Friday, 29 November 2019

ஒரு முடிவில் ஒரு தொடக்கம் - 8

அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்த பின், மணமக்களை ரம்யாவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். சுனில் மிகவும் உற்சாகமாகத் தென்பட்டான். ரம்யாவின் மனச்சோர்வு அவள் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது. சுவாமி அறையில் விளக்கேற்றி வணங்கினாள்.
‘கடவுளே! எப்பொழுதும் வைக்கிற அதே வேண்டுதலை தான் இப்பவும் வைக்கப்போறேன். என்னோட அப்பாவும், அம்மாவும் நல்லா இருக்கணும். நான் மட்டும் தான் உலகம்னு வாழ்ந்துட்டு இருக்காங்க. அவங்க மனசுல இருக்கற கவலையை வெளிக்காட்டலைனாலும், எனக்கு புரியாம இல்ல. அவங்க மனக்கஷ்டத்தை நீக்கு. வலியும், வேதனையும் என்னோட முடிஞ்சுபோகட்டும். என்னை பெத்த பாவத்துக்காக, அவங்கள வேதனை பட வச்சுடாத. அவங்களுக்கு துணையா நீ தான் இருக்கணும். அவங்க சந்தோஷத்துக்காக, உன் மேல பாரத்தைப் போட்டு, இந்த வாழ்க்கையை ஏத்துக்கிட்டேன். எதுனாலும் நான் சமாளிச்சுக்கறேன். நீ அவங்கள மட்டும் நல்லா பார்த்துக்க’, என்று மனமுருகி வேண்டினாள். 

அறையில், தனது உடைமைகளை பெட்டிக்குள் எடுத்துவைத்தாள், ரம்யா. அழவேண்டும்போல் இருந்தது அவளுக்கு. ஆனால், அழுகையும் அவளுக்கு சலித்துப் போய்விட்டது. அறைக்குள் நுழைந்து திலகவதி அவளை அமைதியாய் பார்த்தபடி நின்றிருந்தாள். மான் குட்டி போல துள்ளித் திரிந்த தனது அன்பு மகள், இன்று சிரிக்கக் கூட மறந்திருப்பது அவளுக்கு நெருஞ்சி முல்லை நெஞ்சுள் தைத்து போல் இருந்தது.

“ரம்யா, எல்லாம் எடுத்துவச்சுட்டியா?”
“ம்ம்” 
‘எல்லாம் எடுத்து வச்சுட்டேன். ஆனா, என் மனசும் நினைப்பும் உங்களை தான்மா சுத்திக்கிட்டு இருக்கும்’
“ரம்யா, அப்பா அம்மா மேல எதுவும் கோவமா?”
“அம்மா! என்ன கேள்வி இது? நான் எதுக்கு உங்க மேல கோவப்படப்போறேன்?!”
“ரம்யா, உன் மனசு படுற பாடு புரியாம இல்ல. ஆனா, காலத்தோட கட்டாயம் இந்த கல்யாணம் நடக்க வேண்டியதா போயிடுச்சு. ஒன்னு மட்டும் ஞாபகத்துல வச்சுக்கோ. அன்புங்கறது ரொம்ப சக்தி வாய்ந்த ஆயுதம். அகங்காரம், அதிகாரம், ஆணவம் இதெல்லாம் விட ரொம்ப சக்தி வாய்ந்தது. அன்பால, மலைய கூட புரட்டிடலாம். யாரு கிட்ட குறையில்லை? மனுஷனா பொறந்த எல்லார்கிட்டயும் குறை இருக்கு. அதை புரிஞ்சு, பொறுத்துக்கறது தான் அன்பு. அந்த அன்பே அவங்க பண்ண தப்பெல்லாம் அவங்களுக்கு உணர்த்தி, அவங்களையும் மாத்திடும். அதுக்கு கொஞ்சம் பொறுமையும் வேணும். சதா சர்வகாலமும் என்ன திட்டிட்டு இருந்த பாட்டி, உயிர் போற நேரத்துல தன் பிள்ளைய கூட தேடாம, என் மடியில தானடி என் கைய பிடிச்சுக்கிட்டு இறந்தாங்க. என்னை பார்த்து, அந்த சுருங்கி போன கண்ணுலேர்ந்து தண்ணி வடியும். நீங்கெல்லாம் என்ன நெனச்சீங்கனு தெரியல. ஆனா, கண்ணீராலேயே அவங்க என்கிட்ட மன்னிப்பு கேட்டது எனக்கு மட்டும் தான் தெரியும். தொடைக்க தொடைக்க அருவி மாதிரி வழியும். ஹ்ம்ம்… என்ன பார்த்தாலே வெறுக்கறவங்க, அந்த கடைசி நாட்கள்ல என் கைய பிடிச்சுக்கிட்டு, பக்கத்துல உட்காரச் சொல்லி என்னையவே பார்த்துட்டு இருப்பாங்க. இத்தனை வருஷமா நான் எதிர்பார்த்த அன்பை அப்போ கொடுத்தாங்க. இதெல்லாம் எப்படி சாத்தியமாச்சு? நான் காட்டின அன்பால தான். 

