“என்னமா வந்து ஒரு மாசம் கூட முழுசா ஆகலை, அதுக்குள்ள ஊருக்கு போறேன்னு சொன்னா என்ன அர்த்தம்?”
“உன்னை பார்க்க தான் வந்தேன். பார்த்தாச்சு. இப்போ கிளம்பறேன்.”
“அம்மா இதெல்லாம் நல்லா இல்லை. இன்னும் ஒரு மாசம் கழிச்சு போகலாம்.”
“சுனில், இங்க பாரு உன்னை நினைச்சு, நினைச்சு நிம்மதி இல்லாம, நானும் அப்பாவும் இருக்கோம். ஊருக்கு போய் முதல்ல கல்யாண ஏற்பாடு பண்ணி, உனக்கு கல்யாணம் முடிஞ்சாதான் எனக்கு நிம்மதி.”
சுனில் அதிர்ந்துபோனான்.
“அம்மா என்ன சொல்ற, கல்யாணம் அது, இதுன்னு??”
“ஏன்டா டென்சன் ஆகற? உனக்கும் ரம்யாவுக்கும் தான்டா சொல்றேன்.”
உடனே உச்சிக்குளிர்ந்தது அவனுக்கு.
“அம்மா… அதெல்லாம் எப்படி நடக்கும்?”
“ஏன் நடக்காது?! அவளோட அம்மா, அப்பா கைல, கால்ல விழுந்தாவது இந்த கல்யாணத்தை நடத்தி காட்டறேன்.”
“அம்மா… எனக்கு நம்பிக்கை இல்லை.”
“ஆசைப்பட்டா மட்டும் போதாது. முயற்சியும் பண்ணனும். சரி, எனக்கு ஒரு வாக்கு கொடு.”
“என்னது?”
“ரம்யாவை கடைசி வரைக்கும் கண்கலங்காம பார்த்துப்பேன்னு...”
“என் மனசு உனக்கு தெரியாதாமா? நான் அவளை கண்ணுக்குள்ள வச்சு பார்த்துப்பேன்.”
“இந்த அன்பு, கடைசி வரைக்கும், எந்த நேரத்திலும், எந்த நிலையிலும் இருக்கணும். புரிஞ்சுதா?”
“கண்டிப்பா இருக்கும் மா… ஆனா அவ என்ன சொல்லுவானு தெரியலையே… இதுக்கு சம்மதிப்பாளா?”
“அவ இனியும் சொல்ல என்ன இருக்கு? அதான் அவ மனசு தெரிஞ்சு போச்சு. கண்டிப்பா ஒத்துக்குவா. அதுவுமில்லாம, என்னை ‘அம்மா’னு கூப்ட்டா. அந்த ஒரு வார்த்தைக்காக அவளுக்கு நல்லது பண்ண கடமை பட்டிருக்கேன். எல்லாமே நல்லதா நடக்கும். நீ நம்பிக்கையோடு இரு”
அடுத்த சில தினங்களில், சித்ரா இந்தியாவிற்கு திரும்பி இருந்தாள். நடந்தவை அனைத்தையும், ஏற்கனவே சிதம்பரத்திடம் கூறி இருந்தாலும், மீண்டும் ஒருமுறை அவற்றைப் பற்றி பேசினாள். ரம்யாவின் குடும்பத்தைப் பற்றி தெரிந்துகொள்வது, சிதம்பரத்திற்கு எளிதாகவே இருந்தது. நேரில் சென்று, ரம்யாவின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டு, உடனே திருமண ஏற்பாடுகள் செய்திட முடிவு செய்தனர், சுனிலின் பெற்றோர். சுனில் தன்னிடம் பேசுவதில்லை என்ற பொழுதும், அவனின் தந்தைக்கு பாசம் விட்டுப்போகுமா?! தனது பிள்ளைக்கு எதிர்காலம் நன்றாய் அமைந்திட எதையும் செய்ய தயாரான மனநிலையில் இருந்தார்.
