சில நாட்களில் குணநாதன் உடல் தேறி மருத்துவமனை விட்டு வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். ரம்யா திலகவதிக்கு உதவியாய், வீட்டுப் பொறுப்புகளை பகிர்ந்துகொண்டாள். குணநாதன், ரம்யாவைப் பற்றிய சிந்தனையிலேயே மூழ்கி இருந்தார். சுனில் தனது பெற்றோருடன் மீண்டும் ஒரு முறை ரம்யாவின் இல்லத்திற்கு விஜயம் செய்து, குணநாதனின் நலம் விசாரித்துச் சென்றான். அப்பொழுதும் ரம்யா அவன் கண்முன் காட்சி அளிக்காமல், அறைக்குள்ளேயே இருந்தாள். அவளைக் காண வேண்டும் என்ற ஆசையில் வந்தவனுக்கு, ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. அவன் காதல் வளர, வளர, நம்பிக்கை குறைந்துகொண்டே போனது.
ரம்யாவின் தந்தைக்கு சுனில் மற்றும் அவனது குடும்பத்தார் மீது, சற்று கோபம் தணிந்திருந்தது. சுனிலின் அப்பாவி முகமும், வெள்ளந்திப் பேச்சும், அவரை சிறிதளவு சாந்தப்படுத்தி இருந்தது. மலையளவு வெறுப்பில், அவருக்கு அவன் மேல் கடுகளவு நல்லெண்ணம் தோன்றியது.
ஒரு நாள்,
“ரம்யாமா, அப்பா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்மா.”
“சொல்லுங்கப்பா...”
தனது தந்தை எதைப்பற்றி பேசப்போகிறார் என்பதை அவள் உணராமல் இல்லை.
“ரம்யாமா, உன் கல்யாணத்தைப் பத்தி என்ன யோசிச்சு வச்சிருக்க?”
“அதெல்லாம் யோசிக்கக்கூடிய நிலையில நான் இல்லைபா.”
அவள் குரலில் விரக்தியின் பிடி இருந்தது.
“கடவுளுக்கு என்ன கோபமோ, இப்படி ஒரு கல்லை தூக்கி நம்ம தலையில போட்டுட்டார். அதுக்காக இப்படி வருத்தப்பட்டுக்கிட்டே வாழ்க்கைய ஓட்டிட முடியாது. அடுத்த படி எடுத்து வைக்கணும்... அந்த சுனிலை பத்தி என்ன நினைக்கற?”
ரம்யா அழத்தொடங்கினாள்.
“அழாதமா… எனக்கு வேற வழி தெரியல… நம்ம சொந்தங்களுக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சு… இந்த கல்யாணம் நடக்கறத தவிற வேற வழி இல்லை.”
“நான் இப்படியே இருந்திடறேன்பா… ப்ளீஸ்...”
“உன்னை தனி மரமா, நிர்கதியா விட்டுட்டு என்னால நிம்மதியா சாக முடியுமா சொல்லு?”
“அப்பா ஏன் இப்படி பேசறீங்க?”
“உண்மைய தான்மா சொல்றேன்.”
“சரிங்கப்பா… இத்தனை நாளா என்னோட இஷ்டப்படி நடந்து, உங்களையும், அம்மாவையும் தலை குனிய வச்சதெல்லாம் போதும்… இனி உங்க வார்த்தைக்கு மறு பேச்சு பேசமாட்டேன். நீங்க எந்த முடிவு எடுத்தாலும், நான் மனப்பூர்வமா சம்மதிக்கறேன்” என்று சற்றும் யோசிக்காமல் பதில் கூறினாள், ரம்யா.
“இல்லமா, இல்லவே இல்லை. உன்னால எப்பவும் எங்களுக்கு பெருமை தான். நீ பண்ணாத தப்புக்கு எப்படி பொறுப்பாவ!? நடந்ததெல்லாம் எங்களுக்குத் தெரிஞ்சா நாங்க உடஞ்சுபோய்டுவோம்னு, நீ தனி ஒருத்தியா எல்லாத்தையும் சமாளிச்சு மீண்டு வந்திருக்கியே. இது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமாமா? உன்னால எப்பவும் எங்களுக்கு பெருமை தான்மா!!”