முடிஞ்சத பத்தி யோசிக்காம, இனி வாழற ஒவ்வொரு நாளும் அன்போடையும், நன்றியோடையும் வாழப் பழகிக்கோ. கண்ணு முன்னாடி ஏதோ மந்திரம் போட்ட மாதிரி, எல்லாம் அழகா மாறிப்போறத நீயே பார்ப்ப. நீ படிச்ச பொண்ணு. இதுக்கு மேல உனக்கு சொல்ல தேவை இல்லை. சீக்கிரம் கிளம்பி வா”, என்றபடி மகளின் கன்னத்தில் உரிமையாய் ஒரு முத்தம் வைத்து விட்டுச் சென்றாள், திலகவதி. 
தனது தாய் கூறியதை உள்வாங்கிக்கொண்டு, புது வாழ்வை எதிர் நோக்க ஆயத்தமானாள்.


மணமக்கள் சுனிலின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். காமாட்சி அம்மன் விளக்கேற்றி, நெல் நிறைத்த மரக்காவில் வைத்து, ரம்யாவின் கையில் அவளது சித்தி கொடுக்க, அதை கையில் ஏந்தி வலது கால் எடுத்து வைத்தாள், தனது புது வாழ்வில், புகுந்த வீட்டில். அவளோடு சுனிலும் உள்ளே நுழைய, அந்த கண்கொள்ளாக்காட்சியைக் கண்டுகொண்டிருந்த சித்ராவிற்கு நெஞ்சம் நிறைந்து, உள்ளம் குளிர்ந்தது. சுனிலின் முகத்தில் படர்ந்த புன்னகை, அவனின் தாயின் கண்ணோரம் நீரைத் தேக்கியது. தனது அழகு மருமகளை அழைத்து, சுவாமி அறைக்குச் சென்றாள். அங்கு வெள்ளிக் குத்துவிளக்கேற்றி, கண்களை மூடி, இரு கரம் கூப்பி, ‘கடவுளே! இந்த வீட்டு மருமகளா, நான் என் கடமையை சரி வர செய்ய நீ தான் அருள் புரியனும்’, என்று வேண்டினாள். மாமியார் அவளுக்கு குங்குமம் இட, காலில் விழுந்து நமஸ்கரித்து எழுந்தாள். மருமகளின் முகத்தை இரு கைகளிலும் ஏந்திய சித்ராவிற்கு ஆனந்தத்தில் கண்ணீர் பெருக்கெடுத்து, கன்னங்களில் வழிந்தோடின. ரம்யாவின் நெற்றியில் ஒரு முத்தம் வைத்து, “இப்போ தான் என் மனசு நிறைஞ்சு இருக்கு. நீங்க ரெண்டு பேரும் நூறு வருசம் சந்தோஷமா இருப்பீங்கமா” என்று உளமார ஆசிர்வதித்தாள். அவளின் இந்த அன்பு, இறுக்கமாய் இருந்த ரம்யாவின் மனதை சற்று இலகுவாக்கியது.

