பேரானந்தம் என்ற நிலை மாறி, சுனிலுக்கு இன்பமும், துன்பமும் சம அளவில் நெஞ்சில் நிறைந்தன. அவளை தூர நின்று ரசித்தால் போதும் என்று முடிவு செய்திருப்பினும், அவ்வப்போது அவளைத் திருமணம் செய்திடும் ஆவலும், தலை தூக்கிப் பார்த்தது.
அவனின் தாயின் நிலையும் அதுவே. சுனிலின் நீளும் கதைக்கு, ஒரு மங்கள முடிவு எட்டாதா என்று ஏங்கினாள். தெய்வங்களை வேண்டினாள்.
ஒரு விடுமுறை நாளில், சுனில் வீட்டில் ஓய்வெடுக்க, சித்ரா மட்டும் நடைப்பழக அருகிலிருந்த பூங்காவிற்கு சென்றாள். அந்த மாலை இளவெயில் நேரத்தில், ஏனோ அவள் கண்கள் இருள, தலை சுழல, தடுமாறி கீழே விழச் சென்றவளை, எதேச்சையாக அவ்விடம் வந்த ரம்யா தாங்கிப்பிடித்தாள். ரம்யாவைக் கண்டதும் முகம் மலர்ந்தும், மயக்கம் தெளியாமல் தவித்தாள், சித்ரா. அவளை அங்கு ஓர் மேடையில் அமரச் செய்து ஆசுவாசப்படுத்தினாள், ரம்யா.
“என்ன ஆச்சு? தண்ணி குடிக்கறீங்களா?”, என்றாள் ரம்யா மென்மையாக.
“நான் சுகர் பேஷண்ட்மா. மதியம் சரியா சாப்பிடல, மாத்திரையும் போடல. அதான் லோ சுகர் ஆயிடுச்சு. மயக்கம் வருது.”
“ஒரு நிமிஷம் இங்கேயே இருங்க, வந்துடறேன்” என்று கூறிவிட்டுச் சென்றவள், சில நிமிடங்கள் கழித்து கையில் காபி கோப்பையுடன் எதிர்பட்டாள்.
“இந்தாங்க, காபி வாங்கிட்டுவந்திருக்கேன். சுகர் கொஞ்சம் ஜாஸ்தி போட்டிருக்கு”, என்றபடி நீட்டினாள்.
சித்ராவிற்கு முகமெல்லாம் சிரிப்பாய் இருந்தது. “உட்காருமா” என்று ரம்யாவின் கையைப் பற்றி தன் அருகில் அமரச் செய்தாள். மட மடவென அந்த காப்பியை குடித்துவிட்டு, சற்று சித்தம் தெளிந்தாள்.
“இப்போ கொஞ்சம் பரவால்லயா?”
“பரவால்லமா… உன்ன பார்த்ததுல ரொம்ப சந்தோஷம்மா”
ரம்யா சிறு புன்னகையை பதிலாக்கினாள்.
“ரம்யாமா, நீ எப்படி இருக்க?”
அவளின் கேள்வியின் உள் அர்த்தத்தை உணர்ந்துகொண்ட ரம்யா,
“நல்லா இருக்கேன்” என்றாள்.
“மன்னிச்சிடுமா… பண்ண தப்புக்காக என் மகனையும், பேசின பேச்சுக்காக சுனில் அப்பாவையும், எதுவும் செய்யாம வேடிக்கைப்பார்த்ததுக்காக என்னையும் மன்னிச்சிடுமா” என்று ரம்யாவின் உள்ளங்கையைப் பற்றினாள்.
ரம்யாவால் எதுவும் பேசமுடியவில்லை.
“எங்களால தானே உனக்கு இத்தனை கஷ்டமும்...”
“அதெல்லாம் ஒன்னும் இல்லமா… வாங்க உங்களை வீட்ல விட்டுட்டு நான் போறேன்” என்றாள்.
அதற்கு சித்ராவும் சரி என்று தலையசைக்க, பொடிநடையாக வீட்டிற்கு வந்துசேர்ந்தனர்.
ரம்யாவை சற்றும் எதிர்பார்த்திராத சுனில், தன் தாயுடன் அவளைக் கண்டதும் திடுக்கிட்டான்.
“உள்ள வாங்க ரம்யா” என்று அவன் அழைக்க,
“உள்ள வாமா” என்று சித்ரா அவள் கைப்பற்றி இழுக்க,
“இல்ல எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் கிளம்பறேன்” என்று கூறிவிட்டு சில நொடிகளில் அவ்விடம் விட்டு மறைந்து சென்றாள்.
ரம்யா தன்னை கவனித்துக்கொண்டதையும், பேசியதனைத்தையும் தன் மகனிடம் ஒப்புவித்தாள், சித்ரா. அடிக்கடி, ‘அவ ரொம்ப நல்ல பொண்ணுடா’ என்று வலியுறுத்திக்கொண்டே இருந்தாள். சுனிலின் மனதில் புது உற்சாகம் பிறந்தது. ‘டேய் அவளுக்கு யார் மேலயும் வெறுப்பு இல்ல மச்சான். கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருடா’னு யாரோ சுனிலின் காதுகளுக்குள் கூறியது போல் இருந்தது. அவன் ரம்யாவின் நினைவிலும், எதிர்காலக் கனவிலும் மூழ்கிப்போனான்.
நாட்கள் செல்லச்செல்ல, சுனிலின் தாய்க்கு சுனில் - ரம்யா திருமண ஆசை அதிகரித்தது. சுனிலுக்கு விருப்பம் என்றாலும், அவன் பிடி கொடுத்து பேசவில்லை. என்ன செய்யலாம் என்று பல்வேறு திட்டங்களையும், எண்ணங்களையும் வகுத்தவளாய் இருந்தாள். ரம்யாவிடம் வெளிப்படையாகப் பேசுவதைத் தவிர, இதற்கு தீர்வு இல்லை என்று உணர்ந்தாள். அவள் நினைத்தது போல, ரம்யாவை மீண்டும் தனிமையில் சந்திக்க வாய்ப்பு கிட்டியது.