சுனிலின் பெற்றோரை எதிர்கொண்டு, ரம்யாவின் பெற்றோர் வரவேற்றனர். சுனிலின் பெற்றோர் என்று கூறியும், ரம்யா வீட்டினர் அமைதியாய் இருந்தது, அவர்களுக்கு வியப்பை அளித்தது. இவர்கள் யார், எதற்கு வந்துள்ளனர் என்று தெரியாமல், ரம்யாவின் பெற்றோர் குழம்பினர். ஏதேனும் நண்பர்கள், உறவினர்கள் அனுப்பி வைத்துள்ளனரோ என்று ஊகிக்கத் தொடங்கினர். ரம்யாவை பெண் கேட்டு தெரிந்தவர், தெரியாதவர் என சிலர் வீடு தேடி வருவது வழக்கமானதால், இவர்களும் அதுபோல் வந்திருக்கக்கூடும் என்று எண்ணினர். சிதம்பரம் தன்னை பற்றியும், குடும்பத்தைப் பற்றியும் கூறினார். சித்ராவிற்கு மிகவும் படப்படப்பாகவே இருந்தது.
“சார், அப்போ நடந்த தப்புக்கு, இப்போ வந்து நிக்கறோம்னு தப்பா நினைக்கக்கூடாது. எல்லாத்துக்கும் மன்னிப்பு கேட்டுக்கறோம். உங்க மனசு எவளோ வேதனை பட்டிருக்கும்னு புரியுது. உங்க மகளை, எங்க பையனுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தீங்கனா, ரொம்ப நல்லா பார்த்துக்குவோம். எங்களுக்கு பெண் குழந்தை இல்லாத குறைக்கு, ரம்யாவை எங்களோட மகளாக பார்த்துக்குவோம்” என்று பணிவாய் வேண்டினார், சிதம்பரம்.
உண்மைகளை அறிந்திராத ரம்யாவின் பெற்றோருக்கு ஒன்றுமே புரியவில்லை. ரம்யாவும், இன்றளவும் அவர்களுக்கு நடந்தவற்றைக் கூறவில்லை.
“என்ன சார் சொல்றீங்க? எதுக்கு மன்னிப்பு? என்ன தப்பு நடந்தது?”, என்றார் ரம்யாவின் தந்தை, குணநாதன்.
சுனிலின் பெற்றோர் ஒருவரை, ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“அப்போ, ஏறத்தாழ ஒன்னரை வருஷம் முன்னாடி நடந்தது…”
“என்ன நடந்தது?”
“உங்களுக்கு எதுவும் தெரியாதா? ரம்யா எதுவும் சொல்லலையா?” என்று தயங்கினார் சிதம்பரம்.
“ரம்யாவா?! அவளுக்கு என்ன? எதுவும் சொல்லலையே”, என்று கவலையோடு தன் மனைவியை நோக்கினார் குணநாதன். ரம்யாவின் தாய் திலகவதி முகத்தில் கவலை பற்றியது.
“வந்து… வந்து… என்னோட மகன், உங்க பொண்ணுகிட்ட தப்பா…”
“தப்பா…. என்னய்யா சொல்றீங்க?”
“சார், அது வந்து… என்னோட மகன் குடிபோதைல உங்க பொண்ண...”
“அய்யோ! என்ன சொல்றீங்க?” என்று அலறினாள் திலகவதி.
“உங்களுக்கு எல்லாம் தெரியும்னு நினைச்சு வந்தோம்… ரம்யா எதுவும் சொல்லலையா?”, என்று நீட்டி முழுங்கினார் சிதம்பரம்.
ரம்யாவின் பெற்றோருக்கு எந்த உண்மையும் தெரியாதென்று புரிந்துபோனது. சுனில் பெற்றோர் அவர்களிடம் நடந்தவற்றை எடுத்துக்கூறி, மன்னிப்பு வேண்டி மன்றாடினர். ரம்யாவின் பெற்றோர் கலவரமடைந்தனர். அவர்களுக்கு ஒன்று புரியவில்லை. பதறினர். அவர்களின் நிலை உணர்ந்து, சுனிலின் பெற்றோர் மேற்கொண்டு எதுவும் பேசாமல், அவ்விடம் விட்டு சென்றனர்.
