Friday, 29 November 2019

ஒரு முடிவில் ஒரு தொடக்கம் - 14

சுனிலின் தந்தை சிதம்பரத்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினார். சுனில் தன் தாயிடம் மட்டும் தொலைபேசியில் உரையாடினான். எப்பொழுதும் போல், தன் தந்தையிடம் பேசுவதைத் தவிர்த்தான். இதை கவனித்துக்கொண்டிருந்த ரம்யாவிற்கு, சுனிலின் மேல் கோபம் வந்தது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, அவனது தவறை சுட்டிக்காட்டிட எண்ணினாள்.
“என்னங்க, மாமா எப்படி இருக்காங்களாம்? பேசினீங்களா?”
“இப்போ பரவாயில்ல. ஓரளவு சாப்பிட ஆரம்பிச்சுடாங்கன்னு அம்மா சொன்னாங்க.”
“மாமாவுக்கு என்ன ஆச்சு?”
“என்னமோ இன்பெக்ஷன் (infection). அம்மாவுக்கு சொல்ல தெரியல.”
“அத்தைக்கு தெரியலனா என்ன? மாமாவுக்கு தெரியும்ல. மாமாகிட்ட கேட்டீங்களா?”
“ரம்யா, நான் என் அப்பா கூட பேசறது இல்ல.”
“எனக்கு தெரியும். அங்கிருந்து ஊருக்குக் கிளம்பர நேரத்துல கூட, மாமா கிட்ட போய்ட்டு வரேன்னு ஒரு வார்த்தைகூட சொல்லல.”
“அதை விடு ரம்யா.”
“அப்படி எல்லாம் விடமுடியாதுங்க.”
“இப்போ என்ன பண்ண சொல்ற?”
“மாமா கிட்ட போன் பண்ணி பேசுங்க.”
“ப்ளீஸ் ரம்யா. அதெல்லாம் முடியாது. உனக்கு சொன்னாலும் புரியாது”
“என்ன புரியாது? மாமாவுக்கு மனக் கவலை. அதான் உடம்பு சரி இல்லாம போயிருக்கும்னு எனக்கு தோணுது. ஒரு பிள்ளையா நீங்க இவ்வளவு நாள் என்ன கடமை செஞ்சீங்கன்னு தெரியாது. ஆனா, இப்படி உடம்பு சரி இல்லாத நேரத்துல கூட பரிவா ரெண்டு வார்த்தை பேசலனா என்ன அர்த்தம்? இது ரொம்ப தப்பு.”
“போதும் ரம்யா. விட்டுடு. இதுக்கு மேல பேசாத.”
சுனில் எழுந்து தனது அறைக்குள் சென்று, கட்டிலின் மேல் படுத்துக்கொண்டான். ரம்யாவிற்கு தயக்கம் என்றாலும், இதை இப்படியே விட்டுவிட அவளுக்கு மனம் வரவில்லை.
மிகவும் சாந்தமான குரலில்,
“என்னங்க, அன்னைக்கு மாமா என்கிட்ட அப்படி பேசினது தான் உங்க கோபத்துக்கு காரணம்னு எனக்கு தெரியும். அதுக்காக இவ்வளவு பெரிய தண்டனை எல்லாம் கொடுக்கக்கூடாதுங்க. ஆயிரம் தான் இருந்தாலும், உங்க அப்பா. அன்னைக்கு மாமா அப்படி பேசினது ஒரு மூணாவது மனுஷனா இருந்து பார்த்தா தப்பா தெரியும். ஆனா, அன்னைக்கு சராசரி மனுஷனா இல்லாம, ஒரு அப்பாவா மட்டுமே நடந்துக்கிட்டார். அந்த சம்பவத்தால உங்க வாழ்க்கை பாழாயுடுமோன்னு பயமும், எப்படியாவது உங்க எதிர்காலத்தைக் காப்பாத்தணும்ங்கற ஆதங்கமும் தான், அவர் கிட்ட இருந்தது. அவர் நிலையில யார் இருந்தாலும், ஏன் நானே இருந்தாலும், என் பிள்ளையை எப்படியாவது பிரச்சனையிலிருந்து மீட்டு, எல்லாத்தையும் சரி கட்டணும்னு தான் நினைப்பேனே தவிர, பிள்ளைய பலி கொடுக்க யாருக்கு மனசு ஒப்பும்?! ஆனா, அப்புறம் எங்க வீட்டுக்கு பொண்ணு கேட்டு வந்தது மாமா தானே. ஹாஸ்பிட்டல்ல என்னோட சொந்தக்காரங்க சண்டபோட்டபோது, எல்லாரையும் சமாளிச்சு மன்னிப்பு கேட்டதும் மாமா தானே. இந்த கல்யாணத்த முன்ன நின்னு நடத்தினதும் மாமா தானே. அதெல்லாம் நினைச்சு பார்க்க வேண்டாமா? எப்பவுமே நல்ல அப்பாவா தான் இருந்திருக்காங்க.  மாமாவுக்கு உடம்பு சரி இல்லன்னு கேள்விபட்டதும், நீங்க வருத்தப்பட்டு கண்கலங்குனதுலயிருந்து, அவர் மேல உங்களுக்கு எவ்வளவு பாசம் இருக்குனு எனக்கு புரிஞ்சுது. இது வரை போனது போகட்டும். இனியாவது எல்லாத்தையும் மறந்துட்டு, மாமாகிட்ட பேசுங்க ப்ளீஸ்...” என்றாள். சுனில் எதுவும் பேசாமல், அவள் கூறுவதில் நியாயம் உண்டென்பதுபோல் மௌனமாய் இருந்தான். ரம்யா தனது மாமாவை கைபேசியில் தொடர்புகொண்டாள்.
“ஹலோ” என்றவரது குரலில் தளர்ச்சி தென்பட்டது.
“அப்பா… நான் ரம்யா பேசறேன். எப்படி இருக்கீங்க?”
வெகு நாட்கள் கழித்து, ‘அப்பா’ என்ற வார்த்தை கேட்டதும், கலங்கிவிட்டார் போல. 
“நல்லா… நல்லா இருக்கேன்மா… நீ எப்படி இருக்க?” என்று அவர் கூறி முடிக்கும் முன், அவரது கலக்கம் புரிந்தது ரம்யாவிற்கு.
“நல்லா இருக்கேன்பா. இப்போ உங்க உடம்பு எப்படி இருக்கு அப்பா?”
அவர் கண்கலங்கிவிட்டார்.
“ரம்யாமா… என்னை மன்னிச்சுடுமா… ஒரு மனுஷனா கூட நடந்துக்காத என்னை, ‘அப்பா’னு வாய் நிறைய கூப்பிடறயே?! என்னை மன்னிச்சுடுமா.”
“அப்பா ஏன் இப்படி சொல்றீங்க. அதெல்லாம் நான் எப்பவோ மறந்துட்டேன். நீங்க வருத்தப்படாதீங்க. இப்போ தான் கொஞ்சம் உடம்பு தேறியிருக்கு. ப்ளீஸ் வருத்தப்படாதீங்கபா.”
“ரொம்ப நல்ல பொண்ணா இருக்க. நான் தான் புரிஞ்சுக்காமா விட்டுட்டேன்… ரம்யா, சுனில் எப்படி இருக்கான்?”
“ஒரு நிமிஷம் அவர்கிட்டயே கொடுக்கறேன்” என்றுவிட்டு கைபேசியை அவனிடம் நீட்டினாள். அவன் வாங்க மறுக்க, “நீங்க இப்போ அப்பாகிட்ட பேசலேனா, ஜென்மத்துக்கும் நான் உங்ககிட்ட பேசமாட்டேன்” என்று அவனுக்கு மட்டும் கேட்கும்படி கோபமாய்க் கூறினாள். 
சுனில் கலங்கியவாறு கைபேசியில்,
“அப்...பா…”, என்று கூறிமுடிக்கும் முன்னே அழுதுவிட்டான். தன் தந்தையோடு அவன் மனதாரப் பேசித் தீர்க்கட்டும் என்று அவனை தனிமையில் விட்டுவிட்டு, கிச்சனுக்கு சென்றாள், ரம்யா.


