‘என்ன இன்னைக்கு புடவைல இருக்கா? சும்மாவே என் மைண்ட் ராங் சைடுல ட்ராவல் பண்ணும்’ அவர்களின் புகைப்படத்தைப் பார்த்து, ‘ஏன்டி இப்படி என்னை கொல்ற? முடியலடி… இப்படியே போச்சு, திரும்பவும் உன்னை அன்னைக்கு ராத்திரி மாதிரி, ஏதாவது செய்ய தான் போறேன்… அது சரி இந்த ஜென்மத்துல அந்த தைரியம் எனக்கு வராது… இப்படி என்ன அழவைக்கறல, பாரு அடுத்த ஜென்மத்துல நீ ஆம்பளையா பிறந்து, இதே மாதிரி உன் பொண்டாட்டி உனக்கு தினமும் அல்வா கொடுக்கும்போது தெரியும் என் கஷ்டம்… இது என்னோட சாபம்.. விர்ஜின் பசங்க சாபம் சும்மா விடாது, தெரியும்ல? … அய்யய்யோ! நாம விர்ஜின் இல்லையே!... அதெப்படி அன்னைக்கு நடந்ததெல்லாம் கணக்குல வரும்? அன்னிக்கு நாம தான் சுயநினைவுலையே இல்லையே… செல்லாது செல்லாது, எல்லா கோட்டையும் அழிச்சுட்டு முதல்லேர்ந்து ஆரம்பிப்போம்… ம்க்கும், இருந்தது ஒரு கோடு, அதுவும் கோணலும்மாணலுமா…’ என்று சிந்தித்துக்கொண்டே கட்டிலின் மேல் அமர்ந்தான். ‘ஒருவேளை அன்னைக்கு சங்கதி எதுவும் நமக்கு புடிபடலையோ? சொதப்பிட்டோமோ? இவன் எதுக்கும் லாய்க்கு இல்ல’னு நினைக்கறாளோ?’ என்று டிசைன் டிசைனாகக் கவலைகொண்டான். ‘இருடி, இப்ப இந்த ஆம்பள சிங்கத்தோட பவரை காட்டறேன்’, என்று தனது கைகளை முறுக்குகிக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான். ரம்யா திரும்பி நின்றுகொண்டு மேஜையை துடைத்துக்கொண்டு இருந்தாள். அவளின் பின்னழகை ஏற இறங்க பார்த்தவனுக்கு, ஏதோ ஒரு கிளிர்ச்சி. தன்னையே அறியாமல் இதழ்களை குவித்து அவளை முத்தமிடுவது போல் செய்கை காட்டினான். அவள் டக்கென திரும்ப, இவன் தடுமாறி, ஏதோ வாந்தி வருவதுபோல் முகபாவனையை மாற்றினான்.
“என்னங்க? என்ன ஆச்சு?” என்று அவள் பதற
“ஒன்னும் இல்லமா, லைட்டா குமட்டற மாதிரி இருக்கு. சாப்பாடு ரொம்ப நல்லா இருக்குனு, நிறைய சாப்டுட்டேன், அதான்”, என்று சமாளித்தான்.
அவளும் சரி என்று சென்றுவிட, ஒருவழியாக அவள் நம்பினாள் என்று நிம்மதி கொண்டான்.
“என்னங்க இந்த வெந்நீரை குடிங்க. சரியாயிடும்” என்று ஒரு டம்பலரை நீட்டினாள்.
“ரொம்ப தாங்க்ஸ்மா”, என்றபடி நொடியில் குடித்துமுடித்தான்.
“கொஞ்ச நாளா ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?”
“அதெல்லாம் ஒன்னும் இல்லையே. நான் நார்மலாதான் இருக்கேன்.”
“என்னமோ சொல்லாமலே மறைக்கறீங்க. இதெல்லாம் எத்தனை நாளைக்குன்னு தெரியல.”
அவள் சூசகமாய்க் கூறியது, அந்த லூசுக்குப் புரியவே இல்லை! எப்பொழுதும் போல், பேந்தப்பேந்த முழித்தான்.
