறேன்…’ என்று மானசீகமாய் மகனுக்கு வாக்களித்தாள்.
** முற்றும் **
No comments:
Post a Comment