சிறிது நேரம் கழித்து, அறையைவிட்டு வெளியே வந்தவனின் முகம் அழுது தோய்ந்திருந்தாலும், முகத்தில் ஒருவித மலர்ச்சி தென்பட்டது. ரம்யாவின் அருகில் சென்றான். அவன் முகத்தெளிவையும், புன்னகையையும் கண்டு, அப்பாவும் பிள்ளையும் சமாதானமாகிவிட்டனர் என்று ரம்யாவிற்கு மகிழ்ச்சி.
அவள் கண்களையே கண்டான். அடுத்த நொடியே, அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான். அவன் நெஞ்சில் இவள் முகம் புதையுமளவு நெருக்கம். அவன் மூச்சின் வெப்பமும், இறுக்கமும், அவளை மெய் மறக்கச் செய்தது. கண்களை மூடியபடியே சொக்கிப்போனாள். சுனிலுக்கு, அவள் மேல் காதலும், பெருமிதமும் பொங்கியது. காதலின் ஆழத்தை, நெருக்கத்தின்  இறுக்கத்தால் தன்னை அறியாமல் உணர்த்தினான். சில நிமிடங்களில் நிலையுணர, ரம்யாவை விடுத்தான். அவன் முகத்தைக் காணமுடியாதபடி, வெட்கம் அவளைப் பிய்த்துத் தின்றது. 

