வசந்த காலத்தை வரவேற்றபடி ஆங்காங்கே பூத்திருக்கும் டாஃபோடில் மலர்களையும், கான்க்ரீட் சாலையை பிளந்து கொண்டு எழுந்து நின்று தலையசைக்கும் ஜப்பான் செர்ரி மரங்களையும் ரசித்தபடி, உதட்டோர முறுவலோடு, மிதமான வேகத்தில் நடந்து வந்து கொண்டிருந்த ரம்யாவை, இரு கண்கள் வெறிக்க வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தன. அவள், தன் எதிரே, தன்னருகே நெருங்கி வருவதைக் கண்டு கண்களில் ஒரு பயமும், உள்ளுக்குள் பரவசமும் படர்ந்தது, சுனிலுக்கு.
அவன் மனம் பரபரவென்று, புதைந்து கிடந்த நினைவுகளை, கண் முன்னே அடுக்கிச் சென்றது. தன் தந்தையின் பேச்சால் காயமுற்று அன்று விலகிச் சென்ற ரம்யாவை நினைவுகூர்ந்தான். அவளின் வேதனை முகம் அவன் நினைவில் இன்றும் நீங்கவில்லை. அந்த அபலைக்கு அவன் செய்த அவலங்கள், இன்றும் அவன் இதயத்தைக் கீறிக்கொண்டிருந்தது. திருமணம் நின்றுபோக, நண்பர்கள் விலகிப்போக, வாழ்வே சலித்துப்போன சுனிலுக்கு மாற்றம் வேண்டும் என மனம் ஏங்க, இடம் பெயர்ந்து இங்கு வந்தவனின் பொல்லாத விதி, ரம்யாவை மீண்டும் இவன் முன்னே இழுத்து வந்து நிற்க வைத்தது.
இவனைக் கண்ட நொடியில், ரம்யாவின் முகமும் வெளிறிப்போனது. எதை மறந்து மெல்ல மீண்டுவந்தாளோ, அந்தக் குழிக்குள்ளே மீண்டும் இவளை தள்ள முயற்சித்தது, அந்த முகம்.
எதுவும் பேசவில்லை, ஏன்? எதற்கு? என்று கேள்வி இல்லை. மௌனத்தைப் போர்த்திக்கொண்டு, அவனைக் கடந்து சென்றாள். சுனிலின் மண்டைக்குள், எவனோ ஒருவன் ‘ஓ!’ என்று ஒப்பாரி வைப்பதுபோல் இருந்தது.
வீட்டிற்குத் திரும்பியவன் கட்டிலின் மேல் விழ, முதன்முறை ரம்யாவை சந்தித்த தருணத்தை அவனின் மனம் திரையிட்டது.
பின்னிய, அழகிய நீண்ட கூந்தல், நெற்றியில் பொட்டு, விபூதி, தோடு, வளையல், கொலுசு, என்று பாரம்பரியத்தை, ஜீன்ஸ் - குர்த்தி டாப்ஸ் எனும் புதுமைக்குள் புகுத்திய, இன்றைய நவநாகரீக பெண்களின் கடைசி வரிசை, ரம்யா.
“ஹே, ரம்யா!”
இன்றுபோல் அன்றும் மாலை நேரத்து ரம்யத்தை ரசித்தபடி வந்தவளை அழைத்தாள், நிஷா.
“ஹாய் நிஷா! நீயா?”
“நானேதான்… எப்படி இருக்க ரம்யா? வாட் எ சர்ப்ரைஸ்!! கடைசியா உன்ன ஆறேழு வருஷத்துக்கு முன்னாடி ஸ்கூல்ல பார்த்தது. நீ மாறவே இல்ல. ஆமா, இங்க எப்படி? கல்யாணம் ஆயிடுச்சா?”
“கல்யாணம் ஆனா தான் கலிஃபோர்னியா வரலாமா? இல்லன்னா கூடாதா?”
