Friday, 29 November 2019

ஒரு முடிவில் ஒரு தொடக்கம் - 16 (Final)

இரண்டு நாட்களாக தன்னோடு பேசாமல் இருக்கும் சுனிலை எண்ணியே ரம்யாவின் மனம் ஏங்கியது. அவன் தன்னை வெறுத்துவிட்டானோ என்று எதிர்மறை ஊகங்களை வளர்த்துக்கொண்டு நிம்மதி தொலைத்தாள். அவளது குழப்பங்கள் அனைத்தும் நீங்கி, அவள் மனம் அவன் மட்டுமே ஆயுள் முழுதும் வேண்டுமென ஏங்கியது.

அலுவலகம் முடிந்து வீடு திரும்பியவன், அவனை நோக்கியபடியே நின்றிருந்த ரம்யாவின் எதிரே சென்று நின்றான். அவள் முகத்தினை கைகளில் ஏந்தியவன், 
“ரம்யா, நீ காதலிச்சது என்னை மட்டும் தான். எப்ப யாரோ அனுப்பின கவிதைகூட உனக்கு என் நினைவை கொடுத்துச்சோ, அப்பவே அருவமா இருக்கற உன் காதலுக்கு, உருவமா என்னை பொருத்திட்ட. உண்மை தெரிஞ்ச பிறகு உனக்கு ஏற்பட்டது குழப்பமும், அதிர்ச்சியும் தான். அந்த ‘தெரியாதவன’ காதலிச்சதா அர்த்தம் இல்லை. நீ காதலிச்ச மனசு, முகம் எல்லாமே நான் தான். நீ சொன்னத கேட்டு ரொம்ப குழம்பிப்போயிருந்தேன். இந்த ரெண்டு நாள்ல யோசிச்சு தெளிஞ்சு உன் முன்னாடி நிக்கறேன். உன் குழப்பத்துக்கு நான் விடை கொடுத்துட்டேன். போதுமா?”
அவன் கூறியதைக் கேட்டு அவள் அழத்தொடங்கினாள். அவள் பதிலுக்கு எதிர்பார்த்திருந்தவன், அவள் அழுதுகொண்டு நிற்பதில் மனம் நொந்தான்.
“இங்க பாருடி, சரி, நீ சொல்றமாதிரி நீ காதலிச்ச மனசு வேற, காதலிச்ச முகம் வேறயா இருந்துட்டு போகட்டும். ஆனா, நீ காதலிச்ச முகத்துக்கு பின்னாடியம் ஒரு மனசு இருக்கு. அது உன் காதலுக்காக ஏங்குது. நீ ஏத்துப்பியா?” என்றான் கண்ணில் நீர் ததும்ப. சற்றும் அவள் எதிர் பார்க்கவில்லை இந்த இனிய வினாவை.
‘ஆம்’ என்று தலை அசைத்தவள், அவனது நெஞ்சின் மேல் சாய்ந்து அழத்தொடங்கினாள். காதல் கண்மணியின் கண்ணீரை, காதல் கொண்டவனின் உள்ளம் தான் தாங்குமோ!! அவள் ஓயும் வரை அமைதி காத்தவன், அவள் முக நாடியைப் பற்றி அவளின் முகத்தை உயர்த்தினான். 
“எப்படி ரம்யா, அடுப்பில்லாம, நெருப்பில்லாம ஆனானப்பட்ட இந்த பட்டரை, வெறும் காதலால உருக்கிட்ட?” என்றானே போதும், அழுதுகொண்டிருந்தவள் அவன் நெஞ்சிலே மீண்டும் சாய்ந்துகொண்டு, கட்டுக்கடங்காமல் சிரிக்கத் தொடங்கினாள்.
“இந்த கலவரத்துலயும் உனக்கு காமெடி தேவைபடுதுல?” என்றவன், பெரும்பாடுபட்டு தனது சிரிப்பினை அடக்கியவளின் கையில் ஒரு தாளினைக் கொடுத்தான்.
“படிச்சுப்பாரு ரம்யா, உனக்காக நான் எழுதின கவிதை. என் வாழ்க்கைல நான் எழுதின முதல் கவிதை!!” 
கரை புரண்ட ஆவலோடு, மனதிற்குள் அவனது மடலை வாசித்தாள்.  


கண்மணி உன்னை காதலிக்கிறேன். 
உயிருக்குள்ளே, உயிருக்கும் மேலே , 
என் உயிரோடு உயிராக, 
என் உயிராகக் காதலிக்கிறேன்.  

‘அடேங்கப்பா!!’

பொன்மணி, நீ ஒரு பூ.
இரண்டு  கால்கள், இரண்டு கைகள் கொண்ட பூ!!

‘ஷப்பா… அடுத்த வரியே கண்ண கட்டுது, இதுல ஆச்சரிய குறி வேற…’

உயிரே உன் கண்கள்,
வெள்ளை ரோட்டில் கருப்புக் கார்.

