“குட் மார்னிங் நிஷா. எதுக்கு காலங்கார்த்தால போன் பண்ற?”
கலையாத தூக்கமும், குறையாத சோம்பலுமாய் இருந்தான், சுனில்.
“சுனில், மணி பத்தாகுது. இன்னும் எழுந்திரிக்கலையா?”
“இன்னைக்கு சனிக்கிழமை தான… எழுந்து என்ன பண்ணப்போறேன்?”
“நீ ரம்யாவ பிக் அப் பண்ணிட்டு வர்றியா? அவ இனிமேல் என் கூட தான் தங்கப்போறா. என் ரூம் மேட் காலி பண்ணிட்டா. இந்த டபுள் பெட்ரூம் வீட்ல நான் எப்படி தனியா இருக்கறது? அதான் அவளை ஸ்டுடியோவை காலி பண்ணி, இங்க வர சொல்லிட்டேன். ப்ளீஸ் போயிட்டு வா சுனில்.”
“சரி போறேன். அட்ரஸ் அனுப்பி வை.”
“அப்புறம் அந்த தடியனுங்கள கூட்டிட்டு போகாத. நீ மட்டும் போ.”
“சரி சரி”
இரண்டு பெட்டிகள், மூன்று பைகளோடு தனது அபார்ட்மெண்ட் வாயிலில் நின்றிருந்தபடி, அலைபேசியில் ஏதோ பார்த்திருந்த ரம்யா, எதிரே கிரீச்சிட்டு நின்ற காரின் சத்தத்தில் திடுக்கிட்டாள்.
“ஹாய் ரம்யா, சாரி பயந்துட்டியா?”
சுனிலைக் கண்டு சிநேகமான புன்னகை சிந்திய ரம்யா,
“ஹாய் சுனில்! நிஷா அனுப்பிவச்சாளா? வேண்டாம்னு சொன்னா அவ கேட்கல, உங்களுக்கு தான் வீண் சிரமம். நானே டாக்ஸில போயிருப்பேன்.”
“அப்புறம் பிரெண்ட்ஸ்னு நாங்க எதுக்கு இருக்கோம்” என்று சுனில் கூறிக்கொண்டிருக்கையில், அவன் அருகே வந்து நின்றான் எழில்.
எழில் காரினை ஓட்ட, அவன் அருகே அமர்ந்திருந்த சுனில், பின் இருக்கையில் அமர்ந்திருந்த ரம்யாவோடு பல நாட்கள் பழகியவன் போல் சகஜமாய் கதைத்துக்கொண்டு வந்தான்.
“என்ன ரம்யா, கத புக்கெல்லாம் ரொம்ப படிப்பியோ? உன் லக்கேஜ் ஏத்தும்போது கவனிச்சேன்.”
“கத புக்கா? கல்கி, பாரதி, பாரதியார்னு எல்லாம் இலக்கியம்.”
“எனக்கு எங்க எதிர்த்தவீட்டு பொண்ணு இலக்கியாவை தான் தெரியும். இலக்கியம் எல்லாம் தெரியாது.”
தனக்குள்ளே சிரித்துக்கொண்டாள் ரம்யா.
“வீட்ல கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கறாங்களா, ரம்யா?”
அவள் கேள்வியாய் நோக்க,
“இல்ல, பொண்ணுங்களுக்கு படிச்சு முடிச்சதும் கல்யாணம் பண்ணிடுவாங்க. செம ஜாலி. பசங்க தான் பத்து வருஷம் வெயிட் பண்ண வேண்டியிருக்கே. அதான் கேட்டேன்.”
“என்ன ஜாலி?? எங்க கல்யாணம் பண்ணிடப்போறாங்களோனு பயந்து தான் நான் இங்க வந்ததே.”
“அப்போ பாய் பிரெண்ட்?”
“அய்யய்யோ, அதெல்லாம் எதுவும் இல்லீங்க.”
“அப்போ ரூட்டு க்ளியர்” என்று தனக்குள்ளே சுனில் முணுமுணுத்ததை ரம்யா காதில் வாங்கியிருந்தாலும், அலட்டிக்கொள்ளவில்லை.
“இருந்தாலும் அநியாயத்துக்கு அக்மார்க் நல்ல பொண்ணா இருக்கியே!!”