நாட்கள் செல்ல செல்ல, காதல் நோயின் வீரியம் ரம்யாவை வாட்டி வதைத்தது. தன்னுடன் பணிபுரியும் தோழிக்கு, அன்று ஆண் குழந்தை பிறந்திருந்தது. தோழியை கைபேசியில் அழைத்து வாழ்த்து கூறிவிட்டு, அன்றைய பணியைத் தொடர்ந்தாள். ஏனோ அவளுக்கு வேலையில் நாட்டம் செல்லவில்லை. இனம் புரியாத கவலைகள் சூழ்ந்தன. எப்பொழுதும் பேரப்பிள்ளையைப் பற்றி அம்மா பேசுவது நினைவிற்கு வந்தது. இப்பொழுது ரம்யாவிற்கும் அதே ஆசை பிறந்தது. தன்னை நேசிக்கும் சுனில், அவர்களுக்கென்று ஒரு பிள்ளை, அழகாய் சிறு கூடு என்று அவளின் எண்ணத்தின் ஓட்டங்களில் அவள் தொலைந்து போனாள். அதுமட்டுமா, அம்மாவை போல் மாமியார். திருமணமாகி இத்தனை மாதங்கள் ஆகியும், ஒரு முறை கூட அவர் பேரப்பிள்ளையைப் பற்றி பேசியதே இல்லை. அதோடு, ரம்யா மீது அவர் காட்டும் அன்பிற்கும் பஞ்சமில்லை. தனது மாமியாரின் பெருந்தன்மையும், மென்மையான குணமும் அவளை மெய் சிலிர்க்க வைத்தது. ‘அவங்களுக்கு நான் என்ன கைமாறு செய்ய முடியும். சுனில் மாதிரி ஒருத்தர எனக்கு கொடுத்ததுக்கே நான் கடமை பட்டிருக்கேன். அதுக்கே ஒரு குழந்தையை பெத்து அவங்க கைல கொடுக்க வேண்டாமா?!’ என்று வருந்தினாள். மாமியாரைப் பற்றி எண்ணுகையில், மாமனாரின் நினைவு வந்தது. சில நாட்களுக்கு முன், சுனிலும், சுனிலின் தந்தையும் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளாததைக் கூறி மாமியார் வருந்தியது நினைவிற்கு வந்தது. சுனிலை தந்தையோடு எப்படி சமரசம் செய்வதென எண்ணினாள். ஒரு குழந்தை பிறந்தால், இவை அனைத்திற்குமே முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று அவளுக்குத் தோன்றியது. இன்னும் சில மாதங்களில் இந்தியா செல்லும்போது, நல்ல செய்தியை சுமந்துகொண்டு செல்ல வேண்டுமென்று அவளுக்கு ஆவல் பெருகியது. ஒரு மழலையின் வெள்ளைச் சிரிப்பு ஒன்று போதுமே, மனதின் வாட்டங்கள் மறைந்து போகுமே!!
பலவற்றை சிந்தித்து சிந்தித்து, அவள் மிகவும் கலக்கம் உற்றிருந்தாள். கோவிலுக்குச் சென்று வரவேண்டுமென்று தோன்றியது அவளுக்கு. அன்று மாலை,
“என்னங்க, கோவிலுக்கு கூட்டிட்டுப் போறீங்களா?”
“போலாமே” என்று குதூகலத்துடன் பதிலளித்தவன், இவள் முகம் வாடி இருந்ததைக்கண்டு வருத்தம் கொண்டான்.
“என்னமா என்ன ஆச்சு? ரொம்ப டல்லா இருக்க?”
“அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க. கோவிலுக்குப் போகணும்னு தோணுச்சு. அதான்….”
