மறுநாள் காலை, சுனில் எழுவதற்கு முன்னமே எழுந்து, மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தாள், ரம்யா. மெல்ல எழுந்து அலுவலகத்திற்கு ஆயத்தமாகி வந்தவனுக்கு, காலை உணவு பரிமாறினாள். வெண்பொங்கலும், தேங்காய் சட்னியும் கண்ட கணமே, அவன் நாக்கில் குற்றாலம் பெருகியது. ஒரு வாய் விழுங்கினான் - வெண்ணை போல வழுக்கிக்கொண்டு சென்றது பொங்கல். செல்லரித்துப்போன அவனது புலன்கள் எல்லாம் புல்லரித்துப்போனது. வெகு நாட்கள் கழித்து அமுதத்தை சுவைத்த பேரானந்தம். ரசித்து, ருசித்து உண்டு களித்தான். ருசியான பொங்கலால் அவன் வயிறு நிறைய, அதை சமைத்த ரம்யா அவன் மனதில் நிறைந்தாள். பொங்கலின் ருசி மறையும் முன்னே, மதிய உணவு இடைவேளை வர, ஆவலாக நண்பர்களோடு உணவருந்தச் சென்றான். முருங்கைக்காய் சாம்பார், உருளை வறுவல், காரட்-பீன்ஸ் பொரியல், தயிர் சாதம், வடகம் என்று அடுத்த இன்ப அதிர்ச்சி கொடுத்து, அவனை அசத்திவிட்டாள் ரம்யா. உணவை ருசித்த நண்பர்கள் வெகுவாகப் பாராட்ட, இவனுக்கோ கர்வம் முளைத்தது. மீண்டும் ஒரு பிடி பிடித்தான். அவளைப்பற்றி சிந்தித்து பெருமைகொள்ளவும், பெருமூச்சு விடவுமே அன்றைய பொழுது அவனுக்கு சரியாக இருந்தது. ‘அப்பவே அநியாயத்துக்கு ருசியா சமைப்பா… இப்போ இன்னும் அட்டகாசமா சமைக்கறாளே!!’ என்று அசந்து போனான்.
இரவு உணவிற்காக ஆவலோடு காத்திருந்தான். கிச்சனில் அவளுக்கு உதவிட பேராசையாய் இருந்தது. ஆனால், இவனின் அருகாமை அவளை சங்கடப்படுத்திவிடுமோ என்ற தயக்கமே அவனை வரவேற்பறையில் கட்டிப்போட்டது. வேண்டா வெறுப்பாக டி.வி. பார்த்துக்கொண்டிருந்தவனின் எதிரே தோன்றி, பூரியும் சென்னாவும் பரிமாறினாள். அலாதி சுவை அவனை சுண்டி இழுக்க, பரோட்டா சூரியின் சாதனையை முறியடிக்கும் அளவிற்கு, பூரிகள் அவன் வயிற்றுள் புதைக்கப்பட்டன.
வேலைகள் முடித்து விட்டு தனது அறைக்கு சென்ற ரம்யாவிடம்,
“ரம்யா நீ சாப்பிட்டியா?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான்.
“ம்ம்” என்று தலையசைத்தாள்.
“உன் சமையல், சிம்ப்ளி சூப்பர்ப். இன்னிக்கு ஆபிஸ்ல என்னோட லஞ்ச்ச சாப்பிட்டுட்டு, பிரெண்ட்ஸ் எல்லாரும் அசந்துட்டாங்க. வெரி டெலிஷியஸ்!!” என்று உளமார பாராட்டினான்.
“தேங்க் யூ” என்று மெல்லியதாய் புன்னகைத்தாள்.
“இவ்ளோ எல்லாம் சமைச்சு உன்னை கஷ்டப்படுத்திக்காத. நான் வேணும்னா கேன்டீன்ல லஞ்ச் சாப்பிட்டுக்கறேன்.”
ரம்யா எங்கே ‘சரி’ என்று கூறிவிடுவாளோ என்று அவனுக்கு உள்ளே சிறு உதறல் இருந்தது.