இது வஞ்சப்புகழ்ச்சியோ என்று அவனை சந்தேகமாய் நோக்க, அவனோ புதிரான சிரிப்பொன்றை சிந்தினான்.
ரம்யாவை உற்சாகத்துடன் வரவேற்ற நிஷா, ரம்யாவிற்கென தயார் செய்திருந்த அறையைக் காட்டிவிட்டு, வரவேற்பறைக்கு வர, அங்கே எழில் மட்டும் அமைதியாய் தனது கைபேசியைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். யோசனையாய் கிச்சனுக்குள் சென்ற நிஷா,
“சுனில், உன்னை மட்டும் தானே போக சொன்னேன். எதுக்கு அவனை கூட்டிட்டு போன?”
“ப்ச், என் கார் கொஞ்சம் ரிப்பேர் ஆயிடுச்சு. அதான் அவனை கூட்டிட்டு போனேன்.”
“என்னவோ போ… ஆமா, இங்க என்ன நோண்டிட்டு இருக்க?”
“நிஷா ரொம்ப பசிக்குது. சமைக்கலயா?”
“இல்லடா, ரம்யா ரூமை ரெடி பண்ணிட்டு இருந்தேன்.”
“இல்லேனா மட்டும் அறுபத்தி நாலுவகை செஞ்சு அசத்தியிருப்பல?”
“அப்புறம் எதுக்கு தெரிஞ்சிட்டே கேட்குற? நான் எதுவும் சமைக்கல. சமைக்கவும் தெரியாது”, கடிந்து கொண்டாள் நிஷா.
“அரை மணி நேரத்துல நான் ஏதாவது செஞ்சு தரேன்” நிஷா கூறியதைக் கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்த ரம்யா குறுக்கிட்டாள்.
“ரொம்ப தேங்க்ஸ் ரம்யா. உப்பு, காரம் கூட குறைய இருந்தாலும் பரவால்ல. என்னால ஹோட்டலெல்லாம் போக முடியாது” என்று பாவம்போல் கூறிவிட்டு அவ்விடம் விட்டு நீங்கினான், சுனில்.
ரம்யா கூறியது போல், அரை மணி நேரத்தில் வெஜிடபிள் புலாவ் தயாரானது.
“ஹே சுனில், என்னோட போன்ல என்ன பண்ணிட்டு இருக்க? எப்போ பார்த்தாலும் கேம். வா சாப்பாடு ரெடி.”
பல நாட்கள் பட்டினி கிடந்தவர்கள் போல் சுனிலும், எழிலும் முந்திக்கொண்டு பந்தியில் அமர்ந்தனர்.
“வாவ் ரம்யா, ரொம்ப நல்லா இருக்கு. உனக்கு சமைக்கத் தெரியுமா?”
ரம்யாவை பாராட்டிக்கொண்டே, தனது தட்டில் இருந்த புலாவ் குன்றின் மேல் இரண்டு கரண்டி மேலும் அள்ளிப்போட்டு புலாவ் மலையாக்கினான், சுனில்.
“இப்போ தான் புரியுது, எதுக்கு இவ்வளவு ஆர்வமா நிஷா உன்னை ரூம் மேட்டா சேர்த்துக்கிட்டானு. ரொம்ப தேங்க்ஸ் ரம்யா. இப்படி ஒரு சாப்பாடு கிடைக்கும்னா என்ன ஹெல்ப் வேணும்னாலும் சொல்லு, நான் செய்யறேன்.”
பல விருந்துகளை எதிர்நோக்கி, பலமாய் நங்கூரம் போட்டான், சுனில்.
“உதவி பண்ணாதான் சாப்பாடுனு கிடையாது. எப்போ வேணும்னாலும் வீட்டுக்கு வாங்க. எனக்கு தெரிஞ்சதை சமைச்சு தரேன்.”
மீண்டும் ரம்யாவிற்கு நன்றிகூறிவிட்டு, விடைபெற்று சென்றனர் சுனிலும், எழிலும்.
