கடிகார முட்கள் ஓடியோடி நள்ளிரவினைத் தொட முயன்றுகொண்டிருக்க, நியூயார்க் நகரமே உறங்கியிருக்க, தான் மட்டும் உறங்காமல், தன்னுடைய 'ஸ்டடி' அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டிருந்தான், கிருஷ்ணன். கைகளை நெஞ்சின் குறுக்கே கட்டிக்கொண்டு, நெற்றி சுருங்க, தலை குனிந்து யோசனையில் மூழ்கியிருந்தவன், தனது மனைவி அறையின் வாயிலில் வந்து நின்றதைக் கூட கவனிக்கவில்லை.
"கிருஷ்…"
அவளது அழைப்பு செவி தீண்டினாலும், புத்திக்கு உரைக்கவில்லை.
"கிருஷ்…" என்று மீண்டும் ஒருமுறை அவள் குரல் உயர்த்தி அழைத்தபின்னே, அவன் நடையை நிறுத்தி, தலையுயர்த்தி அவளை நோக்கினான்.
"மூணு நாளா உங்க முகமே சரியில்ல, கிருஷ். என்னண்ட கூட பேசல. குழந்தேளயும் பார்க்கல. அப்படி என்ன பிரச்சனை?"
"சொன்னா தீர்த்திடுவியா?"
"தீர்க்க முடியர்தோ இல்லையோ, குறைஞ்சது நேக்கு தோன்ற அட்வைஸ கொடுப்பேனோல்லியோ?"
"உன் அட்வைஸ் நேக்கு தேவையில்லை. நீ ஹார்வர்ட் எம்.பி.ஏ'னா, நான் ஸ்டான்போர்ட் எம்.பி.ஏ. அதை மறந்துடாத…"
பெருமூச்சுவிட்டவள், அவனது தோளைப்பற்றி இருக்கையில் அமரச் செய்து, பருக நீர் கொடுத்தாள்.
"சொல்லுங்கோ, எது உங்களை இப்படி வாட்டறது?"
"என்னத்த சொல்ல, மூணு நாள் முன்னாடி அந்த கேசவனுக்கு சென்டர் ஹெட்'ஆ ப்ரமோஷன் வந்திருக்கு. நியாயமா நேக்கு வந்திருக்க வேண்டியது. ஒவ்வொரு ப்ராஜெக்ட் டெலிவரியும் நான் சாதிச்சது. அவனண்ட கொடுத்த ப்ராஜெக்ட்'ல ஏகப்பட்ட கன்பியூஷன், க்ளையண்ட் டிஸ்சாட்டிஸ்பாக்ஷன். சில சமயம் அவன் பிரச்சனைக்கு என்னண்ட வந்து நிப்பான், 'ஹெல்ப் பண்ணேன்டா கிருஷ்'னு சொல்லிண்டு. நான் இருக்கற வேலையெல்லாம் விட்டுட்டு, அவன் வேலையை என் தலையில ஏத்திண்டு… ச்ச, ராத்திரி பகல்னு பார்க்காம வாங்கற சம்பளத்துக்கு மூளையை கசக்கி வேலை செஞ்சதுக்கு மேனேஜ்மெண்ட் என் தலையில ஜோக்கர் குல்லாவ மாட்டிடுத்து. 'இனி இந்த கேசவன் தான் புது சென்டர் ஹெட்'னு சி.ஈ.ஓ. அறிமுகம் செய்யறார், அவனும் கூச்சமே இல்லாம பல்ல காமிச்சுண்டு நிக்கறான். காசிப் பேசிண்டு, பாலிட்டிக்ஸ் பண்றவா ப்ரமோஷன் வாங்கிண்டு போயிடறா. வேலை செய்யற நான் இப்படியே கிடந்து தேயணும்… ரொம்ப ஸ்ட்ரெஸ்ட்'ஆ இருக்கு…"
கனமழை அடித்து ஓய்ந்தது போல் படபடவென தன்னை வருத்திய விடயத்தை, கோபமும், எரிச்சலும் சிறிதும் குறையாமல் கொட்டித் தீர்த்தான்.
அவன் கூறியதை உள்வாங்கியவள், அவனது மனதை படித்தவள், அவனது உழைப்பையும், நேர்மையையும் கண்கூட பார்த்தவள்,
"கிருஷ், நீங்க உங்க அதிருப்பதியை மேனேஜ்மெண்ட்டாண்ட சொல்லுங்கோ. நீங்க இந்த கம்பெனிக்காக என்னவெல்லாம் செஞ்சிருக்கேள்னு பட்டியல் போட்டு காட்டி, உங்க வேல்யூவ எடுத்துச் சொல்லுங்கோ…"
"எடுத்துச் சொல்லி, 'பவதி பிக்ஷாம் தேஹி'னு திருவோட்டோட நிக்கச் சொல்றியா?" என்ற சீறியவன், கோபம் தாளாமல் மேஜையின் மீது வேகமாய் அறைய, கோப்பை கீழே விழுந்து, அதில் மீதமிருந்த நீர் சிந்திச் சிதறியது. அவனது செய்கையில் திடுக்கிட்டவள், மேற்கொண்டு பேசாமல் சிந்திய நீரை துடைத்துவிட்டு, அவனை தனிமையில் விட்டுவிட்டுச் சென்றாள்.