“இல்ல அதெல்லாம் வேண்டாம். நானே தினமும் லஞ்ச் செஞ்சு கொடுத்திடறேன்.”
‘இதை இதை இதை தான் நான் எதிர்பார்த்தேன்’ என்று அவன் மனம் கொக்கறித்தது.
“ஓகே ரம்யா. உன் இஷ்டம். குட் நைட்!” என்று பெருந்தன்மையாக நடந்துகொள்வதாய் பாவலா காட்டிவிட்டு, தனது அறைக்கு சென்று, மல்லாக்கப் படுத்து, விட்டத்தைப் பார்த்து கனவு காணும் வேலையை தொடங்கினான்.
வார இறுதி நாட்களில், ரம்யாவை அழைத்துக்கொண்டு சுற்றுலாத் தளங்கள், சினிமா, ஷாப்பிங் என்று பல்வேறு இடங்களுக்குச் சென்றான். முதலில் மறுத்தவள், மெல்ல மெல்ல மனம் இலகி அவனோடு செல்லத்தொடங்கினாள். அவனோடு பேசுவதையும், அவன் பேசுவதையும் விரும்பாதவள், சற்றே மனம் மாறி அவனோடு குட்டிக் குட்டி அரட்டைகள் அடிக்கலானாள். அவனும் இதுதான் சாக்கென்று, அவனது கீழ் தாடை கழண்டு கீழே விழும் வரை, லொடலொடவென்று அவள் அறிந்திராத தனது ஹிஸ்டரி, ஜியாகிரபி, எகனாமிக்ஸ் என அனைத்தையும் ஒப்புவித்தான். பயாலஜிக்கு மட்டும், காலம் கனியும்வரை காத்திருக்கலாம் என்று முடிவுசெய்திருந்தான். சிறிது காலத்திலேயே தயக்கங்கள் நீங்கி, கிச்சனில் அவளுக்கு உதவியாக இருந்தான். அளந்து பேசிய ரம்யாவும், கொஞ்சம் பழையபடி கலகலப்பாக மாறி இருந்தாள். இருவருக்கும் இடையே சிறிதாய் அழகிய நட்பு மீண்டும் மலர்ந்தது.
ஒரு காலத்தில், ரம்யாவின் முகத்தைக் கண்டால் போதும் என்று இருந்த அவன் மனம், அவளுடன் பேச வேண்டும், திருமணம் செய்ய வேண்டும், நட்பாக வேண்டும், அவளது காயங்களை நீக்க வேண்டும் என்று அடுத்தடுத்து ஆசைகொண்டு, அவற்றை நிறைவேற்றியும்விட்டது. இப்பொழுது அவன் மனம் அவளின் காதலுக்காக ஏங்கியது. நட்பாகப் பழகுபவளை, அதே கண்ணோட்டத்தோடு சுனிலால் பார்க்க முடியவில்லை. அவளை ரசிப்பதும், கனவில் அணைப்பதும் என கலவரமாக இருந்தது, அவனுடைய மூளை.
அன்று தீபாவளி. குறிப்பாக ‘தலை’தீபாவளி. மஞ்சள் நிற பட்டுப்புடவையில், ரம்யா மிகவும் அழகாய் இருந்தாள். அன்று காலை கங்கா ஸ்நானம் செய்துவிட்டு வந்தவன், இவளைக் கண்டவுடன் என்னமோ ஆகிவிட்டான். ‘இவ சும்மாவே நச்சுன்னு இருப்பா. இன்னிக்கி அநியாயத்துக்கு அள்றாளே!’ என்று பெருமூச்சுவிட்டான். வெறும் துண்டைக்கட்டிக்கொண்டு, சிலை போல நின்றவனிடம் சென்றாள். அவனைக் காண ஏனோ தயக்கமாக இருந்தது, ரம்யாவிற்கு. அவள் தயங்குவது எதற்கென்று தெரியாமல், இவனைக் கண்டு அவள் வெட்கப்படுவதாய் எண்ணி, அசடு வழிந்தான். ஆசையில் ஏதேதோ கற்பனைகள் வேறு!!