‘இப்படி ஒரு உவமைய நான் எங்கயும் படிச்சதில்ல!!’

பெண்ணே உன் மூக்கு
நான் படித்த பைத்தாகோரியன் முக்கோணம் 

‘கோல்ட் மெடலிஸ்ட்னு ஒத்துக்கறேன் செல்லம். அதுக்குன்னு கவிதைல கூட கணக்கு பாடமா?’

அன்பே உன் இதழ்கள் 
குலாப் ஜாமுன் துண்டுகள்!!

‘குலாப் ஜாமூனுக்கும் இதழுக்கும் என்ன சம்மந்தம்??’  

ஆருயிரே உன் முகம் இருக்கிறதே…

‘ஆமாம் இருக்கிறது, அதற்கென்ன??!!’

அது முகமே இல்லை 

‘அடேய்!!’

அந்த நிலா கூட இணையில்லை…
அந்த சூரியன் கூட நிகரில்லை…

‘ஓ! அப்படி வரியா… நல்ல வேல நான் பயந்துட்டேன்…’

நான் சாப்பிடும் தட்டு போல 
அழகான பெரிய வட்டம்  

‘இது ரொம்ப மோசம்…’

எலிப்பொறிக்குள் சிக்கிக்கொண்ட சுண்டெலிபோல 
என் வாழ்க்கையில் நீ மாட்டிக்கொண்டாய்…

‘அய்யோ இது உச்சக்கட்டம். காதலிய சுண்டெலியோட ஒப்பிட்டவன் உலகத்துலேயே இவனாதான் இருப்பான்!’

கண்ணே,
என் கவிதையை ஏற்றுக்கொள் 
என் காதலை ஏற்றுக்கொள் 
என்னையும் ஏற்றுக்கொள்   
     
‘அப்படியே, காரை என் மீது ஏற்றி கொல்… டேய் கவிதையாடா இது…’

‘என்னடா இது தமிழ் இலக்கியத்துக்கு வந்த சோதனை?’ என்று எண்ணிக்கொண்டவள், மனதை தேற்றிக்கொண்டு மீண்டும் ஒருமுறை கவிதையை தன்னுள்ளே வாசித்தாள்.    
‘ஹ்ம்ம்... இவன் கவிதைய படிச்சா வந்த காதலும் யு-டர்ன் போட்டு ஓடிரும் போல.’

“என்ன யோசிக்கற ரம்யா?”
“ஒன்னும் இல்ல. கவிதை கொஞ்சம் கட்டுரை மாதிரி இருக்கு. அதான்…”
“என்ன ரம்யா… கஷ்டப்பட்டு உனக்காக நான் யோசிச்சு எழுதினது.”
“ரொம்ப நல்லா இருக்கு. கடைசி வரில ஒரு முற்றுப்புள்ளிய விட்டுட்டீங்க. வேற ஒன்னும் இல்ல.”    
அவளின் பரிகாசத்தை உணர்ந்துகொண்டு  நெஞ்சின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அவன் நிற்க,
“வேணும்னா, ரெண்டு அடி அடிச்சுக்கோங்க, இப்படி கவிதை எழுதி என்னை சோதிக்காதீங்க.”
“அடி இல்ல மகளே கடி தான்…” என்றவன் அவளை இழுத்து அனைத்து இதழ் சேர்த்தான். அவன் விடுவித்த நொடி நாணத்தில் அவள் குளித்திருக்க, அவன் முகம் காண முடியாமல் உள்ளங்கைக்களுக்குள் முகத்தினை புதைத்துக்கொண்டாள். 
அவளை மீண்டும் வாரி அணைத்தவன்,     
“இந்தாம்மா ரம்யா… நாலஞ்சு புள்ளைக்குட்டியப் பெத்து, வளர்த்து, படிக்க வெச்சு, அதுங்களுக்கு கல்யாணம் பண்ணி, பேரன் பேத்தி எடுத்து… ஷப்ப்பா… எவ்வளோ வேலை  இருக்கு! பொறுப்பே இல்லாம, என்னை கலாய்க்கறதே தொழிலா இருக்க… இதெல்லாம் நல்லதுக்கில்ல… ஒழுங்கு மரியாதையா மாமன கவனி… மாமன் சூடானேன், நீ காலி மகளே… பக்குவமா புரிஞ்சு நடந்துக்க”, என்று கூறிக்கொண்டே, இரு கைகளிலும் அவளை ஏந்தி, அறைக்குள் அள்ளிச்சென்றான். 

பிறகென்ன,
சலக்கு சலக்கு சரிகை சேலை சலக் சலக்... 
விலக்கு விலக்கு வெட்கம் வந்தா விலக் விலக்...              

வாழ்க வளமுடன்!

--- முற்றும் ---

No comments:

Post a Comment