சுனிலும், ரம்யாவும் இரண்டு நாட்கள் விருந்து முடித்து, வீடு திரும்ப ஆயத்தமானார்கள். பெரியோர் அனைவரிடமும் நமஸ்கரித்து ஆசி பெற்றனர்.
“மாமா, உங்க உடம்பை நல்லா பார்த்துக்கோங்க. நீங்க ட்ராவல் பண்ணலாம்னு டாக்டர் சொன்னவுடனே, நீங்களும், அத்தையும் அமெரிக்கா வந்துடுங்க. அங்க ரெஸ்ட் எடுத்துக்கலாம். இந்த நேரத்துல, உங்க பக்கத்துல இருந்து உங்களை பார்த்துக்கவிடாம, ரம்யாவை கூட்டிட்டுபோறது கஷ்டமா தான் இருக்கு. ஆனா, வேற வழியில்லை. அவசர அவசரமா கல்யாணம் நடந்ததால, எங்க சொந்தக்காரங்களுக்கு ஏகப்பட்ட சந்தேகம். யாருக்கும் எதுவும் தெரியாது. அதான் ரம்யாவை விட்டுட்டு போனா, இன்னும் ஏதாவது கேள்வி எல்லாம் வருமோன்னு அம்மா பயப்படறாங்க. கொஞ்ச நாள் போச்சுன்னா எல்லாரும் எங்களை மறந்துட்டு அடுத்த வேலையை பார்க்கப்போய்டுவாங்க. ப்ளீஸ் நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க” என்று பணிவாய் வேண்டினான் சுனில்.
ரம்யாவின் பெற்றோர் மனதில் அவன் மேல் நல்லெண்ணமும், அன்பும் வளர்ந்தது.
“இல்ல இல்ல மாப்பிள்ளை. அம்மா சொன்னதுதான் சரி. நீங்க ரெண்டு பேரும் ஊருக்குப் போறதுதான் உத்தமம்” என்று முகம் முழுதும் புன்னகையோடு கூறினார், குணநாதன்.
ரம்யா வேண்டாவெறுப்பாக அவள் பிறந்து, வளர்ந்து, விளையாண்ட வீட்டை விட்டுச் சென்றாள். வண்டி முன்னோக்கிச் செல்ல, அவள் விழிகள் பின்னோக்கி, வீட்டையும் உறவுகளையும் பார்த்தபடியே நின்றது. ரம்யாவின் வருத்தம் புரிந்தவனாய், ஏதேதோ பேச்சு கொடுத்தபடி இருந்தான் சுனில். ஆனால், அவனோடு உரையாடுவதில் அவள் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு அவன் வருந்தவுமில்லை. அவளை அவளாக நேசித்தான்!!
விமான நிலையம் - சுனில், ரம்யாவின் பெற்றோர் அவர்களை வழியனுப்ப வந்திருந்தனர். ரம்யா தனது கட்டுக்கடங்காத வேதனையை, மிகுந்த சிரமத்தோடு கட்டுப்படுத்தி, சிரித்த முகமாய் இருந்தாள்.
“ரம்யா, ஊருக்கு போய்ட்டு வேலை, வேலைன்னு இருந்திடாம நல்லா சாப்பிட்டு உடம்பை பார்த்துக்கணும். நிறைய ப்ரூட்ஸ், ட்ரை ப்ரூட்ஸ், நட்ஸ்னு எல்லாத்தையும் சேர்த்துக்க. கீரை கண்டிப்பா வாரம் ரெண்டு தடவையாவது எடுத்துக்க. சுனிலுக்காக வெய்ட் பண்ணறேன்னு உன்னோட வயித்தை காயப்போடாத. நீ வேலா வேலைக்கு கரெக்ட்டா சாப்பிடணும். வீட்டையும் பார்த்து, வேலைக்கும் போறது ரொம்ப கஷ்டம் தான். நீ வேலைக்குப் போகணும்னு எந்த கட்டாயமும் இல்ல. உன்னோட விருப்பம். முடியலைனா யோசிக்காம வேலையை விட்டுடு. நேரம் கிடைக்கும்போதெல்லாம் போன் பண்ணு”, என்று மருமகளிடம் அறிவுரைக் கூறிய சுனிலின் தாய்,
“டேய் சுனில், இங்க பாரு, வீடு விட்டா ஆபிஸ், ஆபிஸ் விட்டா வீடுன்னு இருக்கணும். வீட்ல ரம்யாவுக்கு உதவி பண்ணனும். புரிஞ்சுதா? இனிமேல் பொறுப்பா நடந்துக்கணும். உன்னை நம்பி ஒருத்தி வந்துட்டா. அதை மறந்துடாதே” என்று அவனுக்கும் கூறி முடித்தாள்.