இன்று, நியூயார்க் நகரில், கொட்டும் மழையை ரசித்தபடி, இந்திய உணவகத்தில் வெஜிடபிள் புலாவ் உண்கிறான். ரம்யாவைக் கண்டது முதல், கடந்த சில நாட்களாக வெவ்வேறு உணவகத்தில் வெஜிடபிள் புலாவ் ருசித்துவிட்டான். அனால் எதிலும் ரம்யாவின் கை மணம் இல்லை. சற்றுமுன் அவளோடு பேசிய ஒரு சில வார்த்தைகளின் ரீங்காரமும், தன்னுடன் பயணித்த அவளின் விலகிய அருகாமையும் மட்டும் அவனுள் இனித்தது.
வீட்டிற்குள் ஓடிச்சென்று தாழிட்டுக்கொண்ட ரம்யா, வெகு நேரம் ஜன்னலின் கண்ணாடி மேல் சடசட வென பெரும் சப்தத்துடன் கொட்டும் மழையைக் கண்டிருந்தாள். அன்று, புதுப்பிக்கப்பட்ட நிஷாவின் நட்பு, அவளின் வாழ்வை புரட்டிப்போடும் என்று துளியும் அவள் நினைக்கவில்லை. இன்று எரிச்சலூட்டும் மழையை அன்று நிஷாவின் வீட்டில், தனது அறையின் சாளரம் வழியே ரசித்திருந்தாள். அந்த இனிய தனிமையில் கவிதை தாங்கிய குறுஞ்செய்தி ஒன்று, அறியாத எண்ணிலிருந்து அவள் கைபேசியில் வந்து விழுந்தது. அந்த இரவு... அந்த கவிதையில்... தான் அறியாமல்... தன்னை தொலைத்தவள், இன்று அனைத்தையும் தொலைத்துவிட்டு நிற்கிறாள்.
விடியலில் ஒய்யாரமாய்
புல்லின் மேல் உறங்கும் பனி
கடும் பகல் சுடுவெயிலில்
முகம் வருடும் குளிர் தென்றல்
இரைச்சல்களின் மத்தியிலே
தனை மறந்து இசைக்கும் கருங்குயில்
மலர்தூவி ஆசீர்வதிக்கும்
சாலையோர செம்மயில் கொன்றை
தள்ளியே நடந்தாலும்
நம்மோடு உலவும் நிலவு
இதமான மழைக்குளியல்
தொடர்ந்து சூடான தேநீர்
சுகம் தந்த அனைத்திலும்
சுவாரஸ்யம் தீர்ந்ததடி!
ரம்யமானது அனைத்தும்
என் ரசனையை இழந்ததடி!
புன்னகைப் பூவே,
உனை மட்டும் நெஞ்சம் பற்றுதடி!
ரசனைகள் நீயாகிட,
அது தரும் ரம்யங்களும் நீயானாய்!!
அன்று கிச்சுக்கிச்சு மூட்டிய கவிதை இன்று கசந்தது. அன்று அந்த கவிதையை வாசித்த மறு நொடி, சுனிலின் முகம் அவள் மனதில் மின்னி மறைந்த நினைவும் இன்று கசந்தது.
மறுநாள், ரம்யாவைக் காண வேண்டும் என்ற ஆவல் சற்று கூடுதலாக சுனிலுக்குப் பொங்கியது. ஏதோ அவளிடம் சொல்லவேண்டும் என்றொரு எண்ணம் தோன்றிக்கொண்டே இருந்தது. வழக்கமாக செல்லும் வழியில், அவள் நடந்து வந்துக்கொண்டிருந்தாள். ஏனோ மிகவும் அழகாய் இருந்தாள். இல்லை, அவனுக்கு மிகவும் அழகாய்த் தெரிந்தாள். நேற்று போல், பதட்டங்கள் இன்று பெரிதாக அவனை சூழவில்லை. அவளருகே சென்றான்.
“ரம்யா, உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.”
அவள் பதில் கூறவில்லை.
“ஒரு காபி சாப்டுட்டே பேசலாமா?”
“பேசறதுக்கு ஒன்னும் இல்ல”, என்று கூறிவிட்டு கடந்து செல்ல எத்தனித்தாள்.
“ரம்யா ப்ளீஸ், ஒரு பத்து நிமிஷம்… எனக்காக… ப்ளீஸ்...”
