Friday, 29 November 2019

ஒரு முடிவில் ஒரு தொடக்கம் - 15

‘ச்ச… அவன் நேத்து அப்படி வருத்தப்படும்போதே எல்லா உண்மையும் சொல்லி இருக்கணும். இப்போ எங்க தொடங்கி என்னனு சொல்றது. அய்யோ கடவுளே, ஏதாவது செய்யேன். எனக்கு பைத்தியம் பிடிச்சுடும் போல இருக்கு’ என்று எண்ணிக்கொண்டே கிச்சனில் காய்கறிகளை நறுக்கிக்கொண்டிருந்தாள்.

அவளை பார்த்தபடியே அமர்ந்திருந்த சுனில், ‘இன்னைக்கு ரம்யாகிட்ட வெளிப்படையா பேசிடலாமா? மனசுல என்ன இருக்குனு கேட்டுடலாமா? ஒருவேளை, அவ மனசுல நான் இல்லேன்னு சொல்லிட்டா, நான் என்ன பண்ணுவேன்? அய்யோ! ரம்யா நீ எனக்கே எனக்குன்னு கற்பனையிலேயே உன்னோட நூறு வருஷம் வாழ்ந்துட்டேன். அதெல்லாம் பொய்யா போய்டுமா? ரொம்ப பயமா இருக்குடி’ என்று மனக்கலக்கத்தோடு அவளைக் கண்டுகொண்டிருந்தான். தன்னையே அறியாமல் அவன் கால்கள் அவனை ரம்யாவின் அருகே இழுத்துச் சென்றன. அவளை கட்டி அணைக்க முற்பட்டான். அவள் எதேச்சையாகத் திரும்ப, இவன் தடுமாறினான். ‘ச்ச… சுனில், என்னடா பண்ண துணிஞ்ச?’ என்று தன்னை நொந்துகொண்டான்.

“என்னங்க என்ன ஆச்சு?” என்று அவள் பதற, இவன் தலையைப்பிடித்துக்கொண்டு,
“ஒன்னும் இல்லமா, லேசா தலைய சுத்துது” என்றான்.
இவள் கைத்தாங்களாய் அவனைப் பிடித்துக்கொண்டு வந்து, சோபாவில் அமரச் செய்தாள்.
“என்ன ஆச்சு உங்களுக்கு? அன்னைக்கு வாந்தி வருதுன்னீீங்க… இன்னைக்கு தலை சுத்துதுங்கறீங்க… என்ன ப்ரெக்னன்ட்டா இருக்கீங்களா?” என்று எப்பொழுதும்போல் விளையாட்டாக  வினவினாள்.
“ஆமாம்! மூணு மாசம்… இதோ வயித்துல பிள்ளை எட்டி உதைக்கறான் பாரு” என்றான் சற்றே எரிச்சலாக.
“சரி சரி, கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க… லேபர் பெய்ன் வந்தா சொல்லுங்க, ஆம்புலன்ஸ கூப்பிடறேன்”, என்று சொல்லி சிரித்தாள்.
“என்ன கிண்டலா? இருடி உனக்கு லேபர் பெய்ன் வரவைக்கறேன்.”
“அப்படியே வரவச்சிட்டாலும்.”
“ஹே.. என்ன பத்தி என்ன நெனச்சிட்டு இருக்க? போனா போகுது சின்ன பொண்ணுன்னு பார்க்கறேன்.”
“இல்லேன்னா!?”
“வேற மாதிரி ஆயிடும், தாங்கமாட்ட” என்று உரக்கக் கத்தினான்.
அவள் பதில் எதுவும் கூறவில்லை. அமைதியாக இருந்தாள். தன்னை மீறி  அவன் பேசிய வார்த்தைகளால், அவள் காயமுற்றாள் என்பதை உணர்ந்தான். இவன் மனம் கலங்கியது. சில நிமிடங்கள் தலையில் கைவைத்தபடி அமர்ந்தவன், தன்னை மீட்டெடுத்துக்கொண்டு, 
“ஐ ஆம் சாரி ரம்யா. ரொம்ப தப்பா பேசிட்டேன். என்ன மன்னிச்சுடு. மனசுல எதையும் வச்சுக்காத ப்ளீஸ்”, என்று மன்றாடினான்.
கண்கள் கலங்கியவாறு அவனை நோக்கினாள். 
“நீங்க எதுக்கு மன்னிப்பு கேட்கறீங்க? தப்பு பண்ண நானே அமைதியா இருக்கும்போது, நீங்க எதுக்கு வருத்தப்படறீங்க? அன்னைக்கு என்கிட்ட முறை தவறி நடந்துக்கிட்டதா எதை வச்சு முடிவு பண்ணீங்க? என்னுடைய அனுமதி இல்லாம உங்களால என்கிட்ட  நெருங்கியிருக்க முடியுமா? இல்லை, என்னை காப்பாத்திக்க என்னாலதான் முடியாம போயிருக்குமா? 