சிரித்துக்கொண்டே ‘சரி’ என்று தலையசைத்தான். ‘உன்னை நம்பி ஒருத்தி வந்துட்டா’ என்று சுனிலின் தாய் கூறியது, அவன் காதுகளில் ரம்யமாக எதிரொலித்தது.
தான் மகளுக்குக் கூறவேண்டிய அனைத்தையும் ரம்யாவின் மாமியார் கூறியதைக் கேட்டு, அசந்து போய் நின்றிருந்தாள் திலகவதி.
புறப்பாடு நேரம் ஆனதால் ரம்யாவும், சுனிலும் விடைபெற்றுக்கொள்ள, பிரிவின் துயரால் கண்ணோரம் பூத்த நீர்த்துளியை துடைத்தபடி, அவர்களின் எதிர்காலம் வளமாக அமைய மனதிற்குள் கடவுளிடம் வேண்டுதல் வைத்தபடி, பிள்ளைகள் செல்வதைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர், பாசப்பிணைப்பில் பரிதவிக்கும் பெற்றோர்.
பயணத்தின் பொழுது ரம்யா அமைதியாகவே இருந்தாள். அவளை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்வதில், ஒரு நொடியும் பிசகவில்லை சுனில். ஆசை தீர அவளை ரசித்தபடி, கனவுகளில் மிதந்தான்.
கட்டழகி அருகிலிருக்க
கனவுக்கா பஞ்சம்
கண்கொட்டாமல் பார்த்தாலும்
சலிக்காது நெஞ்சம்
இவள் அழகை ரசிக்க ரசிக்க
ஒவ்வொரு செல்லும் சிலிர்க்கும்
அண்டமே காலடியில் என்று
திமிரு கூட துளிர்க்கும்!!
அமெரிக்கா சென்றவுடன், ரம்யாவை தனது வீட்டிற்கு அழைத்துச்சென்றான், சுனில். உள்ளே நுழைந்ததும், போட்டது போட்டபடி விட்டுவிட்டு அவன் இந்தியாவிற்கு விரைந்தது நினைவிற்கு வந்தது. சற்று அலங்கோலமாக இருந்தது வீடு. ஆனால், ரம்யா எதையும் கண்டுகொள்வதாய்த் தெரியவில்லை. பயணக் களைப்பால் அவள் சோர்ந்திருந்தாள். இருவருக்கும் உணவு வாங்கிவர அவன் செல்ல, ரம்யா குளித்து முடித்து, தனது இஷ்ட தெய்வங்களின் படங்களை எடுத்து, கிச்சனில் ஒரு அலமாரியில் அடுக்கி வைத்து, விளக்கேற்றினாள்.
அவள் மனமுருகி பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும்பொழுது, உணவுப்பொட்டலங்களை எடுத்துக்கொண்டு வந்தான் சுனில். குளித்து முடித்து பனி படர்ந்த ரோஜா போல் மிளிர்ந்த தனது மனைவியைக் கண்ட சுனிலுக்கு மூச்சு முட்டும் அளவு மகிழ்ச்சி பொங்கியது. தனது பெட்டியை அவசர அவசரமாக நோண்டினான். ஒரு படத்தை எடுத்துகொண்டு தனது அறைக்கு விரைந்தான். சுவரில் அந்த படத்தை மாட்டிவிட்டு, ‘ரம்யா செல்லம், உனக்கு புடிச்ச போட்டோவெல்லாம் வச்சு நீ கும்பிடற மாதிரி, இனிமேல் இந்த போட்டோ தான் எனக்கு எல்லாம்’ என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு அந்த படத்தை ரசித்த படி நின்றான். அது சுனிலும், ரம்யாவும் மாலையும் கழுத்துமாய், திருமணம் முடிந்தவுடன் எடுக்கப்பட்ட படம். பவளச் சிலையென மிளிரும் தனது பாவையைக் காணக்காண அவனுக்குக் காலம் கூட மறந்து போனது.