மாலை வரவேற்புக்கு மீண்டும் அனைவரும் தயாராகினர். கருநீலத்தில் சன்னமாய் வெள்ளை கோடுகள் போட்ட சூட்டில், ‘வாவ்’ என்று அனைவரும் வாயைப்பிளக்கும் அளவு அம்சமாய் இருந்தான், சுனில். அவனுடைய தேவதை அவனுக்கு இணையாய், பேபி பிங்க் காக்ரா சோளியில் அவனுக்கேற்ற ஜோடி என்று நிரூபித்துவிட்டாள். வெள்ளை கற்களால் மினுமினுத்த உடையும், அதற்கேற்றாற் போல் வெள்ளை கற்கலாலான ஆபரணங்களும், அவளை தரை இறங்கிய ஏஞ்சலோ என்று யாரையும் எண்ண வைக்கும். அவளை கண்டாலே திக்கு முக்காடிப்போபவன், அவ்வளவு அழகைக் கண்டதும் திணறி தவித்துவிட்டான். ‘இவ சும்மாவே என்னை கெரங்கடிப்பா. இதுல விதவிதமா மேக் அப்’லாம் போட்டு, கண்ணு முன்னாடி நிக்க வச்சு, ஏன்டா எல்லாரும் என்ன சோதிக்கறீங்க?!! என்னோட பிஞ்சு நெஞ்சு தாங்காது. டேய் சுனில், கண்ட்ரோல்! கண்ட்ரோல்!’, என்று மிகவும் சிரமப்பட்டு தனது உணர்வுகளின் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்திக்கொண்டான்.

அன்றிரவு, மிகுந்த களைப்புடன் தனது அறைக்குள் நுழைந்தவனுக்குப் பேர் அதிர்ச்சி காத்திருந்தது. அவனது அறை முதல் இரவிற்காக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மெத்தை மேல் ரோஜா இதழ்களால் சிறிதும், பெரிதுமாய் ஹார்ட்டின்கள் வரையப்பட்டிருந்தன. அறை முழுதும் சந்தன வாசம் பரவி இருந்தது. கட்டிலின் அருகே, பூ, பழங்கள் தாம்பாளத்தில் வைக்கப்பட்டிருந்தன. இவற்றை கண்ட கணமே சுனிலுக்குக் கோபம் பொங்கியது. 
“அம்மா”, என்று கர்ஜித்துக்கொண்டே திரும்பியவனின் பின்னே, சித்ரா நின்றுகொண்டிருந்தாள்.
“ஒரு நிமிஷம் உள்ள வாடா” என்று அவன் கைப்பற்றி அறைக்குள் இழுத்துச் சென்று, கதவை தாழிட்டாள்.
“என்னமா இதெல்லாம்? என்ன நினைப்புல இதெல்லாம் பண்றீங்க?” என்று எரிந்து விழுந்தான்.
“சுனில் மன்னிச்சுக்கோபா! எனக்கு தெரியும் நீ கோபப்படுவன்னு. ஆனா, சொந்தக்காரங்க முன்னாடி இந்த சடங்கெல்லாம் தவிர்க்க முடியாதுடா.”
“என்னமா பேசற? என்ன பெரிய சொந்தக்காரங்க? இதெல்லாம் நல்லாவா இருக்கு? எல்லாம் தெரிஞ்சும் ஏன்மா நீயும் இப்படி பண்ற?”
“டேய் ஏற்கனவே உன் கல்யாணத்தை அவசர அவசரமா கோவில்ல நடத்தினதுக்கே ஆயிரம் கேள்வி வந்துச்சு. சமாளிக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு. இப்போ இதெல்லாம் செய்யாம விட்டா, இன்னும் சந்தேகமும் கேள்வியும் தான் அதிகமாகும். நடந்ததெல்லாம் யாருக்கும் தெரியாது. தயவு செஞ்சு நீ கோபப்பட்டு உண்மை எல்லாம் படம் போட்டு காட்டிடாத. பாவம்டா ரம்யா. இன்னும் ரெண்டு நாள்ல எல்லாரும் கிளம்பிடுவாங்க. அப்புறம் இந்த மாதிரி எந்த தர்மசங்கடமும் இருக்காது. நீயும் எவ்ளோ சீக்கிரம் முடியுமோ, அவ்ளோ சீக்கிரம் ரம்யாவை கூட்டிட்டு அமெரிக்கா போய்டு. எனக்கு நெருப்பு மேல நிக்கற மாதிரி இருக்கு. பாத்து பக்குவமா நடந்துக்க. ரம்யாகிட்ட பொறுமையா எடுத்து சொல்லி நான் அனுப்பிவைக்கறேன்” என்று கூறியபடி அறையை விட்டுச் சென்றாள்.