“ரம்யா, என்னடா இப்படி கேட்கறேனேன்னு தப்பா நினைக்காத. எவ்ளோ நாள் இப்படியே இருக்கப்போற? உனக்கு கல்யாணம், குடும்பம்னு எண்ணமெல்லாம் இல்லையா?”
ரம்யாவின் முகத்தில், வெறுப்பும், வேதனையும் படர்ந்தது.
“நான் வெளிப்படையாவே கேட்கறேன். சுனிலுக்கும், உனக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசைப்படறேன். இது நடந்த தப்புக்கு பிராயச்சித்தம் இல்ல. உங்க ரெண்டு பேரோட எதிர்காலமும் நல்லா இருக்கணும்ங்கற பிரயத்தனம்.”
ரம்யாவின் கண்கள் குளமானது. இதை அவள் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.
“ரம்யா உன்ன காயப்படுத்திட்டேனா? அழாதமா”
கண்களை துடைத்துக்கொண்டு, கண்ணீரை அடக்கிக்கொண்டு, ரம்யா பதில் கூறினாள்.
“அம்மா, தவற சரி செய்ய, பிடிக்காத ரெண்டு பேர சேர்ந்து வாழச்சொல்றது, ஆயுள் தண்டனை மாதிரி. அதனால, வலி அதிகமாகுமே தவிற, குறையவோ மறையவோ போறதில்லை. நீங்க உங்க குடும்பத்துக்கு ஏத்த பெண்ணா, உங்க மகனுக்கு பிடிச்ச பெண்ணா பார்த்து கல்யாணம் செஞ்சு வைங்க”
“இல்லமா…”
“நான் கிளம்பறேன்” என்று கூறிவிட்டு, மறுவார்த்தை எதிர்பாராமல் மறைந்துபோனாள், ரம்யா.
ரம்யாவின் கூற்று, சுனிலுக்கும் அவன் தாய்க்கும் அவள் மீது அன்பையும், மரியாதையையும் அதிகப்படுத்தியது. இந்த நிலையிலும், அவளது சுயநலமற்ற மனம் அவர்களைக் கவர்ந்தது. சுனிலுக்கு சின்ன கர்வம் கூட முளைத்தது. ‘என்னவளுக்கு இவ்வளவு அழகான உள்ளமா!!’ என்று பூரித்துப்போனான். அவள் மேல் காதல் மேலும் ஓங்கி உயர்ந்தது. கள்ளம் கபடம் இல்லாதவளை, காமவெறிகொண்ட வேங்கையென அவளின் பெண்மையை அவன் சூறையாடிய குற்ற உணர்வு அவனின் கழுத்தை நெரித்தது.
அன்று...
“ஏன்டா, எங்களுக்கு முன்னாடியே கிளம்பிப்போன, இப்போ தான் ஆஃபிஸ் வர?”
ஆசுவாசமாய் தனது அலுவலக இருக்கையில் வந்து அமர்ந்த சுனிலின் எதிரே வந்து நின்றான், கமல்.
“நிஷா ஊருக்கு போறா, அதான் பிளைட் ஏத்திவிட ஏர்போர்ட் போயிட்டு வரேன்.”
“அப்பாடா, ஒரு வழியா இந்தியா கிளம்பிட்டாளா?”
“ரொம்ப சந்தோஷப்படாத, அவ இந்தியா போகல. பாஸ்டன்ல யாரோ அவ சொந்தக்காரங்கள பார்க்கப் போயிருக்கா. வெள்ளிக்கிழமை சாயங்காலம் திரும்ப வந்துடுவா.”
“ச்ச… பரவால்ல, இன்னைக்கு நைட்டு டின்னர் ரெடி பண்ண சொல்லி ரம்யாக்கு போன் போடு. கொசு தொல்லை இல்லாம நிம்மதியா ஒரு கட்டு கட்டலாம்.”
“அவளும் ஊர்ல இல்ல. ஏதோ ட்ரெயினிங் விஷயமா ஒரு வாரம் எங்கயோ போயிருக்கா. சனிக்கிழமை தான் வருவா.”
சுனில் கூறிக்கொண்டிருக்க, அவர்களின் அருகே உரையாடியபடி வந்து நின்றனர் எழிலும், உடன் வேலை செய்யும் லூசியும்.
“ஹே லூசி, இந்த சிகப்பு டிரஸ்ல ரொம்ப அழகா இருக்க. வாயேன் ஒரு காபி சாப்ட்டு வரலாம்” என்று கமல் ஒரு பனிப்பாறையை லூசியன் தலை மீது வைக்க, அதில் உருகியவள், அவனின் அழைப்பை ஏற்று அவனோடு சென்றாள்.
“வாழ்றான்டா… ஹ்ம்ம், பல்லிருக்கறவன் பக்கோடா திங்கறான்...”
அவர்கள் செல்வதை நோக்கியபடி கூறினான், எழில்.
“மச்சான், நமக்கு பல்லும் இருக்கு. பக்கத்துலயே தட்டு நிறைய பக்கோடாவும் இருக்கு. எடுத்து திங்கதான் தைரியம் இல்லை. பக்கோடாவ வேடிக்கைப் பார்த்துட்டு இருந்தோம்னு வை, ஏதாவது அண்டங்காக்கா வந்து கவ்விட்டு போய்டும். அதனால, சனிக்கிழமை ரம்யா ஊர்லேர்ந்து வந்ததும், அன்னைக்கு நைட்டு டின்னர் ஏற்பாடு பண்ணி, இத்தன நாளா பேர் சொல்லாம கவிதை மட்டும் எழுதி அனுப்பி, ஆடின கண்ணாமூச்சி ஆட்டதுக்கு எல்லாம் ஒரு முடிவு கட்ட, உண்மைகள் அனைத்தும் அவளிடம் கூறப்போகிறேன்!!”
