சுனிலின் மாறுதல்கள், அவனை அறியாமல் வெளிப்படத் துவங்கின. கடமையே என்று தன் தாயிடம் எப்போதாவது பேசும் சுனில், சில காலமாக மிகவும் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் பேசத் தொடங்கினான். தனது மகனின் மாறுதல்கள் சுனிலின் தாய்க்கு பூரிப்பைத் தந்தன. இந்த மாற்றத்திற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று அவளால் ஊகிக்க முடியவில்லை. சுனிலிடம் வெளிப்படையாகக் கேட்கவும் நா எழவில்லை. அவனைக் காண வேண்டும் என்ற ஆவல் மட்டும் பெருக்கெடுத்தது. அவனிடம் கூட கூறாமல், உடனே பறந்துவிட்டாள் அமெரிக்காவிற்கு.
“என்ன அம்மா, வரேன்னு ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்ல? ஏர்போர்ட்ல இருந்து போன் பண்ணதும் பயந்தே போய்ட்டேன்”, என்று கூறியபடி தனது வீட்டிற்குள் தன் தாயை அழைத்துச் சென்றான்.
“உன்னை பார்க்கணும் போல இருந்தது. அதான் கிளம்பி வந்துட்டேன். வரேன்னு சொன்னா நீ ஏதாவது காரணத்தைச் சொல்லி, என்னை வரவிடாம பண்ணிடுவேன்னு தான் சொல்லல ”
“அம்மா, அப்படி எல்லாம் இல்லமா. திடீர்னு நீ வந்துட்டேன்னு சொன்னவுடன் கொஞ்சம் ஷாக் ஆயிட்டேன். அதான்… சரி நான் உனக்கு சாப்பாடு வாங்கிட்டு வரேன். இங்க ஒரு நல்ல இந்தியன் ரெஸ்டாரண்ட் இருக்கு… ஒரு பத்து நிமிஷத்துல வந்துடறேன்.”
“அதெல்லாம் வேண்டாம்டா. ரொம்ப டயர்டா இருக்கு. நான் அப்புறமா சாப்பிடறேன். இப்போ தூங்கினா போதும்னு இருக்கு”, என்று கூறியவள் அடுத்த சில நிமிடங்களில் உறங்கிப் போனாள். பல நாட்களுக்குப் பிறகு தன் மகனிடம் அவள் கண்ட சிரிப்பும், குதூகலமும், அவளை சாந்திப்படுத்தி, நிம்மதியான உறக்கத்தைத் தந்தது.
“என்னடா நானும் பார்க்கறேன், நீ காலைல எட்டு மணிக்கெல்லாம் போற. திரும்ப வீட்டுக்கு வரும்போது மணி ஆறரை, ஏழு ஆயிடுது. அவ்ளோ வேலையாடா?”
“இல்லமா, புது கம்பெனி, புது வேலை, கொஞ்ச நாள் அப்படித்தான் இருக்கும்” என்று கூறி சமாளித்தான் சுனில். ரம்யாவின் தரிசனத்திற்காக காலையும், மாலையும் அவன் தவம் கிடப்பது, அந்த கடவுளுக்கு மட்டுமே தெரியும்.
அவன் காதல் பாடல்கள் கேட்பதும், கூட பாடுவதும், சிரிப்பதும், தனக்குள்ளே பேசிக்கொள்வதுமென ஏதோ ஒரு உலகில் லயித்துக் கிடந்தான். இவனது இந்த செய்கைகள் இவனின் தாய்க்கு, மெல்ல புரிந்தது. இவன் காதல் வயப்பட்டுள்ளான் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.
“சுனில்...”
கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தவனுக்கு, அவனது தாயின் அழைப்பு கேட்கவில்லை.
“டேய் சுனில், உன்னதான்டா” என்றதும் நினைவிற்கு வந்தான்.
“என்னடா? என்ன ஆச்சு உனக்கு?”
“ஒன்னும் இல்லையே...”
“யாருடா அந்த பொண்ணு?”
“அம்மா, என்ன சொல்ற?”
“சும்மா சமாளிக்காத. உண்மைய சொல்லு.”
“அம்மா, அதெல்லாம் ஒன்னும் இல்லமா. நீ வேற”, என்று வெட்கம் கொண்டான்.
“சும்மா சொல்லுடா.”
“அம்மா ப்ளீஸ்மா. அதெல்லாம் ஒன்னும் இல்ல.”