“சீக்கிரம் ட்ரெஸ் போட்டுட்டு வாங்க. சாமி கும்பிடனும்” என்று கூறிவிட்டுச் சென்றாள்.
‘ச்ச… இவ்ளோ தானா?!’, என்று நொந்துகொண்டு அறைக்குள் சென்றான். உடை உடுத்தினான். மனமெல்லாம் அவளை சுற்றியது.
எப்பொழுதும் போல், கல்யாண புகைப்படம் அருகில் சென்று நின்றான்.
‘ஏன்டி! சும்மாவே என்ன கைமா பண்ணுவ. இன்னிக்கு பட்டுப்புடவைல, முடியலடி! சுடிதார் போட்டு சாமி கும்பிட்டா, கோவிசிக்கிட்டு சாமி என்ன திரும்பியா நின்னுடப்போகுது?! டென்ஷன் பண்றடி’, என்று புலம்பிவிட்டு திரும்பினான். அறையின் கதவருகே அவள். செய்வதறியாது, ‘ஈ’ என்று கோல்கேட் புன்னகை செய்தான்.
“நேரம் ஆயிடுச்சு படைக்கணும்” என்றாள்.
“இதோ வந்துட்டேன்மா, நீ போ” என்று சமாளித்தான்.
“என்னது சுடிதார் போட்டிருக்க? பட்டுப்புடவை என்ன ஆச்சு?” என்றான். ரம்யா மஞ்சள் புடவையிலிருந்து, பச்சை சுடிதாருக்கு மாறி இருந்தாள்.
“நீங்க தானே என் போட்டோவை திட்டுனீங்க. அதான் மாத்திட்டேன்.”
“இதெல்லாம் ரொம்ப டூ மச். என்னமோ நான் பேசிட்டு இருந்தேன். நல்ல நாள் அதுவுமா… போ போய் புடவைய மாத்திட்டு வா. சாமி கோவிச்சுக்கும்… தெய்வ குத்தமாயிடும்” என்றான்.
‘இவன எதால அடிக்கலாம்?!’, என்று எண்ணிக்கொண்டு, அவனை முறைத்துக்கொண்டு அறையுள் சென்றாள். வெளியே வந்த அவனின் மஞ்சள் தேவதை, மீண்டும் அவனுக்கு டென்ஷன் கொடுத்தாள். அவள் பூஜை செய்யும்பொழுதெல்லாம், அவளையே பார்த்துக்கொண்டு நின்றான். அவன் அவளை ரசிப்பது சில காலமாக ரம்யாவிற்கு புரிந்திருந்தது. ஆனால் அதை அவள் பொருட்படுத்தவில்லை. இன்று, அவன் தன்னையே மறந்து இவளை ரசித்துக்கொண்டிருந்ததில் பொறுமை இழந்து, “சாமி அங்க இருக்கு” என்றாள்.
“தெரியுது”, என்று சொல்லி கண்மூடி கரம்கூப்பி வணங்கினான்.
“கடவுளே சீக்கிரமா என் பொண்டாட்டிய எனக்கு கரெக்ட் பண்ணிக்கொடு” என்று வேண்டினான். ஆர்வக்கோளாறில் மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து, உரக்கக் கூறிவிட்டான். அவன் சொன்னதைக் கேட்டு, உறைந்துபோய் நின்றாள், ரம்யா.
‘அய்யயோ! எனக்கு நானே ஆப்பு வச்சுட்டேனா? என்ன இப்படி பார்க்கறா?அப்படி என்ன சொல்லக்கூடாதத நான் சொல்லிட்டேன்?’ என்று நொந்துகொண்டான். மீண்டும் அவளைக்கண்டு ‘ஈ’ என்று இளித்துவிட்டு, அவ்விடம் விட்டு நகர்ந்தான். ‘என்ன ஆச்சு இவனுக்கு? கொஞ்ச நாளா இவன் பார்வையும், பேச்சும் ஒரு டைப்பா இருக்கு. ஒரு மார்கமா சுத்திக்கிட்டு இருக்கான்’ என்று மனதுள் ஏதேதோ யோசித்தபடி வேலையில் மூழ்கினாள், ரம்யா.