அப்போ, தினமும் போன்ல தெரியாத நம்பர்லேர்ந்து எனக்கு கவிதை வரும். யாருனு தெரியல, தெரிஞ்சுக்கவும் விரும்பல. ஏன், இப்போ வரைக்கும் எனக்கு அந்த மெசேஜ் அனுப்பியது யாருனு தெரியாது. ஆனா கவிதையை மட்டும் ரசிச்சேன். எப்படி எதனாலன்னு தெரியல, அத அனுப்பியது நீங்க தான்னு என் மனசு சொல்லுச்சு. நிஷா உங்கள பத்தி பகிர்ந்துக்கிட்ட விஷயங்கள், நீங்க என்கிட்டே காட்டின பரிவு, இதெல்லாம் வச்சு நீங்களும் என்னை காதலிக்கறதா நானே ஊகிச்சுக்கிட்டேன். எவ்வளவு பெரிய முட்டாள் நான்! காதல் வந்ததும் என் மனசும் அதற்கு சாதகமா தான் யோசிச்சுதே  தவிர, உண்மைய கண்டறிய முயற்சிக்கல. அந்த இரவு உங்க காதல நீங்க எனக்கு உணர்த்தறதா தான் நினைச்சேன். என் ஒப்புதல் மூலம், உங்க காதலை ஏத்துக்கிட்டதா நானே கற்பனை பண்ணி, ரொம்ப சந்தோஷப்பட்டேன். விடிஞ்சதும் தான் புரிஞ்சுது, நான் காதலிச்ச மனசு வேற, முகம் வேற. என்னுடைய அறிவீனமான காரியத்தால ரெண்டு மனச கொன்னுட்டேன்னு தெரிஞ்சுது. நீங்களும், நிஷாவும் விரும்பினது சத்தியமா அதுவரை எனக்குத் தெரியாது. ஒவ்வொரு நாளும் நான் குற்றம் செய்ததை எண்ணி செத்துப் பிழைக்கிறேன். உங்கள திரும்பவும் சந்திச்சபோது கூட, அந்த குற்ற உணர்வு தான் உங்ககிட்டேர்ந்து என்னை விரட்டுச்சு. 

இதெல்லாம் ஏன் முன்னமே சொல்லலைனு கேட்கறீங்களா? அன்னைக்கு நான் இருந்த அதிர்ச்சில என்னால எதுவும் பேச முடியல. உண்மைய சொல்ல தைரியம் இல்ல. என் காதல் நீங்க இல்லங்கற ஏமாற்றமே எனக்கு பெருசா வலிச்சுது. என் முகத்தைக்  கண்ணாடியில் பார்க்க அருவருப்பா இருந்துச்சு. நான் இருந்த மன நிலையில உங்களோட, நிஷாவோட நிலைமை என்னனு கூட சிந்திக்கத் தெரியல. அதான் சொல்லாம உங்க எல்லாரையும் விட்டுட்டு போய்ட்டேன். என்னை என்கிட்டயிருந்து மீட்டெடுக்க போராடினேன். இந்த நிலையில உங்களோட எனக்கு கல்யாணம்கற விஷயமே என்னால ஏத்துக்க முடியல. என் கை மீறி எல்லாம் முடிஞ்சுடுச்சு. 