“ரொம்ப தேங்க்ஸ் ரம்யா. என் மனசுல இத்தனை நாளா உறுத்திட்டு இருந்த ஒரு விஷயத்தை, ஒரே நிமிஷத்துல சரி பண்ணிட்ட. அப்பாகிட்ட பேசினதுக்கு அப்புறம் தான் நிம்மதியா இருக்கு. தேங்க் யூ சோ மச்...” 
“இதுக்கு எதுக்கு தேங்க்ஸ்? மனசவிட்டு பேசிட்டா பிரச்சனையே இல்லையே”
அவனது முகத்தை நோக்கினாள். சலனமின்றி புன்னகைத்தபடி இருந்தான். தன் தந்தையுடனான பிணக்கம் நீங்கிய மகிழ்ச்சி ஒரு புறம், அவளை ஆரத்தழுவிய கிளர்ச்சி மறு புறம் அவன் மூளையை மேய, ரம்யா சொல்வதன் உள் அர்த்தத்தை உணரும் அளவு ஆராய்ச்சித் திறனை, அவன் மூளை தற்காலிகமாக இழந்திருந்தது.
“உண்மை தான் ரம்யா. எனக்கு ரொம்ப பசிக்குது.”

தந்தையின் உடல் நிலையால், சரியாக உண்ணாமல் உறங்காமல் வருந்தியவன், வயிறார உண்டுவிட்டு, நிம்மதியாக உறங்கிப்போனான், விரைவில் ரம்யாவுடன் சேரும் நாளின் கனவுகளோடு.

அவனது மகிழ்ச்சி ஆரவாரம் வெகு நாட்கள் நீடிக்கவில்லை. ஏதேதோ யோசித்து யோசித்து, தன்னை தெளிவாகப் குழப்பிக்கொண்டான். அவனது மனமும், புத்தியும், முரனாகப் பேச, அவனுள் பாரதப் போரே அரங்கேறியது.