நெற்றியில் கைகளை வைத்தபடி அமர்ந்திருந்தவன் யோசனையாய் நிமிர, எதிரே இத்தனை ஆண்டுகளாக அவன் சேகரித்த மேனேஜ்மெண்ட் புத்தங்கங்கள் அனைத்தும் அவன் கண்ணில் பட்டன. சலிப்போடு அவன் முகம் திருப்ப, அறையின் வாயில் வழியே, வரவேற்பறை சுவற்றில் மாட்டப்பட்டிருந்த தந்தையின் புகைப்படம் கண்ணில் பட்டது. எழுந்து, படத்தின் அருகே சென்றவன், அதன் மேலே சொருகியிருந்த, வாடிய கிரிஸான்தமம் மலர்களைக் கலைந்தான். கீழே மேஜையின் மேல் தந்தையின் ஞாபகமாக பகவத் கீதையும், அவரது மூக்குக்கண்ணாடியும் இருந்தன.
"டேய் கிருஷ்ணா, நான் பதினஞ்சு வயசா இருக்கச்சே என்னோட தோப்பனார் தினம் கீதையைப் பத்தி குறைஞ்சது ரெண்டு வரியேனும் சொல்லுவார். சில சமயங்கள்ல மணிக்கணக்கா கூட பாராயணம் பண்ணியிருக்கார். நேக்கு அப்போ வந்தது, கீதை மேல ஒரு பக்தியும், அன்பும். அதான் நோக்கு 'கிருஷ்ணன்'னு பேர் வச்சேன். நான் எங்க போனாலும் கையோட கீதையும் வரும். தூங்கி எழுந்ததும் பகவானை நினைச்சு கீதையைத் திறப்பேன். ஏதோ ஒரு பக்கம் வந்து நிற்கும். அதை வாசிச்சுட்டு தான் அடுத்த வேலை. அதே போல தூங்கப்போறச்சே பகவானை மனசுக்குள்ள சேவிச்சுட்டு ஏதோ ஒரு பக்கத்தை விரிச்சு படிச்சுட்டு தான் தூக்கம். நீ கீதையை ஏதோ ஸ்வாமி புஸ்தகம்னு ஒதுக்காத. தினம் ராத்திரி ஏதேதோ புஸ்தகம் வாசிச்சுட்டு தூங்கரேல்லியா, அதே போல கீதையையும் வாசி. வாசிச்சதை நினைவுல வச்சுக்கோ, செய்யல்ல பழக முயற்சி பண்ணு. சுபிட்சமா இருப்பேடா!!"
மனதில் பதிந்துவிட்ட, அப்பா அடிக்கடி கூறும் உபதேசம், அப்பொழுது அவனது உள்ளத்தில் ஒலித்தது... அப்பாவின் குரலில்.
கையில் கீதையை எடுத்தவன், தனது தந்தையை ஒரு முறை பார்த்துவிட்டு, புத்தகத்தைத் திறந்தான்.
कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन |
मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि ||
(கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந
மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோऽஸ்த்வகர்மணி)
என்ற ஸ்லோகம் அவன் கண்களில் பட்டது. 'கருமம் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு. அதன் பலன்களில் உனக்கு எப்பொழுதும் அதிகாரம் இல்லை. ஏனென்றால், கருமம் கொடியதன்று. ஆசையோடு கூடிய கருமமே கொடியது. பயனை எதிர்நோக்கா, ஆசையறுத்து பணி செய்பவனுக்கே சித்தம் தெளிந்து, ஆற்றல் அதிகரித்து ஞானம் பிறக்கிறது' என்ற பொருள் விளக்கத்தினை வாசித்தவன் மனதில், "கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே கிருஷ்ணா… இதை நான் சொல்லல, பகவான் கீதைல சொல்லியிருக்கார்" என்று மீண்டும் அப்பாவின் குரல் உள்ளத்தில் ஒலித்தது.
கீதையை மூடிவைத்தவன் தன் அப்பாவை சில நொடிகள் இமைக்காது பார்த்து நின்றான். பிறகு, தன் படுக்கைக்குத் திரும்பியவனுக்கு மூன்று நாட்களாக கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிய உறக்கம், அன்றிரவு அவனை ரட்சித்தது.
ஒரு வார காலத்தில் ஒருவாறு இயல்பு நிலைக்குத் திரும்பியவன், திடுமென சாக்களேட்டுகள், மனைவிக்கு பூங்கொத்துகள், பிள்ளைகளுக்கு பரிசுகள் என்று ஒரு இனிய மாலையில் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தான்.