“சரி சீக்கிரம் கிளம்பு, போகலாம்”
மூலஸ்தானத்தின் அருகே நின்று, மனதுருகி பிரார்த்தனை செய்துகொண்டிருந்தாள், ரம்யா. அவள் எதிரே நின்று கொண்டிருந்த சுனில், கையை மட்டும் கூப்பிக்கொண்டு, விழிகளை அவள் மேல் படரவிட்டான். ரம்யா தனது மனத்தாங்கலைக் கடவுளிடம் முறையிட்ட பின், கண் திறந்து பார்த்தபோது, இவன் தன்னை ரசித்துக்கொண்டிருப்பதைக் கண்டு நாணமுற்றாள். எதுவும் பேசாமல் அவள் முன்னே நடக்க, இவன் பின்னே அவளைத் தொடர்ந்து சென்றான்.
“என்னங்க, எப்போ கொடிமரத்துல தங்கக்காப்பு போட்டாங்க?”
“என்னது? கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் இங்க லான்(lawn) தான் இருக்கு, உன் கண்ணுக்கு மட்டும் எங்க மரம் தெரியுது?”
“கொடிமரம்னா என்னனு தெரியாதா? இதோ இது தான் கொடிமரம்”, என்று அருகிலிருந்த கொடிமரத்தைக் காண்பித்தாள்.
“ஓ! இதுதான் கொடிமரமா? சாரி, எனக்குத் தெரியாது.”
“இதுகூட தெரியாதா உங்களுக்கு?”, என்று மெல்லமாய் கடிந்தாள்.
“இப்ப எதுக்கு டென்ஷன் ஆகற? தெரியும்னு சொல்ற ஆம்பளைங்களை விட, தெரியாதுன்னு சொல்ற ஆம்பளைங்களை தான் பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு ஒரு விஞ்ஞானி கண்டுபிடிச்சிருக்கார். நீ என்னடான்னா கோபப்படற!”
‘கடவுளே இவன என்ன பண்றதுனே தெரியல’ என்று முனகிக்கொண்டு, மீண்டும் கொடிமரத்தின் அருகே கண்களை மூடி பிரார்த்தனை செய்தாள்.
அவனும் கண்களை மூடிக்கொண்டு, ‘கடவுளே ஆங்கிரி பர்டா (angry bird) இருக்குற என் பொண்டாட்டிய, எப்படியாவது மம்மி பர்டா மாத்த ஹெல்ப் பண்ணு ப்ளீஸ்’ என்று மெய்மறந்து வேண்டினான்.
“என்னங்க”, என்று ரம்யா அழைக்க திடுக்கிட்டவன்,
“ஆங்கிரி பர்ட்”, என்று அலறினான்.
“என்னது?”
“ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல மொபைல்… கேம்…”என்று சமாளித்தான்.
“மொபைல்ல கேம் விளையாடற வயசா உங்களுக்கு?”
“அப்படி எனக்கு என்ன வயசாயிடுச்சு?”
“ஸ்கூல் பிள்ளைங்க விளையாடறதெல்லாம் நீங்க விளையாண்டுட்டு இருக்கீங்க.”
“என்னமா பண்றது? வேற விளையாட்டெல்லாம் விளையாடணும்னு ஆசைதான். எங்க?!”, என்று பெருமூச்சு விட்டபடி அவளைப்பார்த்தான்.
வெட்கம் அவளை கவ்விக்கொள்ள, அவள் திரும்பிக்கொண்டாள். சில விநாடிகள் படபடத்த இதயம் அமைதியான பின்னே, “என்ன விளையாடணும்னு ஆசை படறீங்களோ விளையாடுங்க. உங்களை யாரு வேண்டாம்னு சொன்னா?”, என்று மெல்லிய குரலில் வெட்கம் கலந்து கூறினாள்.
அவன் பதில் எதுவும் கூறவில்லை.
திரும்பி அவனை இவள் பார்க்க, அவனோ சற்று தொலைவில் நடந்து சென்றுகொண்டிருந்தான்.
‘இந்த ஜென்மத்துல நீ மொபைல் கேம்ம தவிர வேற எதுவுமே விளையாடமாட்ட’ என்று செல்லமாய் சபித்தாள்.