“உன்னை பார்த்தாலே தெரியுது என்னவோ இருக்குனு. சொல்லு யாருன்னு...”
“அம்மா… அது… ரம்யா தான்”
“ரம்யா??”
“என்னமா மறந்துட்டியா?”
“அவளா?”, என்று அதிர்ச்சி கொண்டாள் சித்ரா. “நெஜமாவாடா சொல்ற? அவளுக்கும் விருப்பம்தானே?”
“என்னது? ஏன்மா என்னென்னமோ கற்பனை பண்ணிக்கற?”
“பின்ன என்னடா சொல்ல வர?”
“அம்மா அவ பார்க் பக்கத்துல இருக்கற ரோடு வழியா நடந்து ஆபிஸ் போவா, வருவா. நான் அங்கே இருக்கற மரத்து பின்னாடி நின்னு பார்ப்பேன். அவ்ளோதான்.”
“என்னது மரத்துக்கு பின்னாடி நின்னு பார்ப்பியா? ஏன் போய் பேசவேண்டியது தானே??”
“பேசறதா?! அதெல்லாம் என்னால முடியாதுமா.”
“சரி. அவ நல்லா இருக்காளா?”
“நல்லா இருக்காமா. அவள பார்க்கும்போது எல்லா கஷ்டத்தையும் சமாளிச்சு மீண்டு வந்துட்டான்னு தோணுது.”
“சுனில், நீ அவளை விரும்பறியா?” ஆர்வமானாள் சித்ரா.
“அது… அது…” எதுவும் பதில் கூறாமல், முகம் வாடி அறைக்குள் சென்றுவிட்டான்.
‘சுனில், நீ அவளை விரும்பறியா?’ என்று அவன் தாய் அவனைக் கேட்டது, அவன் நெஞ்சை பிழிந்து கசக்கியது. ‘உண்மையாவே இதென்ன காதலா? தினமும் அவள பார்க்காம இருக்க முடியல. அவள பத்தி நினைக்காம இருக்க முடியல. பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு. உண்மையாவே அவள காதலிக்கறேனா? எனக்கு அந்த தகுதி இல்லையே… தகுதி என்ன தகுதி?! காரணம் இல்லாமலா என் வாழ்க்கையில வந்தா? இவ்ளோ நாள் அவ நினைப்பே இல்லாம இருந்தோம். ஆனா இப்போ கண்ணு முன்னாடி வந்து நின்னு, மனசுக்குள்ள புகுந்துட்டாளே. இதெல்லாம் காரணமில்லாமலா நடக்குது?! ஏன் அவள நான் காதலிக்கக்கூடாதா? கண்ணுக்குள்ள வச்சு பார்த்துப்பேனே. ஒரு நாள் அவளுக்கு செஞ்ச கொடுமைக்கு, ஆயுசு முழுக்கு என் அன்பையும், காதலையும் கொட்டிக் கொடுத்து பரிகாரம் தேடிப்பேனே. ரம்யா… ரம்யா… என் கிட்ட வந்துடு ரம்யா… நான் இருக்கேன் உனக்கு’, என்று கண்கள் கலங்க தனக்குள் பேசிக்கொண்டே உறங்கிப்போனான்.
வெள்ளிக்கிழமை, மாலை ஐந்து மணிக்கே அலுவலகம் முடிந்து வீடு திரும்பியிருந்தான், சுனில்.
“என்ன சுனில்? இன்னைக்கு சீக்கிரம் வந்துட்ட?”
“ஒன்னும் இல்லமா. கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு.”
“ரம்யா தானே”, என்று கூறிவிட்டு நமட்டுச் சிரிப்பு சிரித்தாள், சித்ரா.
“அம்மா, என்னமா?”, செல்லமாக நொந்துகொண்டான்.
“எனக்கு ஒரு சந்தேகம். அவள பார்த்துட்டு தானே வீட்டுக்கு வருவ? இன்னைக்கு என்ன ஆச்சு?”
“அம்மா, நான் கோவிலுக்குப் போகப்போறேன். அதான் சீக்கிரம் வந்துட்டேன்.”
“என்னடா இது அடுத்த ஷாக்? கோவில் பக்கமே வரமாட்ட. இப்போ கோவிலுக்குப் போறேன்னு சொல்ற?”
“சும்மா தான்மா...”
“ரம்யா ஏதும் அங்க வருவாளா? அதானா? உண்மைய சொல்லு.”