‘அய்யோ கடவுளே! அம்மா ஈஸியா சொல்லிட்டு போய்ட்டாங்க. பாவம் ரம்யா, இதெல்லாம் பார்த்தா என்ன பாடு படுவா’ என்று எண்ணியபடியே அந்த அறையை சுற்றும் முற்றும் பார்த்தவனுக்கு எரிச்சலாக இருந்தது. குறைந்த பட்சம் படுக்கையின் மேல் இருந்த அலங்காரத்தைக் களைத்துவிடலாம் என்றெண்ணி அவன் எத்தனிக்க, கதவைத் திறந்துகொண்டு ரம்யா வந்தாள். மரகதப் பச்சை நிறப் புடவையில் ஐந்தரை அடி மரகதச் சிலையாய் பிரவேசித்தாள். அவளது உள்ளக் கலவரம், அவள் உடலின் நடுக்கத்திலும், பதட்டத்திலும் சுனில் உணர்ந்து கொண்டான். குரல்வளையை நெறிப்பது போல் அவள் பால் சொம்பின் கழுத்தை நெறித்தபடி, தாழிட்ட கதவருகே நின்றிருந்தாள். மற்றோர் முன்னிலையில், அவளைக் கண்டபோதெல்லாம் கூச்சமின்றி விழுங்குவதைப்போல் பார்த்தவன், இன்று யாருமில்லா தனிமையில், அவளைப் பார்க்கக் கூட முடியாதபடி தயக்கம் அவனை சூழ்ந்தது. அவளின் கலவரம் இவனையும் தொற்றிக்கொண்டது. சட்டென, படுக்கையின் மேல் இருந்த பூக்கோலத்தை அகற்றி, கட்டிலின் அடியில் குமித்து வைத்தான். மெத்தையின் மேல் விரிப்பை நன்கு சுத்தம் செய்தான். 
தயங்கியவாரே ரம்யாவிடம்,
“ரம்யா எனக்கு ரொம்ப தூக்கம் வருது. நீயும் ரெஸ்ட் எடுத்துக்கோ. எது வேணும்னாலும் தயங்காம என்னை கேளு. ப்ளீஸ் மேக் யுவர்செல்ப் கம்பார்ட்டபில் (comfortable)” என்றவாறு, மெத்தையின் இடப்புறம் படுத்துக்கொண்டான். ரம்யா தயங்கிய படி மெல்ல நடந்து, கட்டிலின் வலப்புறம் அருகே மேஜையின் மேல் பால் சொம்பினை வைத்துவிட்டு, கீழே தரையில் படுத்துக்கொண்டாள். இதைக் கண்ட நொடியே சுனிலுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. மிகுந்த தயக்கத்தோடு அவள் அருகே சென்றவனைக் கண்டவுடன் அவள் எழுந்து அமர்ந்துகொண்டாள்.
“ரம்யா, கட்டில் மேல படுத்துக்கோ. இப்படி ஏ.சி. ரூம்ல மார்பில் தரையில படுத்தா, உடம்பு சரியில்லாம போய்டும்.”
ரம்யா பதில் எதுவும் பேசவில்லை. அவள் தவிப்பு அவனுக்குப் புரிந்தது.
“பயப்படாத ரம்யா. தாலி கட்டிட்டேன்னு அட்வான்டேஜ் எல்லாம் எடுத்துக்க மாட்டேன். மேல படுத்துக்கோ… ப்ளீஸ்” என்று மருகினான்.
அடுத்த சில நிமிடங்களில், இருவரும் கட்டிலின் இருபுறத்தின் அதிக பட்ச எல்லையில் உறங்கிப்போயினர்.


