சுனிலின் மனப்போராட்டம் கொழுந்து விட்டெரிந்தது. அவள் புகைப்படம் அருகே,
‘ரம்யாமா… என்னை உனக்கு பிடிச்சிருக்கா இல்லையாடா? செல்லமா, உன் மேல உயிரே வச்சிருக்கேன்டா. ஒவ்வொரு நாளும், உன் மேல காதல் வளர்ந்து மூச்சு முட்டுது. உன்கிட்ட என் மனசுல உள்ளத சொல்லணும்னு ரொம்ப ஆசையா இருக்கு. உன்னோட அந்த கண்ணு ரெண்டுளையும், காதலைப் பார்க்கணும்னு ஆசையா இருக்கு. என் காதலை சொல்லட்டுமா? வேண்டாமா? சொன்னா என் காதலை ஏத்துப்பியா? என்னை ஏத்துப்பியா? சொல்லி, உன்னை காயப்படுத்திடுவேனோன்னு பயமா இருக்குடா. நீ என் கூட கள்ளம் கபடம் இல்லாம பழகறத, நான் எப்படி அர்த்தம் பண்ணிக்க? இது வெறும் நட்பு தானா? என்னால அப்படி எடுத்துக்க முடியலடா. ஏற்கனவே என்னால உனக்கு ஏற்பட்ட கஷ்டத்தை நினைச்சே, குற்ற உணர்ச்சில தவிச்சுகிட்டு இருக்கேன். மேலும் உன்னை காயப்படுத்த மனசு வரலடா. அதே நேரத்துல, உன் மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சுக்க ஆசையாவும் இருக்கு. ஆனா, உன் மனசுல நான் இல்லாம… வேற யாராவது…’ கண்கள் கலங்க, அந்த புகைப்படம் மீது சாய்ந்தான். ‘உன் மனசுல வேற எண்ணம் இருந்தா, என்னால தாங்கமுடியாது ரம்யா. நான் அவ்வளோ நல்லவன் கிடையாது. நீ எனக்கே எனக்குன்னு வேணும்டி...’
அவன் கண்களில் கண்ணீர் வடிய, அவன் இதயத்துள் ரத்தம் வடிந்தது.
“என்ன ரம்யா, இன்னைக்கு ஆபிஸ் போகல?”
“இல்ல, போகல!”
“ஏன் என்ன ஆச்சு? உடம்பு சரியில்லையா?”
“அதெல்லாம் இல்லீங்க”
“ஏன் ஒரு மாதிரி இருக்க? என்னனு சொல்லு”
“இன்னைக்கு விரதம் இருக்கேன். அதான் போகல”
“எதுக்கு விரதம் எல்லாம்? எங்க அம்மாவும் இதே வேலையா சுத்திட்டு இருப்பாங்க. இப்போ நீயும் கெளம்பிட்டியா?”
“ஏதோ மனசுல தோணுச்சு அதான்…”
“என்ன தோணுச்சு?”
“மனசுல நெனச்சது நடக்க ஒரு வேண்டுதல்… அவ்ளோதான்...”
“என்ன நெனச்ச?”
“அது நடந்தும் சொல்றேன்.”
“இப்போவே சொல்லு.”
“வேண்டுதல் நிறைவேறினாதான் வெளிய சொல்லணும்.”
“சரி, அப்போ மனசுல உள்ள ஆசை நிறைவேறணும்னா, விரதம் இருந்தா நடக்குமா?”
“அப்படி’னு எனக்கு ஒரு நம்பிக்கை.”
“அப்போ நானும் விரதம் இருக்கேன்.”
“இதை ரெண்டு பிளேட் பொங்கலை உள்ள தள்றதுக்கு முன்னாடி முடிவு பண்ணியிருக்கணும். இஷ்டத்துக்கு இருக்க முடியாது. இந்தாங்க உங்க லஞ்ச் பேக்.”
மலர்ச்சியாய் இருந்த அவனது முகம், சோர்ந்து போனது.
“உன் சமையல் ரொம்ப நல்லா இருக்கு. அதான் விரும்பி நிறைய சாப்டுட்டேன். நீ எனக்காக கஷ்டப்படணும், சமைச்சு கொடுக்கணும்னு’லாம் நான் எதிர்பார்க்கல. நான் இனி கேண்டீன்ல சாப்பிட்டுக்கறேன். பை”, என்று தாழ்ந்த குரலில் கூறினான். அவன் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியானாள்.
“என்னங்க சும்மா தான் சொன்னேன்” என்று அவள் செல்வதற்குள், அவன் வாசலுக்குச் சென்றுவிட்டான்.