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைப்பூ
சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ
மை விழி ஜாடைகள் முல்லைப்பூ
மணக்கும் சந்தனப்பூ
சித்திர மேனி தாழம்பூ
சேலை அணியும் ஜாதிப்பூ
சிற்றிடை மீது வாழைப்பூ
ஜொலிக்கும் செண்பகப்பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ
மை விழி ஜாடைகள் முல்லைப்பூ
மணக்கும் சந்தனப்பூ
சித்திர மேனி தாழம்பூ
சேலை அணியும் ஜாதிப்பூ
சிற்றிடை மீது வாழைப்பூ
ஜொலிக்கும் செண்பகப்பூ
சுனிலின் மடிக்கணினியில் பாடல் ஒலிக்க, ரம்யாவின் படத்தின் முன் நின்றுகொண்டு, இவனும் பாடினான். இவன் பாடும் குரல் கேட்டு, ரம்யா அறையின் வாயிலில் வந்து நின்றாள். மெதுவாகக் கதவைத் திறந்தாள். அவன் ஏதோ நினைவுகளில் மூழ்கி இருந்தான். கதவின் சிறு கிடுக்கு வழியாக அவனை பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். அவன் பாடுவதைக் கேட்டு சொக்கிப்போனாள். ‘என்ன வாய்ஸ்!!’ என்று மெய் சிலிர்த்தாள். சிரித்துக்கொண்டிருந்தவனின் முகம் மாறியது. பாடுவதை நிறுத்தினான். ஒலித்துக்கொண்டிருந்த பாட்டையும் நிறுத்தினான். அவள் படத்தின் இருபுறமும், இரு கைகளையும் வைத்து, அருகில் சென்றான்.
“ரம்யா… என் ஸ்வீட்டி… என் செல்லக்குட்டி… ரொம்ப சந்தோஷமா இருக்குடா. என் மேல எவ்வளோ ஆசையா, அக்கறையா இருக்க. ஆசை ஆசையா சமைச்சு போடற. வீட்டை எவ்வளவு அழகா வச்சிருக்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு டா”
அவன் வலக்கை ஆள்காட்டி விரலை மடக்கி, அவள் கன்னத்தை மென்மையாக வருடினான்.
“தங்கம்… பூ மாதிரி இருக்கியேடா. நீ சிரிக்கும்போது மனசு பஞ்சு மாதிரி ஆயிடுது. உன்னை பார்த்துட்டே இருக்கணும் போல தோணுது. நீ எவ்வளவு அழகு தெரியுமா! உன்னை நோகடிக்க எப்படி என்னால முடிஞ்சுது? அன்னைக்கு கொஞ்சம் சுதாரிச்சு கண்ணை தொடச்சுட்டு ஒழுங்கா உன்னை பார்த்திருந்தா, ‘அய்யோ இந்த குழந்தையவா காயப்படுத்த நினைச்சோம்’னு விலகிப்போயிருப்பேன்டா. என்னோட தேவதையை துடிக்க வச்சுட்டேனே. அதுக்கு அப்புறமும் கூட உனக்கு என்ன ஆச்சுன்னு யோசிக்காம, உன்னை தேடாம விட்டுட்டேனே. நீ எவ்வளோ அழுதிருப்ப. எவ்வளோ துடிச்சிருப்ப. எல்லாமே என்னால தானே. இப்போ எல்லாத்தையும் மறந்து, என்னை அம்மா மாதிரி பார்த்துக்கறியே. எப்படிடா உன்னால முடியுது? உன்னை மாதிரியே உன் மனசு ரொம்ப அழகுடி என் செல்லக்குட்டி. இந்த மனசுக்குள்ள எவ்வளோ கனவு இருந்திருக்கும். எவ்வளோ ஆசை இருந்திருக்கும். எப்படி எப்படியோ வாழனும்னு ஆசை பட்டிருப்ப. கடைசில, உன்னை காயப்படுத்தினவனையே கண்ணும் கருத்துமா பார்த்துக்கற மாதிரி அந்த கடவுள் பண்ணிட்டானே. எவ்வளோ சாமி கும்புடற. உனக்கு இப்படி ஒரு கஷ்டத்தைக் கொடுக்க அந்த சாமிக்கு எப்படிடா மனசு வந்துச்சு? என் தங்கம்... உன்னை மடியில தூக்கி வச்சு, நெஞ்சோடு சேர்த்துக்கணும்னு தோணுதுடா. அப்படியே உன்னை இறுக்கப் பிடிச்சுக்கிட்டு, வாழ்க்கை பூரா பத்திரமா பார்த்துக்கணும்னு தோணுதுடா. என் தங்கம்… என் செல்லமா… ஐ லவ் யூ ரம்யா… ஐ லவ் யூ...”, என்று கூறி முடிக்கும் முன்னே அவன் கண்களில் நீர் வழிந்தோடியது. தரையில் மண்டியிட்டு அவன் அழத்தொடங்கினான். அவன் அழுவதைத் தாங்கமுடியாமல், அவ்விடம் விட்டுச் சென்றாள், ரம்யா.