“டேய் மச்சான்!” அதிர்ந்து நின்ற எழிலைக் கண்டு சில்மிஷமாய் கண்ணடித்தான், சுனில்.
வெள்ளி மாலை, பப்பில் ஐரோப்பிய அழகியோடு கலிஃபோர்னியாவே புகை மண்டலத்தில் சூழும் அளவு கிலோ கணக்கில் கடலைகளை வருத்துக்கொண்டிருந்த கமலக்கண்ணனின் முதுகில் பட்டென ஒரு அடி வைத்த படி, அவன் அருகே வந்து அமர்ந்தனர் சுனிலும், எழிலும்.
“இந்த வேலைக்கு தான், சொல்லிக்காம கூட ஆபிஸ்லேர்ந்து வேகமா ஓடி வந்தியா?”
பரிகாசமாய் வினவினான், எழில்.
“எங்க போனாலும் ஹட்ச் டாக் மாதிரி பின்னாடியே வந்து ஏன்டா உயிரை வாங்குறீங்க?”
“மச்சான் உனக்கு மட்டும் எப்படிடா சிக்குது? ஹயிட்டு, வெய்ட்டா இருக்கற எங்களுக்கெல்லாம் ஒன்னும் மடியமாட்டேங்குது” பொறாமையும், ஏக்கமுமாய் வினவினான், சுனில்.
“மச்சான், மூர்த்தி சிறுசா இருந்தாலும், கீர்த்தி பெருசுடா. நீங்கெல்லாம் குழந்தை பசங்க, உங்களுக்கு இதெல்லாம் புரியாது. வந்ததுதான் வந்துட்டீங்க, ரோஸ் மில்க் வாங்கி குடிச்சிட்டு கிளம்புங்க” என்றவன் அந்த வெள்ளை அழகியோடு எழுந்து சென்றான்.
“ரொம்ப அசிங்கப்படுத்தறான்டா” எரிச்சலானான் எழில்.
“நைட்டு ரூமுக்கு தான வருவான். கவனிச்சுப்போம்” என்ற சுனில், “ஒன் ஸ்மால் ஜாக் டேனியல் நீட் ப்ளீஸ்” என்றான் பார்டெண்டரிடம்.
“டேய், நிஷாவை கூப்பிட ஏர்போர்ட் போகணும்னு சொன்ன?”
“நைட்டு தான்டா. இப்போ லைட்டா டேஸ்ட் பண்ணிக்கிறேன்”
“மச்சான் அங்க பாரு, ஜெர்மன் ஷெப்பர்ட் கூட போயிட்டு நூடுல்ஸ் பாக்கெட்டோட திரும்பி வரான்.”
மீண்டும் அவர்களின் அருகே வந்து அமர்ந்தான் கமல், இம்முறை சீன பொம்மையோடு.
“என்னடா பார்க்கறீங்க? சிகப்பா சிலையா இருக்கற பொண்ணுங்களுக்கு கருப்பா கலையா இருக்கற பசங்களத்தான் புடிக்கும்” என்றொரு அரிய தத்துவத்தைக் கக்க, இம்முறை உண்மையிலேயே காண்டான எழில், அவன் தலையில் ஓங்கி தட்டிவிட்டு “கபோதி” என்று பற்களைக் கடித்துக்கொண்டு, அன்புடன் அழைத்தான். அவனை தொடர்ந்து சுனிலும் அதையே செய்தான்.
“வாட் ‘கபோதி’?” என்று அந்த சீன அழகி வினவ,
“அது ஒன்னும் இல்ல பேபி, நான் போதி தருமன் வம்சம், என்னுடைய பேரு கமல், அதை தான் சுருக்கி ‘க.போதி’னு கூப்பிடறாங்க!!”
ஒருவாறு சமாளித்தான் கமல்.
“ஓ! எனக்கு போதி தர்மர் தெரியும். உன் ஆர்ம்ஸ் பார்க்கும்போதே நினைச்சேன் நீ அர்னால்ட் கேட்டகரி’னு.”
“ஹா… ஹா… யூ ஆர் வெரி ஸ்வீட்… நான் ஜிம்முக்கு எல்லாம் போக வேண்டாம், இயற்கையாவே நான் ஜிம் பாடி தான். இதெல்லாம் என் ரத்தத்துலையே இருக்கு.”
கமல் பெருமை பேசியதைக் கேட்டு வெறி ஏறியது சுனிலுக்கு.
“யம்மா, அவன் ரத்தத்துல கண்ட கருமமும் இருக்கு. எதுக்கும் நீ கொஞ்சம் தள்ளியே உட்காரு” அழகாய் கோர்த்துவிட்டான் சுனில்.
அவளோ முகத்தை சுழித்துக் கொண்டு மூவரையும் மாறி மாறி நோக்கினாள். ‘இவ ஏன் செத்த எலிய மோந்து பார்த்த மாதிரி மூஞ்சிய இப்படி வச்சிருக்கா?!’ என்று கமல் யோசித்து முடிக்கும் முன்னே அவள் எழுந்து செல்ல,
“அடேய், லகட பாண்டிகளா” என்று நண்பர்களைக் கடிந்து கொண்டு “பேபி, நில்லுமா நில்லு” என்று கூறிக்கொண்டே சீன சிற்பத்தின் பின்னே சென்றான், கமலக்கண்ணன். அவன் ஓடுவதைக் கண்ட எழிலும், சுனிலும் ‘சியர்ஸ்’ சொல்லி மீண்டும் ஜாக் டேனியலுடன் கொண்டாடினர்.