அவனோ, ‘அய்யய்யோ, அநியாயத்துக்கு டென்ஷன் ஆகுறா. இப்ப என்ன சொல்லிட்டேன்னு, கோவிசிக்கிட்டு திரும்பிக்கிட்டா? இவள ஆங்கிரி பர்ட்னு குறைச்சு எடை போட்டுட்டோம்… இவை ஆங்கிரி பர்ட் இல்ல, ப்ளூ வேள்’ என்று கூறி நக்கலாகத் தனக்குள் சிரித்துக்கொண்டான்.
“கடவுளே! உனக்கே தெரியும் நான் ஒரு கோல்ட் மெடலிஸ்ட். ஒரு கிளாஸ் டெஸ்ட்’ல கூட பெயில் ஆகாத நான், இப்போ வாழ்க்கைல அரியர் வச்சுட்டு, க்ளியர் பண்ண முடியாம முழிக்கிறேன். ப்ளீஸ் எப்படியாவது, என்னோட அரியர க்ளியர் பண்ண ஹெல்ப் பண்ணுபா”, என்று தனது வீட்டில், முருகன் படமருகே வேண்டி நின்றான், சுனில். அப்பொழுது அங்கே எதேச்சையாக வந்த ரம்யா, அவன் கூறியதில் கடைசி வரியை மட்டும் காதில் வாங்கிவிட்டாள்.
“என்னது அரியரா? அப்போ கோல்ட் மெடல்?!”
‘இவவொருத்தி, ராங் டைம்ல கரெக்ட்டா வந்துடுவா’
“சொல்லுங்க, என்ன யோசனை? அப்போ கோல்ட் மெடல்னு ஊரை ஏமாத்தறீங்களா?”
“ஆமாம் கோல்ட் மெடல்லாம் இல்ல. அரியர் தான்”
“எதுல அரியர்?”
“10த்ல இங்கிலீஷ் பேப்பர்ல அரியர்”
“அப்போ நீங்க பாக்குற வேலை?”
“அதுவும் பொய் தான். நான் புச்சர் ஷாப்ல கறி வெட்ற வேலை பார்க்கறேன்”, என்றான் எரிச்சலோடு.
“சரி சரி, சாயங்காலம் வரும்போது உங்க பாஸ் கிட்ட டிஸ்கெளண்ட் கேட்டு, அரை கிலோ கறி வாங்கிட்டு வாங்க”, என்றாள் நக்கலாக.
‘அய்யோ என்னை கொல்றாளே’, என்று கூறிக்கொண்டு அருகில் இருந்த சுவற்றில் நெத்தியால் மோதினான். வலி தாங்கமுடியாமல் ‘ஆ’ என்று அலற, சடாரென கண்விழித்துப்பார்த்தான்.
‘ச்ச கனவா?! அடிப்பாவி. கனவுல மட்டும்தான் ரொமான்ஸ் பண்ணி சந்தோஷமா இருந்தேன். இப்போ அங்கேயும் வந்து கலாய்க்க ஆரம்பிச்சுட்டியா? இருடி, அன்னைக்கு ரத்திரிமாதிரி, இன்னிக்கும் உன்னை அழவைக்கறேன்’, என்று சீறிக்கொண்டு அவள் அறைக்குள் சென்றான்.
ரம்யா, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவள் முகம், மங்கிய ஒளியில் பிரகாசமாய் மின்னியது. சுனிலின் மனம், அவன் நெஞ்சுக்குழியிலிருந்து வழுக்கி எங்கோ உருண்டோடுவது போல் இருந்தது. மெய் மறந்து அவள் அழகை ரசித்துக்கொண்டிருந்தான். ரம்யா தூக்கத்தில் திரும்பிப் படுக்க, அவளின் கைகள் இவன் மேல் விழ, தூக்கம் கலைந்து திடுக்கிட்டாள்.
“என்னங்க? என்ன ஆச்சு? என்ன வேணும்?”
“ஒன்னும் இல்ல..”
“என்ன சொல்லுங்க.”
“ஒன்னும் இல்ல தண்ணி குடிக்க வந்தேன். வழிமாறி உன்னோட ரூம்குள்ள வந்துட்டேன்.”