மறுநாள், விடயற்காலையிலே எழுந்துவிட்ட ரம்யா, குளித்து முடித்து சுவாமி அறையில் விளக்கேற்றி வணங்கிக்கொண்டிருந்தாள். அப்பொழுது எழுந்து வந்த சித்ராவிற்கு, தனது மருமகளைக் கண்டதும் பூரித்துப்போய்விட்டது. மெல்லிய சிரிப்புடன் அவள் எதிரே வந்து நின்றாள் ரம்யா. நேற்று கலவரமாக இருந்த ரம்யாவின் முகம், இன்று சற்று தெளிவாய் இருந்தது. கவலைகொண்டிருந்த சித்ராவிற்கு நிம்மதி பூத்தது. “என்ன ரம்யா, இவ்ளோ சீக்கிரம் ஏன்மா எழுந்துட்ட? ஈரத்தலைய இப்படி முடிஞ்சிருக்க. உடம்புக்கு ஒத்துக்காது. போய் தலைய துவட்டிக்கோ. நான் இப்போ வந்துடறேன்” என்றபடி கிச்சனுக்குள் நுழைந்தாள். ரம்யா பின்கட்டு வாயிலின் அருகே நின்று, தனது கூந்தலை உலர்த்திக்கொண்டிருக்க, கம கம காப்பியை அவள் கையில் கொடுத்துவிட்டு, பாதி உலர்ந்த கூந்தலை மீதி உணர்த்தும் வேலையில் ஈடுபட்டாள் ரம்யாவின் மாமியார். ஒரு நொடி ஆச்சர்யத்தில் மூழ்கி எழுந்தாள் ரம்யா. 
“மாமியாரும், மருமகளும் கண்கொள்ளாக்காட்சி!!”, என்றபடி சுனிலின் அத்தை அவர்கள் அருகில் வர,
“அப்புறம் நான் செய்யாம என் பொண்ணுக்கு யார் செய்வா?” என்று கூறி எதார்த்தமாய் சிரித்தாள், சித்ரா. “இதோ கையோட நானே சுத்திபோட்டுடறேன்” என்று கூறிவிட்டு, உப்பு மிளகாய் எடுத்துவர கிச்சனுக்குள் சென்றாள், சுனிலின் அத்தை. என்னவோ போல் ஆகிவிட்டது ரம்யாவிற்கு. இவர்களின் அன்பு அவளை நெகிழச்செய்தது. 
காலை சிற்றுண்டி முடிந்து, மதிய சமையல் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. ஆனால், இந்த சுனில் எனும் கும்பகர்ண மகாராஜா, தூக்கம் கலைந்து எழுந்தபாடில்லை. 
“ரம்யா, இந்த சுனிலை எழுப்புமா. இன்னும் என்ன தூக்கமோ?” என்றாள் சுனிலின் அத்தை. செய்வதறியாது தயங்கித் தயங்கி அறைக்குள் சென்றாள் ரம்யா. இதை கவனித்த சித்ரா, ரம்யாவின் சங்கடத்தை உணர்ந்து ரம்யாவை பின்தொடர்ந்து சென்றாள். அறையின் கதவைத் திறந்து, வாயிலின் அருகே நின்று, கையைப் பிசைந்துகொண்டிருந்த ரம்யாவைக் காண பரிதாபமாக இருந்தது, அவளுக்கு.
“டேய் சுனில்! எழுந்திருடா” என்று சுனிலின் தாயே அவனை எழுப்ப முயற்சித்தாள்.
“உன்னை தான் சுனில்.”
“என்னமா??” என்று குப்புறப் படுத்துக்கொண்டு, கண்களை மூடியபடியே வினவினான்.
“எழுந்திரு சுனில். எவ்ளோ நேரம் தூங்குவ?”
“அதுக்குள்ள கோழி கூவிடுச்சா?”
“ம்கும்… கூவுன கோழியை வெட்டி கொழம்பே வச்சாச்சு. எழுந்திரிச்சு குளிச்சுட்டு வா. கல்யாணம் விசாரிக்க கெஸ்ட் எல்லாம் வந்துட்டு, போய்ட்டு இருக்காங்க. நீ தூங்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்?”
“என் மாமனார் வீட்ல சீரா குடுத்த லட்டு, மைசூர்பாக், மிக்சர காலி பண்றதுக்குன்னே க்ரூப் க்ரூப்பா கிளம்பி வராணுங்க. என்னோட பங்க தனியா எடுத்து ஒளிச்சுவச்சுட்டு, மத்தத பட்டுவாடா பண்ணுமா. முக்கியமா உன்னோட நாத்தனார் கண்ல படாம பார்த்துக்க” என்று கண்களை மூடியபடி சொற்பொழிவை முடித்தான்.
“ஆமாடா, கல்யாணப் பலகாரத்த குடத்தோட தூக்கிட்டு போகப்போறேன்” என்று அங்கு வந்த அவனது அத்தை கூறிவிட்டு, “ரம்யா இங்க வா. பாட்டி உன்னை கூப்பிடறாங்க” என்றாள் ரம்யாவிடம்.
டக்கென கண்கள் விழித்து எழ, ரம்யா அவ்விடம் விட்டு செல்வதைக் கண்டான். அவளோடு அவனது அத்தையும், அம்மாவும் செல்ல, தலையில் கை வைத்தபடி நொந்து அமர்ந்தான். ‘ரம்யா இவ்வளோ நேரம் இங்க தான் இருந்தாளா? இது தெரியாம என்னென்னமோ பேசிட்டேனே. அவ என்னை பத்தி என்ன நினைச்சிருப்பா. சரியான தீனி பண்டாரம்னு நினைச்சிருக்க மாட்டா? நம்ம மானத்தை வாங்கறதுக்குன்னே இந்த குடும்பத்துல எல்லாம் வந்து பொறந்திருக்கு’ என்று புலம்பியபடியே குளிக்கச் சென்றான்.