அவனை வியப்பாய் பார்த்திருந்த மனைவியின் அருகே சென்றவன், மடிக்கணினி பையிலிருந்து ஒரு தாளினை எடுத்து, அவளிடம் நீட்டினான்.
"நேக்கு ப்ரமோஷன் வந்திருக்கு, பிசினஸ் ஹெட்'ஆ. ஹெட் குவார்ட்டர்ஸுக்கு என்னை மாத்தியிருக்கா. இப்போ நான் வேலை செய்யற சென்டர சேர்த்து இன்னும் மூணு சென்டரும் எனக்குக் கீழ…"
புருவம் உயர்த்தி அவனை நோக்கியவள்,
"வாவ், வாழ்த்துக்கள் கிருஷ்!! யாரண்ட பேசினேள்? என்ன பேசினேள்?? என்ன செஞ்சேள், சொல்லுங்கோ?!!" என்றாள், ஆர்வமாக.
"நான் யாரண்டையும் பேசல, எதுவும் செய்யல…"
என்றான் அவன், நிதானமாக.
"என்ன சொல்றேள்?"
"ஆமாம். உண்மையத்தான் சொல்றேன்.
கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந
மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோऽஸ்த்வகர்மணி
இந்த ஒரேயொரு ஸ்லோகத்தை கீதைலேர்ந்து படிச்சு, உள்வாங்கிண்டு, ப்ரயத்தணப்பட்டு பத்து நாளா ஃபாலோ பண்ணிண்டிருக்கேன். நானும் நிம்மதியா இருக்கேன், நான் எதிர்பார்த்ததைவிட பெரிய பலனை பகவானும் கொடுத்துட்டார்."
"நிஜமாதான் சொல்றேளா?"
"ம்ம்… மனுஷாளுக்கு மனுஷாள் அட்வைஸ் பண்ணா கேட்கமாட்டானு புரிஞ்சுண்டு தான், பகவானே திருவாய் மலர்ந்து எப்படி வாழனும்னு அட்வைஸ் பண்ணியிருக்கார். அதை புரிஞ்சுக்காம, பெரியவா பேச்செல்லம் கேட்டுக்காம… ச்ச, எவ்வளோ பெரிய பிசகு… அந்த காலத்துல கூட்டுக்குடும்பத்துல என் தோப்பனாருக்கு இல்லாத நெருக்கடியா?!! இல்ல என் அம்மாவுக்கு இல்லாத சங்கடங்களா?!! அவா ஒரு நாளாவது சோர்ந்துபோயிருப்பாளோ?!! இந்த உபதேசங்களையெல்லாம் சிரத்தையா நம்பிண்டு, அதன்படி வாழ்ந்ததால தான், இன்னைக்கு நான் நன்னா இருக்கேன். வாழத் தெரியாம வாழ்க்கையை வாழ்ந்துண்டு, 'ஸ்ட்ரெஸ்'னு அதுக்கு ஒரு பேர வச்சுண்டு, 'நேக்கு இவ்வளவு ஸ்ட்ரெஸ், அவ்வளவு ஸ்ட்ரெஸ்'னு அதையும் பெருமையா சொல்லிண்டு திரியறோம்.
நோக்கு ஒன்னு தெரியுமோ, அன்னைக்கு ராத்திரி இந்த வேலையை ராஜினாமா பண்ணிடலாம்னு முடிவுல இருந்தேன்…"
"அச்சச்சோ, என்ன சொல்றேள்?"
"எல்லாம் உணர்ச்சிவசப்பட்டு நினைச்சது. நல்ல வேளையா என் தோப்பனார் இந்த கீதையை படிக்க வச்சு, தெளிய வச்சார். நான் மட்டும் ராஜினாமா பண்ணியிருந்தா, என்னை எமோஷனலி அன்ஸ்டேபில்'னு இண்டஸ்ட்ரி'ல முத்திரை குத்தியிருப்பா. இனி தினமும் ஒரு ஸ்லோகம் படிச்சு புரிஞ்சுண்டு, ஃபாலோ பண்ணப்போறேன்!!"
"கேட்கறதுக்கே ரொம்ப சந்தோஷமா இருக்கு, கிருஷ். முதல்ல உங்க ப்ரமோஷனப் பத்தி ஊருக்கு போன் போட்டு சொல்லணும்."
"சொல்லு… அதுக்கு முன்னாடி இந்த ஸ்லோகத்தை கேட்டுட்டு போ…
மாத்ராஸ்பர்ஸாஸ்து கௌந்தேய ஸீதோஷ்ணஸுகது:கதா:
ஆகமாபாயிநோऽநித்யாஸ்தாம்ஸ்திதிக்ஷஸ்வ பாரத"
"அப்படினா?"
"அதாவது, 'இதுவும் கடந்து போகும்'னு பகவான் சொல்லியிருக்கார்!!"
'உண்மைதான்' என்று ஒப்புதலாய் தலையாட்டினாள், அவனது தர்மபத்தினி.
** முற்றும் **
No comments:
Post a Comment