அன்று அவள் அவளாக இல்லை. சுனிலோ எப்பொழுதும் போல், அனைத்தையும் மறைத்துக்கொண்டு, இயல்பாகவே இருந்தான். அவள் கண்ட காட்சியை, அவளின் மனம் அசைபோட்டுக்கொண்டிருந்தது.
அவன் கூறியதும், கண்ணீர் சிந்தியதும், ரம்யாவிற்கு இனம் புரியாத இன்பத்தைக் கொடுத்தது. ஆயினும், அவன் அழுதது அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ‘சுனில் என்னை இவ்வளோ நேசிக்கிறியா? என்னை உனக்கு பிடிக்குமா? மனசுக்குள்ள காதலை ஒளிச்சுவச்சுக்கிட்டு, வெளியில வெறும் பிரெண்டு மாதிரி வேஷம் கட்டறியா? ஏதோ நிர்பந்தத்துல இந்த கல்யாணம் நடந்துடுச்சுன்னு, நீ வேற வழி இல்லாம வாழ்ந்துட்டு இருக்கன்னு நினைச்சேன். ஆனா, எப்படி என் மேல இவ்வளோ அன்பு வந்தது? எனக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும், சுனில். ஆனா, இன்னைக்கு ஏன் என் மனசு இவ்வளோ வலிக்குது? நீ எனக்காக அழுததுக்கு நான் என் சந்தோஷப்படறேன்? ஓடி வந்து அழாத சுனில்னு சொல்லணும்னு ஏன் என்னோட மனசு தவிக்குது. எனக்கு ஒண்ணுமே புரியலையே. நானும் உன்னை நேசிக்கறேனா?? தெரியல.... சத்தியமா தெரியல… ஆனா, நீ அழாத சுனில். எனக்காக அழாத! நான் உனக்கு சந்தோஷத்தை மட்டும் தான் கொடுப்பேனே தவிர, வலிய இல்லை. அய்யோ… பைத்தியம் பிடிக்கற மாதிரி இருக்கு’ என்று புலம்பியபடி, தலையணை ஈரமாகும் அளவு அழுது தீர்த்தாள்.
நெஞ்சுக்குள்ளே காதல்
சொல்லிக்கொண்டா பூக்கின்றது??
உன் பெயரையே என் இதயம்
கேட்டுக்கொண்டா ஜபிக்கின்றது??
நினைவெல்லாம் நீயாக
அனுமதி பெற்றா நிறைகின்றது??
கண்களிலெல்லாம் உன் பிம்பம்
கூறிவிட்டா எழுகின்றது??
கண்கள் இமைக்கும் அரை நொடியில்
கடலெனத் திரண்டு எனைக் கவிழ்த்தாய்
என்னென்று நானும் அறியுமுன்னே
உந்தன் பித்தனாய் எனை மாற்றினாய்
சொல்லிடத் துணிந்து தேடுகின்றேன்
என் வார்த்தைகளை ஏன் களவாடினாய்?
காதலால் கனத்தது எந்தன் இதயம்
உன்தன் கையேந்தி சுகம் கூட்டுவாய்!!!
No comments:
Post a Comment