இதயம் : ரம்யா… எனக்கே எனக்குன்னு பிறந்த தேவதை.
புத்தி : என்ன சொல்ல வர?
இதயம் : எனக்கு சந்தோஷத்தை அள்ளி கொடுக்க வந்த என்னோட தேவதை.
புத்தி : தேவதை தான். எல்லா கஷ்டத்தையும் மறைச்சு, சந்தோஷத்தையும் நல்லதையும் கொடுக்கற அவ தேவதை தான். ஆனா, அவ உனக்கே உனக்குன்னு பிறந்தவனு எப்படி சொல்ற?
இதயம் : ----
புத்தி : பதில் சொல்லு.
இதயம் : அவ கண்ணுல காதலை பார்த்தேன்.
புத்தி : கண்ணுல பார்த்தேன், காதுல கேட்டேன்னு இந்த சினிமா வசனமெல்லாம் பேசாத. அவ உன்கிட்ட சொன்னாலா? இல்ல நீதான், உன் மேல அவளுக்கு விருப்பம் இருக்கா இல்லயானு கேட்டியா? 
இதயம் : அவ சொல்ல தேவை இல்லை. நான் அவ காதலை உணர்ந்தேன்.
புத்தி : ரம்யா ரொம்ப நல்ல பொண்ணு. குழந்தை மனசு. அவ வெள்ளந்தி தனத்த காதல்னு நீயே கற்பனை பண்ணிக்கறது முட்டாள் தனம்.
இதயம் : அன்னைக்கு கட்டிபிடிச்சபோது அவ ஒன்னுமே சொல்லலயே. விலகிப் போகவும் இல்லையே. என்ன பிடிச்சிருந்ததாலே தானே அமைதியா இருந்தா?
புத்தி : கட்டிபுடிச்சா காதலா? அமெரிக்கால இருந்துட்டு, இப்படி பேசற? அன்னைக்கு அப்பாவ நினைச்சு வருத்தத்துல இருந்ததால, வசூல் ராஜா படத்துல வர்ற மாதிரி கட்டிபுடி வைத்தியம் பண்ணியிருப்பா.
இதயம் : அப்போ என் மனசுல தோணுனதெல்லாம் பொய். நான் உணர்ந்ததெல்லாம் பொய். அதானே?
புத்தி : முதல்ல சுயநலமா யோசிக்கறத நிறுத்து. உன்னை பத்தியே யோசிக்கறியே. அவளுக்கும் மனசு இருக்குல்ல. அதுல என்னென்னமோ ஆசை இருக்கும்ல. அதை பத்தி நினைச்சு பார்த்தியா?
இதயம் : அவள சந்தோஷமா வச்சுக்கதானே நான் இருக்கேன். 
புத்தி : இல்ல. அவ உன் கூட இருக்கறதால நீ சந்தோஷமா இருக்க. அவ இருக்காளானு  உனக்கு தெரியுமா? 
இதயம் : ஆமா. அவ என்கிட்ட சிரிச்சு பேசறா. சகஜமா நடந்துக்கறா.
புத்தி : ஹே லூசு. அதெல்லாம் சந்தோஷமா இருக்கறதுன்னு அர்த்தம் கிடையாது.
இதயம் : நான் அவளை உண்மையா நேசிக்கறேன்.
புத்தி : உண்மையா நேசிச்சா, அவ கிட்ட மொதல்ல பேசி, அவ மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கோ. என்ன பண்ணா அவ சந்தோஷமா இருப்பாளோ, அதை பண்ணு. அதான் உண்மையான காதல்.
இதயம் : எனக்கு குழப்பமா இருக்கு.
புத்தி : இங்க பாரு, அவ உன்கூட இருக்கறத விட நிம்மதியா, சந்தோஷமா இருக்கறது தான் முக்கியம்.
இதயம் : நீ ஒரு சாடிஸ்ட்.
புத்தி : நீ ஒரு எமோஷனல் சைக்கோ. 
இதயம் : எதார்த்தமா பேசறதா நெனச்சு, என்ன ரொம்ப காயப்படுத்தற.
புத்தி : ஹ்ம்ம்… நானாவது பரவாயில்ல. உனக்கு நீயே என்னென்னமோ கற்பனை பண்ணிட்டு, கனவு கண்டுட்டு, நீ அடுத்தவங்களை கஷ்டப்படுத்தற.
இதயம் : (ரத்தம் வடிய அழுகின்றது)
புத்தி : கொஞ்சம் பிராக்டிக்கலா யோசி. அவ உனக்கு எவ்வளோ நல்லது பண்ணி இருக்கா? பதிலுக்கு நீ அவளுக்கு ஏதாவது பண்ண வேண்டாமா? மனசு விட்டு பேசு. ஒரு வேலை நீ நம்பற மாதிரி, உன் மேல அவளுக்கு விருப்பம் இருந்தா- ‘இனி எல்லாம் சுகமே!’ இல்லேன்னா - ‘எங்கிருந்தாலும் வாழ்க!’
இதயம் : (ஓ! வென்று ஓலமிடுகிறது).
இறுதியில், புத்தியின் புத்திமதியே வென்றது!