“அம்மா… ஆமா, அவ வருவா… நான் போய்ட்டு வந்துடறேன்மா… ப்ளீஸ்...”
“இருடா, நானும் வரேன்.”
“நீ எதுக்குமா?”
“டேய்! நீ அவள பாரு, நான் சாமிய பார்க்கிறேன்”, என்று கூறிவிட்டு சிரித்தாள்.
“அம்மா மாதிரியா பேசற?” என்று மீண்டும் கோபித்துக்கொண்டான்.
“பண்றதெல்லாம் பண்ணிட்டு, என்னை குத்தம் சொல்லாதடா...”
சிறிது நேரத்தில், அம்மாவும், பிள்ளையும் கோவிலில் அவதரித்தனர். பெரிய மண்டபத்தில், மேடை அமைக்கப்பட்டு, பளிங்கு விக்ரகங்கள் வருசையாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. கீழே சிலர் அமர்ந்து தமிழ் பஜனை செய்துகொண்டிருந்தனர். அவர்களுக்குப் பின்னே நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. சுனில் தன் தாயுடன் இரண்டாவது வரிசையில் அமர்ந்தான். சுனிலின் கண்கள் ரம்யாவைத் தேடி அவ்விடத்தை சல்லடைப்போட்டு அலசியது. அவள் கீழே, ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு பஜனையைக் கேட்டுக்கொண்டு இருந்தாள். அவள் முகத்தைக் கண்டதும், அவனுக்கு சகலமும் சூனியமானது. அவளைத் தவிர வேறேதும் அவனுக்குத் தெரியவில்லை. தன் தாயைக் கூட சில நிமிடங்கள் மறந்துவிட்டான். அவளை ஆசைதீர ரசித்தபின் தன் நினைவிற்கு வந்தான். அவன் முகத்தில் வெட்கமும், சிரிப்பும் பொங்கி வழிந்தது. யாரேனும் தன்னை பார்கின்றனரா என்று சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் இவனை கண்டுகொள்ளவில்லை. வந்த வேலை முடிந்த திருப்தியில், “அம்மா போலாமா?”, என்றான். அருகில் அமர்ந்திருந்த சித்ரா அங்கில்லை. சற்று பதட்டத்தோடு தேடியவன், ரம்யாவின் அருகில் அவள் அமர்ந்திருப்பதைக் கண்டதும், அவனுக்கு உயிரே நின்றுவிட்டது. என்ன செய்வதென்று குழம்பித் தவித்தான். எழுந்து அவளிடம் சென்றால், ரம்யா இவனைக் கண்டு நொந்துபோவாள் என்ற பயம் ஒருபுறம், தனது அம்மாவை அவ்விடம் விட்டு உடனே அழைத்துச்செல்லவேண்டும் என்ற ஆதங்கம் மறுபுறம், அவனை மென்றுதின்றது.
ரம்யாவின் அருகில் அமர்ந்திருந்த சித்ராவிற்கு, ரம்யாவிடம் பேசவேண்டும் என்ற ஆவல் பெருகியது.
“ரம்யா, எப்படிமா இருக்க?”, என்றாள். இவளைத் திரும்பி நோக்கிய ரம்யாவிற்கு, பேரதிர்ச்சியாய் இருந்தது. மறக்கமுடியாத முகங்களில், இவள் முகமும் ஒன்றல்லவா!! பதில் எதுவும் கூறாமல், அமைதியாய் இருந்தாள் ரம்யா.
“எப்படிமா இருக்க?”, என்றாள் மீண்டும்.
“ம்ம்” என்று தலையை மட்டும் அசைத்தாள் ரம்யா. அவள் முகம் சற்று கலக்கமாய் இருந்தது. ரம்யாவின் வலக்கையைப் பற்றி, அவளை கண்டு மெல்லிய புன்னகை பூத்தாள், சித்ரா. தனது கையை விலக்க முடியாமல் தயங்கினாள் ரம்யா. சில நிமிடங்களில், ரம்யாவும் மெல்லிய புன்னகையை பதிலாய்க் கொடுத்துவிட்டு, எழுந்து அவ்விடம் விட்டுச் சென்றாள். அவள் சென்று மறைவதை, சுனிலும், சித்ராவும் பார்த்திருந்தனர்.
அதற்கு பின் சில மணி நேரம் சுனிலும், சித்ராவும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அன்று இரவு,
“சுனில், என்னப்பா அம்மா மேல கோவமா?”