தனது சீன ஒப்பந்தம் நிறைவேறாமல் போன கடுப்பில் பப்பினுள் நுழைந்த கமல், சுனில் ஒரு அமெரிக்க பைல்வானோடு கார சாரமாய் விவாதித்துக்கொண்டிருப்பதைக் கண்டு விரைந்தான்.
“என்னடா எழிலு?”
“மச்சான் உன்னை கலாய்ச்சுட்டே, சுனில் தவறி அவன் பக்கத்துல இருந்த அந்த தடியனோட சரக்க குடிச்சுட்டான்டா.”
“வேற வாங்கித் தரவேண்டியது தான?”
“நான் வாங்கித்தரேன்னு சொல்றதுக்குள்ள அந்த தடியன் என்னை அடிச்சுட்டான்டா. அதான் சுனிலுக்கு கோவம் வந்துடுச்சு. இடத்தை விட்டு கிளம்ப மாட்டேங்கறான்.”
இவர்கள் பேசிக்கொண்ட முப்பது நொடிகளுக்குள், வாக்குவாதம் கைகலப்பானது.
“எழிலு, நீ சுனில கூட்டிட்டுப் போ”
“டேய், அவன் எழிலை அடிச்சுட்டான்டா. அவனை கொல்லாம விடமாட்டேன்.” தடுக்க வந்த கமலிடம் சீறினான் சுனில்.
“டேய், துப்பாக்கி எடுத்து சுட்டுட போறான். இப்போ அதான் ஃபேஷன். தயவு செஞ்சு கிளம்புடா முதல்ல” என்று ஒருவழியாக சுனிலையும், எழிலையும் கிளப்பிய கமல், அந்த வெள்ளை பீம் பாயுடன் சமரசம் பேசினான்.
ஒருவழியாக உயிர் பிழைத்து வெளியே வந்த கமல், அங்கு எழில் மட்டும் நின்றிருப்பதைக் கண்டு துணுக்குற்றான்.
“எங்கடா அவன்?”
“அவன் நிஷாவை ரிஸீவ் பண்ண கிளம்பிட்டான்டா...”
“டேய் அவன் என்னத்த குடிச்சு தொலைச்சிருக்கான்னு தெரியுமா? ஜாக் டேனியலும், ஜான்னி வாக்கரும் இந்நேரம் அவனை குத்த வச்சு ‘ஊரோரம் புளியமரம்’னு கும்மியடிச்சுருப்பானுங்க. பாவம்டா அவன், தங்கமாட்டான்டா...”
“அவன் என்ன குழந்தையா? எல்லாம் பார்த்துப்பான், வா கிளம்பலாம். மூட் அவுட் ஆயிடுச்சு மச்சான்.”
இருப்பினும் கவலை கொண்ட கமல், சுனிலை கைபேசியில் அழைக்க அவன் தெளிவாக பேசியதில் பயம் நீக்கினாலும், கவலை நீங்கவில்லை.
“ஹலோ நிஷா, எங்க இருக்க? இன்னும் நீ அங்கிருந்து கிளம்பலையா?”
“அய்யோ அத ஏன் கேட்குற ரம்யா, என்னுடைய ப்ளைட் ஏதோ எஞ்சின் கோளாறு காரணமா ரத்து ஆயிடுச்சு. இதோட நாளைக்கு தான் ப்ளைட்டுனு சொல்லிட்டாங்க. நான் அங்கிருந்து கிளம்பி வேற ஒரு சிட்டிக்கு ட்ரைன்ல வந்து, இனி இங்கிருந்து வேற ப்ளைட்ல வரப்போறேன். நடுவுல என் போன் வேற சுவிட்ச் ஆப் ஆயிடுச்சு. இப்போ தான் கேட் கிட்ட வந்தேன். சார்ஜ் போட்டேன், நீ கால் பண்ணிட்ட.”
“அப்படியா? நான் போன வேலை முடிஞ்சுடுச்சு. நான் மத்தியானமே கிளம்பி சாயங்காலம் இங்க வந்துட்டேன். உனக்கு சொல்ல ரொம்ப நேரம் ட்ரை பண்ணேன். நீ இன்னும் வரலயே, மணி வேற பத்தாகுதேனு போன் பண்ணேன். நல்லவேளை லைன் கிடைச்சுது.”
“ஹ்ம்ம்… பாவம் சுனில் வேற எனக்காக ஏர்போர்ட்ல காத்துட்டு இருந்திருப்பான். நான் தான் வர சொல்லியிருந்தேன். இந்த போன் சதி பண்ணிடுச்சு.”
“நிஷா, அதுவந்து சுனில்…”
“என்ன? என்ன ஆச்சு ரம்யா?”
“ஒன்னும் இல்ல, நான் ஏர்போர்ட்ல இருந்து வரும்போது சுனில் ரோட்ல விழுந்து கிடந்தார். அவர் தண்ணியடிச்சிருக்கார் போல. அவரோட போன், பர்ஸு எதுவும் அவர்கிட்ட இல்ல நிஷா. உனக்கு போன் பண்ணா நீயும் எடுக்கல. நல்ல மழை வேற ஆரம்பிச்சுது. அதான் நம்ம வீட்டுக்கு டாக்ஸி ட்ரைவர் உதவியோட கூட்டிட்டு வந்துட்டேன்.இன்னும் முழிக்கவே இல்ல.”
“அய்யோ… ரோட்லயா கிடந்தான்?”
“ஆமா நிஷா, நான் அவசரத்துக்கு கூட சுனில் பிரெண்ட்ஸ் நம்பரை வாங்கி வச்சுக்கலை. அவங்க நம்பர் எனக்கு அனுப்பிவிடு. நான் அவங்கள வர சொல்றேன்.”