இவ்வளவு நாளா உங்க முகத்தைப் பார்த்து உண்மைய சொல்லமுடியாம தவிச்சு  தலையணை நனைஞ்சது மிச்சம். நீங்க என்னை காதலிக்கறதா என் போட்டோ கிட்ட பேசியதெல்லாம் கேட்டிருக்கேன். அப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கும். என் மனசும் உங்கள தான் சுத்தி வந்தது. எல்லாம் தெரிஞ்சா என்னை ஒதுக்கிடுவீங்க, உண்மைய மறைச்சு நானும் உங்கள காதலிக்கறதா சொல்லி, புதுசா வாழ்க்கையை தொடங்கிடலாம்னு கூட கள்ளத்தனமான மனசு நினைச்சுது. ஆனா, என் முகத்தைப் பார்த்து நீங்க உங்க மனச சொல்லாம தவிக்கற காரணம் புரியாம இருந்த எனக்கு, நேத்து தான் உண்மை தெரிஞ்சுது. நீங்க அறியாம நடந்த விஷயத்துக்கு இவ்வளவு வேதனை படறீங்க. ஆனா உண்மைய சொல்லி மன்னிப்பு கேட்காம நானோ அமைதியா இருக்கேன். சுயநலமா யோசிச்சு, ஆயுசுக்கும் உங்களுக்கு மன வேதனை கொடுக்க நான் விரும்பல. இப்போ சொல்றேன், உங்க மேல எந்த தப்பும் இல்ல. தப்பு செஞ்சது நான் தான். என்னால நீங்க உங்க வாழ்க்கையை இழந்ததுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் வாங்கிக்கறேன்.”    

அவள் கூறியதைக்கேட்டு, அவன் உறைந்துபோனான். அதிர்ந்து அமர்ந்தவன், மௌனமானான். அவன் ஏதேனும் கூறிடமாட்டானா என்று ஏங்கியவளுக்கு மௌனமும், ஒதுக்கமும் மட்டுமே கிட்டியது.


அவள் அறியாத  உண்மைகளை, அவன் மட்டும் அறிந்திருந்த உண்மைகளை அவனின் மனம் அசை போட்டது.

“என்ன மச்சான் ரெண்டு நாளா மந்திரிச்சு விட்ட மாதிரி இருக்க?” 
தனது அறையின் சாளரத்தின் அருகே  நின்றுகொண்டிருந்த எழிலை கேலி பேசினான், சுனில்.
“அ… அதெல்லாம் ஒன்னும் இல்லடா.”
“டேய்… என்ன விஷயம் சொல்லு.”
“ரெண்டு நாள் முன்னாடி நிஷா கூட பார்க்ல பார்த்தோமே அவ பிரெண்டு…”
“ ஆமா,சுகன்யா… அவளுக்கு என்ன?”
“அவ பேரு சுகன்யா இல்ல ரம்யாடா”
“பார்றா” நக்கலாகச் சிரித்தான் சுனில்.
“என்ன மச்சான் கண்டதும் காதலா? வாழ்த்துக்கள்!!”
சுனில் வாழ்த்த, எழில் குழைந்தான்.
“அதெல்லாம் இல்லடா… சும்மா நல்ல பொண்ணா இருக்காளேனு நினைச்சேன்.”
“பத்து நிமிஷம் தான் அவளை பார்த்திருப்ப. பத்து வருஷம் பழகின மாதிரி சர்ட்டிபிகேட் தர.”
“ப்ச்… டேய்…”
“கவலைப்படாத மச்சான். உன் கல்யாணத்த நடத்த வேண்டியது என் பொறுப்பு.”
காதல் வெட்கம் கொண்ட எழில், சுனிலை ஆரத்தி தழுவிக்கொண்டான்.  
“கமலுக்கு தெரியவேண்டாம்டா.”
“சொல்லமாட்டேன், நீ கனவை கண்டினு பண்ணு...”              