“அப்போ, படிக்க வந்திருக்கியா?”
“இல்ல நிஷா… இப்போதைக்கு ஒரு வருஷம் டெபுடேஷன்.”
“எப்படி? எப்படி உங்க வீட்ல?”
ஆச்சர்யமானாள் நிஷா. ரம்யாவின் பெற்றோர் பழைய பஞ்சாங்கக் கட்டுப்பட்டி இனம் என்று உலகமே அறிந்து வைத்திருந்ததது.
“இங்க வர நான் பண்ண ஸ்டண்ட் சீனெல்லாம், எனக்கு தான் தெரியும். தலைகீழ நின்னு, குட்டிக்கரணம் போட்டு, அழுது புரண்டு, தர்ணா பண்ணி ஒரு வழியா இங்க வந்தேன்.”
“உன் பாட்டி எப்படி விட்டாங்க?”
ரம்யாவின் பாட்டி - பல்லுப்போன பாண்டிட் குயின். இதுவும் அனைவரும் அறிந்ததே.
“தாத்தா கூட டூயட் பாட பாட்டியா சென்ட் ஆப் பண்ணியாச்சு.”
“அச்சச்சோ இறந்துட்டாங்களா? எப்போ?”
“ஒரு ஆறு மாசம் இருக்கும்.”
“ஆனா அடுத்த தெருவுக்கே தனியா விடாத உன்னை அமெரிக்கா வரை அனுப்பிவச்சது, உலக அதிசயம் தான்… இது என் பிரென்ட் சுனில்.”
ஆறடி உயரம், தெளிவான முகம், காந்தக் கண்கள், படர்ந்த தோள்கள், சீராய்க் கோதிய கேசம், நேர்த்தியாய் ஆடை என்று, பார்த்தவுடனே பற்றிக்கொள்ளக் கூடிய வசீகரம் கொண்ட சுனிலை ரம்யாவிற்கு அறிமுகம் செய்து வைத்தாள், நிஷா.
“ஹாய் ரம்யா!” என்று சுனில் கூறிமுடிக்கும் முன்னே, “ஹாய் ரம்யா” என்று கைகுலுக்கிட வலக்கையை நீட்டி நின்றான், ‘வடிவேலு பாலாஜி’ சாயலை ஒத்த கமல். அவன் எங்கிருந்து வந்தான், எப்போது வந்தான் என்று மூவரும் திகைத்து நின்றனர்.
“வணக்கம்” என்றாள் ரம்யா இரு கைகளையும் கூப்பி.
“கொட்டாம்பட்டிலியே வணக்கம் வைக்கறத விட்டுட்டானுங்க. நீ என்ன கலிஃபோர்னியால வணக்கம் சொல்ற. பை தி வே ஐ அம் கமல்” என்று அவன் முகம் மலர்ந்து நிற்க,
“கமல் அலைஸ் கமலக்கண்ண கரிகாலமூர்த்தி!!”
சுருங்கிய கமலின் பெயரை பாயைப் போல் விரித்துவிட்டான், சுனில்.
“அப்படியா? இத்தனை நாள் எனக்கு இந்த உண்மை தெரியாம போச்சே. உனக்கு ஏத்த பேரு தான்” என்று நிஷா விழுந்து விழுந்து சிரிக்க,
“என்ன வெள்ளையா இருக்கோம்ங்கற திமிரா? தார் எடுத்து மூஞ்சில ஊத்திடுவேன்” என்றான் கமல் கோபத்தோடு.
“ஊத்துனா துடைச்சுக்குவேன்” என்று முகத்தைத் துடைத்தபடி, அபிநயத்தோடு நிஷா பதில் கூற, ரம்யாவின் மெல்லிய புன்னகை, அழகிய சிரிப்பானது.
சிரித்து முடித்து ரம்யா நிமிர்ந்து நோக்க, கமலின் அருகே ரம்யாவை நோக்கியபடி வந்து நின்றான், எழில்.