“அம்மா, எதுக்கு சம்மந்தமே இல்லாம நான் உன் மேல கோபப்படனும்?”, என்று மெல்லியதாக சிரித்தான்.
“அதுக்கில்ல..”
“அம்மா, அவ கிட்ட என்ன சொன்னமா? எப்பவும் ரொம்ப நேரம் கோவில்ல இருப்பா. இன்னிக்கு உடனே எழுந்திருச்சுப் போய்ட்டா...”
“நான், ‘நல்லா இருக்கியா’னு தான் கேட்டேன். அவ எதுவுமே பேசல. என்ன பார்த்ததும், கொஞ்சம் அதிர்ச்சியாயிட்டா. ஒருவேளை நான் அவகிட்ட பேசியிருக்கக்கூடாதோ?”
“அம்மா, இதெல்லாம் ஒரு விஷயமா?! விடுமா… ”
“நான் வேணும்னு அவள காயப்படுத்த நினைக்கல. உண்மையாவே அவ கூட பேசணும்னு தோணுச்சு. அதான் ரெண்டு வார்த்தை பேசினேன்.”
“பரவால்லமா. இப்போ எதுக்கு இதெல்லாம் யோசிச்சுக்கிட்டு?”
“டேய் சுனில், எனக்கு ரம்யாவை ரொம்ப பிடிச்சிருக்கு. பார்த்தாலே ரொம்ப அப்பாவியா இருக்கா. அவ இடத்துல, இன்னொரு பொண்ணு இருந்திருந்தா, இந்நேரம் போலீஸ், கேஸ்ன்னு உன் வாழ்க்கை நாசமாயிருக்கும். ஆனா, அந்த பொண்ணு அமைதியா விலகி போய்ட்டா. இன்னைக்கு கூட எதுவும் பேசாம அமைதியா எழுந்து போய்ட்டா. உனக்கும் அவள ரொம்ப பிடிச்சிருக்கு. நான் அவ கைல, கால்ல விழுந்து சம்மதம் வாங்கிடறேன். உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சு பார்க்கணும்னு தோணுதுடா.”
அவன் வியப்புடன் தன் தாயைக் கண்டான்.
“அம்மா, அவ என்ன மட்டும் தான் வெறுக்கறான்னு நினைச்சேன். ஆனா இன்னைக்கு கோவில்ல உன்கிட்ட கூட பேசாம எழுந்து போயிட்டா. அதுலேர்ந்தே தெரியல, அவளுக்கு என்னை மட்டுமில்ல, என்னை சுத்தி இருக்கறவங்களை கூட பிடிக்கலைனு. இதுல கல்யாணம், அது இதுன்னு ஆசைவேறையா?!… விடுமா… நீ போய் தூங்கு. எதையும் யோசிக்காம தூங்குமா.”
“டேய் என்னடா பேசற? என்னை அவ எதிர்பார்த்திருக்கமாட்டா. அதான் பார்த்தவுடனே கொஞ்சம் பதட்டமாயிட்டா. நீயே ஏன் வெறுக்கறான்னு முடிவு பண்ணிக்கற?”
“அம்மா இதை பத்தி பேசவேண்டாம். விட்டுடுமா”
“இல்லடா…”
“ப்ளீஸ் மா”
ரம்யாவை எண்ணும்போது சிரிக்கும் சுனிலின் மனம், அவள் தன்னவள் இல்லை என்ற நிலையை உணரும்பொழுது துடித்தது. நிழலுக்கும், நிஜத்திற்கும் பாலம் புனையும் முயற்சியில் தினமும் தோற்று பரிதவித்தான்.
புயலில் சிதைந்த மலரொன்று
மீண்டும் புதிதாய்ப் பூத்தது
கண்முன் அழகாய்த் தோன்றி
மனதுள் மெல்ல நுழைந்தது
மரித்துப்போன என் காதல் நெஞ்சம்
விழித்துவிழித்துப் பார்த்தது
அழகுப்பூ என் கைசேராது
விலகி, மறைந்து போனது!
அவளைத் தேடியே என் கண்கள்
திசை நான்கிலும் படர்ந்தது
என் எதிர்காலம் அவளாகிட
உள்ளம் வெறி கொண்டது
இழைத்துவிட்ட பெரும்பிழைக்கு
மனம் பரிகாரம் சொன்னது
காதலால் அம்மலரைக் காக்க
அவளின் காதலை வேண்டுது!!
No comments:
Post a Comment