“என்னங்க உங்க லஞ்ச்”, என்று அவள் உரக்கச் சொல்ல, “எனக்கு தேவையில்லை”, என்று கோபமாய்க் கூறிவிட்டு சென்றுவிட்டான். ரம்யாவின் உள்ளமும், கண்களும் கலங்கின.
‘ச்ச… என்ன ஒரு காரியம் பண்ணிட்டேன்? ஒருத்தர் சாப்பிடறத போய் கிண்டல் பண்ணிட்டேன்… சுனிலுக்காகதானே பார்த்து பார்த்து செய்யறேன். அப்புறம் எதுக்கு புத்திகெட்டு போய் அப்படி சொன்னேன்! எப்பவுமே எல்லாத்தையும் ஸ்போர்ட்டிவா எடுத்துக்கற சுனில், இன்னிக்கு கோபப்பட்டாங்கன்னா, அப்போ எவ்வளோ ஹர்ட் ஆகி இருப்பாங்க?! முதல்ல சாரி சொல்லணும்’, என்று எண்ணிக்கொண்டு, அவனுடைய லஞ்ச் பேக்கை எடுத்துக்கொண்டு, அவன் அலுவலகத்திற்குப் புறப்பட்டாள்.
அவன் அலுவலகத்தின் வரவேற்பறையில் அமர்ந்திருந்தாள். பத்து நிமிடக் காத்திருப்புக்குப்பின் அவன் வந்தான். அவன் என்ன சொல்வானோ, எப்படி சமாதானப்படுத்துவது என்று யோசித்து யோசித்து, ரம்யாவிற்கு தலையே வெடித்துவிடும்போல் இருந்தது.
“என்ன ரம்யா? என்ன விஷயம்? இஸ் எவிரித்திங் ஓகே? என்ன ஆபிஸ் வரைக்கும் வந்திருக்க? ஏன் ரொம்ப டென்ஷனா இருக்க?”, என்று கேள்விகளை அடுக்கினான். அவனது பதட்டம் வெளிப்பட்டது.
“உங்க லஞ்ச் பேக்க நீங்க எடுத்துக்காம வந்துட்டீங்க. அத கொடுக்கத்தான் வந்தேன். என்னை மன்னிச்சுடுங்க. நான் அப்படி பேசியிருக்கக்கூடாது. ஐ அம் ரியலி வெரி சாரி”, என்று சொல்லி முடிக்கும் முன்னே அவள் கண்களில் கண்ணீர் கோர்த்தது.
“ஹே ரம்யா. கூல். இதுக்காகவா இவ்வளவு தூரம் வந்த? ஏன் இவ்வளோ பீல் பண்ற? நியாயமா நான் தான் சாரி சொல்லணும். இன்னிக்கு ஆபிஸ்ல முக்கியமான ப்ரெசண்டேஷன் இருக்கு. அந்த டென்ஷன்ல இருந்தேன். தேவை இல்லாம கோபப்பட்டு, உன்னை ரொம்ப காயப்படுத்திட்டேன். நீ என்ன இவ்ளோ அப்பாவியா இருக்க!? இதுக்கு போய் வருத்தப்பட்டு, இவ்வளோ தூரம் லஞ்ச் எடுத்துக்கிட்டு வந்து… வொய்?”, என்றான் சாந்தமாக.
ரம்யாவிற்கு ஒன்றும் புரியவில்லை. நடப்பதை நம்ப முடியவில்லை. அவனையே ப்ரம்மித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“அப்போ உங்களுக்கு என் மேல கொஞ்சம் கூட கோபம் இல்லையா?”
“இந்த கேள்விய நான் கேட்கணும்… இவ்வளோ நேரமா இப்படி பண்ணிட்டோமேனு ரொம்ப கஷ்டமா இருந்தது. அதுவும் இல்லாமா, லஞ்ச்ச வேற ஒரு ஆவேசத்துல வச்சுட்டு வந்துட்டோமேன்னு கவலை வேற. ஒரு வேலை உண்மையாவே இனிமேல் கேண்டீன்ல சாப்பிடணுமானு வேற பயம். ஒரே டென்ஷன். பேசாம கிளம்பி வந்து, ‘ஐ அம் சாரி’னு சரண்டர் ஆகிட்டு, லஞ்ச் பேக்க எடுத்துட்டு வந்துடலாமான்னு நினைச்சேன். அதுக்குள்ள நீயே வந்துட்ட”, என்று கூறி புன்னகைத்தான். அவளின் பயமும், குழப்பமும் நீங்கி, வாய் விட்டுச் சிரித்தாள்.
“எப்படி எப்படி, நான் அப்பாவியா?” என்று கேட்டுக்கொண்டே மீண்டும் சிரித்தாள்.