ரம்யாவின் பெற்றோர் பெரும் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர். சற்று முன் நிகழ்ந்தவற்றை அவர்களால் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. உடனே ரம்யாவைக் காண வேண்டும் என்று அவர்கள் துடித்தனர். அவளை தொலைப்பேசியில் அழைத்துப் பேசினர். நடந்தவற்றை அவர்கள் கூற, ரம்யாவிற்கு தூக்கிவாரிப்போட்டது. அவள் சற்றும் எதிர்பாராத அனைத்தும் நடந்து முடிந்துவிட்டது. தன் பெற்றோரிடம் அழுவதைத் தவிர, அவளால் வேறெதுவும் பேச முடியவில்லை. ரம்யாவிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே, நெஞ்சைப் பிடித்துக்கொண்டு மூர்ச்சையானர், குணநாதன்.
அன்று நடந்த சந்திப்பைப் பற்றி சுனிலிடம், சித்ரா கூறினாள். உண்மை அறிந்திராத ரம்யாவின் பெற்றோருக்கு, இது எவ்வளவு பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்கும் என்று சுனிலால் உணர முடிந்தது. மேலும், எதனால் ரம்யா இத்தனை காலம் அவர்களிடம் உண்மையை மறைத்தாள் என்று குழம்பினான். ரம்யாவின் தற்போதைய நிலை என்ன என்று அறிந்துகொள்ள நினைத்தான். அவளை மீண்டும் பெரிய சங்கடத்திற்கு ஆளாக்கிவிட்டோமோ என்று வருந்தினான். அவளை நேரில் கண்டு பேச வேண்டும் என்று எண்ணினான். நிச்சயம் அவள் கோபம் கொள்வாள் என்று அவனுக்குத் தெரியும். எதுவாயினும் எதிர்கொள்வது என்று முடிவு செய்திருந்தான்.
காலை விடியலுக்காகத் தவம் கிடந்தான். முதலில், ரம்யாவின் வீட்டிற்குச் சென்று பார்த்தான். அவள் அங்கு இல்லாமல் போக, அவளின் அலுவலகத்திற்குச் சென்றான். அங்கு அவன் சற்றும் எதிர்பார்த்திராத அதிர்ச்சி காத்திருந்தது. ரம்யாவின் தந்தை மாரடைப்பால் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், ரம்யா இந்தியா சென்றுள்ளதாகவும் தெரிய வந்தது. சுனில் மனமுடைந்து போனான். தன்னால் ரம்யாவிற்கு இன்னும் எத்தனை தொல்லைகள் நேரப்போகிறதோ என்று நொந்துகொண்டான். அவளை எண்ணி எண்ணி கவலைக் கொண்டான். அவளை ஒருமுறையேனும் காணவேண்டும் என்று அவனது புத்தி வெறி பிடித்து ஆடியது. தனது பெற்றோருக்குத் தகவல் கூறிவிட்டு, உடனே சுனிலும் இந்தியாவிற்கு விரைந்தான்.
மருத்துவமனையில், ரம்யாவின் தந்தை ஐ.சி.யூ வில் வைக்கப்பட்டிருந்தார். சுனில் அமெரிக்காவிலிருந்து வந்திறங்கியவுடனே, தனது பெற்றோருடன் மருத்துவமனைக்கு சென்றான். படப்படத்துக்கொண்டிருந்த அவனது உள்ளம், ரம்யாவைக் கண்டதும் சற்று அமைதியானது. அவள் அழுதழுது, முகமும், கண்களும் வீங்கி இருந்தது. அவளருகில் இருப்பது அவளின் தாய் என்று அவன் உணர்ந்துகொண்டான். தவிர, சில உறவினர்களும் கூடி இருந்தனர். இவர்களைக் கண்டதும், அவ்வுறவினர்களுள் ஒருவர் அருகில் வந்தார்.
“நீங்க யாரு? அண்ணனுக்கு தெரிஞ்சவங்களா?”