இரவு உணவு முடிந்து, இரண்டாவது படுக்கை அறையை சுத்தம் செய்தான் சுனில். ரம்யா முடிந்த அளவு கிச்சனை சீர் படுத்திக்கொண்டிருந்தாள்.
“ரம்யா, இந்த ரூம் க்ளீன் பண்ணிட்டேன். உன்னோட பெட் ரூமா யூஸ் பண்ணிக்கோ. ஊர்ல தான் ஒரே ரூம்ல தங்க சொல்லி உன்னை சங்கடப்படுத்திட்டாங்க. இங்க கேள்வி கேட்க யாரும் இல்லை. சோ, ப்ளீஸ் பீல் கம்பார்டபிள் (so, please feel comfortable). இந்த ரூம் பிடிக்கலேனா, என்னோட ரூம் எடுத்துக்கோ. நோ பிராபிளம் பார் மீ (no problem for me)”, என்று கூறி புன்முறுவல் பூத்தான்.
“இந்த ரூமே எனக்கு போதும். தேங்க் யூ”, என்று கூறிவிட்டு அறைக்குள் சென்றாள்.
தனக்கென தனியறை கிட்டியதே, அவளுக்கு நிம்மதியாய் இருந்தது. தனது அம்மா, அப்பாவை நினைத்துக்கொண்டே உறங்கிப்போனாள். சுனிலும், சுவரில் மாட்டியிருந்த ரம்யாவின் படத்தைப்பார்த்தபடி உறங்கிப்போனான்.
மறுநாள் காலை, சுனில் அலுவலகத்திற்கு கிளம்பிச் செல்ல, ரம்யா ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டாள். சுனலின் உடல் மட்டுமே அலுவலகம் சென்றது. அவன் நினைவெல்லாம் ரம்யாவின் காலடியிலேயே கிடந்தன.
அலுவலகத்தில் சுனிலின் திருமணச் செய்தி ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்ததால், அவன் தலையைக் கண்டதுமே அனைவரும் புடைசூழ்ந்தனர். அனைவரின் வாழ்த்துக்கும் நன்றி கூறிவிட்டு, விரைவில் அவர்கள் எதிர்பார்க்கும் ‘ட்ரீட்’ம் கொடுக்கப்படும் என்று, கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாய் வாக்கு கொடுத்தான்.
அன்று அவனுக்கு வேலையில் நாட்டம் செல்லவில்லை. அவ்வப்போது ரம்யாவிற்கு போன் செய்து பேசினான். மாலை வந்ததும், முதல் ஆளாகப் பறந்து வீட்டிற்குச் சென்றான். நண்பர்களின் கேலிப்பேச்சுகளை அவன் பொருட்படுத்தவே இல்லை. அவன் நோக்கமெல்லாம் ரம்யாவாக இருந்தது.
வீட்டுள் நுழையும்போதே சந்தன பத்தியின் வாசம், எங்கும் பரவியிருந்தது. அலங்கோலங்கள் எல்லாம் சரி செய்யப்பட்டு, அழகாய் இருந்தன. ரம்யாவை எண்ணி பெருமிதம் கொண்டான். இவனைக் கண்டதும், ஆவி பறக்க, கமகமவென பில்டர் காப்பி எடுத்துவந்தாள். சுனில், தனது மாமியார் வீட்டில் ரசித்து குடித்த அதே காப்பி. ரம்யாவின் தாய், சுனிலுக்காகப் பிரத்யேகமாக காப்பி தூளும், பித்தளை பில்டரும் கொடுத்திருந்தாள். ரசித்து ரசித்து குடித்து முடித்தான்.
தயங்கியவாறே ரம்யா அவன் அருகில் நெருங்கி,
“இந்த லிஸ்ட்ல இருக்கற மளிகை சாமானெல்லாம் வேணும்” என்று அவனிடம் நீட்டினாள்.