“சரி என்ன சாப்பிடற. வா, ஒரு காபி குடிக்கலாமா?”
“இல்லைங்க, பரவால்ல… நான் கிளம்பறேன்… யூ கேரி ஆன்” என்று கூறி எழுந்தாள்.
“இரு நான் வந்து ட்ராப் பண்றேன். ஆமா வரும்போது எப்படி வந்த? டாக்ஸில தானே?”
“இல்லீங்க நடந்தே வந்துட்டேன். நான் நடந்து வீட்டுக்குப் போயிடுவேன். நீங்க வர வேண்டாம்”
“திரும்பவும் ஒன்றை மையில் நடக்கப்போறியா? ஒரு நிமிஷம் இரு. கார் கீஸ் மட்டும் எடுத்துட்டு வந்துடறேன்” என்று எத்தனித்தவனின் இடக்கையைப் பிடித்து இழுத்து நிறுத்தினாள்.
“அதெல்லாம் வேண்டாங்க. எனக்கு வாக்கிங் ரொம்ப பிடிக்கும். இன்னிக்கு வெதெர் நல்லா இருக்கு. நான் நடந்து போய்டறேன்”, என்று கூறினாள்.
அவளின் ஸ்பரிசம், அவனை நிலைதடுமாறச் செய்தது. அவன் ஏதோ ஒரு மோன நிலைக்குச் சென்று திரும்பினான். அவளது கண்களை அவன் உற்று நோக்க, அவளது விழிகளும் சளைக்காமல் காதலைப் பரிமாறியது. பிறகு, நினைவிற்கு வந்தனர், இருவரும். அவர்களை ஒரு வித மகிழ்ச்சியும், நாணமும் சூழ்ந்தது.
“நான் கிளம்பறேன். பை” என்று கை அசைத்துவிட்டு, கதவின் பின்னே அவள் மறைந்துபோனாள்.
அவளின் பிம்பம் மறையும்வரை, அவளையே பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு, இனம் புரியாத ஆனந்தம் பொங்கியது!!
அன்று அலுவலக அலுவல்கள் எதுவும் அவன் நினைவில் இல்லை. எண்ணமெல்லாம் ரம்யாவையே சுற்றித்திரிந்தது.
‘இவளுக்கு நம்ம மேல கோபம், வெறுப்பெல்லாம் இல்லையோ! நம்மல ஏத்துக்கிட்டாளா?! இவ்வளோ ஆசையா நடந்துக்கறா. கொஞ்ச நேரத்துல எவ்வளோ துடிச்சுப்போயிட்டா. அவ கண்ணு என்னமோ சொல்லுச்சே?! என்னால உணர முடிஞ்சுதே. அவள நினைச்சு மயங்கி, கிறங்கி, ஏங்கி, தவிச்சு, அவ கண்ணு என்ன சொல்லுது, அவ மனசு என்ன நினைக்குதுன்னு குழம்பி… வாட் அன் அமேசிங் பீலிங் (what an amazing feeling)!? இப்போதான் உண்மையாவே காதல்னா என்னனு புரியுது. நிஷாகிட்ட இதெல்லாம் உணர்ந்ததே இல்லையே? அவளா காதல சொன்னா. நான் உடனே சம்மதம் சொன்னேன். உடனே கல்யாணம் முடிவாச்சு. உடனே நின்னும்போச்சு. அவ என் வாழ்க்கையில வந்த வேகத்துல போய்ட்டா. அதான் அவ விட்டுட்டு போன போது கூட ஒன்னும் பெருசா வலிக்கல. இப்போ ஒவ்வொரு நிமிஷமும் இந்த ரம்யா செல்லத்து மேல உள்ள காதல், முல்லுல நடக்குற மாதிரி, மேகத்துல மிதக்கற மாதிரி… அப்படி ஒரு அழகான இம்சை. யூ ஆர் சோ ஸ்பெஷல் டு மீ ரம்யா டார்லிங். உன்கிட்ட காதலை சொல்லலாமா, வேண்டாமானு ரொம்ப குழம்பிப்போய் இருந்தேன். அந்த ஸ்ட்ரெஸ்ல தான் ரம்யாகுட்டி, உன்கிட்ட முட்டாள் மாதிரி இன்னைக்கு கோவிச்சுக்கிட்டேன். இப்போ எல்லாம் தெளிவாயிடுச்சு. என்னோட மோஸ்ட் பிளவட் ரம்யா டார்லிங், உன்கிட்ட என்னோட காதல கண்டிப்பா சொல்லப்போறேன். நான் சொல்லப்போற அந்த நொடி, நம்ம வாழ்க்கையில ரொம்ப சிறப்பான தருணமா இருக்கும். உன்னை பொறுத்தவரை, நான் உனக்கு கொடுத்தது எல்லாமே ட்ராஜிக் மொமெண்ட்ஸ் தான். ஆனா எல்லாத்தையும் மறக்கற மாதிரி, ஒரு ஒண்டர்புள் (wonderful) மொமெண்ட்டா நாம ஒன்னு சேரப்போற நிமிஷம் இருக்கும். லவ் யூ செல்லக்குட்டி, லவ் யூ டி ’ என்று அவளது நினைவலைகளில் மூழ்கிப்போனான்.
