“கண் சிமிட்டலில்…”
கைபேசியைப் பார்த்தபடி முணுமுணுத்தாள், ரம்யா. அன்று வந்த முதல் கவிதையின் தொடர்ச்சியாக, தினமும் ஒரு குட்டிக்கவிதை ரம்யாவின் கைபேசியில் வந்து குதித்தது. கவிதையைக் கண்டபொழுதெல்லாம் ரம்யாவின் மனமும் துள்ளியது.
“என்ன சொன்ன ரம்யா, ‘கண் சிமிட்டலில்’??”
ரம்யாவின் எதிரே, தனது மடிக்கணினியில் மூழ்கியபடியே வினவினாள் நிஷா.
“அது… அது ஒன்னும் இல்ல, சும்மா ஒரு வெப் சைட்ல யாரோ எழுதின கவிதை. நல்லா இருக்கேனு படிச்சுப் பார்த்தேன்.”
“எங்க வாசி…”
ஒருவழியாக நிஷா நம்பிவிட்டாள் என்று நிம்மதி கொண்டவள், கவிதையை வாசிக்கத் தொடங்கினாள்.
“மலரினமே உன் கண் சிமிட்டலில்
கவிதை நூறு கண்டேன்!
பனிவனமே உன் புன்சிரிப்பில்
ஆறுதல் நிதம் கொண்டேன்!
முகில்மலையே உன் விரல் தீண்ட
இப்பிறவி முக்தி பெறுவேன்!” என்றவள், அடுத்தவரியில் ‘ரம்யமே’ என்ற வார்த்தையை மாற்றி அழகே என்று குறிப்பிட்டாள்.
“அழகே (ரம்யமே) உன் பெயர் போதும்
மொழிகளை முற்றும் துறப்பேன்!!”
“ஆமா ரம்யா, ரொம்ப நல்லா இருக்கு. சுனில் கூட இதே மாதிரி நிறைய கவிதை எழுதுவான். எல்லாமே சூப்பரா இருக்கும்.”
சுனில் என்ற பெயரைக் கேட்டதும் ஆர்வம் கொண்ட ரம்யா,
“சுனிலா?” என்று சந்தேகமாய் வினவினாள்.
“ஆமா ரம்யா, நம்ப முடியலல?!! அது மட்டுமில்ல, அவன் M.B.A. கோல்ட் மெடலிஸ்ட். செம மூளைக்காரன். ஆனா துளியும் அவன் அலட்டிக்கமாட்டான். ஆனா, அவன் கூட இருக்கானுங்களே, ரெண்டு பேரும் விஷம்.”
“நீ ஏன் எப்பவும் அவங்க ரெண்டு பேரையும் திட்டிட்டே இருக்க? அவங்கள பார்த்தா நல்ல மாதிரி தான் தெரியுது.”
“நீ வேற, அந்த எழில் ஊமைக்குசும்பன். அந்த இன்னொன்னு, பார்க்க தான் கோமாளி கண்ணன். ஆனா கல்லுளிமங்கன். எத்தனை கேர்ள் பிரெண்ட்ஸ் தெரியுமா அவனுக்கு?”
“நிஜமாவா சொல்ற நிஷா, நம்பவே முடியல?!!”
“ஆமா, ரெண்டு பேரும் சுனிலை அடிக்கடி பப்புக்கு(PUB) கூட்டிட்டு போய்டுவானுங்க. சுனிலுக்கு பிடிக்காது, இருந்தாலும் அவனுங்களுக்காக போவான். கண்டதையும் ஊத்திக்கொடுத்துடுவானுங்க. பாவம் சுனில், தங்கமான பையன்!! நீ அந்த ரெண்டு பேருகிட்ட ஜாக்கிரதையாவே இரு, குறிப்பா அந்த கம்மலு கிட்ட?”
“என்னது கம்மலா?”
“ஆமா ரம்யா, ஒரு நாள் அந்த கமல கம்மலா என் காதுல மாட்டறேனா இல்லையானு பாரு.”