“அவனுங்களா? இவனே இப்படி கிடந்தா, அவனுங்க இவனுக்கு மேல மல்லாந்திருப்பானுங்க. அவனுங்க பத்து பைசாக்கு பிரயோஜனம் கிடையாது. சுனில் இங்கயே தூங்கட்டும். நான் விடியற்காலைல வந்துடுவேன்ல. நான் வந்ததும் பார்த்துக்கறேன். உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லைல?”
“எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல. நீ சீக்கிரம் வா.”
அறையில் உறங்கிக்கொண்டிருந்த சுனிலைக் கண்டவுடன், அவன் நடைபாதையில் முனகியபடி சற்று நேரத்திற்கு முன் கிடந்தது அவளின் நினைவிற்கு வந்தது. அவளின் மனம் வலித்தது. ‘ச்ச, இவருக்கு இதெல்லாம் தேவையா… அவனுங்க ரெண்டு பேரும் என்ன பிரெண்ட்ஸோ? இவர் என்ன ஆனார்னு கூட கண்டுக்கல.’ என்று வருந்தியபடியே மற்றொரு அறையில் இவள் உறங்கிப்போனாள்.
நடுநிசி நேரம், தொண்டை வறண்டு தாகம் எடுக்க, தண்ணீர் பருக தட்டுத் தடுமாறி எழுந்தான் சுனில். தான் எங்கிருக்கிறோம் என்று பார்த்தவுடனே புரிந்துவிட்டது அவனுக்கு. மெல்ல எழுந்து கிச்சனுக்குள் சென்றவன், தண்ணீர் அருந்திவிட்டு அறைக்குத் திரும்பினான். மூடப்பட்டிருந்த மற்றொரு அறையை மெல்ல திறந்தான். தலை முதல் பாதம் வரை போர்த்திக்கொண்டு கிடப்பவளைக் கண்டான். உள்ளே செல்ல நினைத்தவன், நிதானித்து, பின் வாங்கினான். வரவேற்பறையில் எரிந்து கொண்டிருந்த மின்விளக்கை அணைத்தான். ‘தள்ளாடினாலும், தண்ணியும், கரெண்டும் வீணாக்கமாட்டான் இந்த சுனில்’ என்று தன் தோளைத் தானே தட்டிக்கொண்டு, இருண்ட வீட்டில் தடவித் தடவி அறைக்குள் சென்றான்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை, காது மடல் அருகே மீசை முடி குறுகுறுப்பு எழுப்பியது. இருண்டிருந்த அறையில், அவள் அருகே நெருக்கமாகப் படுத்துக்கொண்டு, இரு கைகளால் அவளை சிறை செய்திருந்தான். பயத்தில் வெலவெலத்துப்போனவள், குரல் எழாமல் ஊமையாகிப் போனாள்.
“என்ன செல்லம், என்னை விட்டுட்டு நீ தனியா இங்க வந்து படுத்துட்ட? எனக்கு ரொம்ப குளிருதே. அதான் இங்க வந்துட்டேன். தண்ணியடிச்சுட்டேன்னு கோவமா? நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா? உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சதுலேர்ந்து ரொம்ப ஹாப்பியா இருக்கேன்டி. சீக்கிரம் உன்னை கல்யாணம் பண்ணி, எக்கச்சக்கமா புள்ளைங்கள பெத்துக்கப்போறேன். உன்னோட டூயட் பாடிக்கிட்டே சந்தோஷமா வாழப்போறேன்” என்று கூறிக்கொண்டே அவனது கைகள் அவளிடம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. அவன் கூறுவதைக் கேட்ட மகிழ்ச்சி ஒருபுறம், அவன் கைகளும், நெருக்கமும் தரும் பரவசம் மறுபுறம், இன்ப சுகத்தில் தொலைந்து கொண்டிருந்தவள் தன்னை மீட்டெடுக்க போராடிக்கொண்டிருக்க, அவளை முழுதும் பலகீனமாக்கி தோற்கடித்தது அவனது இதழ் முத்தம். முத்தப்பசைகொண்டு அவளை தன்னோடு ஒட்டவைத்தான். அவளின் இதழ்களில் தொடங்கி அவளை முழுதும் ஆக்கிரமித்தான். காதலானவன் கையில் தீயிலிட்டு தங்கமாய் உருகிப்போனாள், ரம்யா. காதல் வசனங்கள் பேசியவன், மௌனமாய் காரியமே கண்ணாய் இருக்க, காதல் யுத்தத்தில் அவனை எதிர்க்க முடியாமல், முழுதும் அவனிடம் சரணடைந்தாள். காதல் களியாட்டத்தில் கோதையும், கோமகனும் கூடிப் பிரிந்தனர்.
அதிகாலை உறக்கம் களைந்து கண் விழித்தவள், அவனின் கட்டுக்குள் கிடைப்பதைக் கண்டு நாணமுற்றாள். அவனின் மூச்சுக்காற்றின் வெப்பம், அவளின் நெற்றியை இதமாய் வருடியது. அவன் துயில் கலையாத வண்ணம், அவனை நீங்கிச் சென்றாள். மஞ்சள் பூசி குளித்தும் கூட, அவளின் கன்னங்களின் செம்மை மறைவேனா என்று அடம் பிடித்தது.