“ரம்யா இது எழில். ரெண்டு பேரும் என்னோட ரூம் மேட்ஸ். சின்ன வயசுலேர்ந்து நாங்க மூணு பேரும் பிரெண்ட்ஸ்.”
அறிமுகம் செய்துவைத்தான், சுனில்.
“ஆமா ரம்யா, நாங்க மூணு பேரும் சின்ன வயசுலேர்ந்து பிரெண்ட்ஸ். கொஞ்ச காலமா நிஷாவும், சுனிலும் பிரெண்ட்ஸாயிட்டதால நானும், எழிலும் நிஷாவுக்கு எனிமீஸ் ஆயிட்டோம். நீ எங்களுக்கு பிரெண்டா, எனிமியா?”
கடகடவென கூறிய கமலைக் கண்டு ரம்யா முழித்துக்கொண்டு நிற்க, நிஷா முறைத்து நின்றாள்.
“மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி, அப்போ நாம பிரெண்ட்ஸ்!! நைட் எங்களோட டின்னருக்கு வரலாமே?”
ரம்யா பதில் கூறுவதற்குள்,
“அவ என் பிரெண்டு. என்னோட எனிமி அவளுக்கும் எனிமி தான்.”
கமலிடம் கோபமாய் கூறிவிட்டு, மற்ற இருவரையும் கண்டு முறைத்துவிட்டு, ரம்யாவின் கைப்பற்றி தன்னுடன் வேகமாய் அழைத்துச் சென்றாள், நிஷா. ரம்யா மட்டும் திரும்பி மூவருக்கும் பொதுவாய், ‘பை’ என்று கையசைத்துவிட்டு சென்றாள்.
அன்று ரம்யாவின் துறுதுறு கண்கள், குழந்தை முகம், வெள்ளந்தி சிரிப்பு என்று அனைத்தும் சுனிலின் நினைவிற்கு வந்தது. முதல் சந்திப்பிலேயே, தன்னையும் அறியாமல் அவன் மனம் துல்லியமாய் ரம்யாவை படம் பிடித்து வைத்திருக்கும் என்று அவன் நினைக்கவில்லை. இன்று அவனை நோக்கிய அவளின் வலி மிகுந்த கண்கள், துன்பம் தேங்கிய அவளது முகம், ஏதோ கேட்க நினைத்து கேட்காமல் விட்ட அவளது மௌனம், கடந்து சென்று மறைந்த அவளின் பிம்பம் என்று அனைத்தும் அவனின் மனதை நெருடியது.
அடுத்து வந்த நாட்களில் அவன் ரம்யாவை எங்கேயும் கண்டிருக்கவில்லை. இத்தனை நாட்களாக அவளைப் பற்றிய எண்ணங்கள் அவன் மனதுள் எழவில்லை. ஆனால் இந்த எதிர்பாரா சந்திப்பிற்குப்பின், இந்த சில நாட்கள் அவளைக் காணாதது, ஏதோ ஒரு வினோத வருத்தத்தை அவனுக்கு அளித்தது. அவள் எங்கு போனாளோ, என்ன ஆனாளோ என்று அவன் மனம் கேட்டுக்கொண்டே இருந்தது.
அழகான மாலை வேளையில், எதிர்பாராமல் ரம்யாவை மீண்டும் கண்டான். அவள் கண்ணில் படாமல் மறைந்து கொண்டான். அவனுள் இனம்புரியா ஒரு மகிழ்ச்சி மலர்ந்தது. பின்வரும் நாட்களில், அவளுக்குத் தெரியாமல், ஏன் என்று இவனுக்கும் புரியாமல், அவளைத் தொடர்ந்தான். அவள் அலுவலகம், வீடு எல்லாம் தெரிந்துவைத்துக்கொண்டான். ‘அவள் திருமணம் செய்துகொண்டாளோ?!’, என்றொரு கவலை பிறக்க, ‘இல்லை’ என்று தெரிந்த பின், நிம்மதி கொண்டான்.