ரம்யாவின் புகைப்படம் அருகில் நின்று, ‘ரம்யா... ரம்யா’ என்று மெல்லிய குரலில் முனகினான். எதேச்சையாக அறைக்குள் நுழைய எத்தனித்த ரம்யா, அவன் நிலையைக் கண்டு, வாயிலின் அருகே ஒலிந்துகொண்டாள்.

“ரம்யா… ரொம்ப குழப்பமா இருக்குடி. என் மனசு ஒன்னு சொல்லுது. புத்தி ஒன்னு சொல்லுது. ஒன்னும் புரியலடி. நீ எனக்கு வேணும்னு மட்டும் தெரியும். ஆனா, கேட்க தைரியம் இல்ல. நீ எவ்வளவோ சகஜமா பழகற. நிறைய ஓப்பனா பேசற. இருந்தும் ஏன் அந்த சம்பவத்தைப் பத்தி, ஒரு வார்த்தை கூட கேட்கமாட்டேங்குற? நானும் அதுக்கு மன்னிப்பு கேட்கணும்னு நினைக்கறேன். ஆனா, அதை எல்லாம் பேசி உன்னை அப்செட் பண்ண விரும்பாமலேயே, அப்படியே விட்டுட்டேன். உரிமையா அன்னைக்கு அப்பாகிட்ட பேச சொல்லி சண்டை போட்ட மாதிரி, ஏன் என் சட்டையை பிடிச்சு ‘ஏன் அப்படி பண்ண’னு கேட்கமாட்டேங்கற ரம்யா? ‘என்னை நோகடிக்க உனக்கு எப்படி மனசு வந்தது’ன்னு ஏன் கேட்கமாட்டேங்கற? ‘ஆசை ஆசையா காதலிக்கபோற உன் காதலியை நோகடிக்க எப்படி உன்னால முடிஞ்சுது’ன்னு ஏன் கேட்கமாட்டேங்கற? ‘செல்லம், தங்கம்னு மடியில வச்சு கொஞ்சாம, ஏன் அப்படி பண்ண’னு ஏன் கேட்கமாட்டேங்கற?’பூ மாதிரி இருக்கற என்னை கசக்கி ஏறிய எப்படி உனக்கு மனசு வந்தது’னு ஏன் கேட்கமாட்டேங்கற? 

நீ கேட்டா என்கிட்ட சொல்ல பதில் இல்லை ரம்யா. என்னை மன்னிச்சுடுன்னு, உன் மடியில தான் படுத்து அழுவேன். என்ன வேணும்னாலும் திட்டு. ஆனா, என்னை தயவு செஞ்சு மன்னிச்சுடு ரம்யா. உன்னோட வாழணும்!!

ஹ்ம்ம்… என்னென்னமோ கற்பனை பண்ணிக்கறேன்ல? சாரிடா. உன் மனசுல இருக்கற கனவு, ஆசையெல்லாம் தெரிஞ்சுகிட்டு, அதை நிறைவேத்தபோறேன். நீ யாரையாவது விரும்பினியானு தெரியல. அப்படி எதுவும் இருந்தா, நீ ஆசைப்பட்ட வாழ்க்கையை அமைச்சுகொடுப்பேன். இல்ல வேற எந்த கனவு இருந்தாலும், அதையும் நிறைவேத்துவேன். ஒரு வேளை… ஒரு வேளை… நீ என்னை நேசிக்கறேனா என் கண்ணுக்குள்ள வச்சு உன்னை பார்த்துக்கறேன்டி...”

இரவெல்லாம் ரம்யா அழுது தீர்த்தாள். அவனின் இந்த நிலைக்கு தான் தான் காரணம் என்ற உண்மை அவளைக் கொன்றது. அன்று உண்மை அறியும் வரை, அவளின் உயிர் காதலாக இருந்தது சுனில் மட்டுமே. அவன் மீது கொண்ட அதீத அன்பே அவனிடம் அவளை இழக்கச் செய்தது. அன்று நிகழ்ந்தது காதலின் அரங்கேற்றம் என்றால், அதில் நாயகி இவளே. அன்று நடந்தது ஆசையின் வேட்டை என்றால் சரி பாதி குற்றம் செய்தவளும் இவளே.


No comments:

Post a Comment