ரம்யா, நிஷாவின் வீட்டிற்கு வந்தது முதல் பல முறை சுனிலையும், எழிலையும் சந்தித்துவிட்டாள். ஒன்றிரெண்டு முறை கமலையும் சந்தித்திருந்தாள். அவர்களின் மேல் அவளுக்கு நல்லெண்ணம் உண்டு. ஆனால், நிஷா அவர்களை வெறுப்பதன் காரணம் மட்டும் அவளுக்குப் புரியவில்லை. ஆனால் அதைப்பற்றி அவள் அலட்டிக்கொள்ளாமல், கவிதைகளோடு காலை, மாலை, இரவு வணக்கங்களுக்காகக் காத்திருக்கத் தொடங்கினாள். பதில் அனுப்பாது, குறுஞ்செய்திகளை மீண்டும் மீண்டும் வாசித்து, மனனம் செய்து கொண்டாள்.
“ஹலோ அம்மா, எப்படி இருக்கீங்க?”
“சுனில், நீ எப்படிப்பா இருக்க?” - சுனிலின் தாய் சித்ரா.
“நல்லா இருக்கேன்மா.”
‘ம்ம்’ என்றே இந்த கேள்விக்கு எப்பொழுதும் பதில் கூறுபவன், இன்று உற்சாகமாய் பதில் கூறியதைக் கேட்டு சித்ராவின் மனதில் கணம் குறைந்தது.
“சுனில் உன்னை பார்க்கணும் போல இருக்குடா. பொங்கலுக்கு வாயேன்...”
‘ஐயோ அம்மா, என்னால ரம்யா செல்லத்த பார்க்காம இருக்க முடியாதே’ என்று தன்னுள்ளே கூறிக்கொண்டவன்,
“இல்லமா, புது வேலைல சேர்ந்து கொஞ்ச நாள்தானே ஆகுது? நான் வர்றது கொஞ்சம் கஷ்டம்மா” என்று சமாளித்தான்.
“சரிப்பா, வேளாவேளைக்கு சாப்பிடறியா?”
“அதெல்லாம் நல்லாவே சாப்பிடறேன். சரி, அவர் எப்படி இருக்காரு?”
“அப்பாவா? நல்லா இருக்காரு. கொடுக்கறேன் பேசு...”
சித்ரா கூறிமுடிப்பதற்குள் அழைப்பு துண்டிக்கப்பட்டது.
‘கடவுளே, இவனுக்கு எப்ப தான் அவங்கப்பா மேல கோபம் தீருமோ?!!’ என்று அயர்ந்துகொண்டாள், சித்ரா.
சித்ரா பொங்கல் பண்டிகையைப் பற்றி கூறியதும், சுனிலின் நினைவலைகள் அவனை பின்னோக்கி இழுத்துச்சென்றது.
அன்று, பொங்கல் தினத்தை முன்னிட்டு, மும்மூர்த்திகளின் உத்தரவின் பேரில் நிஷாவும், ரம்யாவும் தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
“வாங்க அண்ணா!”
வீட்டிற்கு வருகைத் தந்திருந்த கமலை பணிவோடு வரவேற்றாள், ரம்யா.
கமல் சுற்றும், முற்றும் பார்க்க அவனைத் தவிர அங்கே சுனில் மட்டுமே இருந்தான்.
“சுனிலையா ‘அண்ணா’னு சொன்ன?”
“இல்ல உங்கள தான்” என்று ரம்யா கூற, சிரிப்பினை கட்டுப்படுத்திக்கொண்டிருந்த சுனில் விழுந்து விழுந்து சிரிக்க, அவனைக் கண்டு நிஷாவும் கண்ணில் நீர் வர சிரித்தாள்.