அவளாக வந்து அவனிடம் முதல் முறையாக பேசுகிறாள். அவளை போலவே அவளது குரலும் எவ்வளவு இனிமை என்று வியந்தான்.
“எனக்கு இதெல்லாம் வாங்க தெரியாது ரம்யா. இந்தியன் க்ராசரி ஷாப்ல எல்லாம் இருக்கும். வாயேன் ரெண்டு பேரும் போய்ட்டு வாங்கிட்டு வரலாம்”, என்று புத்துணர்ச்சி பொங்கக் கூறினான்.
“ம்ம்...”
“அப்புறம் உன்னோட திங்ஸ் எல்லாம் உன்னோட ஸ்டூடியோல இருக்குள்ள? அதையும் அப்படியே எடுத்துட்டு வந்துடலாமா?” என்றான் ஆவலாக.
“நான் காலைலயே கொஞ்சம் எடுத்துட்டு வந்துட்டேன். இன்னும் கொஞ்சம் திங்ஸ் இருக்கு. பெரிய சூட்கேஸ் இருக்கு.”
“நீ எதுக்கு தனியா இவ்ளோ கஷ்டப்படுற? காலைலேர்ந்து ரெஸ்ட் எடுக்காம ஏன் ரம்யா இவ்ளோ வேலை செய்யற?”
தனது அழகு மனைவியின் கடமை உணர்ச்சி அவனுக்குப் பூரிப்பைத் தந்தாலும், அவள் ஓய்வின்றி உழைத்ததைக் கண்டு அவன் இதயத்தில் ரத்தம் வழிந்தது.
“இல்ல பரவால்ல. ஸ்டூடியோ ஹாண்ட் ஓவர் பண்றதுக்கு எல்லா பார்மாலிடீசும் பண்ணிட்டேன். மீதி இருக்கற திங்ஸ் எடுத்துட்டு, சாவி கொடுக்கணும்” என்றாள்.
“ஓகே ரம்யா. உடனே கிளம்பு போகலாம்”
அவள் கூறியபடியே வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு, அவளை அழைத்துக்கொண்டு உணவகத்திற்குச் சென்றான்.
“எதுக்கு ஹோட்டல்? வீட்டுக்கு போகலாம். நான் பத்து நிமிஷத்துல சமைச்சுடறேன்” என்று தயங்கியபடி கூறினாள்.
“காலைலேர்ந்து எவ்ளோ வேலை செஞ்சிருக்க. போதும் ரம்யா. இனிமேல் வீட்டுக்கு போய், சமையல் பண்ணி… வேண்டாம். இங்கேயே டின்னர் முடிச்சுடலாம்.”
மருவார்த்தை பேசாமல் ‘சரி’ என்று தலையசைத்தாள்.
அவளருகில் அமர்ந்து உணவருந்திய ஒவ்வொரு நொடியம் அவனுக்கு சொர்கமாய் இருந்தது. அவளின் கண்கள், இதழ்கள், சோர்ந்து போய் இருப்பினும் கலையான முகம் என்று அவளை மெல்ல இதயத்துள் செதுக்கிக்கொண்டான்.
வீடு திரும்பும் பொழுது, பிடித்த பாடல் ஒன்று அவன் நினைவுக்கு வர, அதை பாடும்படி, தனது காரின் ஆடியோ சிஸ்டத்தைப் பணித்தான்.
வீசிப்போன புயலில்
என் வேர்கள் சாய வில்லை
ஒரு பட்டாம் பூச்சி மோத
அது பட்டென்று சாய்ந்ததடி!
எந்தன் காதல் சொல்ல
என் இதயம் கையில் வைத்தேன்!
நீ தாண்டிப்போன போது
அது தரையில் விழுந்ததடி!
மண்ணிலே செம்மண்ணிலே என் இதயம் துள்ளுதடி
ஒவ்வொரு துடிப்பிலும் உன் பெயர் சொல்லுதடி
கனவுப் பூவே வருக! உன் கையால் இதயம் தொடுக!
எந்தன் இதயம் கொண்டு
நீ உந்தன் இதயம் தருக!