“என்ன மச்சான் காலைலயே குளிச்சு முடிச்சு, காதல் ஜெயிக்கணும்னு ‘ஸ்ரீ ராமஜெயம்’ எழுதறியா?”
சனிக்கிழமை காலையிலேயே சமர்த்தாய் எழுந்திருந்த நண்பனைக் கண்டதும் சிரிப்பு வந்தது, சுனிலுக்கு.
“டேய், ஏன்டா? கவிதை எழுதினேன்டா.”
“எனக்கா மச்சான்? ‘ஒரு வாரமா ஏன் ஒரு கவிதை கூட நீ எழுதித் தரல’னு நிஷா கேட்டா.”
“இது நான் ரம்யாக்கு எழுதினது. நீ இனிமேல் உனக்கு சொந்தமா எழுதிக்கோ.”
“மச்சான், நீ சும்மாவே சூப்பரா எழுதுவ. இப்போ காதல் வேற வந்துடுச்சு. டைரி டைரியா எழுதி தள்ளிட மாட்ட? ப்ளீஸ் ரெண்டு கவிதை கொடுடா.”
“போடா.”
எழிலை தன் வழிக்கு அசைந்துகொடுக்கவைக்கும் யுத்தியைக் கையிலெடுத்தான், சுனில்.
“எனக்கு ரெண்டு கவிதை எழுதி கொடுத்தா, உனக்கு ரம்யாவ பத்தி ஒரு சந்தோஷமான நியூஸ் சொல்றேன்.”
ஆர்வமான எழில்,
“ரெண்டு என்ன இருநூறு எழுதித்தரேன். விஷயத்தை சொல்லு.”
“ரம்யா இனிமேல் நிஷா கூட தான் தங்கப்போறாளாம். ரம்யாவை அவ அபார்ட்மெண்ட்லேர்ந்து அழைச்சுட்டு வந்து, தன் வீட்ல விட சொல்லி நிஷா போன் பண்ணா. வா கிளம்பு.”
“ஐ லவ் யூ டா சுனில்” என்று நண்பனை கட்டிக்கொண்டான் சுனில்.
“அத உன் ஆளு கிட்ட சொல்லு.”

“மச்சான் இந்தா ரம்யா நம்பர். உன் கவிதை எல்லாம் அனுப்பிவிட்டு இம்ப்ரெஸ் பண்ணு.”
எழில் முழித்துக்கொண்டு நிற்க,
“இன்னைக்கு மத்தியானம் ரம்யாவை விட்டுட்டு, நிஷா வீட்ல வெஜிடபிள் புலாவ்  வெட்டும்போது, நிஷா போன்லேர்ந்து ரம்யா நம்பரை சுட்டுட்டேன்.”
“ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மச்சான். பத்தே நிமிஷத்துல உனக்கு ஒரு கவிதை எழுதி கொடுக்கறேன்டா. ரொம்ப தேங்க்ஸ் டா!!”

“என்னடா கொஞ்ச நாளா அமைதியா இருக்க? லவ் ஓகே ஆயிடுச்சா?”
“நீ வேற சுனில்…”
“ரம்யாக்கு மெசேஜ் போட்டியா இல்லையா?”
“போட்டேன். ஆனா நான் யாருனு சொல்லல. புது நம்பர்லேர்ந்து கவிதை அனுப்பினேன்.  படிக்கறா. பதில் மட்டும் வரமாட்டேங்குது.”
“எதுக்கு புது நம்பர்?”
“நான் யாருனு தெரியறதுக்கு முன்னாடி அவளுக்கு என்னைப் பிடிக்கணும். கண்டிப்பா பிடிக்கும். அவளுக்கும் தான் இலக்கிய ஆர்வம் இருக்கே. என் கவிதை மூலமா என் மனச சொல்லிடுவேன்.”
“நீ நடத்து மச்சான்…”