டைனிங் ஹாலில் அவன் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்க, அருகில் இருந்த அறையில், ரம்யா சுனிலின் பாட்டியின் அருகில் அமர்ந்து, அவர் கூறுவதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். வாய்க்குள்ளே போவது இட்லி, தோசையா, இல்லை ஈ, எறும்பா என்று தெரியாத அளவிற்கு, மெய் மறந்து அவளை ரசித்துக்கொண்டே சாப்பிட்டான். ‘அம்மாடி என்னா அழகு! உதடு ரெண்டும் பாம்பே அல்வா மாதிரி இருக்கு. எவ்ளோ நாள் கழிச்சு இந்த ஸ்மைல்!! என்னை கொல்றாளே. அயோ என் டார்லிங், அநியாயத்துக்கு அழகா இருக்கியே!!’ என்று மனதுள் ‘ஜொள்’ளிக்கொண்டிருந்தான். 
“டேய் சுனில், தட்ட பார்த்து சாப்பிடு” என்று அவனது அம்மா அந்த ஜொள்ளனின் தோளில் அடிக்க,
“அம்மா உனக்கு ஏதாவது கோபம் இருந்தா என்ன ரெண்டு அடி அடிச்சிக்கோ. அதை விட்டுட்டு என் பொண்டாட்டிய பாட்டிகிட்ட கோர்த்துவிட்டு ஏன் தண்டிக்கற?”
“அவங்களுக்கு அவங்க பேத்தி கிட்ட பேசணும்னு ஆசை. பேசிக்கிட்டு இருக்காங்க.”
“ஆமா, அப்டியே கீதோபதேசம் செஞ்சிடகிஞ்சிட போறாங்க. ‘நா...ங்கல்லாம் அந்தகா….லத்துல’னு ஆரம்பிச்சா, எதிர்ல இருக்கறவங்க ரத்தம் கக்கினா கூட விடமாட்டாங்க. பாவம்மா, அவள ரிலீஸ் பண்ணி விடுமா.”
“இன்னிக்கு ஒரு நாள் தாண்டா. நாளைக்கு, அத்தை பாட்டியை கூட்டிட்டு கிளம்பறாங்க.”
“ரொம்ப சந்தோஷம்” என்று நிம்மதி கொண்டான்.
அப்பொழுது அங்கு தண்ணீர் அருந்த வந்த தனது அப்பாவைக் கண்டதும், சுனில் முகத்தைத் திருப்பிக்கொண்டான்.
‘ஹ்ம்ம்… இன்னும் எத்தனை நாளைக்கு இந்த பனிப்போர்ன்னு தெரியல. பிரெண்ட்ஸ் மாதிரி இருந்த அப்பாவும் புள்ளையும் பேசியே பல மாசம் ஆகுது. எல்லா பிரச்சனைக்கும் ஒரு முடிவு வந்த மாதிரி, இதுக்கும் சீக்கிரம் முடிவு வந்தா நல்லா இருக்கும்’ என்று எண்ணியபடி பெருமூச்சுவிட்டாள், சித்ரா. 