கண்களை மூடிக்கொண்டு, வலக்கை விரல்களால் நெற்றியை வருடிக்கொண்டு நின்றாள்.
“நான் தப்பான நோக்கத்துல கேட்கல. ஒரு பத்து நிமிஷம்… ப்ளீஸ்”
காபி ஷாப்பில், அவள் எதிரே அமர்ந்துகொண்டு, தன்னை மறந்து அவளை ரசித்துக்கொண்டிருந்தான். வேண்டாவெறுப்பாக அமர்ந்திருந்த அவளோ, தவித்துக்கொண்டிருந்தாள்.
“நான் கிளம்பறேன். காபிக்கு ரொம்ப தேங்க்ஸ்”, என்று கூறியபடி அவள் எழுந்தாள்.
“அய்யோ ரம்யா… ஒரு நிமிஷம், நான் பேச நினைச்சத இன்னும் சொல்லவே இல்லை...”
அவள் அமர்ந்தாள்.
“ஐ அம் சாரி ரம்யா… ஈஸியா சாரி சொல்லிட்டேன்… ஆனா, உங்க கஷ்டம் அதனால தீர்ந்துடாதுன்னு தெரியும்… என் நிலையில இல்லாம, அப்படி ஒரு…”, என்று கூறுகையில் அவன் குரல் கம்மியது. அவனால் அதற்கு மேல் அவள் முகத்தைப் பார்க்க இயலவில்லை.
அவள் சலனமின்றி அமர்ந்திருந்தாள். மறுத்துப்போய், பண்பட்டு, இன்று ரம்யாவின் மனம் பக்குவப்பட்டிருந்தது.
“என்னை மன்னிச்சுடுங்க ரம்யா...”
அவள் ஏதோ யோசனையில் மூழ்கிப்போயிருந்தாள். பழயவற்றைப் பேசி, அவளை நோகடித்துவிட்டோமோ என்று அவனுக்குக் குற்ற உணர்வு துளிர்த்தது.
“ஏதாவது பேசுங்க ரம்யா.”
“நிஷா… நிஷா எப்படி இருக்கா?”
“நிஷாவா? தெரியலையே...”
அவள் நெற்றி சுருங்கி, அவனை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.
“அந்த பிரச்னைக்கப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு அவ கல்யாணம் பண்ணி, லண்டன்ல செட்டில் ஆயிட்டா… அவ்ளோ தான் எனக்கு தெரியும்… நான் அவளோட கோன்டேக்ட்ல(contact) இல்ல...”
‘அய்யோ!’ என்று பதரியது ரம்யாவிற்கு. தன்னால், தனக்கு மட்டுமல்ல நிஷாவிற்கும் இத்தனை பெரிய தண்டனையா என்று ரம்யாவின் மனம் வாடியது.
“நேத்து என்ன வீட்ல ட்ராப் பண்ணதுக்காக, ஒரு மரியாதைக்கு காபி ஷாபுக்கு வந்தேன்… இனிமேல் என்ன தொந்தரவு பண்ணாதீங்க ப்ளீஸ்!” என்றவள், கதவின் பின்னே மறைந்து போனாள்.
சுனில், ரம்யா கேட்டுக்கொண்டதின் பேரில், இரண்டு மூன்று நாட்கள் அவளை பின்தொடராமல், தன்னை கட்டுப்படுத்திட முயற்சி செய்தான். ஆனால், அவளைக் காண வேண்டும் என்ற ஆவல் தலை தூக்க, அவனது கட்டுப்பாடுகள் கரைந்துபோயின. அவளுக்குத் தெரியாமல், மீண்டும் அவளை பின் தொடர்ந்தான். ஏனோ அவள் அழகு கூடிக்கொண்டே போவது போல் இருந்தது. அவளைக் காணும் நொடிகள், அவனுக்கு மெய் சிலிர்த்தது.
ஒரு மாலை, அவளுக்காக காத்திருந்தான். நேரம் ஆகியும் அவள் வராதாதால், படபடத்தான். அவள் வரும் பாதை அருகே நின்று கொண்டு, முன்னும் பின்னும் பார்த்துக்கொண்டே, பொறுமையை மெல்ல இழந்துகொண்டிருந்தான். நடைப்பாதையின் மத்தியில் நின்று கொண்டு, எம்பி எம்பி தேடினான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவள் இல்லை. ஏதோ கோபமும், அழுகையும் முட்டிக்கொண்டு வரும்போல் ஆகிவிட்டது அவனுக்கு.