ஒரு நாள், இரவு மெல்ல கவ்வத்தொடங்கிய நேரம், ரம்யா தனது அலுவலகம் அருகே பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கொண்டிருந்தாள். அவளைப் பின் தொடர்ந்தவன், தனது காருக்குள் அமர்ந்தபடியே சாலையின் எதிர்புறம் காத்துக்கொண்டிருந்தான். அவள் வீடு சென்றடையும் வரை இவன் தான் காவல் என்று முடிவுசெய்திருந்தான் (இன்றுமுதல், என்றும்!!!). திடீரென கனமழை கொட்ட, நேரமாகியும் பேருந்தின்றி தவித்திருந்தாள். இவன் பொறுமை இழந்து, காரைத் திருப்பிக்கொண்டு அவளருகில் சென்று நிறுத்தினான்.
“ரம்யா, ரொம்ப லேட் ஆயிடுச்சு… வாங்க நான் உங்களை வீட்ல விட்டுடறேன்”, என்றான் பவ்யமாக. பல நாட்கள் கழித்து அவளோடு பேசுகிறான். தன்னையும் அறியாமல் அவனது பேச்சில் மரியாதை சற்று கூடுதலாகவே இருந்தது. அவள் முகம் பார்த்து பேசுகிறான். அவன் இதயம் துடிக்கும் வேகத்தில், எப்பொழுது வேண்டுமானாலும் வெளியே வந்து விழுந்துவிடும் போல் இருந்தது.
அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, பதில் பேசாமல் திரும்பி நின்றாள்.
“ரம்யா ப்ளீஸ்… இந்த நேரத்துக்கு மேல இங்க தனியா வெய்ட் பண்றது உங்களுக்கு சேஃப் இல்ல. வாங்க நான் ட்ராப் பண்றேன்.”
“நோ தேங்க்ஸ்,” வெட்டும் பதில் கூறினாள் ரம்யா.
சில நிமிடங்கள் அமைதியாய் நின்றிருந்தவன்,
“ரம்யா, என்னை ஒரு டாக்ஸி ட்ரைவரா நினைச்சுக்கோங்க. ரொம்ப மழையா இருக்கு. டைம் ஆயிடுச்சு. ப்ளீஸ்”, என்றான் மீண்டும்.
வெகு நேரம் காத்திருந்து அவளும் பொறுமையை இழந்திருந்தாள். மழையும் விடுவானேன் என்று சதி செய்தது. அவனோடு செல்வதில் விருப்பமில்லை என்றாலும், வேறு வழியின்றி சென்றாள். இவளிடம் வழிகேட்காமல், அவன் சரியாக இவளது வீட்டிற்கு அழைத்துச் சென்றான். ‘இவனுக்கு எப்படி வீடு தெரியும்?!’, என்று ஐயம் கொண்டவள், “தேங்க்ஸ்” என்று கூறிவிட்டு, வேகமாக அபார்ட்மென்ட்டினுள் ஓடிச்சென்றாள்.
அவள் மறையும்வரை, மழையின் ஜன்னல் வழியே, அவளையே பார்த்துக்கொண்டிருந்தான், சுனில். அவனது உள்ளத்திலும் மழை சாரல் தூவியது. வெகு நேரம் காரில் அமர்ந்தபடி, அருகில் ரம்யா அமர்ந்திருந்ததை எண்ணியெண்ணி பேரானந்தம் கொண்டான். இத்தனைக் காலமாய் அவனிடம் மறைந்திருந்த அவனின் வசீகரப் புன்னகை, இப்பொழுது அவன் இதழ்களில் படர்ந்தது. ‘ரம்யா’ என்று சில முறை உரக்கக்கூறி, தனக்குள்ளே சிரித்துக்கொண்டான்.
No comments:
Post a Comment