“நான் சுனில். இவங்க என்னோட பேரண்ட்ஸ்”
நெருங்கிய உறவினர்களுக்கு அப்பொழுது அனைத்தும் தெரிந்திருந்தது. ரம்யாவின் மேல் அனுதாபமும், ரம்யாவின் குடும்பத்தை நிர்மூலமாக்கிய அந்த கயவனின் மேல் கோபமும் கொண்டிருந்தனர். அதற்கு ஏற்றாற்போல், சுனில் அங்கு செல்ல சிறிய சலசலப்பு உண்டானது. உறவினர்கள் மாறி மாறி சுனிலையும், அவனது பெற்றோரையும் கேள்விகளால் துளைத்தனர். சுனில் தலைகுனிந்தபடி நிற்க, அவனது பெற்றோர் காலில் விழாத குறையாய் மன்றாடினர். ரம்யா ஒருமுறை கூட சுனிலை ஏறெடுத்துப்பார்க்கவில்லை. அவன் அவ்வப்போது அவளை பார்க்கும்பொழுதெல்லாம், அவள் தன் தாயின் தோள்மீது சாய்ந்துகொண்டு கலக்கமாய் இருந்தாள். அவனுக்கு ரம்யாவை வாரி அணைத்து, தன் மடி மீது கிடத்தி, தன் நெஞ்சோடு அவள் முகத்தைச் சேர்த்துக்கொள்ளவேண்டும் போல் இருந்தது. ‘என் செல்லமே அழாதடி! என் தங்கமே, அழாத. நான் இருக்கேன் உனக்கு. உன் நல்ல மனசுக்கு எதுவும் ஆகாதுடி’, என்று கூறி, அவள் கண்ணீரைத் துடைத்து, நெற்றியில் நூறு முத்தம் வைக்கத் தோன்றியது. ‘என் தங்கமே, வைரமே’ என்று அவளை மனதிற்குள் அழைத்து, மானசீகமாய் அணைத்துக்கொண்டான்.
கலங்காதே கண்மணி
காதலன் நான் உண்டு
கண்ணோரம் நீர் ஏனோ?
கவலைகளை மறந்திடு
துயர் கொண்ட உன் மனதை
என் கையில் கொடுத்துவிடு
மயிலிறகாய் நெஞ்சிலக
என் மடிமேலே கிடந்துவிடு
உயிர்கொண்டு உனை போர்த்திடுவேன்
என் விழிகொண்டு உனை காத்திடுவேன்
ஒவ்வொரு நொடியும் காதல் பொழிந்து
உன் காயங்களைப் போக்கிடுவேன்!!
சிறிது நேரம் கழித்து, மயக்கம் தெளிந்து கண் விழித்தார், ரம்யாவின் அப்பா. அவர் அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டார் என்றும், அவர் மனம் சங்கடப்படும்படியாக யாரும் எதுவும் பேச வேண்டாம் என்றும் டாக்டர் அறிவுரை கூறினார்.
மிகவும் தயக்கத்துடன், ரம்யா தனது தாயுடன் ஐ.சி.யூ உள் நுழைந்தாள். ஆக்சிஜென் மாஸ்க் பொருத்தப்பட்டு, தளர்ந்து இருந்த தனது தந்தையைக் கண்டவுடன், இரு கைகளால் வாயைப் பொத்திக்கொண்டு அழுதாள். உடன் அவளது தாய் அவளைத் தேற்ற, துக்கம் தாள முடியாமல், வெளியே ஓடிவந்து தரையில் மண்டியிட்டபடி கதறினாள். அங்கிருந்த அனைவரும் சில நொடிகள் கலங்கிவிட்டனர். அவளின் உறவுகள் அவளை சூழ்ந்துகொள்ள, சிறிது நேரத்தில் அமைதிகொண்டாள். சுனிலின் மனம் பெரும் பாடுபட்டது. எதிரிலே நின்றிருந்தும், அவளின் அருகாமை அவனுக்குக் கிட்டவில்லை. மனம் பெரும் போராட்டம் கொண்டும், அவனால் ஒரு வார்த்தை கூட பேசமுடியவில்லை. அவளை கடத்திக்கொண்டு எங்காவது ஓடிவிட வேண்டும் போல் இருந்தது. ‘என் தங்கமே அழாதடி. ஏற்கனவே ரொம்ப அழுதுட்ட. இன்னும் எத்தனை நாளைக்கு அழப்போற? என் கிட்ட வந்துடுமா. என் தோள்ல சாஞ்சுக்கோ. உனக்காக தானடி நான் இருக்கேன். ரம்யா அழாதடா!’ என்று எண்ணியபடி சுனிலின் கண்களும் கலங்கின.