அவர்கள் சிரித்து ஓயும் வரை அமைதி காத்த கமல்,
“முடிஞ்சுச்சா? இல்ல இன்னும் மிச்சம் இருக்கா?” என்ற கமல், அங்கு நடப்பது புரியாமல் முழித்துக்கொண்டிருந்த ரம்யாவிடம்,
“ஏன் ரம்யா என்னை பார்த்தவுடனே உனக்கு அந்த ‘கெட்ட’ வார்த்தை ஞாபகத்துக்கு வந்தது?” என்றான் கமல்.
“கெட்ட வார்த்தையா?”
“பின்ன?? தெரியாம தான் கேட்கறேன், பசங்க என்னைக்காவது ‘தங்கச்சி’னு சொல்லி பொண்ணுங்க மனச காயப்படுத்தியிருக்காங்களா? வேணும்னா சரித்திரத்தைப் புரட்டிப் பார். நெவெர். ஆனா இந்த பொண்ணுங்க மட்டும் ஏன் பசங்கள ‘அண்ணா’னு சொல்லி நோகடிக்கறீங்க? ஒன்னு தெரிஞ்சிக்கோ, பசங்க மனசு பால் மாதிரி. கடைஞ்சு வெண்ணெய்யாவறதும், திரிஞ்சு வீணாவறதும் பொண்ணுங்களாலதான்.”
அவனை விளங்காத பார்வை பார்த்துவிட்டு கிச்சனுள் சென்றாள், ரம்யா.
நிஷா வாயைப் பொத்திக்கொண்டு சிரித்துக்கொண்டு நிற்க,
“இப்போ நீ எதுக்கு இங்க வாயபொத்திட்டு நிக்கற? வாந்தி வருதா?” என்று கமல் கேட்க, சிரிப்பினை நிறுத்திவிட்டு அவனை முறைத்துக்கொண்டு அவளும் கிச்சனுள் சென்றாள்.
நிஷாவும், ரம்யாவும் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்க,
அப்பொழுது விஜயம் செய்தான், எழில். அவனை ரம்யா வரவேற்க, நண்பர்களோடு சென்றமர்ந்தான்.
“வாயா பாணபத்திர ஓணாண்டி”
எழிலை வாரினான் கமல். கமலை அவன் முறைக்க,
“அப்படினா?” எதார்த்தமாக வினவினாள் ரம்யா.
“புலிகேசி படம் பார்த்ததில்லை ? அதுல வர ஒரு சப்ப கேரக்ட்டர்”
என்றுவிட்டு கமல் சிரிக்க,
“ஆமா, அந்த புலிகேசி மகாராஜா இவன் தான்” என்று கடுப்பாகக் கூறினான், எழில்.
“அப்போ, இவர் கூடவே சுத்தற சுனில் தான் மங்குனி அமைச்சரா?”
ரம்யா வெள்ளந்தியாக வினவ,
“க க க போ” என்று கோரசாகக் கூறிய எழிலும், கமலும் சிரிக்க, நிஷாவும் உடன் சேர்ந்துகொண்டாள்.
“என்ன ரம்யா??!!”
சுனிலின் முகம் தொங்கிப்போனது.
“சாரி சுனில், நான் சும்மாதான் சொன்னேன்.”
ரம்யா பரிதவிக்க, அழகான புன்னகை சிந்தி அவளை அமைதி படுத்தினான்.
வரவேற்பறையில், ஒரு சிறிய மேஜையின் மேல் விநாயகர், முருகன் படங்களுக்கு முன்னே, பிரசாதங்களை ரம்யா படையலிட, மலர்களால் அலங்காரம் செய்தாள், நிஷா. அனைவரும் குழுமியிருக்க, ஒரு தட்டினை எழிலிடம் நீட்டி, “உள்ள கிச்சன்ல ஆப்பிள் இருக்கு. இதுல எடுத்துட்டு வர்றீங்களா ப்ளீஸ்” என்க, ஒப்புதலாய் தலை அசைத்து உள்ளே சென்றான் எழில். மற்றொரு தட்டினை சுனிலிடம் நீட்டி, “இதுல வாழைப்பழம் எடுத்துட்டு வர்றீங்களா?” என்றாள்.