பொங்கலை முன்னிட்டு, நிஷாவின் வீட்டிற்கு சுனில் மற்றும் கமல் முன்னே சென்றுவிட, எழில் மட்டும் ரோஜா செண்டும், சாக்லேட்டும் வாங்கிக்கொண்டு சற்று தாமதமாக வந்தான். அவனை வரவேற்ற ரம்யாவிடம் அவற்றைக்கொடுக்க, நன்றியுடன் பெற்றுக்கொண்ட ரம்யா, ஒரு மலர் குவளையில்  நீரிட்டு, ரோஜாக்களை அடுக்கி வைத்தாள். ரோஜாக்களை விட ரம்யாவே அழகாய் இருந்தாள், எழிலுக்கு. 
“மச்சான், ‘ஐ லவ் யூ’னு ஒரு கார்டையும் சேர்த்து கொடுத்திருக்கலாம்ல??!!” எழிலின் காதுகடித்தான் சுனில்.
அவன் கூறியதைக் கேட்டு ரகசியமாய் வெட்கம் கொண்டான் எழில்.
பூஜைகள் முடித்து அனைவரும் உணவருந்திக்கொண்டிருக்க, சுனிலிடம் பிறர் அறியா வண்ணம், ‘ரம்யா எங்கே?’ என்றான் எழில்.
கிச்சனுக்கு சென்ற சுனிலின் குரலைக்கேட்டு திட்டுக்கிட்டவள் கையில் காயம் பட்டுக்கொள்ள, அங்கே முதலில் ஓடி வந்து நின்றான் எழில். சுனில் அவளுக்கு முதலுதவி அளித்துவிட்டு, “லேசா தான் காயம். கவலைப்படாத” என்ற பின்னரே அவனுக்கு உயிர் மீண்டது. ரம்யா, கமல் - நிஷாவின் கேலி பேச்சுகளிலும், சீண்டல்களிலும் தன்னை மறந்து  சிரித்துக்கொண்டிருக்க, எழிலோ அவளின் கை காயத்தை மட்டும் நோக்கியபடி பரிதவித்திருந்தான்.

“திடீர்னு சனிக்கிழமை டின்னர்னா என்ன அர்த்தம்?”
“ஒழுங்கு மரியாதையா உன் காதல சொல்லுன்னு அர்த்தம். அவ வீட்ல மாப்பிள்ளை பார்க்கப்போறாங்களாம். நிஷாகிட்ட தனக்கு இப்போதைக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லனு ரம்யா வருத்தப் பட்டிருக்கா. இதுக்கு மேல நேரம் கடத்தினா நீ தேவதாஸா சுத்த வேண்டியது தான். என் வீட்லயும், நிஷா வீட்லயும் எங்க விஷயம் தெரிஞ்சுடுச்சு. கிட்டத்தட்ட ரெண்டு வீட்லயும் சம்மதம் தான். வெள்ளிக்கிழமை நேர்ல சந்திச்சு பேசி முடிவு பண்ண போறாங்க. என் கல்யாணத்தோட உன் கல்யாணத்தையும் சேர்த்து நடத்திடலாம். சரியா?”
“திடீர்னு இப்படி சொன்னா நான் என்ன பண்ண, சுனில்?”
“ஒழுங்கா நீயே பேசறியா? இல்ல, நானே ரம்யாகிட்ட எல்லா உண்மையும் சொல்லிடவா?”
“நானே ரம்யாகிட்ட பேசறேன்…”

“என்னடா சுனில், என்ன ஆச்சு? ஏன் இப்படி அழுவுற?”
வினவிய கமலின் கையிலிருந்த கைபேசியை எடுத்து தனது தாயை அழைத்தான். இரவு நிஷா என்று நினைத்து ரம்யாவிடம் தான் முறை தவறி நடந்து கொண்டதைக் கூறி அழுது ஓய்ந்தான். ஓய்ந்தவன் நிமிர்ந்து எழிலை  நோக்க, நொந்த முகத்தோடு அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டான், எழில். சில மணி நேரத்தில், தனது பொருட்களை எடுத்துக்கொண்டு அவர்களின் இல்லத்தை விட்டு வெளியேறினான்.