இரண்டு நாட்கள் கழித்து, ரம்யாவின் தந்தை சற்று உடல் தேறினார். ஐ.சி.யுவிலிருந்து, வேறு அறைக்கு மாற்றப்பட்டார். ரம்யாவும் சற்று சாந்தமாக இருந்தாள். தந்தை உடல் நலம் பெற்றது அவளுக்கு ஆறுதலாய் இருந்தது.
மாலை, சுனில் தன் பெற்றோருடன் ரம்யாவின் தந்தையைக் காண வந்திருந்தான். அறைக்குள் நுழைந்த அவனைக் கண்டதும், ரம்யா அவ்விடம் விட்டுச் சென்றாள். அவள் சென்றது அவனுக்கு வருத்தமே என்றாலும், அவன் அமைதியாகவே இருந்தான்.
“வணக்கம் சார், நான் சுனில்” என்றபடி, குணநாதன் படுத்திருந்த கட்டிலின் அருகே சென்றான். அவர் கோபப்பார்வை வீசிவிட்டு, முகத்தைத் திருப்பிக்கொண்டார். சுனிலின் பெற்றோரும் கலக்கம் அடைந்தனர். திலகவதி அமைதியாக ஒரு மூலையில் அமர்ந்திருந்தாள்.
“இப்போ உங்க உடம்பு கொஞ்சம் தேவலையா?” என்றான். பதில் இல்லை.
அவரின் வலது உள்ளங்கையை சுனில் பற்றினான்.
“நீங்க ரொம்ப கோபமா இருப்பீங்கன்னு தெரியும். என்னை மன்னிச்சிடுங்கன்னு சொல்லி பாவ மன்னிப்பு கேட்க வரலை. நான் செஞ்சது மன்னிக்கமுடியாத பெரிய அக்கிரமம்... ஆனா, நான் இப்போ என்னோட காதலுக்காகப் பேசவந்திருக்கேன். ரம்யாவை கல்யாணம் பண்ணிக்கணும்னு மனசார ஆசைப்படறேன். அவள உண்மையா நேசிக்கறேன். நிச்சயமா அவள சந்தோஷமா வச்சுப்பேன். இதுல என்னோட குற்ற உணர்ச்சியோ, ரம்யா மேல பரிதாபமோ இல்ல. முழுக்க முழுக்க என்னோட அன்பு மட்டும் தான் இருக்கு. செஞ்ச தப்புக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடுங்க. நான் ஏத்துக்கறேன். ஆனா, இனிமேல் என் வாழ்க்கையே ரம்யாங்கற நிலைக்கு வந்துட்டேன். அவள மட்டும் எனக்கு கொடுத்துடுங்க. நான் என் உயிரா அவள பார்த்துப்பேன்”, என்று கூறி முடிப்பதற்குள் அவனின் கண்கள் கலங்கின. அதற்குமேல் துக்கம் தொண்டையை அடைக்க, அவனால் எதுவும் பேச முடியவில்லை. சுனிலின் பெற்றோர் ரம்யாவின் பெற்றோரிடம் ஆறுதல் வார்த்தைகள் கூறிவிட்டு, அவ்விடம் விட்டுச் சென்றனர். அவர்கள் மருத்துவமனை விட்டு வெளியே வரும் வரை ரம்யா அவர்களின் கண்ணில் படவில்லை. சுனிலின் கண்களில் ஆயிரம் முகங்கள் தோன்றி மறைந்தாலும், அவன் உள்ளம் வேண்டியது அவள் முகம் மட்டுமே. ரம்யாவை எண்ணி, சுனிலின் உடலும், உள்ளமும் மெல்ல மெல்ல உருகியது.
No comments:
Post a Comment