கிச்சனில் தனது இஷ்டதெய்வங்களின் படத்தின் முன்னே அவனுக்காக, அவளுக்காக, அவர்களுக்காக வணங்கி நின்றாள். அவளின் கைபேசி மினுமினுக்க, எடுத்துப் பார்த்தவள், ‘எனது காதல் கண்மணிக்கு காலை வணக்கம்’ என்ற குறுஞ்செய்தியை கண்டதும் இதழோரம் முறுவல் கொண்டாள். ‘பக்கத்து ரூம்ல இருந்துட்டே குட் மார்னிங் மெசேஜா?!!’ என்று துள்ளிக்கொண்டு கிச்சனை விட்டு வெளியே வந்தவளுக்கு பொறி தட்டியது. அவளின் கண்கள் குளமாக, கால்கள் உறைந்து போனது. ‘அவர் போன், பர்ஸு எதுவும் அவர்கிட்ட இல்ல நிஷா’ - அவளின் நினைவிற்கு வந்தது. படபடக்கும் இதயத்தோடு, நெஞ்சை பற்றிக்கொண்டு சுனில் உறங்கும் அறையின் வாயிலில் நின்றாள். அவன் குழந்தையென உறங்கிக்கொண்டிருந்தான். பட்டென விலகிச் சென்றவளின் கால்கள் தளர்ந்து போக, கிச்சனின் வாயிலில் சரிந்து அமர்ந்தாள். அவளின் கைபேசியில் உண்மையிலேயே யாரென்று அறியா எண்ணிலிருந்து குறுஞ்செய்திகள் வந்து விழுந்தன.
“நிஷா” என்று கூவிக்கொண்டே சோம்பல் முறித்தபடி வரவேற்பறைக்கு வந்த சுனில், உணர்வின்றி அமர்ந்திருந்த ரம்யாவைக் கண்டு திடுக்கிட்டான். கதவு திறக்கும் சத்தம் கேட்டு அவன் திரும்பிப் பார்க்க, தனது பெட்டியை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்த நிஷா, இவனைக் கண்டதும் “சுனில்” என்று வாஞ்சையோடு அழைத்தபடி ஓடிச்சென்று அவனை இறுகக் கட்டிக்கொண்டு, கண்கள் மூடி அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.
“இவ்வளவு சீக்கிரம் நம்ம கல்யாணம் ஓகே ஆகும்னு நான் நினைக்கவே இல்ல சுனில். நேத்து அம்மா போன் பண்ணி சொன்னதும் எனக்கு தலை கால் புரியல. உன்னை உடனே பார்க்கணும்னு எவ்வளவு தவிச்சு போய்ட்டேன் தெரியுமா? எப்படியோ அடிச்சு பிடிச்சு வந்துட்டேன். உடனே கல்யாணம், உடனே ஹனிமூன்… ஓகே வா?” என்றுவிட்டு அவனை நிமிர்ந்துநோக்க, அவனின் பார்வையோ ரம்யா மீது நிலைகுத்தி இருந்தது.
அவனை விட்டு விலகி நின்ற நிஷா, அசைவின்றி கண்ணீர் வழிய அமர்ந்திருக்கும் ரம்யாவையும், ஈரமான கண்களோடு நின்றிருக்கும் சுனிலையும் மாறி மாறி நோக்கினாள்.
“சுனில்…”
நிஷாவின் குரலைக் கேட்டவன், நின்றநிலையில் நெற்றியைப் பற்றிக்கொண்டு கீழே சரிந்து அமர்ந்தான்.
“சுனில், என்ன ஆச்சு?”
நிஷாவின் மனம் வில்லங்கமாக யோசித்தது. தவறு நடந்துள்ளது என்று அவளின் உள்ளுணர்வு கூறியது.
“டேய் சுனில் என்ன ஆச்சு?”
அவன் பதில் பேசவில்லை.
ரம்யாவிடம் சென்ற நிஷா,
“ரம்யா என்ன ஆச்சுன்னு சொல்லு. ஏன்டி இப்படி அழுவுற? ரொம்ப பயமா இருக்கு. ப்ளீஸ் சொல்லுடி” என்று மன்றாடினாள்.
இருவரிடமும் மாறி மாறி மன்றாடி நிஷா ஓய்ந்துபோக,
“நிஷா நீ இப்போ தான் ஊர்லேர்ந்து வரியா? நேத்து என்னை… இங்க…”
வாய்திறந்தான் சுனில்.
“இப்போ தான் வரேன் சுனில். குடிச்சுட்டு ரோட்ல கிடந்த உன்னை, ரம்யா தான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தா. அப்புறம் என்ன ஆச்சு?”
“நிஷா, நீ தான்னு நினைச்சு, அவள…”
அவன் கூறிமுடிக்கும் முன்னே அவனது குரல் தழுதழுக்க, ஏதோ முழுங்க முயற்சி செய்தவன், ‘ஓ!’ என்று அழுதுவிட்டான்.
“நான்னு நினைச்சு அவள நாசம் பண்ணிட்டியா சுனில்?” என்றாள் நிஷா.
அவன் தலை தொங்கி, அழுகுரல் அதிகமானாது.
“அய்யோ நிஷா, சாரி நிஷா” என்று திரும்பத்திரும்பக் கூறினான்.
“ஹும்ம்… என்னடா சாரி? குடிக்காத, குடிக்காதனு எத்தனை தடவை சண்டை போட்டிருப்பேன், கெஞ்சி இருப்பேன்?! குடிச்சுட்டு என்கிட்டே எல்லை மீறி நடந்துக்க பார்த்த உன்னை எத்தனை தடவை கண்டிச்சிருப்பேன்?! நீ உன் நிலையில இல்லாம போய்டுறனு எத்தனை தடவை அறிவுரை சொல்லி இருப்பேன்?! இப்போ என்ன ஆச்சுன்னு பார்த்தியா… இனி என்ன பண்ண போற சுனில்? உனக்கு உதவி பண்ணதுக்கு நல்லாவே உன் நன்றிய காட்டிட்ட. அவ என்னடா பாவம் பண்ணா உனக்கு?” என்று கேள்வி கேட்டு முடிக்கும் முன்னே, அவன் தலையில் மயிர்கற்றைப் பிடித்துத் தூக்கி, அவன் கன்னங்களில் பளார் பளார் என்று அறைந்தாள். தனது கைகள் தளர்ந்து ஒடுங்கும் வரை, அவன் தலையிலும், முதுகிலும், முகத்திலும் முன்பின் யோசிக்காமல் அடித்து ஓய்ந்தாள். அனைத்தையும் பொறுத்துக்கொண்டு, அவன் சிலைபோல் அமர்ந்திருந்தான். தான் செய்த பெருங்குற்றத்தை அவனால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை, எதிர்கொள்ளவும் முடியவில்லை.