ஆப்பிள் தட்டின் அருகே சுனில், வாழைப்பழங்களை வைக்க, மீண்டும் அங்கே சிரிப்பு அலை வீசியது.
“வாழைப்பழத்தை மொத்தமா ஒரே சீப்பா வைக்கணும். இப்படி தனித்தனியா பிச்சு, வரிசையா அடுக்கி வைக்கக் கூடாது” என்று அவர்களின் சிரிப்பின் காரணத்தை புரியாமல் நின்றிருந்த சுனிலிடம் விலக்கினாள், ரம்யா.
“ஓ! இதான் விஷயமா, இப்போ வந்துடறேன்” என்றவன் வாழைப்பழங்களை அள்ளிக்கொண்டு கிச்சனுள் சென்று திரும்பினான். ரப்பர் பேண்டால் பழத்தின் காம்புகளை ஒன்றிணைத்துவிட்ட அதிமேதாவித் தனத்திற்கு பாராட்டுகளை அவன் எதிர் நோக்க, பரிகாசம் மட்டுமே கிட்டியது.
‘உண்மையாவே இவன் மங்குனி மைந்தன் போல!!’ என்று தன்னுள்ளே எண்ணிக்கொண்டாள் ரம்யா.
தனக்குத் தெரிந்த இரண்டு ஸ்லோகங்களைச் சொல்லி, தீப ஆராதனை முடித்தாள் ரம்யா.
“ரம்யா, காலைல அம்மாகிட்ட பேசும்போது, பொங்கல் அதுவுமா நான் வீட்ல இல்லனு அம்மா ரொம்ப ஃபீல் பண்ணாங்க. எனக்கும் ரொம்ப கஷ்டமா இருந்தது. ஆனா, எங்க அம்மா பண்ற மாதிரி நீயும் எல்லா ரூல்சும் சரியா ஃபாலோவ் செஞ்சு அருமையா பூஜை பண்ண. இப்போ, நான் வீட்டை மிஸ் பண்ணல. ரொம்ப தேங்க்ஸ் ரம்யா” என்று சுனில் உளமார ரம்யாவிற்கு நன்றி கூற, தனது அழகிய சிரிப்பின் வழியே நன்றியை ஏற்றாள்.
நிஷாவும், ரம்யாவும் சமைத்தவற்றை உணவருந்தும் மேஜையின் மேல் எடுத்து வைத்துக்கொண்டிருக்க,
“ரம்யா, இதுல எது நிஷா சமைச்சது?”
உணவு மேஜையின் முன், கையில் தட்டோடு நின்றிருந்தான் கமல். அவன் நிஷாவை விடாமல் பரிகாசம் செய்வதை புரிந்துகொண்ட ரம்யா, தான் சமைத்தவற்றில் எளிதான ஒன்றை தேர்ந்தெடுத்தாள்.
“இந்த ரசம் நிஷா செஞ்சது.”
“அந்த விசத்தை கீழ ஊத்திடு” என்று கூறியவன், நிஷா முறைத்துக்கொண்டு நிற்பதைப் பொறுப்படுத்தாமல் தனது தட்டினை நிறப்பிக்கொள்ளும் பணியில் மூழ்கினான்.
“ரசம் ரொம்ப நல்லா இருக்கு!!”
நிஷாவிற்கு சாதகமாக ரம்யா பேச,
“பாசமலரு, பொங்கப்பானைல பொங்கலுக்கு பாலூத்தலாம், தப்பில்ல. ஆனா, சாப்பிட வந்த எங்களுக்கு பாலூத்த நினைக்கறது ரொம்ப தப்பு. புரிஞ்சுதா?”
இம்முறை நிஷாவை மையப்படுத்தி சிரிப்பு வெடிகள் வெடித்தன.