குற்ற உணர்வை மறைத்துக்கொண்டு வலுக்கட்டாயமாக ஒரு புன்னகையை முகத்தில் ஒட்டவைத்தாள், ரம்யா.
அடுத்த இரண்டு நாட்களில், சுனில் - ரம்யாவின் பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவுகள் ஒன்று கூடி, அவர்களின் திருமணத்தை நிச்சயித்தனர். அடுத்த பத்து நாட்களில், கோவிலில் திருமணம், அன்று மாலை வரவேற்பு என்று முடிவு செய்யப்பட்டது. சுனிலுக்கு சந்தோஷம் பீறிட்டது. வெகு நாட்கள் கழித்து அவன் முகத்தில் ஆனந்த ரேகைகள் பரவின. ரம்யாவைக் காணாமல் அவன் தவித்த தவிப்பிற்கு பரிகாரமாக, அவள் மஞ்சள் பட்டுப் புடவையில் காட்சி தந்து, அவன் கண்களுக்கும், இதயத்திற்கும் விருந்து வைத்தாள். அவளது அழகிய பின்னிய கூந்தலும், மல்லிகைச் சரங்களும், மையிட்ட கண்ணும், செம்பவழ இதழும், நடம் செய்யும் ஜிமிக்கியும், சலசலவென சிணுங்கிய வளையல்களும், தங்கமென ஜொலிக்கும் மேனியும், அவனை கந்தர்வ மயக்கத்தில் ஆழ்த்தியது. சேலை அணிந்துவந்த நந்தவனத்தைக் கண்டவன் சொக்கி விக்கித்துப் போனான். சில நொடிகள் மூச்சு விடக் கூட மறந்தே போய் இருந்தான். ‘இவள் எனக்கு தான்’ என்ற கர்வம் தலைதூக்கியது.
அன்று இரவு, ரம்யாவை நினைத்தபடி தூக்கமின்றி தவித்தான். மனக் குழப்பத்திலும், வேதனையிலும் தூக்கமின்றி இருந்தவனுக்கு, இன்றோ காதலும், குதூகலமும் ஒன்று சேர்ந்து கிச்சு கிச்சு மூட்டின. வெட்கம், சிரிப்பு, கனவு என்று காதல் நோயுண்டவரின் அறிகுறுகள் அனைத்தும் இவனிடம் தென்பட்டது.
எனக்காகத் தரையிறங்கிய தங்கத் தாரகையோ!
என் மார் மீது தினம் சாயும் எந்தன் காஞ்சனையோ!
என் வாழ்வில் வர்ணம் சேர்க்கும் அழகு வானவில்லோ!
என் நெஞ்சில் தினம் சுரக்கும் காதல் முடிவிலியோ!!
பரபரப்பாய் அனைத்து திருமண ஏற்பாடுகளையும் இருவீட்டாரும் செய்து முடித்தனர். சுனில், இந்த பத்து நாட்களில் ஆயிரம் மனக்கோட்டை கட்டிவிட்டான். கேள்விக்குறியாக இருந்த அவனது எதிர்காலம், இன்று ஆச்சர்யக்குறியாக மாறிப்போனது. சற்றும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாய் அவனது திருமண வைபவம் ஏற்பாடானது. அதிலும், ரம்யா சம்மதித்துவிட்டாள் என்பது, அவனுக்குப் பால் பாயாசம் போல் இனித்தது. காதல் வசனங்களை ஒத்திகைப்பார்த்தவன், அவ்வப்போது ரம்யாவுடனான இன்ப வாழ்க்கையின் இறுதி நாள் வரையும் மனக்கண்ணில் ஒத்திகைப்பார்த்தான். வெட்கமும், ஆசையும் அவனை ஆளத் தொடங்கின.