ரம்யா அவனை முறைக்க,
“இல்லமா, உனக்கும் தண்ணி வேணுமானு கேட்க வந்தேன்?”
“எப்படி, தூங்கிட்டு இருக்கறவள எழுப்பி கேட்கலாம்னு வந்தீங்களா?”
“வேண்டாம்னா போ”, என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றான்.
“கிச்சன்ல போய் தண்ணி குடிங்க. திரும்பவும் வழிமாறி பாத்ரூம்கு போய்டபோறீங்க”, என்று கூறி சிரித்தாள்.
அசிங்கப்பட்டான் ஆத்துக்காரன்!
கையில் தண்ணீர் கோப்பையுடன், சோபாவில் அமர்ந்துகொண்டு ரம்யாவைப் பற்றிய சிந்தனையில் மூழ்கிப்போனான். வெகுநேரம் விளக்கு அணையாமல் இருந்ததால், ரம்யாவின் தூக்கம் மீண்டும் தடைபட்டது. எழுந்து வெளியே வந்தவள், இவன் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதைக் கண்டாள்.
“என்னங்க இந்த நேரத்துல என்ன யோசனை? எப்படி கோல்ட் மெடல் கிடைச்சுதுன்னு யோசிக்கறீங்களா?”
“தெரியாம அந்த மெடல வாங்கிட்டேன். மொதல்ல யூனிவெர்சிட்டிக்குப் போய், அதை திருப்பி கொடுத்திடறேன்”, என்று சொல்லிக்கொண்டே எழுந்து சென்றான்.
“இந்த நேரத்துல எங்க போறீங்க? யூனிவெர்சிட்டி மூடியிருக்கும்”, என்று சொல்லிவிட்டு நமட்டுச் சிரிப்பு சிரித்தாள்.
“யம்மா… பாத்ரூம் தான்மா போறேன். அங்கயாவது போலாமா கூடாதா?”
“ச்சீ… இதெல்லாமா என்கிட்ட கேட்பீங்க? என்னதான் M.B.A.ல சொல்லி கொடுத்தாங்களோ?!”, என்று சலித்துக்கொண்டு தன் அறைக்குள் சென்றாள்.
‘இருடி ஒரு நாள் இருக்கு உனக்கு கச்சேரி’ என்று தனக்குள் முனகிக்கொண்டே சென்றான்.
அவன் சிக்கித் தவித்து சின்னாபின்னமாவதைக் கண்டு, அவளுக்கு வேடிக்கையாக இருந்தது. ‘மை டார்லிங் சுனில், கலாய்ச்சா, கவுன்டர் கொடுக்கற ஆம்பளைங்கள விட, மாட்டிக்கிட்டு முழிக்கறவங்கள தான் பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்கும்’, என்று தனக்குத் தானே சொல்லி, சிரித்துக்கொண்டாள். அவன் முகம் நினைவிற்கு வந்தது. அவளை அறியாது, நாணம் பிறந்தது. ‘எதுக்காக ரூம்க்கு வந்திருப்பான்? நாம தூங்கும்போது, நம்மள ரசிக்கவா? ம்ம்… இருக்கலாம். என்ன மனசுல நினைச்சான்னு தெரியல?! ஒருவேளை, என்கிட்ட அந்த ராத்திரி நடந்துக்கிட்ட மாதிரி, இன்னைக்கும்… அப்படி நடந்துக்கிட்டா என்ன தப்பு? அவனுக்கு இல்லாத உரிமையா? நான் தள்ளிப்போக மாட்டேன்... அழமாட்டேன்... அவனை நெஞ்சோட சேர்த்து கட்டிக்குவேன். அவனோட ஆசைகள் தீர்ந்துபோறவரைக்கும் அமைதியா இருப்பேன். இன்னைக்கு மட்டும் இல்ல, நான் உயிரோட இருக்கற வரை, வரப்போகும் எல்லா இரவும், எல்லா பகலும்…’ , என்று அவள் எண்ணுகையில், அவள் காதலின் வெளிப்பாடாய், ஏக்கத்தின் பிரதிபலிப்பாய், அவள் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.
No comments:
Post a Comment