அனைவரும் சாப்பிட்டுக்கொண்டிருக்க, கிச்சனில் இருந்த ரம்யாவைக் கண்ட சுனில்,
“சாப்பிடாம என்ன பண்ற?” என்று கிச்சனின் வாயிலில் இருந்து வினவ, அவன் குரலைக் கேட்டு திடுக்கிட்டு திரும்பியவள், சூடான எண்ணெய் சட்டியில் வலக்கையில் சுட்டுக்கொண்டாள். அடுத்த நொடி, அவள் “அம்மா!” என்று அலற, “அய்யோ பார்த்து ரம்யா” என்று பதறி அவளிடம் சென்ற சுனில், அவள் கையைப் பற்றி காயத்தை ஆய்வு செய்தான். சட்டென தனது கைகளை கழுவிவிட்டு, அவளின் காயம்பட்ட கையை குளிர்ந்த குழாய் நீரின் அடியில் காட்டினான்.
“லேசா தான் சுட்டுக்கிட்டேன். ஒன்னும் இல்ல. நீங்க சாப்பிடுங்க சுனில்.”
“ப்ச்… ரொம்ப வலிக்குதா? சாப்பிட வராம இங்க என்ன பண்ணிட்டு இருக்க?”
“சூடா வடை போட்டு எடுத்துட்டு வரேன். நீங்க போங்க.”
அங்கே குழுமிவிட்ட மற்றவர்களையும் கண்டு, “ப்ளீஸ் எல்லாரும் போங்க. நான் வந்துடறேன்” என்றாள்.
“நீ வடை போட்ட வரைக்கும் போதும். முதல்ல கிளம்பு.”
அவள் அவ்விடம் விட்டு நகரும் வரை விடாப்பிடியாக நின்ற சுனிலின் பிரியமான கண்டிப்புக்கு இணங்கினாள். அவனது அன்பையும், அதிகாரத்தையும் விரும்பினாள்.
விருந்தை ஒரு பிடி பிடித்த மூவரும் ரம்யாவை பாராட்டத் தவறவில்லை.
“இப்படி ஒரு அருமையான சாப்பாட்டை நான் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு” மெச்சினான், சுனில்.
“ஆமா சுனில், நான் கொஞ்சம் பிஸியா இருந்ததால என்னால அவளுக்கு எந்த உதவியும் செய்ய முடியல. அவளே எல்லாத்தையும் சமைச்சுட்டா.” தோழியைப் பற்றி பெருமையாய்க் கூறினாள், நிஷா.
“நீ பிசியா இருந்தனு தெரியுது. எல்லாரும் பொங்கலுக்கு வீட்டுக்கு சுண்ணாம்பு அடிப்பாங்க, நீ மூஞ்சிக்கு அடிச்சு வச்சிருக்க. அதானே?”
நிஷாவை சீண்டினான், கமல்.
“ஹேய் வேண்டாம்...”
“ஒன்னு தெரிஞ்சுக்கோ நிஷா, நீ எத்தனை லேயர் ஏத்தினாலும் என் தலைவி த்ரிஷா ஆயிட முடியாது. நீ என்னைக்கும் மொக்க நிஷா தான்.”
“டேய் கமலக்கண்ணா, இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின, கமலா ஆரஞ்சு மாதிரி உன் தோலை உறிச்சிடுவேன்.”
“சாரி, நீ பெண்ணுருவில் இருக்கும் பிசாசுனு மறந்துட்டேன்” என்றவன், ரம்யாவிடம், “ரம்யா, இன்னைக்கு சாயங்காலம் என்ன பிளான்? வாயேன், சும்மா அவுட்டிங் போவோம்?!!” என்றான்.
“டேய் அவ வர மாட்டா, அதுலயும் குறிப்பா உன்கூட வரவேமாட்டா.”
கடுப்பானான் கமல்.
“உனக்கு யாரு ‘நிஷா’னு பேரு வச்சது?”
“ஏன்? எங்க அப்பாதான்.”
“அவருக்கு போன் போட்டு உன் பேரை ‘கூர்கா’னு மாத்த சொல்லு.”