உறவினர்கள் களைந்து செல்ல, சுனில், தானும் ரம்யாவும் அமெரிக்கா செல்ல ஏற்பாடுகளைத் தொடங்கினான். ரம்யா தனது மாமியாரின் அன்பு மழையில் நனைந்து, உள்ளம் குளிர்ந்திருந்தாள்.

இன்னும் ஒரு வாரத்தில் விமானப் பயணம். அதற்குள் இரண்டு நாட்கள் ரம்யா வீட்டில் தங்கிவருமாறு, சுனிலையும் ரம்யாவையும் சுனிலின் அம்மா அனுப்பி வைத்தாள். ரம்யாவின் வருகையை ஒட்டி, அங்கு அவளது சொந்தங்கள் வந்திருந்தனர். அனைவரோடும் கலகலப்பாகவும், இயல்பாகவும் பழகிய சுனிலை, அனைவருக்கும் பிடித்துப்போய்விட்டது. தடபுடலாக விருந்துகள் நடக்க, அவன் விரும்பி, ரசித்து உண்டான். அவனின் இயல்புகள் ரம்யாவின் பெற்றோரையும் கவரத் தவறவில்லை. 

“ரம்யா, நீ எப்படி இருக்க? மாப்பிள்ளை வீட்ல எல்லாரும் எப்படி நடந்துக்கறாங்க? உன்னை நினைச்சே ரொம்ப கவலையா இருக்கு” - திலகவதி தன் மகளோடு, தனிமையில் மொட்டைமாடியில் உரையாடிக்கொண்டிருந்தாள். 
“அம்மா… ஒவ்வொரு பெண்ணும் ஆப்பிள் மாதிரி. காய்ச்ச கொஞ்ச நாள்லயே, ‘இனி இந்த ஆப்பிள் மரம் உன்னோட வீடு இல்ல’னு சொல்லி, பறிச்சு வேற ஒரு மரத்துல ஒட்ட வச்சு, வளர்ந்து கனியாக சொல்றாங்க. சில ஆப்பிள் பேரிக்காய் மரத்துக்கு போய் சேருது. ஏறக்குறைய பிறந்த வீடு மாதிரி. சில ஆப்பிளுக்கு, ஆரஞ்சு மரம். புளிப்பும், இனிப்புமான வாழ்க்கை. சிலதுக்கு நார்த்தங்காய் மரம். வாழ்க்கையே புளிச்சு போய்டுது. இன்னும் சில ஆப்பிள், சீமகருவேல மரத்துல சிக்கி சிதைஞ்சு போய்டுது. ரொம்ப சில பெண்களுக்கு தான்மா இன்னொரு ஆப்பிள் மரம் கிடைக்குது. நான், அந்த சில பெண்கள்ல ஒருத்தினு தான் சொல்லணும். ஒரு ஆப்பிள் மரத்துலேர்ந்து, இன்னொரு ஆப்பிள் மரத்துக்குதான் போயிருக்கேன். இனி நீங்க கவலைபடவேண்டிய தேவையே இல்லை”, என்று அழகிய புன்னகையோடும், துறுதுறு கண்களோடும் கூறி முடித்தாள். தனது மகளின் பேச்சும், சிரிப்பும் ரம்யாவின் தாய்க்கு ஆச்சர்யமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. 