ஓய்ந்த நிஷா, மீண்டும் வெறி கொண்டு, வீட்டை விட்டு வெளியே அவனை இழுத்துக்கொண்டு விட்டு, கதவை தாழிட்டாள். அதற்குள்ளாக, ரம்யா மயங்கி இருக்க, அவள் தேகம் நெருப்பாய் கொதித்தது. எவ்வளவு அழைத்தும், அவளின் இமைகள் விலகவில்லை. மெல்லிய சுவாசம் கொண்ட சலனமற்ற பிணம் போல கிடந்தாள்.
சுனில் தட்டுத்தடுமாறி, தன் இருப்பிடம் வந்து சேர்ந்தான். அவனது குற்றம் அவனை மெல்ல மெல்ல கொல்லத்தொடங்கியிருந்தது. செய்வதறியாது, ஒன்றும் புரியாது குழம்பித் தவித்தான்.கமலையும், எழிலையும் எதிர்கொள்ள முடியாமல் தலைத்தொங்கி நின்றான். இவனது நிலையைக் கண்டதும், அவர்களுக்கு தூக்கிவாரிப்போட்டது. அவர்கள் எவ்வளவோ கேள்விகள் கேட்டும், இவன் ஒன்றுமே பேசவில்லை. திடீரென்று, கமலின் கையிலிருந்த அழைப்பேசியைப் பிடுங்கிய சுனில், பொத்தான்களை அமுக்கினான்.
“ஹாலோ”, என்று தனது தாயின் குரலைக் கேட்டவுடன், “அம்மா… அம்மா…” என்று அழுது அலறினான்.
நிஷா, மருத்துவராகப் பணிபுரியும் தனது தோழியின் உதவியால், ரம்யாவின் உடலைத் தேற்றினாள்.தாயைப்போல் அவள் அருகிலேயே இருந்து பார்த்துக்கொண்டாள். அவள் முடிந்தளவு ரம்யாவிற்கு தைரியம் கூறினாள். ஆனால், அவை யாவும் ரம்யாவின் காதுகளுக்குள் நுழையாமல், வெளியே சிதரிப்போயின. தன்னிடம் இருந்த அனைத்தையும் இழந்ததாகத் தோன்றியது, ரம்யாவிற்கு. அவள் இதழ் மறவா புன்னகை, இன்று எங்கோ தொலைந்துபோனது. அவளின் உணர்வுகளில் ரத்தம் வடிந்துகொண்டுதான் இருந்தன. அவள் மனம், வலி தாளாமல் ஓலமிட்டது.
இரண்டு நாட்கள் கழித்து, வீட்டிற்கு பரபரப்பாய் வந்த நிஷா,
“இப்போ உடனே என் கூட வா ரம்யா.”
“நான் எங்கேயும் வரல நிஷா. ப்ளீஸ்...”
“என் மேல நம்பிக்கை இருந்தா, என் பேச்சுக்கு மரியாதை கொடுக்கறனா வா.”
“நிஷா புரிஞ்சுக்கோ ப்ளீஸ்...”
மல்லுக்கு நின்ற ரம்யாவை, எப்படியோ நிஷா மல்லுகட்டி அழைத்துச்சென்றாள், சுனிலின் வீட்டிற்கு.
வரவேற்பறையில் சுனில், மற்றும் அவனது பெற்றோர் அமர்ந்திருந்தனர். சுனில், அச்சம்பவம் நடந்த அன்று, தன் தாயை தொலைப்பேசியில் அழைத்து நடந்த அனைத்தையும் கூறினான். நடந்ததை சகிக்க முடியாமல் அவனது பெற்றோர் வருந்தினர், பின்விளைவுகளை எண்ணி பயம் கொண்டனர், இவன் நிலை என்னவென்று அஞ்சினர். உடனே அவர்கள் புறப்பட்டு அமெரிக்கா வந்துவிட்டனர்.
ரம்யா ஒரு மூலையில் சுவரோரமாய் நின்றுகொண்டாள். அவனது தாய் சித்ராவின் முகத்தை ஏரிட்டுப்பார்த்தாள். ரம்யாவின் பார்வை, சித்ராவின் மனதை அறுத்துக்கொன்றது. தனது கண்ணோரம் துளிர்த்த கண்ணீர்த்துளியைத் துடைத்துக்கொண்டு தலைதொங்கிப்போனாள். சுனிலோ, ஒரு நொடி கூட தலை நிமிரவில்லை. அவன் குனிந்த தலை, அப்படியே இருந்தது. அவன் அருகே கமல் நின்றிருந்தான். மிகவும் படபடப்புடன் காணப்பட்டார், சுனிலின் அப்பா, சிதம்பரம்.
“எல்லாரும் இப்படியே அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? இந்த அக்ரமத்துக்கு யாராவது பதில் சொல்லுங்க”, என்று அங்கு நிலவியிருந்த அமைதியை உடைத்தாள், நிஷா.
“ஆன்ட்டி, அங்கிள், ஏதாவது பேசுங்க. இந்தியாவிலேர்ந்து இவ்ளோ தூரம் அவசர அவசரமா வந்தது எதுக்கு?”