“சுனில், நீயும் அம்மா, அப்பா கூட ஊருக்கு கிளம்பு.”
“இல்ல கமல் என்னால முடியாது. என் அம்மாவை என்னால பார்க்க முடியல. நேத்தது ரம்யாவை அப்பா ரொம்ப தப்பா பேசிட்டாரு. பயங்கர ஆத்திரம் வருது. அவரை ஏதாவது சொல்லிடுவேனோனு பயமா இருக்கு. ரம்யா என்ன ஆனானு தெரியல. நிஷா என் போன எடுக்க மாட்டேங்கற. இந்த எழில் எங்க போனான்னு தெரியல. என்னால முடியல மச்சான்.”
தலையைப் பற்றிக்கொண்டு அமர்ந்திருந்தான், சுனில்.
“டேய் எழில எனக்கு தெரிஞ்சவர் ரூம்ல தங்க ஏற்பாடு பண்ணிட்டேன். நிஷா வேலைய ராஜினாமா பண்ணிட்டா. இந்தியா போகப்போறாளாம். கல்யாணத்த…”
“கல்யாணத்த?”
“கல்யாணத்த நிறுத்திட்டா சுனில். அம்மா இடிஞ்சு போயிருக்காங்க.”
“கல்யாணம் நின்னுபோச்சா?”
இடிந்துபோனான் சுனில்.
“என்னடா என்னமோ உண்மையா காதலிச்ச மாதிரி  வருத்தப்படுற?”
“கமல்...” 
பற்களைக் கடித்துக்கொண்டு கத்தினான் சுனில்.
“கோவப்படாத டா. மொடாக்குடி குடிச்சிருந்தாலும் எவனும் பொண்டாட்டினு நினைச்சு பெத்தவ கைய பிடிச்சு இழுக்கமாட்டான். எல்லாம் intuition - உள்ளுணர்வு. நீ நிஷா கூட இல்ல, வேற ஒரு பொண்ணு கூட இருக்கனு உன் மனசு அபாய மணி அடிக்கலேனா, நீ ஆத்மார்த்தமா நிஷாவை விரும்பலனு தான அர்த்தம்?!”
“இல்ல மச்சான், நான் போதைல மூர்கத்தனமா…”
“இல்லடா, அதெல்லாம் சினிமாக்கு தான் பொருந்தும். நீ கண்டிப்பா அந்த நேரத்துல தெளிஞ்சும் தெளியாம இருந்திருக்கணும். மேலும் ரம்யா விருப்பத்தோடு உடன் பட்டிருக்கணும்.”
“டேய்…”
“ரம்யா உன்னை விரும்பறாளோனு தோணுது மச்சான். உன்னை பார்க்குற  பார்வையும், உன்னை கவனிச்சுக்கற விதமும், கூடுதல் அக்கறையும்... யார் கவனிச்சாங்களோ இல்லையோ, நான் கவனிச்சேன். போதைல இருந்த உன்கிட்ட இருந்து தப்பிச்சிருக்க அவளால முடிஞ்சிருக்கும் மச்சான். ஆனா அவ செய்யல. அவ கண்டிப்பா உன்னை காதலிக்கறா.”
“என்னால இதை ஒத்துக்க முடியல. அவ சின்ன பொண்ணு. ரொம்ப பயந்திருப்பா. அதுமட்டுமில்ல எழில்..”
“எழில் அவளை காதலிச்சான். அதான? நீங்க ரெண்டு பேரும் சொல்லலேன்னா எனக்கு தெரியாதா? எனக்கு எப்பவோ தெரியும். நான் கண்டுக்கல.”
“சாரி டா… எழில் எங்க இருக்கான்னு சொல்லு, நான் பேசறேன்.”
“இல்ல டா. இதை பத்தி நான் வெளிப்படையாவே பேசிட்டேன். ‘நான் நல்லவன் தான். ஆனா நீங்க நினைக்கற அளவுக்கு நல்லவன் கிடையாது’னு  சொல்லிட்டான். நீ தயவு செஞ்சு அவனை தொந்தரவு பண்ணாத சுனில்.”
“ஐயோ… ரம்யா?”
“எல்லாரையும் அவங்கவங்க வழியில விட்டுடு, சுனில்.”               
                           

அன்று கமலின் ஊகம் முழுதும் சரியாய் இருந்ததை எண்ணி இன்று சிரித்துக்கொண்டான், சுனில். இத்தனை காலமாக கமலிடமிருந்து வந்திருந்த மின்னஞ்சல்களை பிரித்துப் படித்தான். வெகு மாதங்கள் கழித்து கமலை தொடர்புகொண்டான். 

No comments:

Post a Comment