“நீ சொல்றத கேட்க சந்தோஷமா இருக்கு. ஆமா, நீ நெஜமாதான் சொல்றியா? இல்ல எங்களுக்காக எதையாவது மறைக்கிறியா?”
“அம்மா, நான் உங்க கிட்ட எதுவும் மறைச்சதில்லை, அந்த ஒரு சம்பவத்தைத் தவிர. என்னை நம்புங்கமா. அன்பு’னு ஒரு மேஜிக் பத்தி எனக்கு சொல்லி கொடுத்தீங்களே, அதே மேஜிக்க என்னோட மாமியாரும் கத்துவச்சிருக்காங்க. அதனால, இனிமேலாவது ரெண்டு பேரும் சும்மா கவலைப்படாம, நிம்மதியா இருங்க.”
“ஹ்ம்ம்… உன்னோட மாமியார், மாமனார் நல்ல மாதிரியா தான் இருக்காங்க. அவங்க அந்தஸ்துக்கு, இவ்ளோ பணிவு பாராட்ட வேண்டிய விஷயம் தான். மாப்பிள்ளை மட்டும் என்ன?! எவ்வளவு சகஜமா இருக்காரு! நேத்து வெறும் தரையிலே படுத்துக்கிட்டு டி.வி. பார்த்துட்டு இருக்காரு. ‘அத்தை சாப்பிட ஸ்வீட் கொடுங்க, காபி கொடுங்க’னு உரிமையா கேட்கறாரு. அப்பாகிட்டயும் நல்லா பேசறார். நம்ம சொந்தக்காரங்க எல்லாருக்கும் அவரை ரொம்ப பிடிச்சு போயிடுச்சு. இவரா இப்படி ஒரு தப்ப பண்ணியிருப்பாருன்னு நம்பவே முடியல. ரொம்ப சந்தோஷம் ரம்யா. பழசை எல்லாம் மறந்துட்டு ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்க. சீக்கிரம் ஒரு பேரப்புள்ளைய பெத்து குடு. என்ன?”
“ம்ம்… நீங்க ரெண்டு பேரும் முதல்ல பார்க்கணும்னு நினைச்ச கோவில்லாம் போய்ட்டு வாங்க. இனிமேல் நீங்க ரெண்டு பேரும் உங்க ஹெல்த்த பாத்துக்கறத தவிர வேற வேலை இல்லை. சரியாமா?” 
“நீ சந்தோஷமா இருந்தா எங்களுக்கு ஏன்டி உடம்புக்கு வரப்போகுது? சரி ஊருக்கு எடுத்துட்டு போக எல்லா பொடி வகையும் பாக்கெட் போட்டு வச்சிருக்கேன். நீ வந்து ஒரு தடவ சரி பார்த்துடு.” 
மகளின் பதில்கள் நிம்மதி அளிக்கவே, திலகவதியின் கவனம் அடுத்த வேலையில் நாட்டம் கொண்டது.
“வரேன்மா, நீங்க போங்க...”
ஆனந்த ஆரவாரத்தோடு அவள் தாய் மறைந்து செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்தாள், ரம்யா. 

No comments:

Post a Comment