“நீயும் உங்க அப்பாவுக்கு போன் போட்டு ‘கடலைக்கண்ணன்’னு மாத்த சொல்லு.”
“நீ என்னதான் மூஞ்சிக்கு பட்டி பார்த்து, டிங்கரிங் பண்ணி, வார்னிஸ் அடிச்சாலும் கண்ணு தெரியாதவன் கூட உன்கிட்ட கடலை போட மாட்டான்” என்றானே போதும் அவனை அடிக்க அவள் துரத்த, அவன் ஓட, தடுக்க முயன்ற ரம்யா முடியாமல் வந்து சுனிலின் அருகே அமர்ந்தாள்.
“இவங்க எப்பவுமே இப்படிதான். நிஷாவோட சித்தி எங்க ஏரியா தான். அவ இன்ஜினியரிங் நாலு வருஷம் அவ சித்தி வீட்ல தங்கி எங்க காலேஜ்ல தான் படிச்சா. அவ பர்ஸ்ட் இயர் படிச்சபோது, நாங்க ஃபைனல் இயர். காலேஜ்ல எப்பவும் இப்படித்தான் முட்டிப்பாங்க. ஏரியால பார்த்தாலும் அடுச்சுப்பாங்க. அது இன்னும் தொடர்கதையா இருக்கு.”
சுருக்கமாய் பிளாஷ்பாக்கை கூறி முடித்தான் சுனில்.
இருவரும் அடித்துக்கொண்டு ஓய்ந்தபின்னும், வாக்குவாதம் தொடர,
“நிஷா விடு… அண்ணா நீங்களாவது இதோட விடுங்களேன்… சுனில் சும்மா பார்த்துட்டே இருக்கீங்க? ஒன்னும் சொல்லமாட்டீங்களா?” என்று ரம்யா மீண்டும் குறுக்கிட, சண்டை ஓய்ந்தது.
கிளம்பும் முன், ரம்யாவின் காயத்தைப் பற்றி சுனில் விசாரிக்க, அவள் நெகிழ்ந்து போகத் தவறவில்லை.
“ரம்யா எனக்கு ஒரு டவுட்டு. என்னை மட்டும் அண்ணானு கூப்பிடற . ஏன் இவனுங்கள கூப்பிட மாட்டேங்கற?”
கேள்வியாய் நின்றிருந்தான் கமலக்கண்ண கரிகாலமூர்த்தி.
“இல்ல, நீங்க கொஞ்சம் பெரியவங்களா இருக்கீங்க. அதான்…”
“யாரு, இவனுங்கள விட நான் பெரியவனா?”
“ம்ம்…”
“ஓ! அங்கிள்னு கூப்ட்டு அழவைக்காம பெரிய மனசோட அண்ணானு கூப்பிடற. அதான?”
“அப்படி இல்ல... நான்…”
“ஏன்மா, பொங்கலுக்கு சோறு போடறேன்னு வந்தா, என் மானத்த கூறு போட்டுட்டு இருக்க?!” கவலையோடு கமலக்கண்ணன் கூறிக்கொண்டிருக்க,
“அண்ணா, அண்ணா, அண்ணன்னா” நிஷா மீண்டும் அவனை கடுப்பேற்றினாள்.
“தயவு செஞ்சு நீயெல்லாம் என்னை அண்ணனு கூப்பிடாத. நீ மட்டும் எனக்கு தங்கச்சியா பிறந்திருந்த, எப்பவோ எங்கம்மா, அப்பாவை டைவர்ஸ் பண்ணியிருப்பேன்” என்றவன் ரம்யாவை நோக்கி, “இன்னைலேர்ந்து உன்னையவே தங்கச்சியா தத்தெடுத்துக்கறேன். போதுமா?” என்றான்.
தலையசைத்து அழகாய் சிரித்தவளின் முகம் இன்றும் சுனிலின் நினைவில் பதிந்திருந்தது.
No comments:
Post a Comment