மேகங்கள் ஒன்று கூடி
பூமாரி பொழிய
பூமி பிளந்து
கோடி நிலா முளைக்க
தென்றலில் உன் வாசம்
என்னை சுற்றி வீச
சுற்றும் உலகம் ஸ்தம்பித்து
நம்மையே நோக்க
என் இதயத்தைப் பேர்த்து
உன் கையில் கொடுப்பேன்
கண்ணான கண்ணே உனை
என் மடியில் சுமப்பேன்
கண்கொண்டு நீயும்
உன் காதலை உரைத்திடு
இதழோரப் புன்னகையால்
எனக்கு முக்தி கொடுத்திடு!!!
வசந்த காலத்தை வரவேற்றபடி, இயற்கை தனது பனிக்கால தவத்தை முடித்து, புத்துயிர் பெற்று மிளிர்ந்தது. இளவேனிற்கால சூரியனின் இளஞ்சூட்டில், புதிய பச்சை ஆடை போர்த்திக்கொண்டு, புது மலர்கள் பூத்துக்குலுங்கின. இதமான தென்றலும், மயக்கத்தைக் கூட்டியது. சற்று முன், ரம்யாவிற்கு இவை யாவும் மனதில் பதியவில்லை. சுனிலின் கோபத்தால் கவலைக்கொண்டவளின் கண்கள், எதையும் ரசிக்கவில்லை. அவனைக் கண்டு திரும்புகையில், அவள் மனம் அமைதி பெற்றிருந்தது. புள்ளி மான் போல் துள்ளிக்கிக்கொண்டு நடந்தாள்.
‘சுனில் டியர்… எப்படி எப்படி, நான் அப்பாவியா?’ சற்றுமுன் அவன் பேசியது நினைவிற்கு வர, சிரித்துக்கொண்டாள். ‘என் சுனில் மனசு வொயிட் கோல்ட். என் மேல கோபமே வராதாடா உனக்கு? அப்படி என்ன என் மேல அவ்வளோ காதல்?! மனைவியா நான் எந்த சந்தோஷத்தையும் கொடுக்காதபோதே இவ்வளோ பாசமா இருக்கியே. யூ ஆர் அ ஜென்டில்மேன். என்னோட வாழ்க்கை இவ்வளவு அழகா மாறும், எனக்கும் காதல் வரும், கண்ண தொறந்துக்கிட்டே கனவு காணுவேன்னு, நினைச்சு கூட பார்க்கல. காதல் ஓவர் புளோ ஆகி, என்னோட இதயம் ரொம்ப கனமா இருக்குடா சுனில். நீ நல்ல பிள்ளையா சீக்கிரம் காதலை சொல்லுவியாம். நான் என் மனச உன்கிட்ட கொடுத்துட்டு, நிம்மதியா இருப்பேனாம். நான் சொல்லுவேன்னு நினைச்சா, அதெல்லாம் நடக்காது. என்னால, உன் கண்ண பார்த்து பேச முடியாதுபா. அதுசரி, ஆம்பள நீயே சொல்ல தயங்கும்போது, நான் மட்டும் எப்படி சொல்லுவேன்? நீ தான் சொல்ற. ஆனா சீக்கிரம் சொல்லிடு ப்ளீஸ். ஹ்ம்ம்… நீ பண்றத பார்த்தா, லவ்வு மாதிரி இல்ல, ஜவ்வு மாதிரி இருக்கு. போடா… பட் ஐ லவ் யூ சுனில்’, என்று பலவாறாக எண்ணிக்கொண்டு கனவில் மிதந்தாள்.
வீட்டுள் நுழைந்தவள், நேரே அவன் புகைப்படத்திடம் சென்று, “ஐ லவ் யூ சுனில்! ஐ லவ் யூ சோ மச்! எப்போ இதை நான் உங்க கிட்ட சொல்லப்போறேன்?” என்று கூறிமுடித்து, சாந்தியடையும் வரை அழுது தேறினாள்.
No comments:
Post a Comment