“எக்ஸ்கியூஸ்மீ”, என்றொரு குரல், அவன் பின்புறம் கேட்டது. அவள் தான்! திடீரென உற்சாகமும், சந்தோஷமும் பீரிட்டு எழுந்தது.
திரும்பி அவளைப் பார்த்து அவன் சிரிக்க, ‘நீ திருந்தவே மாட்டியா?’ என்பதுபோல் ஏளனப் பார்வையை வீசினாள்.
“ஹாய் ரம்யா, எப்படி இருக்கீங்க?” என்றான். அவனின் குதூகளம், அவன் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது.
“கொஞ்சம் வழிவிடறீங்களா?”
டக்கென ஒதுங்கி நின்றவன், அவள் நடக்கத் தொடங்கியதும் அவளிடம் பேச வேண்டும் என்று ஆவல் பொங்கி எழ,
“ரம்யா உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்”, என்று அவளை வழிமறைத்தான்.
என்ன சொல்லவேண்டும் என்று அவன் முடிவு செய்திருக்கவில்லை. பேசவேண்டும் என்ற ஆவலில் அவன் ஏதோ உளறிவிட்டான். அவனை ஏற இறங்க சில நொடிகள் பார்த்துவிட்டு, ரம்யா நகர,
“நிஷா…” என்று அவன் கூற, அவள் நின்றாள்.
“ரம்யா, நிஷாவுக்கு குழந்தை பிறந்திருக்கு… பெண் குழந்தை… உங்ககிட்ட சொல்லலாம்னு வந்தேன்” என்றான். இது இரண்டு மாதத்து பழைய செய்தி. நிஷாவின் உறவுக்காரர் ஒருவர் சுனிலின் அம்மாவிற்கு மிகவும் நட்பு. நிஷாவுடன் தொடர்பில் இல்லை என்றாலும், அவளின் உறவுக்காரர் மூலம் அவள் சௌகரியமாக, சந்தோஷமாக இருக்கிறாள், என்ற உணர்வே அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. தக்க சமயத்தில் அச்செய்தி அவனுக்கு உதவியது.
அச்செய்தியைக் கேட்டவுடன், ரம்யாவின் முகத்தில் முதன்முறை அவன் ஒரு அழகிய, மெல்லிய புன்னகையைக் கண்டான். அந்த காந்தப் புன்னகை, அவன் நெஞ்சுக்குழிக்குள் ஒட்டிக்கொண்டது. அவள் கண்கள் விசாலமாக, இவன் அதில் மயங்கி, புதைந்துபோனான். “ஓ கே… தேங்க்ஸ்”, என்று கூறிவிட்டு நீங்கிச்சென்றவளின் புன்னகை மறையாமல் அவள் இதழில் ஓட்டிக்கொண்டிருந்தது.
முற்றும் நிலை குழைந்துபோனான், சுனில். அவன் மனதுள் மடிந்து, மக்கிய உணர்ச்சிகள் மீண்டும் துளிர்க்கத் தொடங்கின. அவனின் நினைவுகளை ரம்யா ஆளத்தொடங்கினாள். என்ன வேலை செய்தாலும், அவளின் நினைவலைகள் இவனை அவ்வப்போது தீண்டிவிட்டுச் சென்றன. ஒரு புறம், ஒரு வகையான பேரானந்தம். மறு புறம், மறுக்க முடியாத குற்றவுணர்வு. அவளிடம் பேசும் ஆர்வம் குறைந்து, சளைக்காமல் அவளை பார்த்திருக்கவே மனம் ஏங்கியது. ஏனோ அவளை நெருங்கி, வெறுப்பை மேலும் பெற்றுக்கொள்ள அவன் விரும்பவில்லை. அவனது வெறுமையான வாழ்வும், மனமும் வளம் பெற்றது. அவனது உற்சாகம் மீண்டும் அவனை கட்டிக்கொண்டது.
No comments:
Post a Comment