என் வேர்கள் சாய வில்லை
ஒரு பட்டாம் பூச்சி மோத
அது பட்டென்று சாய்ந்ததடி!
எந்தன் காதல் சொல்ல
என் இதயம் கையில் வைத்தேன்!
நீ தாண்டிப்போன போது
அது தரையில் விழுந்ததடி!
மண்ணிலே செம்மண்ணிலே என் இதயம் துள்ளுதடி
ஒவ்வொரு துடிப்பிலும் உன் பெயர் சொல்லுதடி
கனவுப் பூவே வருக! உன் கையால் இதயம் தொடுக!
எந்தன் இதயம் கொண்டு
நீ உந்தன் இதயம் தருக!
இந்த வரிகள் அவனை மிகவும் கவர்ந்தன. அவன் நிலையை இலைமறை காய்மறையாக ரம்யாவுக்கு அந்த பாடல் சொல்லிடும் என்று நினைத்தான்.
மீண்டும் அதே பாடலை ஒலிக்கச் செய்தான்.
“எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு இது” என்று மென்மையாக அவளிடம் கூறினான்.
அவள் சிரிக்க முயற்சி செய்து, கைவிட்டுவிட்டாள். நிலவு சிரிக்கும் இனிய இரவு வேளையில், பிடித்த பாடல் ஒலிக்க, அருகில் காதலானவள் இருக்க, ‘இதற்குமேலும் ஒரு இன்பம் இருக்குமா?!’ என்று சிந்தித்துக்கொண்டு, தனது கனவுக்கடலில் மூழ்கினான்.
சோர்வு மிகுதியால் ரம்யா சீக்கிரமே உறங்கிப்போனாள். சுனில் அவன் படுக்கையில் படுத்துக்கொண்டு, ரம்யாவின் படத்தை ரசித்துக்கொண்டிருந்தான்.
‘ரம்யா செல்லம்! ஏண்டா உன்னை நீயே இவ்வளவு கஷ்டப்படுத்திக்கற? இப்படி ஒரே நாள்ல எல்லா வேலையும் செஞ்சா, என் தங்கமயில் தாங்குவாளா? சும்மா சொல்லக்கூடாது, அவ்ளோ அசதியிலும் நீ பேரழகி தான். நாளுக்கு நாள் என்னை கொலையாக் கொல்றடி. உன்னை படைச்ச அந்த பிரம்மனுக்கு கண்டிப்பா நன்றி சொல்லணும். என்ன மாதிரி ஒரு டிசைன்?!! மனுஷன படைச்சு, அவனுக்கு கண்ணையும், மனசையும் கொடுத்து, அவனுக்கே அவனுக்குன்னு ஒரு பேரழகியையும் படைச்சு, ‘என்ஜா…...ய்’னு சேர்த்துவைக்கறானே. இது எவ்வளோ பெரிய என்ஜினீயரிங் எக்சலென்ஸ்! எவ்வளவு பெரிய மெடிக்கல் மிராகில்! ஆனா இந்த நன்றி கெட்ட உலகம், அந்த பிரம்மன் குடுத்த அழகை அனுபவிக்குதே தவிர, அவருக்கு இரு கோயில் கூட கட்டலையே. நியாயமா, தெருவுக்குத் தெரு அவருக்கு ஒரு கோவில் கட்டி கும்பாபிஷேகம் பண்ணனும். அட்லீஸ்ட் ஒரு சிலையாவது வைக்கணும். என் அழகி மாதிரி ஒருத்திய படைச்சதுக்கே நான் உங்களுக்கு ரொம்ப கடமை பாட்டிருக்கேன் மிஸ்டர்.பிரம்மன். யார்யாரோ யார்யாருக்கோ கோவில் கட்டறாங்க, சிலை வைக்கறாங்க. நான் கண்டிப்பா ஊர்ல நல்ல இடமா பார்த்து, உங்களுக்கு சிலை வைக்கறேன்’ என்று உறுதிகள் எடுத்தபடி, அதற்கு செயல் திட்டங்கள் வகுத்தபடி உறங்கிப்போனான்.
No comments:
Post a Comment