“இப்போ என்ன ஆயிடுச்சுன்னு இப்படி கத்தற நிஷா?”
உரத்த குரலில் கேள்வி எழுப்பி, நிஷாவை அமைதியாக்கினார் சுனிலின் தந்தை, சிதம்பரம்.
“தப்பு நடந்துடுச்சு… அதை சரி கட்டணும்… சரி கட்டிடலாம்”, என்று நிஷாவிடம் கூறிவிட்டு, “உன் பேரு என்ன?”, என்றார் ரம்யாவிடம்.
“ரம்யா”
“அப்பா, அம்மா, என்ன பண்றாங்க?”
“அப்பா பாங்க்ல கிளார்க். அம்மா ஹௌஸ் வைப்.”
“அப்போ ஒன்னும் பெரிய வசதி எல்லாம் இல்லை! அப்படி தானே?! நான் யாருன்னு தெரியுமா? என் லெவல் என்னனு தெரியுமா?”
அவர் என்ன சொல்கிறார் என்று ரம்யாவிற்கு ஒன்றும் விளங்கவில்லை.
“காசு சம்பாதிக்க நிறைய நல்ல வழி எல்லாமிருக்கு. இப்படி தான் பணக்கார வீட்டு பையன வலைச்சுப்போடறதா?”
ரம்யாவின் உடல் கூசியது. நிஷாவிற்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
“அங்கிள், நீங்க பேசறது உங்களுக்கே நல்லா இருக்கா?”
“உனக்கு ஒன்னும் தெரியாது நிஷா. நீ சும்மா இரு. நாடு எவ்ளோ கெட்டுப்போய் இருக்கு, தெரியுமா? காசுக்காக எதவேணும்னாலும் செய்ய துணிஞ்சுடறாங்க”, என்று நிஷாவிடம் கூறிக்கொண்டே வெறுப்போடு ரம்யாவைப் பார்த்தார்.
“இந்தா பொண்ணு, உனக்கு எவ்வளவு பணம் வேணும்னு கேளு, தந்துடறேன். அதோட கண்காணாத இடத்துக்கு ஓடிரு.”
“அப்பா”, என்று முழங்கினான் சுனில்.
“என்னடா? என்ன? தப்பு செஞ்சுட்டோம்னு கில்டினசா? இல்ல இது பாவம்னு சிம்பதியா? ரெண்டும் இப்போ தேவை இல்லை”
“அங்கிள், ஒரு பொண்ணோட மானத்துக்கு எப்படி உங்களால விலை பேச முடியுது?”, என்று கண்ணில் நீர் ததும்ப கேட்டாள், நிஷா.
“முடியுது. ஏன்னா, இந்த பொண்ணோட மானத்தை விட, என் புள்ளையோட வாழ்க்கை ரொம்ப விலையுயர்ந்தது.”
“அப்போ இவளும் தானே வாழ்க்கைய தொலைச்சுட்டு நிக்கறா?”
“எல்லா தப்பையும் பண்ணது இந்த பொண்ணு. பழி என் புள்ள மேலயா?”
“அங்கிள்…”
“பின்ன, வேற என்ன? குடிச்சுட்டு நினைவில்லாம கிடக்கற வயசு பையன, ஒரு வயசுப்பொண்ணு வீட்ல கூட்டிட்டு வந்து வச்சுக்கலாமா? அதுவும் ராத்திரி நேரத்துல? இது எவளோ பெரிய விபரீதம்னு தெரியாது?!”
“அவ உதவிதான் பண்ணா, அங்கிள்”
“சரி உதவியாவே இருக்கட்டும். ஒன்னு, இவன் பிரண்ட்ஸ் கிட்ட சொல்லியிருக்கணும். இல்ல, இவன தனியா விட்டுட்டு, இந்த பொண்ணு வேற பிரண்ட்ஸ் வீட்ல தங்கியிருக்கணும். இல்ல ஏதாவது ஹோட்டல்ல இவன தங்கவச்சிருக்கலாம். இப்படி ஏதாவது பண்ணி இருக்கலாம். அதை விட்டுட்டு, ஒரே வீட்ல, குடிச்சிட்டு நிதானம் இல்லாதவன் கூட தங்கினா, வேற என்ன ஆகும்? ஒரு வயசு பொண்ணு செய்யற காரியமா இது? தன்னோட பாதுகாப்பை பத்தி அந்த பொண்ணு தான் யோசிச்சிருக்கணும். எனக்கென்னவோ, பெரிய இடம் வலச்சுபோடலாம்னு, இப்படி ஒரு காரியத்தப் பண்ணியிருப்பாளோன்னு தோணுது.”
“அவ ரொம்ப நல்லவ. இப்படி அபாண்டமா பேசாதீங்க. நான் தான் சுனிலை வீட்ல தங்கவச்சுக்க சொன்னேன்.”
“இருக்கட்டும். ஆனா, இது உதவி மாதிரி தெரியல. கிடைச்ச சந்தர்பத்தில ஆதாயம் எடுத்துக்கிட்ட மாதிரி இருக்கு.”
அவரின் வார்த்தைகள், உமிழ் நீரை தன் மீது உமிழ்ந்து போல் இருந்தது, ரம்யாவிற்கு. அழுவதற்குக் கூட திராணி இல்லாமல், விறுவிறுவென்று அவ்விடத்தை விட்டு வெளியே சென்றாள். வாக்குவாதம் நில்லாமல் நீண்டுகொண்டிருப்பினும், அவள் காதுகளில் எதுவும் விழவில்லை. எதையும் கேட்டிட, அவள் விரும்பவுமில்லை.
அன்று கண்ணீர் மல்க நீங்கிச் சென்றவளின் முகம் நினைவிற்கு வர, இன்று சுனிலின் கண்கள் ஈரமானது.
No comments:
Post a Comment