திருமணம் - மூலஸ்தானத்தின் அருகே கழுத்தில் மாலையோடு, மனதுள் படபடப்போடு, புது மாப்பிள்ளை மிடுக்கோடு நின்றிருந்தான், சுனில். ஆறடி அழகன், வெண்பட்டு வேஷ்டியில், முழுக்கை வெண்பட்டு சட்டையில் வசீகரப் புன்னகையோடு, தனது அழகிக்காகக் காத்திருந்தான். ரம்யாவின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு, ‘இனி இந்த பேரழகி எனக்கே சொந்தம்’ என்று இவ்வுலகிற்கு உரைக்கும் தருணத்திற்காகத் தவித்திருந்தான். இத்தனை காலம் பொறுமை காத்தவனுக்கு, இப்பொழுது பொறுமை முற்றிலும் தீர்ந்தது. சில மணித்துளிகள் கூட பெரும் பாரமாய் இருந்தது.
இதோ வந்துவிட்டாள், அந்த கலாபக் காதலனின் கயல் விழியாள். சிகப்புப் பட்டுடுத்தி, ஆபரணங்கள் அனைத்தும் பூட்டி, மல்லிகையும் முல்லையும் கமழ, சம்பங்கி மாலை மணக்க, செம்பவழ சிலையாள், அருகில் வந்து நின்ற நொடியில், சொக்கிப் போனான், சுனில். காதலால் மயக்கமோ, காதலியால் மயக்கமோ, மொத்தத்தில் அவன் அவனாக இல்லை!
இவனது காதல் பார்வைகளைத் தாளாது, சம்மங்கி மாலையில் ஆங்காங்கே தொடுக்கப்பட்ட கோழிக்கொண்டைப் பூக்கள் வெட்கத்தால் மேலும் சிவந்தன. ஆனால் ரம்யாவோ, முகத்தில் எவ்வித உணர்வும் இன்றி அமைதியாய் நின்றிருந்தாள். அவள் சற்றும் எதிர்பாராத சூழலில், பெரும் சுழலில், வாழ்க்கை எனும் கொடுங்கோலன் அவளை நிறுத்தி வைத்தான். நொந்து மடிந்த மனதிற்கு, வலியும் தான் நோகுமோ?! வேதனை தான் வாட்டுமோ?! அவள் நிலைபாடு அதாக இருந்தது.
மஞ்சள் பூசிய பட்டு நூலில் கோர்த்த தங்கத்தாலியைத் தொட்ட நொடியில், சுனிலுக்கு உடல் சிலிர்த்தது. மூன்றாவது முடிச்சு போட்ட நொடி, அவனுள் பரவசமும், பெருமிதமும் பொங்கியது. ‘ரம்யா! இவ்வளவு நாளா நான் தவம் கிடந்த, இந்த அழகான நிமிடங்களும், இந்த புனிதமான பந்தமும் என் கையில வரமா கிடைச்சிருக்கு. இந்த வரம் போதும், நரகமா இருக்கற உன்னோட வாழ்க்கையை, மெல்ல மெல்ல சொர்கமா மாத்திடுவேன். என்னால நீ தொலைச்ச சந்தோஷத்தை எல்லாம் அள்ளிக் கொண்டுவந்து, உன் காலடியில போடுவேன். புதுசா, அழகான ஒரு வசந்தத்தை நான் என் காதலால, காதலாக உனக்குக் கொடுக்கக் காத்துட்டு இருக்கேன். உன் முகத்துல சிரிப்பு மட்டுமே என் நோக்கம்’ என்று மனதிற்குள் சத்தியப் பிரமாணம் வாசித்துக்கொண்டான்.
எல்லாம் முடிந்தது என்று எண்ணினாள், ரம்யா. இனிதான் எல்லாம் தொடக்கமே என்று அவள் அறிந்திருக்கவில்லை. விண்ணோரும், மண்ணோரும் வாழ்த்திய அந்த மங்கள வேலை, அவள் சுனிலோடு வாழப்போகும் காதல் தருணங்களுக்கு அச்சாணி என்று அவள் அறிந்திருக்கவில்லை. அவன் முகத்தைக் கூட காண விரும்பாதவளின் இதயத்துள், சுனில் ஆழமாக இறங்கி, அவளை தன் வசப்படுத்தப்போகிறான் என்று அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. வெறுமையாய் இருக்கும் அவளது வாழ்வு, காதல் ரசம் வடியும் பூங்காவனமாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று யாரேனும் அவளிடம் சொல்லுங்கள். புன்முறுவல் இன்றி, பரிதவிக்கிறாள் பேதை!!
No comments:
Post a Comment